ரத்னசுருக்கமான அறிவுரை!



மேஷம் முதல் மீனம் வரை பன்னிரண்டு ராசிகளுக்கும் மன்மத வருட பொதுப்பலன்களை மிகச் சிறப்பாக அளித்து, எங்கள் மனதில் புத்துணர்ச்சி ஊட்டி, மன்மத உற்சாகத்துடன் எங்களை வலம் வரச் செய்த ஆன்மிகம் பலனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
- கோதை ஜெயராமன், மீ¢ஞ்சூர்.

தர்மநெறியோடு அனைவரிடத்திலும் அக்கறை கொள்வோம் என்று தலையங்கத்தில் அறிவுறுத்தியிருப்பது, பாராட்டத்தக்கது. குழப்பங்களிலிருந்து மீள ஒரே வழி பிரார்த்தனை செய்வது தான்.
என்பதை ரத்தின சுருக்கமாக கூறியுள்ள விதமே தனி பாணிதான். 
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம், வந்தவாசி.

ஒன்பது பக்க மகுடவிழா வைபவம். வெள்ளம் பொங்கும் வைகையில் நீராடியதுபோல் சிலிர்க்க வைத்தது. மகாபாரதத்தில் அர்ஜுனனின் மகத்துவம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை பாலகுமாரன் விவரித்த விதம், அடடா...
- சுகந்தி நாராயணன், வியாசர்காலனி, சென்னை.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவ நாளை கட்டுரை வடிவில் காட்சியை மனக்கண் முன் நிறுத்திய விதம் அழகு, அற்புதம். - எஸ்.சுந்தர், திருநெல்வேலி.

மதுரையின் மகுட விழா கட்டுரையில் அழகர் பிரசாத சம்பா தோசை பற்றி படித்து மகிழ்ந்தேன். பெருமாளை சேவித்துவிட்டு அந்த தோசையை உண்ட சம்பவம் மீண்டும் பசுமையாக நினைவுக்கு வந்தது. 
- எஸ்.வி.பார்த்தசாரதி, திருவானைக்கோயில்.

கிரஹணத்தின்போது கோயில்கள் சாத்தப்படுவதன் காரணத்தைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டோம். கிரஹணத்தால்தான் சந்திர கிரணங்களுக்கு எத்தனை வல்லமை உருவாகிவிடுகிறது!
- விசாலாட்சி மாணிக்கம், கொருக்குப்பேட்டை.

கலங்கிய நீரைத் தெளிந்த நீராக மாற்றும் தேற்றாங் கொட்டை தலவிருட்சம் கட்டுரையைப் படித்தோம். ஈசனை வணங்கினால் எத்தகைய மனக்குழப்பமும் தெளிவாகும் என்று மறைமுகமாக உணர்த்துவது போலிருந்தது! 
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

புத்தாண்டுப்பலன் மற்றும் சித்திரைச் சிறப்பிதழாக பல்வேறு சிறப்புத் தகவல்கள், கட்டுரைகள், வண்ணப்படங்களுடன் ஆன்மிக பலன் அசத்தலாக வெளியாகி மனத் திருப்தியை அளித்தது.
- ப.மூர்த்தி, பெங்களூர்-97.

தான் பெற்றக் குழந்தையின் பால லீலைகளைக் காணக் கொடுத்துவைக்காத தேவகியின் ஏக்கத்தை குலசேகர ஆழ்வார் பாடியது நெஞ்சை நெகிழவைத்தது.
- சௌந்தரவல்லி, திருமழிசை.

பிரசாதங்கள் பகுதி விதவிதமான உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்துகின்றன. அதைவிட அந்தப் பகுதிக்கான முன்னுரை ஒரு ஜோரான விருந்தாக அமைவதுதான் விசேஷம்!
- ஊர்மிளா துரியானந்தம், பண்ருட்டி.