பாகுவா பகுதிகளை சீரமைத்தால் பெருஞ்செல்வம் சேரும்



வளம் தரும் வாஸ்து

பாகுவா என்னும் பெங்சூயின் அங்கமான சாஸ்திரத்தில் 6 இனங்களை குறித்து தெரிந்து கொண்ட நாம், இனி மீதமுள்ள 2 விவரங்களை குறித்து ஆராய்வோம்.
அவை, குடும்பம் மற்றும் அறிவுக்குரிய இடங்களாகும்.

7. குடும்பம்

எட்டு வாழ்க்கை பாகங்களை குறிக்க எட்டு பாகமாக பாகுவா அமைகிறது. ஒவ்வொரு பக்கமும் சமநிலையை அடையும் போது, பாகுவா முழுவதும் சமநிலையை அடைந்து விடுகிறது என்பதுதான் இதன் சூட்சுமம்.

முன்னோர்களை குறிக்க பயன்படுத்தும் ‘இடி’ ஓசையே இப்பகுதியின் குறியீடு ஆகும்.நம் முன்னோர்கள் ஆகிய பெற்றோர், குரு, ஆசிரியர் ஆகியோரை மதிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் குடும்ப பாகுவா பாகம் சரியாக பராமரிக்கப்பட வேண்டும்.அரண்மனையில் பல அரசர்களின் புகைப்படங்கள், சித்திரங்கள் இருப்பது போலவும், தனியார் கம்பெனிகளில், வங்கிகளில் அந்தந்த நிறுவனங்களின் முன்னோர்களுடைய படங்களைக் காணமுடியும். பாராளுமன்றம், சட்டமன்றம் போன்ற முக்கிய பிரதான கட்டிடங்களிலும் முந்தைய பிரதான ஆட்சியாளர்களின் படங்கள் மற்றும் சிலைகள் வைத்திருப்பதை காணமுடியும்.

அவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்,
முக்கிய நிகழ்ச்சி நாட்களில் அவர்களின்
பெருமைகளை நினைவு கூறுகிறோம்.
பாகுவாவின் ‘குடும்ப பகுதி’ நம் குடும்ப
அங்கத்தினர்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் பற்றியதாகும்.

அது போலவே நாம் பணிபுரியும் மேல் அதிகாரிகளின் உறவு சம்பந்தப்பட்ட இடமாகவும் இதை பெங்சூயியில் குறித்துள்ளனர்.இப்பகுதி ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது என்பதால் மருத்துவர்களுக்கான இடமாகவும் இதை கருதலாம்.ஒருவேளை இப்பகுதியை பயன்படுத்தாத சூழ்நிலை இருப்பின் இப்பகுதியை நோக்கி அமர்ந்து மருத்துவம் பார்த்தாலும் நோயாளிகளை வெகு லகுவாக ஆரோக்கியமடையச் செய்ய மருத்துவரால் இயலும்.

குடும்ப பாகுவா பகுதி

அறிவுப்பகுதி

குடும்ப பாகுவா பகுதிக்குரிய பொருள் மரம். எனவே, மரத்தின் இயற்கை வண்ணமாகிய  பச்சை நிறங்களை இங்கு பயன்படுத்த குடும்பம் தழைத்தோங்கும்.குடும்பத்தில் ஜென்ம பகை, குடும்ப சிக்கல், சச்சரவு, விரோதம், குன்மம், காழ்ப்புணர்ச்சி, மாமியார்-மருமகள் பகை, மருமகன்-மாமியார் விரோதம், சகோதர-சகோதரி பிரிவு போன்ற சிக்கல்கள் தீர இவ்விடத்தை மேம்படுத்தலாம். இலைகள் மட்டுமே உடைய செடிகளை குடும்ப பகுதியில் பராமரிப்பது (பச்சை வர்ணம் கவனத்தில் கொள்க) சிக்கல்கள் தீர்ந்து மேன்மை தரும்.

மரத்தாலான மேஜை, நாற்காலி மற்றும் மரத்தாலான கலைப் பொருட்களை உபயோகிக்கலாம். ஆரோக்கியத்தை சொல்லும் வர்ண படங்கள், விளையாட்டில் ஷீல்ட், பட்டம், சான்றிதழ் பெறும் அரிய புகைப்படங்களை இங்கு மாட்டலாம்.ஆரோக்கியத்திற்கான தன்வந்திரி படத்தை இங்கு பொருத்தலாம். நீலக் கற்கள், பளிங்கு கற்கள் கொண்டு இவ்விடத்தை பராமரிக்கலாம்.

இடியும் ஒரு வகையான ஓசை என்பதால் முரசு, டமாரம், மேஜை மீது பொருந்தக் கூடிய தோல் கருவிகள் போன்றவற்றை அழகுற பொருத்தி குடும்பம் பலம் மிக்கதாகவும் போற்றும்படியாகவும் இருக்க செயல்படுவோமாக.

8. அறிவு

பாகுவாவில் இந்தக் கடைசிப் பிரிவு, கதவின் மிக அருகாமையில் அதன் இடது புறமுள்ளது.வீட்டின் கதவை திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் இடமே அறிவு என்ற பாகுவா பகுதி என எட்டாவது ஸ்தானமாக பெங்சூயி அழைக்கிறது.மிக ஆழமாக அறிவியலார் போலவும், ஞானிகள் போலவும் சிந்திக்கும் ஆற்றலே அறிவு எனப்படுகிறது.

மிக உயர்ந்த சிகரங்களைக் கொண்ட மலையை அறிவின் அடையாளமாக சுட்டுகிறது பெங்சூயி விஞ்ஞானம். அறிவு என்பது நம் மனதில் புதைந்து கிடக்கும் நுட்பமான பொக்கிஷம் என்று வலியுறுத்துகிறது.

இவ்வுலகில் நாம் செயலாற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கும், சந்தோஷம், சுகம் தேவையானவற்றை அடைவது ஆகியவற்றின் காரணகர்த்தாவே அறிவுதான்.பள்ளி செல்லும் குழந்தைகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், புலன் விசாரணை அதிகாரிகள், மக்களுக்கு மேன்மை தரவல்ல அறிவியலார்கள் இவ்விடத்தினை அழகுபடுத்தியும் உயர்வாக்கியும் இதன் பலனை எளிதாக அடைய முடியும்.அதிகமாகப் பணிச்சுமை கொண்டவர்களும், போர்க்காலத்தில் வெற்றியடைய முழுமூச்சாகப் பாடுபடும்  ராணுவ வீரர்களும், காலம் கனியவில்லையே, நல்லவை நடக்கவில்லையே என்று ஏக்க பெருமூச்சு விடுபவர்களும் இப்பகுதியை சரி செய்வதின் மூலம், ஆக்கப்பூர்வமான அறிவு செயல்பட்டு அப்பணியைச் செவ்வனே முடிக்கும் ஆற்றல் வந்து, மகிழ்ச்சி பொங்கும்.

இப்பகுதியினை நீலம், பச்சை வண்ணங்களை கொண்டு அலங்கரிப்பதன் மூலமாக பள்ளி, கல்லூரி களில் அறிவில் மிகவும் பின்தங்கிய குழந்தைகள் மேன்மை அடையவும், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெரும் நன்மைகளைப் பெறவும் முடியும்.அறிவின் காரணமாய் பெற்ற மெடல்களை அலங்கரிப்பது இவ்விடத்தின் மிக உன்னத பலனை அதிகரிக்க செய்யும்.பத்மபூஷண், பாரத ரத்னா, நோபல் பரிசு பெறுவது போன்ற காட்சிகள், படங்கள், ஓவியங்களை அறிவு பகுதியில் வைப்பதின் மூலம் கலைஞர்கள் மேன்மை பெறலாம்.

நம் ஆசிரியர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இவ்விடத்தில் வைப்பதாலும் அறிவு மேலோங்கும்.மலை, நீர் வீழ்ச்சி, அழகிய பூங்கா (பச்சை நிறம் அதிகம் இடம் பெறவேண்டும்) ஆகியவற்றை கொண்டு அழகுபடுத்த, உலக மக்களால் பாராட்டப்படும் அளவிற்கு அவர்கள் அறிவு சார்ந்தவர்களாகத் திகழ்வார்கள். புத்தகங்கள், கணிப்பொறிகளை இவ்விடத்தில் பராமரிக்க அதன் மூலமும் அறிவு மேம்பாடு அடையும்.

இவ்விடத்தில் அமிதிஸ்ட் எனப்படும் ரத்தினக்கல் (செவ்வந்திக் கல்) மஞ்சள் அல்லது இளம் சிவப்பு கயிற்றில் கட்டி தொங்க விட, அப்பகுதி கூடுதல் பலம் பெறும் அற்புதத்தைக் காண முடியும்.

இப்படியாக நம் மனித வாழ்வினை 8 அங்கங்களாக பிரித்து அதை மேம்படுத்துவது எப்படி என்பதை கண்டோம்.இனி சிறு சிறு பரிகாரங்கள் மூலம் நமக்கு வரும் பிரச்னைகளை ஒழித்து மகிழ்ச்சி பொங்க வைக்கும் முறைகளை காண்போம்.

இவை வாஸ்து மற்றும் பெங்சூயி அடிப்படையில் இணைந்து கூறப்படும் முறைகளாகும்.கட்டிடம் மட்டும் வாஸ்து விஞ்ஞானப்படி இருந்தால் போதாது. அறையினுள் வைக்கும் பொருட்களை பொருத்தும் நம் வாழ்வின் ஏற்றம் இறக்கம் காணும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

(தொடரும்)

வாஸ்து பாஸ்கர்