உருமாறி வந்த உத்தமன்உருமாறி வந்த உத்தமன்



சோமாசி மாறர், சிறந்த ஒரு சிவனடியார். வழக்கமாக வேள்விகள் நடத்தி தன் இறைப்பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அவருக்குள் ஓர் ஆசை. தான் நடத்தவிருக்கும் வேள்விக்கு சர்வேஸ்வரனே நேரில் வந்து அவிர்ப்பாகம் ஏற்க வேண்டும் என விரும்பினார். பேராசைதான். ஆனால், அப்படிப்பட்ட ஒரு இறையருளுக்கு தான் பாத்திரமாவோமா என்று அவர் ஏங்கியிருந்தார்.

சரி, இதற்கு இறைவனை எப்படி சம்மதிக்க வைப்பது? அவருக்கு பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. திருவாரூர் தியாகேசப் பெருமானும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரும் நெருக்கமானவர்கள் என்பது அவர் நினைவுக்கு வந்தது. சரி, சுந்தரரிடம் எப்படிக் கேட்பது..?

சுந்தரருக்கு ‘தூதுவளைக் கீரை’ மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார் அவர். ஆகவே, தினமும் காலையில் அவரது வீட்டிற்குச் சென்று ஒரு கட்டு தூதுவளைக் கீரையைக் கொடுத்து, அவரது நட்பைப் பெற்றுவிட்டார். சுந்தரரிடம் சோமாசி மாறரின் நட்பு உறுதிப்பட்டது. அவரிடம் தன் உளக் கிடக்கையை வெளியிடும் காலமும் கனிந்தது. தனது வேள்வி பற்றியும், இறைவனே நேரில் வந்து அவிர்ப்பாகம் பெற வேண்டும் என தான் விரும்புவதையும், நயமாக சுந்தரரிடம் தெரிவித்தார் மாறர். அவருடைய அபரிமிதமான ஈடுபாட்டையும், பக்தியையும் கண்டு வியப்புற்றார் சுந்தரர். தனக்கு அவர் கொடுத்த கீரையைவிட, அவர் இறைவன் மேல் கொண்டிருந்த பக்தியால் நெகிழ்ந்தார்.

விரைவிலேயே, தியாகேசப் பெருமானிடம், மாறரின் கோரிக்கையை எடுத்துச் சென்றார் சுந்தரர். அதை, அப்போதே, அப்படியே ஏற்றுக் கொண்டார் உலகநாதர். ஆனால், கூடவே நிபந்தனை ஒன்றையும் வைத்தார். “எமது பக்தன் மாறன் நடத்தும் வேள்விக்கு நான் நிச்சயமாக வருவேன். ஆனால், நான் எந்த உருவிலும் வருவேன்! அவன்தான் என்னைக் கண்டுகொள்ள வேண்டும்!” என்பதே அந்த நிபந்தனை. சுந்தரரும் மனமகிழ்ந்து, நல்ல சேதியை மாறருக்கு உடனே தெரிவித்தார்.

“ஆஹா! நாம் நடத்தப்போகும் வேள்விக்கு எம்பெருமான் நேரில் வர ஒப்புக்கொண்டு விட்டார்! எனவே, ஏற்பாடுகள் அனைத்தும், எவரும் இதுவரை கண்டிராதபடி அமைந்திட வேண்டும்’’ என்று மனமகிழ்ந்த மாறர், உடனே அதற்கான பணிகளில் ஈடுபட்டார். அவர் தலைசாய்த்து ஓய்வு எடுக்கவில்லை. பசி பார்க்கவில்லை. தாகம்கூட எடுக்கவில்லை. ஓர் அற்புதம் நிகழப்போகிறது. இங்கே இறைவனின் இன்னொரு அவதாரம் நிகழப்போகிறது. எப்படி வருவார் பரமசிவன்? அடிமுடி காணமுடியாத அந்த ஓங்கி நின்ற உத்தமன் எந்த ரூபத்தில் வரப்போகிறான்?

யோசிக்க, யோசிக்க, அந்த யோசனையே அவருடைய உள்ளத்துக்கும் உடலுக்கும் மிகப் பெரிய ஊக்கம் தந்தது. பிரமாண்டமான வேள்விச்சாலை ஒன்றை அமைக்க உத்தரவிட்டார். வைகாசி ஆயில்ய நட்சத்திர தினமே  வேள்விக்கான நாளாக நிச்சயிக்கப்பட்டது. வேள்விச்சாலையில், வேதிகைகள் அமைக்கப்பட்டு, அதனைச் சுற்றிலும் வேள்விக் குண்டங்கள் வடிவமைக்கப்பட்டன. நான்மறை ஓதிய சான்றோர் பலர் நூற்றுக்கணக்கில் குவிந்தனர். வேள்விக்கான பொருட்கள் மலைபோல் குவிந்த வண்ணமிருந்தன. யாகசாலை தயாராகி விட்டது. அதனைச் சுற்றிலும் தெய்வீக மணம் பரவியது. வேத ஒலி எதிரொலித்தது; திருமுறைப் பண் வானை எட்டியது.

வேள்வியும் துவங்கியது. இறையாணை பெற்று, வேழ முகத்தானை வணங்கி, பசு, பரி, யானை ஆகியவற்றுக்கு பூசனை செய்து, ஆற்றிலிருந்து புனித நீரை எடுத்து வந்து, வேதிகைகளில் திருக்குடங்களை அலங்கரித்து வைத்து அவற்றிற்குரிய மந்திரங்களை ஓதி, இறைவனை அவற்றில் எழுந்தருளச்செய்து, திருமறைகள் ஓதி, வேள்வி முறையாகத் துவக்கப்பட்டது. அத்தனை  நிகழ்வுகளும் செவ்வனே நடந்தேறியது கண்டு, கூடியவர்கள் அனைவரும் வியந்தனர். மாறரும் பெருமிதத்தோடு, வேள்விச் சாலையைச் சுற்றிலும் நோட்டம் விட்டார்.எந்த நேரத்திலும் இறைவன் எழுந்தருளப் போகிறார் என்ற பேரார்வம் அவரது நெஞ்சத்தில் நிரம்பி வழிந்தது. அதே நேரத்தில், வேள்வியில் ‘நிறையவி’ அளிக்கும்போது நீலகண்டன் வந்துவிட வேண்டும் என்ற ஏக்கமே மேலோங்கியிருந்தது.

அந்த நேரத்தில் தொலை தூரத்திலிருந்து, எக்காளமும் பறையொலியும் உரக்கக் கேட்டது. கூர்ந்து கவனித்தார் மாறர். வேள்விச் சாலையை நோக்கியவாறு வந்து கொண்டிருந்தது ஒரு பெருங்கூட்டம். தாரை, தப்பட்டை, உருமி, கொம்பு ஆகியவற்றின் ஓசை எதிரொலிக்க, எக்காளத்தின் ஒலி, வானைப் பிளக்க, வேள்விச் சாலையை நெருங்கி வந்தது அந்தக் கூட்டம்.

அந்தக் கூட்டத்தின் நடுவே, ஆஜானுபாகுவாக ஓர் இளைஞன், முகத்தில் பேரொளி வீசிட, வெட்டியான் கோலத்தில் அந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று வந்துகொண்டிருந்தான். இறந்துபோன கன்றுக்குட்டி ஒன்றின் உடலை ஒரு குச்சியில் கட்டி தோளிலே சுமந்துகொண்டு வந்தான் அவன். ஒரு கரத்தில் குச்சி, இடுப்பிலே பறை, மறுகரத்தில் கயிற்றினால் கட்டப்பட்ட நான்கு நாய்களை இழுத்தவாறு வந்து கொண்டிருந் தான். அவனருகே அவனது துணைவி, தலையிலே கள் குடத்தை சுமந்தவாறு வர, உடன் இரு குழந்தைகள். அந்தக் குடும்பத்தைத் தொடர்ந்து காதைப் பிளக்கும் பறையொலி எழுப்பி வந்தது அந்தக் கூட்டம். அந்தக் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஓடினர் வேள்வியில் ஈடுபட்டிருந்த சான்றோர்கள்.

திகைத்தார் மாறர். பேரருளாளன் பரமேஸ் வரனை எதிர்நோக்கி நின்றபோது, இப்படி ஒரு கூட்டம் வேள்வியையே குலைத்திடுமோ என்ற அச்சம் மாறருக்கு எழுந்தது. தினமும் தான் வணங்கிடும் ஆனைமுகனை மனதில் நினைத்து, அருகில் இருந்த விநாயகர் கோயிலை உற்று நோக்கினார். வந்திருப்பது எம்பெருமான் தியாகேசரே என்று உணர்த்துவதுபோல விநாயகர் தன் விரலைக் காட்டி உணர்த்தினார்.

அவ்வளவுதான்! ‘எந்த உருவிலும் வருவேன்’ என்று கூறியிருந்தாரே எம்பெருமான், அதனை கருத்தில் கொள்ளாமல் அசட்டையாக இருந்துவிட்டோமே என்று எண்ணி, அந்த கூட்டத்தின் தலைவனின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். ஆனந்தக் கண்ணீர் வடித்தார். நேரில் வந்து அவிர்ப்பாகம் பெற்றதோடு, மாறருக்கு காட்சியும் தந்தார் அந்த வேத நாயகர். வேள்வியும் இனிது முடிந்தது.

இறைவனே நேரில் எழுந்தருளினாலும், குருவருள் இருந்தால்தான் வந்தவரை பகவான் என உணர முடியும் என்பதற்கு சோமாசி மாற நாயனாரின் வரலாறுதான் சான்று. சுந்தரரின் பூரண அருளோடு, விநாயகரின் திருவருளோடு, மாறர் அந்தப் பேரருளாளனை நேரில் காண முடிந்தது. சோமாசி மாற நாயனாரின் பெரு வேள்வி தனிச் சிறப்பு பெற்றது.இந்த அதிசயம் எங்கே நிகழ்ந்தது? திருவாரூருக்கு அருகில் உள்ள மாகாளம் என்ற சிற்றூரில்தான்.

திருமாகாளம், அம்பல் என்ற இரு திருத் தலங்களுக்கிடையே வேள்விச் சாலையும், சுட்டிக் காட்டிய விநாயகர் திருக்கோயிலும் உள்ளன. ஆண்டுதோறும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று இந்த யாகத் திருவிழா, பெரும் உற்சாகத்தோடு கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது.பூச நட்சத்திரத்தன்று தூதுவளை கீரை சமர்ப்பித்தல், ஆயில்யத்தன்று தியாகேசப் பெருமான் வெட்டியான் கோலத்தில் வேள்விச் சாலைக்குச் சென்று அவிர்பாகம் ஏற்றல், இரவு கண்ணாடிப் பல்லக்கில் சோமாசி மாற நாயனார், தம்பதி சமேதராக திருவுலா, மக நட்சத்திரத்தன்று, வெட்டியான் கோலத்தில் வந்த இறைவனைக் கண்டுகொள்ளாமல் அஞ்சி ஓடிய அந்தணர்களுக்கு காட்சி தருதல், இறுதியாக அம்பன், அம்பாசுரன் என்ற அரக்கர்களை வதம் செய்த பாவம் தீர்ந்திட காளி இறைவனை பூசித்தல் ஆகியவற்றோடு திருவிழா நிறைவு பெறுகிறது.

சுற்றுப்புற கிராமங்களிலிருந்தெல்லாம், பெரும் திரளாக மக்கள் இந்த வேள்வியையும், காட்சி தந்த நாயகரையும் தரிசித்து வணங்கிட கூடுகின்றனர். கடும் கோடையையும் பொருட்படுத்தாது இறைவனை வணங்கிட வருவோருக்கு, வழியெங்கும் தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர் மோரும், பானகமும் வழங்குகிறார்கள் ஊர் மக்கள். தெருவெங்கும் தண்ணீர் தெளித்து, மாக்கோலம் போட்டு மகேசனை வரவேற்கிறார்கள். மாகாளத்திலிருந்து வெட்டியான் கோலத்தில் புறப்பட்ட தியாகேசர், வேள்விச் சாலையை அடைந்து காட்சி தந்த நாயகராக அருள்பாலிப்பதும், கண் கொள்ளாக் காட்சியாகும். அவிர்ப்பாக பிரசாதம், மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தத் திருவிழாவில் திருவாரூர் தியாகராஜப் பெருமானே எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில், திருவாரூரில் தியாகேசருக்கு உச்சிக்கால வழிபாடு இல்லை.
மாகாளம் வரை தியாகேசர் செல்லும் பாதையில் உள்ள சிற்றூர்களும், இந்த வரலாற்றையொட்டிய பெயர்களை உடையதாகவே அமைந்துள்ளன. இறந்த கன்றுக்குட்டியை ஏந்திய ஊரே கடா மங்கலம், குடத்தில் கள் பொங்கி வழிந்த ஊர் பொங்குசாராய நல்லூர், பறை, தானே ஒலித்த ஊர் அடியக்க மங்கலம்.

கேட்கக் கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறதல்லவா?அம்பர் - மாகாளம், திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில், பூந்தோட்டத்திற்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.இறைவனே நேரில் எழுந்தருளினாலும், குருவருள் இருந்தால்தான் வந்தவரை பகவான் என உணர முடியும் என்பதற்கு சோமாசி மாற நாயனாரின் வரலாறுதான் சான்று.

- சேகரன்

அம்பர் - மாகாளம்