ஸ்ரீராம தரிசனம்



ஸ்ரீ ராமநவமி 28-3-2015

ராம நாமம், சைவ-வைணவ ஒற்றுமைக்கோர் உதாரணம். திருமாலின் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அஷ்டாட்சர மந்திரத்திலுள்ள ‘ரா’வும், எந்நாட்டவர்க்கும் இறைவனாம் பரமேஸ்வரனின் ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்திலுள்ள ‘ம’வும் சேர்ந்து அமைந்ததே ‘ராம’நாமம். இந்த தாரக நாமத்தை, காசியில் உயிர் விடுபவர்களின் காதுகளில் தனது திருவாயாலே எடுத்துரைத்து அவர்கள் மோட்சம் பெற வழிவகுக்கிறார் சிவபெருமான்.

மற்றைய பல திருவிழாக்களைப் போல நாட்டின் ஒரு பகுதிக்குரிய திருவிழாவாக இல்லாமல், இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும் மற்றும் உலகளாவிய நிலையிலும் ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் 28-3-2015 அன்று ஸ்ரீராமநவமி அமைகிறது. இச்சமயத்தில், தமிழ்நாட்டில் சில தலங்களில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ராமபிரானை தரிசிக்கலாமா?மதுராந்தகம்சென்னையிலிருந்து திண்டிவனம் பாதையில் அமைந்துள்ளது மதுராந்தகம். இங்கே, கொள்ளை அழகுடன் பேரருள் புரிகிறார் ஏரிகாத்த ராமன்.

பெருமழை பிடித்தொழுக, ஊரெல்லாம் வெள்ளக்காடாகிவிட்டது. மிகப் பெரிய பரப்பளவுள்ள மதுராந்தகம் ஏரியில் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு உயர்ந்து ஏரியே உடைப்பெடுத்துவிடுமோ என்று மக்கள் அஞ்சி ஊரைவிட்டே வெளியேறிவிடத் துடித்தார்கள். அப்போது அந்தப் பகுதியில் கலெக்டராகப் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரி செய்வதறியாது திகைத்தார். இயற்கையின் சீற்றத்துக்கு எப்படி பதில் சொல்வது, மக்களை எப்படிக் காப்பது என்று பெரும் கவலையில் ஆழ்ந்தார். அவருக்கு ஆட்சி நடைமுறையில் உதவி வந்த சில தமிழ் அதிகாரிகள் அவரிடம், மதுராந்தகம் ராமரை வேண்டிக்கொண்டால் அவர் அந்த அபாயத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றுவார் என்று யோசனை தெரிவித்தார்கள். ஆங்கிலேயருக்கு அதில் உடன்பாடில்லை.

ராமர் அவர்கள் சொல்லும் அளவுக்கு அத்தனை பராக்கிரமசாலியாகவா இருப்பார்? இத்தனைக்கும் ஆன்மிக உணர்வுக்கும் அவரவர் உள்ளத்துக்கும் மட்டுமே தெரியக்கூடிய ராமர், பிறர் கண்களுக்கு வெறும் கற்சிலையாகவே காட்சியளிக்கும் அவர், எப்படி இந்த சீறும் இயற்கையைக் கட்டுப்படுத்தமுடியும்? ஒவ்வொரு விநாடிக்கும் அதன் ஆர்ப்பாட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறதே, மனித முயற்சிகளைப் பரிகாசம் செய்யக்கூடிய இந்த அட்டகாசத்தை கோயிலில் குடிகொண்டிருக்கும் ஒரு சிலை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? கலெக்டர் அலட்சியமாக அவர்களுடைய யோசனையை விலக்கினார். ‘வேறு ஏதாவது பேசுங்கள்,‘ என்றுசொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

அன்றிரவு, என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று பரிதவித்தபடி தூக்கமே பிடிக்காமல் படுக்கை யில் படுப்பதும், எழுந்து உட்காருவதும், அறையிலேயே நடப்பதும், சாளரத்தின் வழியாக கொட்டித் தீர்க்கும் மழையையும், மேலே மேலே ததும்பி, ஏரிக்கரையினின்று வெளியேற முயற்சிக்கும் தண்ணீரையும் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். அப்போது அந்த ஏரிக்கரைமீது இரண்டு பேர் நெடிதுயர்ந்த தோற்றத்தினராய், ஒருவர்பின் ஒருவராக நடந்து வந்து கொண்டிருப்பதை மின்னல் ஒளியில் பார்த்தார், கலெக்டர்.

 யார் அவர்கள்? மதுராந்தகம் கோயிலில் உள்ள சிலைகள் போலவே இருக்கிறார்களே! சிலைக்கு உயிர் வந்துவிட்டதா? இடது கையில் வில்லேந்தி, வலது கையில் அம்பு ஏந்தி, ‘போதும் இயற்கையே, உன் ஆரவாரத்தை நிறுத்து,’ என்று ஆணையிடுவதுபோல வானத்தைப் பார்த்தபடி அவர்கள் உறுதியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். என்ன அதிசயம்! மின்னல் மறைந்தது, இடி ஒடுங்கியது. கருமேகங்களோ அப்பாவியாக வெண்மை வண்ணத்துக்கு மாறின. மழை முற்றிலுமாக நின்றுவிட்டது. தேங்கிய உபரி நீரெல்லாம் பள்ளம் நோக்கிப் பாய ஏரியின் நீர் மட்டமும் ஒரு கட்டுப்பாட்டுக்கு வந்தது.

உடல் சிலிர்த்தார் கலெக்டர். உடனே தன் அதிகாரிகளைக் கூப்பிட்டார். ‘நீங்கள் சொன்னது அப்படியே உண்மை. உங்கள் ராமன், தன் இளவல் லட்சுமணனுடன் இந்த ஏரிக்கரை மீது நடந்து சென்று இயற்கையை எல்லை மீறாதபடி தடுத்து நிறுத்தியிருக்கிறார். உங்களுடைய பக்திக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்,’ என்று பெருந்தன்மையுடன் கூறியதோடு, அந்த ராமர் கோயிலை புனரமைக்கவும், அக்கோயிலின் வழிபாடுகளுக்கு எந்த இடையூறும் வராதபடியும் சில ஏற்பாடுகளைச் செய்தார்.

உடனிருந்த தமிழ் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி. உடனே அவர்கள், ‘ஐயா, இந்த அற்புதம் உங்கள் பக்தியாலும் ஏற்பட்டதுதான். ஆமாம், வெள்ளம் சூழ்கிறதே, மக்கள் பரிதவிக்கிறார்களே, இவர்களைக் காப்பாற்ற வேண்டுமே என்று இரவெல்லாம் தூங்காமல் வேதனைப் பட்டீர்களே, அந்த வேதனை வெறும் சோக உணர்வல்ல, மக்கள் நல்வாழ்வை நாடிய ஆழ்ந்த தியானம், மிகப் பெரிய யாகம். அந்த ‘பக்தி’ காரணமாகத்தான் ராமபிரானும் உங்களுக்குக் காட்சியளித்திருக்கிறார். பிறர் நலனுக்காகத் துடிதுடிக்கும் உள்ளம் எந்த மதத்துக்குச் சொந்தமானதென்றாலும், அந்த உணர்வுக்கு உரிய மரியாதை செலுத்த எந்த மதக் கடவுளும் முன்வரத்தான் செய்வார்,’ என்று சொல்லி அவரைப் போற்றினார்கள். அப்படி, உள்ளமுருக தன்னை ஒருமுறை யார் நினைத்தாலும் அவர் துயர் துடைக்க ஓடோடி வருவான் இந்த மதுராந்தக ராமன்.

குரோம்பேட்டை

ராமேஸ்வரத்திற்கு அருகாமையில் உள்ளது தனுஷ்கோடி. கடல் நீர் பொங்கி இந்த ஊருக்குள் நுழைவது இயற்கையின் விளைவு என்று அறிவியல் சொன்னாலும், அங்கே இருந்த கோயிலில் குடிகொண்டிருக்கும் ராமனை தரிசிக்கத்தான் என்று ஆன்மிக விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஆனால், வெள்ளத்தின் பக்தி வேகம், வெறும் தரிசனத்தோடு நின்றுவிடாமல் முழு கோயிலையும் தன்னுடன் சேர்த்து இழுத்துக்கொண்டு கடலுக்குள்ளேயே போய்விடும் அபாயமும் இருந்தது. அந்த அபாயத்தில் கோயில் அடித்துக் கொண்டுதான் போயிற்று. கடலின் ஆவலுக்கு முழுமையாக அணை போட முடியாவிட்டாலும், பக்தர்கள் அந்த ராமரை மட்டும் தம் வசப்படுத்திக்கொண்டு வந்து விட்டார்கள். அப்படி வந்த ராமரை சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக சென்னை பல்லாவரத்தையடுத்த பம்மலில் கோயிலில் குடியமர்த்தினார்கள். தற்போது அவர் குரோம்பேட்டை, நேரு நகருக்கு குடிமாறி வந்துவிட்டார்.

இந்த ராமர் விசேஷமானவர். இவருக்கு நான்கு கரங்கள். மேல் வலது கை சக்கரத்தையும், இடது கை சங்கையும் தாங்கியிருக்கின்றன. கீழ் வலது கை அபயஹஸ்தமாகத் திகழ, இடது கை கதாயுதத்தின் மேல் ஊன்றியிருக்கிறது. சதுர்புஜ ராமர் என்று இவருக்குப் பெயர். கோயில், ‘தனுஷ்கோடி ராமர் திருக்கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.

அயோத்தி

அயோத்தியில் ராமன் கோயில்கள் இருப்பதில் அதிசயமில்லைதான். அங்குள்ள பெரும்பாலான கோயில்களில் வட இந்திய நடைமுறைப்படி வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் சென்னையைச் சேர்ந்த தமிழ் பக்தர் ஒருவர் நிர்மாணித்த ராமன் கோயில் அங்கே மிகவும் பிரசித்தி பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அந்தக் கோயிலில் தென்னாட்டு முறைப்படி வழிபாடுகள் நடைபெறுவதுதான்!

அந்தக் கோயிலுக்கு அம்மாஜீ மந்திர் என்று பெயர். சீதை, லட்சுமணனுடன் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார் வில்லேந்திய ராமன். உற்சவ மூர்த்திகள் அழகுற அமைந்திருக்கிறார்கள். இவர்களில் ராமனுடன், லட்சுமணன், சீதை, பரதன், சத்ருக்னன், அனுமன், விபீஷணன் ஆகியோரும் இருப்பது தனிச் சிறப்பு. இவர்களுடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளியிருக்கிறார்.
வழக்கமான வடநாட்டுப் பாணியிலிருந்து மாறுபட்டு, மூலவர்கள் பளிங்குச் சிலைகளாக இல்லாமல் கற்சிலைகளாகவே அமைந்திருக்கிறார்கள். கருவறை சுவர்களிலும் பளிங்கு சதுரக் கற்கள் பதிக்கப்பெறவில்லை. 

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி-திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான். இவருடைய சந்நதியில் காட்சி தரும் ராமபிரான் பிற தலங்களில் பார்ப்பதுபோல நிமிர்ந்து காணப்படுவதில்லை. தன் தலையைச் சற்றே சாய்த்தபடி அழகுக் கோலம் காட்டுகிறார். எதற்காக இந்த சாய்ந்தத் திருக்கோலம்?

சீதையைக் கவர்ந்து சென்றவன் ராவணன்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியாகிவிட்டது. அனுமனும் இலங்கைக்குச் சென்று அங்கே சீதை சிறை பட்டிருக்கும் உண்மையை உறுதிப்படுத்தியாகிவிட்டது. தன் தவறை ராவணன் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சீதையைத் திருப்பி அனுப்பும் உத்தேசம் இல்லாதவனாகவே அவன் இருந்தான். போர் ஒன்று தான் அவனை அடிபணிய வைக்கும் ஒரே வழி. அந்த சமயத்தில்தான் ராமனுக்கு ஒரு தகவல் வந்தது. அதாவது, ராவணனின் தம்பியும், அவனுக்கு நேர் எதிரான குணமும் கொண்ட விபீஷணன் ராமனிடம் சரணடைய விருப்பம் தெரிவித்திருந்தான்.

அசுர மன்னனான ராவணனின் தம்பி எப்படி நற்குணம் கொண்டவனாக இருக்க முடியும்? அவனுடைய சரணாகதியை ஏற்கக்கூடாது என்பது லட்சுமணனின் வாதம். ஆனால், ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை,’ என்றபடி, நல்லவனாவதும், தீயவனாவதும் பிறப்பில் இல்லை, வளர்வதில் இருக்கிறது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்தவன் ராமன். அதனால் அவன் விபீஷணனை தன்னோடு ஒருவனாக ஏற்க விரும்பினான். அவனுடைய இந்த விருப்பம் நியாயமானது என்றும், அதில் எந்தத் தயக்கமும் வேண்டாம் என்றும் அனுமன் அபிப்ராயப்பட்டான்.

விபீஷணன் பூரண குணத்தவன், நாகரிகம் தெரிந்தவன். அதர்மத்துக்கு அஞ்சுபவன். அண்ணனே ஆனாலும், அநீதியைத் தட்டிக் கேட்பவன் என்றெல்லாம் அனுமனுக்கு விபீஷணனைப் பற்றித் தெரிந்திருந்தது. அதனாலேயே, ராமனிடம் அவனைப் பற்றிய நல்லெண்ணத்தை வளர்க்கும் வகையில் அவனுடைய தூய குணங்களை விவரித்தான். அப்படி அனுமன் விளக்கும்போதுதான், அதைத் தலைசாய்த்து ராமன் கேட்டான். நல்ல விஷயங்களை நல்லவன் ஒருவன் சொல்லும்போது அதற்கு உரிய மதிப்பு கொடுக்கும் வகையில், தலை சாய்த்து கேட்கும் பண்பு மிகுந்தவன் ராமன். அதனால்தான் அப்படி ஒரு திருக்கோலம் காட்டுகிறான் இத்தலத்தில். இந்த பாவம், இந்த சம்பவத்தைதான் விளக்குகிறது என்று, பெரிய திருமலைநம்பி என்ற மகான், தன் சீடனான ராமானுஜருக்கு எடுத்துரைத்திருக்கிறார்.

திருவல்லிக்கேணி

சென்னையின் புகழுக்கு ஒரு காரணமாக விளங்குகிறது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில். ஆமாம், 108 திவ்ய தேசங்களில் இக்கோயிலும் ஒன்று. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற அற்புதத் தலம். இந்தத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளார் ராமன். தனியொருவனாகத் தன்னை எப்போதும் அடையாளம் காட்டிக்கொள்ளாத இந்தப் பெருந்தகை, இக்கோயிலிலும், சீதை-லட்சுமணன் சகிதமாகவே தரிசனம் தருகிறான். அவர்கள் மட்டுமா, சகோதரர்கள் பரதன், சத்ருக்னனுடனும் சேர்ந்து குடும்ப சகிதமாய் காட்சியளிக்கிறான்.

யாரையும் விலக்காத, அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் பண்பு கொண்டவன் ராமன். தன் சிற்றன்னை சுமித்திரையின் மகனான லட்சுமணனை எப்போதும் தன்னுடனேயே இருத்திக்கொண்டான். கைகேயியின் மகனான பரதன், தனக்கு மாற்றாக அயோத்தியை ஆளப்போகிறான் என்று அறிவிக்கப்பட்டபோதும் அவன் மீது எந்த துவேஷமும் கொள்ளாமல் அவனுக்காக நாட்டையே விட்டுக்கொடுக்க முன்வந்தான். சுமித்திரையின் இன்னொரு மகனான சத்ருக்னன், பரதனோடு இணைந்திருந்தாலும், தனக்கும் அவன் தம்பிதான் என்று அவனையும் விட்டுக் கொடுக்காத பேரருளாளன் அவன். அதனால்தான் இந்த திருவல்லிக்கேணி திருத்தலத்தில் அவன் பரதன், சத்ருக்னனுடன் சேர்ந்து தரிசனம் தருகிறான்.

இப்படி சகோதரர் சகிதமாக ராமன் காட்சி தருவதற்கு இத்தலத்தில் இன்னொரு காரணமும் இருக்குமோ என்று பெரியவர்கள் திகைப்புடன் ஊகிப்பார்கள். அது என்ன காரணம்? இந்தத் திருத்தலத்தில், பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கருகே அமைந்துள்ளது ‘கோமுட்டி பங்களா‘ என்று ஒரு பகுதி. இது, அயோத்தி ராமனின் சொத்து என்கிறார்கள்! அதாவது தனக்கு உரியதான ஒரு சொத்து தனக்கு மட்டுமல்ல, தன் ரத்த பந்தங்களுக்கும் உரியதுதான் என்று விளக்குவதுபோல, ராமன் தன் சகோதரர்களான பரதன், லட்சுமணன், சத்ருக்னனுடன் சேர்ந்து இங்கே குடிகொண்டிருக்கிறானோ? அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. தனக்கில்லாவிடினும் பிறர்க்கு அளித்திடும் பெருந்தகையாளன் அல்லவா ராமன்?

திருவஹிந்திரபுரம்

தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூர் அருகே அமைந்துள்ள தேவனாதப் பெருமாளின் திருச்சந்நதியிலே கோயில் கொண்டிருக்கிறான் இந்த கோசலை மைந்தன். கோசலைக்குப் பிறந்தாலும், சிற்றன்னை கைகேயியின் உத்தரவுக்கு உடனே தலைவணங்கி, பெரியவர்களை மதிக்கவேண்டிய பண்பை இளைஞர்களுக்கு உணர்த்திய உத்தமன் அவன். தன் மனைவிக்குத் தான் அளித்த வரங்கள் இப்படி தன்னையே தாக்கும் என்பதை எதிர்பாராத தசரதனை கேள்விகேட்டு வேதனைப்படுத்தாமல் உடனே காடேகிய, தந்தை சொல் தாண்டாத தவப் புதல்வன் அவன்.

‘நாளை உனக்கு பட்டாபிஷேகம்,’ என்று பெருமை பொங்க, தன் தலை தடவி தகவல் தெரிவித்த தந்தையாரைப் பணிவுடன் வணங்கி, எந்த உணர்வோடு ஆசி பெற்றானோ, அதே உணர்வு சிறிதும் குறையாமல்தான், ‘நீ ஆரண்யம் புக வேண்டும், உன் தம்பி பரதன் ஆட்சி பீடத்தில் அமரவேண்டும்,’ என்று தசரதன் சொன்ன வாசகங்களை அவன் எதிர்கொண்டான். அவனுடைய தாமரை முகம், ‘பதவி’ என்றபோது பிரகாசிக்கவும் இல்லை; ‘துறவு’ என்றபோது வாடிவிடவும் இல்லை,‘ என்கிறார் கம்பர். அப்படி ஒரு மந்தஹாசவதனனை திருவஹிந்திரபுரத்தில் தரிசிக்கலாம்.

இந்த ராமனிடம் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார், ஸ்வாமிதேசிகன். ராமனுடைய வீரதீர பராக்கிரமங்களை நினைத்து நினைத்து உருகி அந்த சம்பவங்களில் அப்படியே தோய்ந்து போனவர் அவர். எங்கே பணிவு காட்டவேண்டுமோ அங்கே பணிவையும், எங்கே வீரத்தைக் காட்ட வேண்டுமோ அங்கே வீரத்தையும் காட்டி, மனித குலத்துக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவன் அவன். சக்கரவர்த்தித் திருமகனாக இருந்தாலும், சாமானியர்களும் போற்றும் பெருந்தகையாக விளங்கியவன். அத்தகைய பண்பாளனின் காதையை, ‘ரகுவீரகத்யம்’ என்ற மிகவும் பிரபலமான வடமொழி பாடல் தொகுப்பாக ஸ்வாமிதேசிகனைப் பாடச் செய்தவன்.

எத்தனைபேர் எத்தனை வகையாகவும் ராமாயணத்தைச் சொன்னாலும், அதைக் கேட்பதில் யாருக்கும் அலுப்போ, அயர்ச்சியோ ஏற்படுவதில்லை என்றால் அதுதான் ராமனின் தனிச் சிறப்பு. அப்படி சிறப்பு பெற்ற செல்வன் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் திருவஹிந்திரபுரம்.

வடுவூர்

பாலகன் ராமன், அயோத்தி மக்களின் அன்பு அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவன். அடுத்த அவதாரத்தில் கிருஷ்ணனாக உருவெடுக்கப் போகும் அவனை அப்போது கொஞ்சும் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அந்த மக்கள் ஏங்கினார்களோ என்று அதிசயிக்கத்தக்க அளவுக்கு பாலகன் ராமன் மீது யாவரும் ஒன்றுபோல் அன்பு பாராட்டினார்கள். ராமனும் அந்த பால்ய பருவத்தில் ஏற்றத் தாழ்வுகள் பாராமல் அனைவரிடமும் பழகினான்.

அரச சம்பிரதாயப்படி வில் வித்தை, வாள் வீச்சு, மற்போர் போன்றவற்றைப் பயின்றான் என்றாலும், அந்தப் பயிற்சியெல்லாம் வன்முறை சார்ந்தது என்பதையும், தவிர்க்கவே முடியாத கட்டத்தில்தான் அவற்றைப் பிரயோகிக்க வேண்டும் என்பதையும் அவன் பரிபூரணமாக உணர்ந்திருந்தான். அதனாலேயே அந்தப் பயிற்சிகளின்போது இறுகும் அவனது கரங்கள், பிறருடன் பழகும்போது மென்மையாகிவிடும். இதற்கு முக்கிய காரணம் அவன் மனம் அத்தனை மென்மையானது, அவனது இளந்தளிர் சருமம்போல!

பாலகனாக நகர் உலா வரும் காலங்களில், அவன் நாட்டின் பலவகை முகங்களைப் படித்திருக்கிறான். மாறுபட்ட குணாதிசயம் கொண்ட மக்கள், அவர்களுடைய தொழில்கள், அவர்களுடைய நம்பிக்கை, வாழ்க்கை முறை என்று எல்லாவற்றையும் அவனால் கவனிக்க முடிந்தது. அந்த வகையில்தான் ஒரு கொல்லன் பட்டறையில் வளைந்திருந்த இரும்புக் கோல் ஒன்றைத் தணலாக்கி, சம்மட்டியால் அடித்து அதை நிமிர்த்தியதை அவன் பார்க்க நேர்ந்தது.

குழந்தையாக அவன் சிந்தித்ததன் பலன்தான், உண்டிவில்லால் கூனியின் முதுகை நிமிர்த்த அவன் மேற்கொண்ட முயற்சி. வெளிப்பார்வைக்கு அவன் அந்த மூதாட்டியை இம்சைபடுத்தியதாகத் தோன்றினாலும், அவன் மனதுக்குள் அவள் நலம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கமே நிறைந்திருந்தது.

அந்த பாலக தோற்றத்தை இந்த யுகத்து பக்தர்கள் கண்ணாற கண்டு ஆனந்தப்படவேண்டும் என்பதற் காகவே, வடுவூரில் ராமன் அழகுக் குழந்தை உருவத்தில் அற்புத தரிசனம் தருகிறான். இத்தலம் தஞ்சையருகில் அமைந்துள்ளது.

கும்பகோணம்

‘குடந்தையாம் கும்பகோண அற்புதத் தலத்தில் என் ராகவன் ராமனுக்கோர் பெரிய கோயில் எடுப்பிப்பேன்’ என்று உறுதி பூண்டார் ரகுநாத நாயக்கர். எந்த இடத்தில் விஜயநகர வாரிசான ஸ்ரீராமன் எனும் பாலகனுக்கு பல இடர்களுக்குப் பிறகு எதிரிகளின் ராஜதந்திரங்களை முறியடித்து ரகுநாதநாயக்கர் அரச பட்டாபிஷேகம் செய்தாரோ அங்கேயே ஸ்ரீராமனுக்கும் பார்த்துப் பார்த்து கோயிலை கட்டினார். தனக்குள் இருந்த ராம பக்தியையும், சிலிர்த்து சிருங்காரமாக தன்னிலவாக திகழ்ந்த கலைத் திறத்தையும் இத்தலத்தில் அப்படியே அர்ப்பணித்து கோபுரமாக்கினார்.

கும்பகோணத்தின் மையமாக அமைந்துள்ளது ராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது. மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் எழில் சூழ் சிற்பச் சோலைகளும் எதிர்கொள்கின்றன. மூலஸ்தானத்தில் ராமச்சந்திரமூர்த்தி, தன் சிம்மாசனத்திலேயே சீதா பிராட்டிக்கும் இடம் கொடுத்து, ராஜ்ய பரிபாலன திருக்கோலத்தில், சாளக்கிராம திருமேனியாக சேவை சாதிக்கிறார். ராஜகம்பீரத் தோற்றம்.

இடது காலை மடக்கி மற்றொரு காலை பூமியில் தொங்கவிட்டிருக்கும் அழகு காணுதற்கரியது. நீருண்ட மேகம் போன்ற நிறம். ஞானச் சூரியனின் கிரணங்களால் ஒளிரும் தெள்ளிய திருமுகம். தாமரை போன்ற மலர்ந்த கண்கள் அருட்சாரலைப் பொழிகின்றன. கூரிய நாசி. செவ்விதழ்கள். அதன் ஓரமாகத் தவழும் பேரானந்தப் புன்னகை. கைகள் அபயஹஸ்தம் காட்டி ‘எப்போதும் காப்பேன்’ என்கிறது. சீதா பிராட்டியார் அருளமுதம் பெருக்கி ராமனிடம் விநயமாக நம் குறைகளை எடுத்துக் கூறுகிறார். நிறைவான வாழ்க்கையை வாரித் தருகிறார். அருகேயே சத்ருக்னன், அண்ணலுக்கு வெண்சாமரம் வீசும் காட்சி வேறெங்கும் காணக் கிடைக்காத அற்புதம்.

லஷ்மணாழ்வார் ராமரின் கோதண்டத்தை கையில் ஏந்திக்கொண்டு, அஞ்சலி ஹஸ்தமாக கை கூப்பியபடி நிற்பதைப் பார்க்கும்போது மனசு நெகிழ்ந்து போகிறது. அவருக்குப் பக்கத்திலேயே பரதாழ்வார் வெண்குடை சமர்ப்பித்துக் கொண்டு நிற்கும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். எல்லோரையும் தாண்டி, அனைத்தையும் ராம சொரூபமாக பார்க்கும், ராம சேவகன், ராம தாசன், ஆஞ்சநேய ஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவை சாதிக்கிறார்.

கைகளில் வீணை ஏந்தி, சதாகாலமும் ராமகாவியச் சுவடியை பாராயணம் செய்து கொண்டிருக்கும் கோலம் காணக் கிடைக்காது. அக்காட்சியை காணும் போது கண்களில் கண்ணீர் தானாக சுரக்கும். அங்கேயே உற்சவ மூர்த்திகள் பொலிவுடன் காட்சி தருகின்றனர். அந்த சந்நதியில் மனம் அப்படியே கரைந்து போகிறது. அயோத்திக்கே சென்று விட்ட ஓர் உணர்வு சூழ்கிறது. எம்பெருமானுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் ‘ராம... ராம... ராம...’ எனும் திவ்ய நாமத்தை விடாமல் சொல்வதேயாகும். இதுவே சகல சம்பத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் என்பது வேத ரிஷிகளின் வாக்கு.

திருப்புட்குழி

புண்ணிய நகராம் காஞ்சிக்கு அருகிலுள்ள அழகிய கிராமமே திருப்புட்குழி. சரித்திரமும், புராணமும் கைகோர்த்துச் செல்லும் அற்புதத் தலம். சிறிய ராஜ கோபுரத்திற்கு முன்பு பரந்து விரிந்திருக்கிறது க்ருத்ர புஷ்கரணி. ஜடாயுவுக்கென தனிக்கோயில் அநேகமாக வேறெங்கும் இல்லை. அது இங்கு புஷ்கரணிக் கரையில் கட்டப்பட்டுள்ளது.

‘‘அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும்’’ என்று திருமங்கையாழ்வார் தன்னையே தாயாகவும், மகளாகவும் பாவித்துச் சேவித்த விஜயராகவனின் முன்பு நிற்கிறோம். எம்பெருமானே என் மகள் நின்மீது கொண்ட காதல் கொஞ்சமும் குறையவில்லை. பித்துப் பிடித்து திரிகிறாள். திடீரென புட்கொழி பெருமானின் மீது காதல் கொண்டவள், திருநீர்மலை பெருமாளைக் காணமாட்டேனா என்று ஏங்குகிறாள்.

நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தன் மகள் பொருட்டு தாய் கேட்பதுபோல யாருக்கும் தோன்றாத ஒரு அற்புத பாவத்தில் மங்களாசாஸன் செய்கிறார், திருமங்கையாழ்வார். ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பதுபோல சங்கு சக்கரத்துடன் நாச்சியார்களுடனும் அபயம், ஆஹ்வான ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கிறார் விஜயராகவப் பெருமாள்.

ஜடாயுவுக்கு அக்னியை மூட்டி சம்ஸ்காரங்கள் செய்யும்போது தாங்க முடியாத அக்னி ஜ்வாலையினால் பெரிய பிராட்டி வலப்பாகத்தை விட்டு இடப்பாகம் வந்ததால் மூல சந்நதியிலேயே பிராட்டி இடப்பக்கம் சற்றே தலையை சாய்த்த கோலத்திலும், வலப்பக்கம் பூதேவி அமர்ந்தும் காட்சி தருகிறாள். வெற்றி முழக்கமிட்டு வீரநாயகனாக கம்பீரத்தோற்றம் காட்டி அமர்ந்திருக்கிறான் விஜயராகவன்.

பெரும் புயல் மழைக்குப் பின் வரும் தூவானத்தின் ஒரு ரம்மியம் அந்தச் சந்நதியில் நிலவுகிறது. ஜடாயுவை மோட்சமேற்றிய ஒரு நிறைவும், அமைதியும், வெற்றி கொடுத்த கம்பீரமுமாக அமர்ந்திருக்கிறான். அருகிலேயே உற்சவ மூர்த்திகளும், சக்கரத்தாழ்வாரும் அருளாட்சி புரிகின்றனர். பேரரசனின் முன்பு நிலவும் அமைதியும், ராமனின் அருட்கோலோச்சும் அழகிலும் நம்மை மறந்து தாயார் சந்நதிக்கும் நகர்கிறோம்.

தாயாருக்கென்று தனிக்கோயிலில் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். இத்தலத்திற்கென்று பக்தர்களிடையே வேறொரு விசேஷ அம்சத்தையும் கொடுத்திருக்கிறாள். அவளின் திருநாமமே அதைச் சொல்லும். இப்பகுதி பக்தர்கள் ‘‘வறுத்த பயறு முளைக்க வைக்கும் மரகத வல்லித் தாயார்” என்று அழைக்கின்றனர். அமாவாசையன்று புத்திர பாக்கியம் வேண்டி நூறு கிராம் அளவுள்ள பச்சைப்பயறை வாங்கி மடப்பள்ளியில் வறுத்துத் தருகின்றனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள் தமது மடியில் அந்தப் பயறை கட்டிக் கொண்டு தாயார் சந்நதிக்கு செல்ல வேண்டும்.

தாயாரின் புனித தீர்த்தத்தை அதில் விடுவர். பிறகு, ஒரு சொம்பு க்ருத்ர புஷ்கரணி தீர்த்தத்தை பிராத்தனைக்காரர்கள் வைத்துக் கொண்டு கோயிலிலேயே அமர்ந்து மணிக்கொருதடவை அதில் சிறிது சிறிது விடவேண்டும். ஒரு நாள் முழுதும் இவ்வாறு செய்துவிட்டு இரவு இத்தலத்திற்கருகிலுள்ள இடத்திலேயே தங்கி விடியற்காலையில் மீண்டும் தாயார் சந்நதிக்கு சென்று மடியிலிருக்கும் பயறை சமர்ப்பித்துவிட வேண்டும். ஆச்சரியமாக முதல்நாள் வறுத்த பச்சைப்பயறு முளைத்திருக்கும் ஆச்சரியத்தை காணலாம். வெகு விரைவில் அவர்கள் புத்திர சந்தானம் வாய்க்கப்பெற்று குழந்தையோடு வந்து தாயாரை தரிசிக்கிறார்கள். பெண்கள் காட்டன் புடவை மட்டும்தான் அணிந்து வரவேண்டும்.

அதுதான் சாஸ்திரத்திற்கு உட்பட்டது என்கிறார்கள். சாதாரணமாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் அந்தந்த தலத்தின் ஸ்தல விருட்சத்தில் தொட்டில் கட்டி நேர்ந்து கொள்வர். ஆனால், இத்தலத்தில் தாயாரின் கருவறைச் சுற்றிலுமுள்ள இடத்திலேயே தொட்டில் கட்டி வைத்துள்ளனர். மரகதவல்லித் தாயார் மாரி மழையாக செல்வமும், சந்தான பாக்கியத்தையும் அருள்கிறாள். வேண்டியதை வாரிக்கொடுப்பதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. வாழ்வின் அடிப்படை பிரச்னைகளால் துவண்டு வந்தோரை ஆற்றுப்படுத்துவதில் தாயாக விளங்குகிறாள்.

ராமேஸ்வரம்

இந்தியாவின் தெற்குக் கோடியில் அமைந்தி ருக்கும் ராமேஸ்வரம் என்ற கோயில், பெருமாளின் அவதாரங்களுள் மிகவும் போற்றத் தகுந்த ராமச்சந்திர மூர்த்தியால் உருவாக்கப்பட்டது. ராமர் ஈஸ்வரனை ஸ்தாபித்தமையால் ராமேஸ்வரம் என்று பெயர். ஈசனின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ராமேஸ்வரமும் ஒன்று. இந்தியாவிலேயே மிகப்பெரிய பிராகாரம் உள்ள கோயில் இது மட்டுமே. 4 ஆயிரம் அடி நீளப் பிராகாரத்தைக் கொண்டிருப்பதோடு, 865 அடி உயரம், 657 அடி அகலம் உடைய மிகப்பெரிய ராஜகோபுரத்தையும் கொண்டு விளங்குகிறது இக்கோயில். ஈசன் ராமநாதர் என்றும் ராமேஸ்வரர் என்றும், அம்பிகை பர்வதவர்த்தினி என்றும் மலைவளர்காதலி என்றும் வணங்கப்படுகிறார்கள்.

ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் இத்தலத்தில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய எண்ணி அனுமனை காசியிலிருந்து லிங்கம் எடுத்து வரப் பணித்தார். அனுமன் வரத் தாமதமாகவே சீதையும் ராமனும் மண்ணினால் லிங்கம் அமைத்து பூஜித்தனர். ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், இந்த ஈசன் ராமேஸ்வரர் ஆனார். இக்கோயிலில் வைணவ ஆலயங்களைப்போல தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது.

ஆலயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் ராமாயண கதாபாத்திரங்கள் சிவனை வழிபடுவது போல் உள்ள சிற்பங்கள் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன. இவற்றை தரிசிக்கக் கட்டணம் செலுத்த வேண்டும். இத்தலத்தில் உள்ள 32 தீர்த்தங்களில் 14 தீர்த்தங்கள் திருக்கோயிலின் உள்ளேயே உள்ளன. ராமர் தன் தனுசினால் உண்டாக்கிய கோடி தீர்த்தமும், தனுஷ்கோடி தீர்த்தமும் இத்தலத்தில் ராமன் பெருமையைப் பறைசாற்றுகின்றன. ராமபிரான் அங்கு வந்ததன் அடையாளமாக ராமர் பாதமும் உள்ளது.

தில்லைவிளாகம்

தில்லைவிளாகம் எப்போதும் சிலுசிலுவென்று கடற்காற்று தவழ்ந்து செல்லும் இதமான பூமி. வழி முழுக்க தென்னையும், வாழையும், மாந்தோப்புகளும் காடாகப் பரவியிருக்கின்றன. மிக ரம்மியமான ஓர் சூழலில் அமைந்திருக்கிறது தில்லைவிளாகம் கோதண்டராமர் கோயில். அழகான முகப்பு கோபுரம் தாண்டி உள்ளே செல்கையில் நீண்ட பாதையைத் தாண்டி நேராக கருவறை அமைந்துள்ளது. கோயிலின் முன்மண்டபத்தில் பெரிய திருவடி எனும் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். கருவறையில் கற்சிலைகளே கிடையாது. பூமியிலிருந்து வெளிப்பட்ட பஞ்சலோகச் சிலைகளே மூலவராக அருள்பாலிப்பதுதான் இத்தலத்தின் முதன்மையான சிறப்பு.

ஸ்ரீராமர் கோதண்டத்தை கையில் ஏந்தி இன்முகத்தோடு கோதண்டராமராக காட்சியளிக்கிறார். திருமுகம் அன்றலர்ந்த தாமரையாக மலர்ந்து கிடக்கிறது. வனவாசம் முடித்து நாடுதிரும்பும் பூரண மகிழ்ச்சி முகம் முழுதும் பொங்கிப் பரவியிருக்கிறது. கோதண்டத்தை தாங்கி நிற்கும் ஒயிலும், இடுப்பின் குழைவும் சிலிர்ப்பூட்டும் பேரழகு. உலகிலேயே வேறு எங்கும் காணமுடியாத அற்புதம், கைகளின் விரல் நகங்கள், நரம்புகளின் புடைப்புகள், மச்சங்கள், வலது காலில் ஓடும் பச்சை நரம்புகளெல்லாம் பார்க்கும்போது இதென்ன இப்படியொரு அமைப்பு என மூச்சே நின்று விடும்போலுள்ளது.

 பேசினால் பேசுவாரோ என்று கூடத் தோன்றுகிறது. வலது கையில் சாதாரணமாக அர்த்த சந்திரபாணம் என்ற பிறைநிலா வடிவிலான பாணம்தான் இருக்கும். ஆனால் இங்கு ராமசரம் எனும் பாணம் தரித்திருப்பது மிகவும் அபூர்வமானது. ஏவப்பட்ட பிறகு அழித்து விட்டு மீண்டும் இவரிடமே திரும்பும் விசித்திரமானது.

சீதை அன்பும், கனிவும், இனிமையும் பொலிய பேரழகு பிராட்டியாக சேவை சாதிக்கிறாள். இளையாழ்வார் லட்சுமணர் கம்பீரத்தோடு சேர்ந்த பணிவோடு அண்ணலுக்கு அருமைச் சகோதரனாக நின்றிருக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி ராமதாசனான அனுமன் தன்னை சிறியோனாக நினைத்து மிக பவ்யமாக வாய்பொத்தி, விநயமாக தலை தாழ்த்தி நிற்கும் பாங்கு வேறெங்கும் காணமுடியாது.

பதினான்கு வருட வனவாசத்திற்குப் பிறகு வெற்றியோடு திரும்பியதால் வேண்டும் வரங்களை வாரிவாரி வழங்குகிறார், வீரகோதண்டராமர். கருவறையே ஒரு ராஜதர்பார் போன்று விளங்குகிறது. எப்போதும் ஒரு சலசலத்தோடும் ஆற்றோட்டத்தைப்போல ஒரு சிலிர்ப்பு அந்தச் சந்நதியில் துடித்துக்கொண்டே இருக்கிறது. நம்மையறியாமல் ஆனந்தப் பூரிப்பு நம்மையும் சூழ்ந்து கொள்கிறது. இத்தலம் திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ளது.

விஜயராகவபுரம்

விஜயராகவஸ்வாமி கோயில் சிறியதாக இருந்தாலும் கீர்த்திமிக்கது. தொன்மையான கோயிலின் வாயிலில் ஒரே கல்லாலான தீபஸ்தம்பம் நெடுநெடுவென்றுள்ளது. அதன் கீழே பாண்டியர்களின் சின்னமான மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சிறிய அழகான சிற்பக்கலை மிகுந்த கம்பம் அது. அதைத் தாண்டிய பலி பீடமும், கொடிமரமும் அதற்கு முன்னே கூப்பிய கைகளோடு காட்சி தரும் கருடாழ்வாரை தரிசித்து உள்ளே நகர்வோம்.

வாயிலிலிருந்து நேரே பார்க்க மூலவரான வீரராகவஸ்வாமி மிக கம்பீரமாக வீற்றிருக்கும் கோலம் பார்க்க உடல் சிலிர்த்துப் போகிறது. சற்று அருகே சென்று காணும்போது சட்டென்று மூலவர் உயிரோடு இலகுவது போன்றதொரு உணர்வு மனதை திகைக்க வைக்கிறது. சங்கு சக்கரத்தோடு அபய, வரத ஹஸ்தத்தோடு வீற்றிருக்கும் எம்பெருமான் வீராசனத்தில் அமர்ந்திருக்கும் கம்பீரம் மயிர்கூச்செறியச் செய்கிறது.

தலை முதல் பாதம் வரை ஓர் அதிர்வலைகள் பரவுவதை பாமரர் கூட அந்தச் சந்நதியில் உணரலாம். மனம் தன்வயமிழந்து பேரமைதியில் மூழ்குகிறது. இது கற்சிலையா அல்லது மர உரி தரித்த ராகவன் இங்கு கல்லைத் தோலாக்கிப் போர்த்தி அமர்ந்திருக்கிறானா என்று பிரமிப்பு மேலிடுகிறது.

 அதற்குத் தகுந்தாற்போல கைவிரல்களும், நகங்களும், திருமுகமும், திருமார்பும் பார்க்க ஒரு சிற்பி இவ்வளவு தத்ரூபமாக கல்லால் இழைக்க முடியுமா எனும் ஆச்சரியம் மேலிடுகிறது. ஆனால், எம்பெருமான் தானே விரும்பி வந்து இங்கு அமர்ந்திருக்கிறான். அருகேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக இருப்பதைக் காண கண்கோடி வேண்டும். தாயாரின் திருநாமம் விஜயவல்லித்தாயார். கருணைபொங்கும் முகத்தோடு அருளை வாரி இறைக்கிறாள். தரிசனம் செய்யும் ஒவ்வொருவரையும் ஏதேனும் ஒரு விதத்தில் இவர் நிச்சயம் ஆட்கொள்வார்.

இயற்கை அன்னை வாரியிறைத்த அழகும், எழில் சூழ் குன்றுகளும் நிறைந்த அமைதியான கிராமம் விஜயராகவபுரம். சோழர்களில் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் இப்பகுதியை ஆண்டபோது ஜெயமேரு சதுர்வேதிமங்கலம் என்றழைத்தனர். இத்தலம் திருத்தணியிலிருந்து நகரி சென்று பள்ளிப்பட்டு செல்லும் வழியில் கொளத்தூர் அடைந்து, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பி.எஸ், கிருஷ்ணா