அம்மனின் அருளால் சரீர வலியும் தெரியாது!



சென்னை - திருவல்லிக்கேணி

சின்ன மேல்மலையனூர்

எப்போதுமே புராணம் நிகழ்ந்த தலமொன்றில் அதற்கான ஆதாரங்களோடு கோயில் கட்டப்பட்டிருக்கும். ஆதியிலிருந்தே மக்கள் அந்த தலத்தின் மீது பெரும் ஈடுபாட்டோடும், பக்தியோடும் அங்கே சென்று கொண்டிருப்பார்கள்.

அதிலும் மிகுந்த பக்தி கொண்டோர்கள் அந்த இறைவனையோ, இறைவியையோ தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே அதேபோல கோயில்களை ஸ்தாபிதம் செய்து, அங்கேயே பக்தி புரிவார்கள். இதுபோன்று அமைக்கப்படுவதை பதிலி கோயில்கள் என்பார்கள். பெருந் தெய்வங்களான அருணாசலேஸ்வரர், வரதராஜர், காமாட்சி, மீனாட்சி ஆகியோருக்கு தமிழகம் முழுக்க கோயில்கள் உண்டு.

இதேபோன்று கிராம தெய்வமாகவும், தொன்ம தெய்வங்களாக இருந்து வரும் அங்காளம்மனுக்கும் தமிழகம் முழுக்க கோயில்கள் அமைத்து வழிபட்டு வருகிறார்கள். மூல விளக்கிலிருந்து மற்ற அகல் விளக்கிற்கு தீபம் ஏற்றுவதுபோல மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோயிலின் புற்று மண்ணைக் கொண்டே அங்காளம்மனின் சிலை வடித்து வழிபட்டுவரும் தலமே சின்ன மலையனூர் அருள்மிகு பாலாடை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி எனும் இத்திருக்கோயில் ஆகும். இக்கோயில் சென்னை - திருவல்லிக்கேணியில் நடேசன் சாலையில் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர் காலத்திற்கும் முற்பட்டது.

ஆரம்ப காலத்தில் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட புற்று மண்ணால் உருவாக்கப்பட்ட சிலைக்கு அபிஷேகமின்றி, ஓர் ஓலைக்குடிசைக்குள் பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. சுமார் 60 வருடங்களுக்கு முன் இப்போதிருக்கும் ஆலயம் எழுப்பப்பட்டு சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய விமானம் அமைத்து, கற்சிலையில் அம்மன் விக்ரகமாகவும், உடன் வில்வ விநாயகர் விக்ரகம் உற்சவர் சிலையும் அமைத்து இரண்டு கால அபிஷேகம் மற்றும் பூஜை ஆராதனைகளோடு சிறப்புற நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, மாசி மஹா சிவராத்திரியன்று ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான அலங்காரம் செய்து வீதியுலாவும், அதற்கு அடுத்த நாளான மயான சூறை விழாவும் சிறப்பான முறையில் நடைபெறும்.
இதற்கெல்லாம் முழுமுதற் காரணமாக அமைந்த அந்த புராணத்தை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பர்வதராஜன் என்ற மீனவ இன தலைவனுக்கு, பராசக்தி மகளாக பிறந்து பர்வதவர்த்தினி என்ற பெயரோடு வளர்ந்து வந்தாள். பருவ வயதை அடைந்த தன் மகளுக்கு திருமணம் செய்ய தந்தை பர்வதராஜன் முடிவு செய்து, தன் மகளாகிய சக்தி பர்வதவர்த்தினி சிவபெருமானை மணமுடிக்க ஆசைப்படுவதை அறிந்து அதற்குண்டான ஏற்பாடுகளை செய்தான். திருமணத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், உறவினர்களும் சூழ பிரம்மதேவன் புரோகிதராக அமர்ந்து சிறப்பாகவும், விமரிசையாகவும் திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணம் முடிந்த பின் சிவபெருமானும், பார்வதியும் மணக்கோலத்தில் எழுந்து நின்று பிரம்மதேவனுக்கு உரிய மரியாதையை செய்ய முற்பட்டபோது பிரம்மதேவன் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தன்னுடைய ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு திசையில் இருந்து தனக்குரிய தட்சணையை வழங்குமாறு ஆணவத்தோடு கேட்டுக்கொண்டார்.

திசைகள் இருப்பதோ நான்கு, பிரம்மனுக்கோ முகங்கள் ஐந்து. சிவபெருமான் சினங்கொண்டு, தன்னை பிரம்மன் அவமதிப்பதாக கருதி, உனக்கு என்னைப்போல் ஐந்து முகங்கள் (ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்) இருப்பதனால்தானே இந்த ஆணவம் எனக் கூறி பிரம்மனின் ஐந்தாவது முகத்தைக் கிள்ளி எறிந்தார்.

சினம் கொண்ட பிரம்மதேவன் திருமணக் கோலத்திலுள்ள சிவபெருமானை பார்த்து சாபமிட்டதால், சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. பிரம்மனின் கபாலம் சிவனின் கரத்தோடு ஒட்டிக்கொண்டு திருவோடாக மாறியது. அத்திருவோடு எவ்வளவு உணவுப் பொருட்களை இட்டாலும் விழுங்கி தீராத அகோர பசியோடு சிவனின் கரத்திலிருந்து அகலாதிருந்தது. பின்னர், தேவர்களும், முனிவர்களும் சாப விமோசனம் கோர சிவனின் கரத்திலுள்ள திருவோடு (கபாலம்) என்றைக்கு விழுங்க முடியாமல் திணறி விழுகிறதோ, அன்றைக்குதான் சாப விமோசனம் என பிரம்மதேவன் கூறினார்.

சில காலங்கள் சிவன் பித்து பிடித்தபடி மயானத்தில் பேய்களோடும், பிசாசுகளோடும் சேர்ந்து அலைய ஆரம்பித்து விட்டார். சிவனோடு தான் சேர முடியாத நிலை கண்டு சக்தி சினங்கொண்டு மாசி மாத அமாவாசையன்று அங்காளபரமேஸ்வரியாக, கைகளில் சங்கு-சக்கரம், மான்-மழு, பாசம்-அங்குசம்,  வஜ்ரம்-சக்தி, சூலம்-டமருகம், கிண்டி-அக்ஷமாலை, கமலம், வில்-அம்பு, கத்தி-கேடயம், கதை-முசலம், ஈட்டி-இருதலை சூலம், பூஜைபாத்ரம்-மணி, நாகம்-அக்னி, கட்டாரி-அசுர தலை, கத்தி-கபாலம், சாட்டை-உத்பலம் ஆகிய முப்பத்திரண்டு கரங்களுடன் பலவிதமான ஆயுதங்கள் தாங்கி விஸ்வரூபமாக எழுந்தாள்.

ஊரிலுள்ள சகல உணவுப் பொருட்களையும் சூறையாடிக் கொண்டு மயானத்தை நோக்கி சென்று சூறையாடிய உணவுப் பொருட்களை திருவோட்டில் இட, திருவோடு விழுங்க முடியாமல் திணறி சிவனின் கரங்களில் இருந்து விலக சிவபெருமான் விடுபட்டார். பூமியில் விழுந்த திருவோடு (கபாலம்) அசுரனாக உருவெடுக்க அம்பாள் அசுரனுடன் ஆவேசமாக போரிட்டு அழித்தாள். பின்னர் முனிவர்கள், தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி சாந்தமாகி அமர்ந்தாள். சிவனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. பிரம்மனின் ஆணவம் அழிந்து சிவனிடம் மன்னிப்பு வேண்டி நின்றார்.

அந்த சமயத்தில் பர்வதராஜன் தன் மகள் சக்தியை நோக்கி ஒரு வேண்டுகோள் விடுத்தான்: ‘‘உன்னுடைய இந்த அவதார காலத்தில் நம் இனத்தவராகிய பர்வதராஜ குலத்தவர் மட்டுமே உனக்கு ஆலயம் அமைத்து குலதெய்வமாக பூஜை மற்றும் பணிவிடைகள் செய்ய நியமிக்க வேண்டும்.” தன் தந்தையின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட பார்வதி அந்த வரத்தை அருளினாள்.

அன்றிலிருந்து, பர்வதராஜகுலத்தவர் மட்டுமே அங்காளபரமேஸ்வரிக்கு பூஜை செய்யும் பூசாரிகளாகும் பாக்கியம் பெற்றார்கள். இதே போன்று மேல்மலையனூரிலும் பூசாரிகளாக இருக்கும் உரிமை பெற்றவர்கள் ஆனார்கள். திருவண்ணாமலையில் மலை மீது ஏற்றும் மகா தீபம், பரணி தீபம் மற்றும் தெப்ப உற்சவத்தின் போதும் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை பெற்று வருகின்றனர்.

திருமணம் தடைபட்டவர்கள், மாங்கல்யம் பெற்றும் மழலைப்பேறு இல்லாதவர்கள் பாலாடையை தானம் செய்தும், உடல்நலம் சரி அடைந்தவர்கள் கொழுக்கட்டையில் உருவம் செய்து சூறை விட்டும், நோயுற்றவர்கள் அலகு குத்தி பலவிதமான தேர்கள் இழுத்தும் மற்றும் சூலம் குத்தியும், படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நோட்டு, புத்தகம், பென்சில் மற்றும் பேனா வழங்கியும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார்கள்.

குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துவதும், பொங்கல் வைத்து வழிபடுவதும் தினம் தினம் நடைபெறும் நிகழ்வாகும். பக்தர்களின் நியாயமான பிரார்த்தனைகள் நிறைவேறுவது நிதர்சனமான உண்மை. வேலை தேடுபவர்கள், தொழில் தொடங்குபவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவது கண்கூடான காட்சி.

இந்த வருடம் இக்கோயிலில் 104வது மஹா சிவராத்திரி 17.2.2015 அன்று விநாயகர், முருகன், சிவன், பார்வதி பல்லக்கு அலங்காரத்தில் வீதி உலா வந்தும், மறுநாள் 18.3.2015 அன்று மயானக் கொள்ளை திருவிழாவும் கோலாகலமாக நடைபெற்றது பக்தர்களை மிகவும் பரவசப்படுத்தியது. உடம்பில் அலகுகள் குத்திக்கொண்டும், காவடி எடுத்தும், காய்கறிகளை எல்லோரும் வாரி வழங்கியபடியும், பாலாடைகளை உடம்பு முழுவதும் குத்திக் கொண்டும், கைகளில் சாட்டையோடும், சூலத்தோடும் சாமியாடியபடியும் இருந்தனர்.

தங்களின் சரீரத்தைப்பற்றி கவலை கொள்ளாது ‘நாங்கள் எப்போதும் உன் நினைப்பிலேயே இருக்கிறோம் அதனால்தான் சரீர வலியைக் கூட அறியாதிருக்கிறோம்’ என்று காட்டும் படி இருந்தது அக்காட்சிகள். ஆயிரக்கணக்கான மக்கள் அம்மனை கண்டு களித்து பேரருள் பெற்றுச் சென்றனர். ஒவ்வொரு வருடமும் முதல் நாள் காப்பு கட்டி 16 நாள் உற்சவமாக நடைபெற்று, 16ம் நாள் காப்பு களைந்து குடும்பத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

50 வருடங்களுக்கு பிறகு இக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்ய அம்மன் தேவபிரச்சனம் மூலம் முடிவெடுத்து 5.3.2015 வியாழக்கிழமை மாசி மகம், பௌர்ணமியன்று ‘‘பாலாலயம்” செய்து திருக்கோயிலை முழுவதுமாக புணரமைத்து மூன்று நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் அமைத்து இவ்வருடமே கார்த்திகை மாதத்திற்குள் ‘‘ஸ்ரீமஹா கும்பாபிஷேகம்” செய்ய உத்தேசிக்கப்பட்டு திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆலயத் தொடர்புக்கு: 9840907171.

வி.தயாளன்
படங்கள்: சதீஷ்