பெருமாள் ஆணையிட்டால்தான் நாடகம் அரங்கேறும்!



பக்தித் தமிழ் 44

தில்லையாடி - அருணாசலக்கவிராயர் பிறந்த ஊர் இதுதான். சீர்காழிக்கு அருகே உள்ள ஒரு சிறு கிராமம். அங்கே விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்த நல்லதம்பிப்பிள்ளை-வள்ளியம்மைக்கு நான்காவது மகனாகப் பிறந்தார் அவர்.அருணாசலக்கவிராயரை வளர்த்தது அவருடைய அண்ணன்கள்தான். குழந்தைப் பருவத்திலிருந்தே அவருக்குக் கல்வியில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, இறைவன் மீது பக்தியை வெளிப்படுத்தும் பாடல்களை மிகுந்த ஆசையோடு கற்றார்.

தருமபுர ஆதீனத்தில் தமிழோடு தெலுங்கு, வடமொழி ஆகியவற்றையும் கற்றுக்கொண்டார்.அவரது திறமையை, பக்தியைக் கண்டு மகிழ்ந்த அந்த ஆதீனத்தின் தலைவர் அவரை அழைத்தார். அருணாசலக்கவிராயர் துறவு பூண்டு ஆதீனப் பணிகளில் ஈடுபடவேண்டும் என்றார். அதைக் கேட்ட அவர் கொஞ்சம் தயங்கினார்.‘ஏன் தயக்கம்?’ என்று கேட்டார் தலைவர்.

‘தாங்கள் என்னைத் தவறாக எண்ணக்கூடாது’ என்று பணிவோடு சொன்னார் அருணாசலக்கவிராயர். ‘நான் பல அருள் நூல்களை ஊன்றிப் படித்திருக்கிறேன். அவற்றில் துறவறம் பற்றிப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.‘

‘அப்புறம் ஏன் தயங்கவேண்டும்?’‘ஆனால், இல்லறம் பூண்டு, இந்த உலகத்தில் நமது கடமைகளை நிகழ்த்திய பிறகு துறவறம் ஏற்பதே சிறந்தது என்று அந்நூல்கள் கூறுவதாக நான் எண்ணுகிறேன்’ என்றார் அருணாசலக்கவிராயர்.அவர் தனது எண்ணத்தை மரியாதையுடன் வெளிப்படுத்த, ஆதீனத் தலைவர் அதைப் புரிந்துகொண்டார். ‘நல்லது’ என்று வாழ்த்தி
அனுப்பி வைத்தார்.

ஆனால், அருணாசலக்கவிராயர் உடனே திருமணம் செய்துகொள்ளவில்லை. தொடர்ந்து பல நூல்களைப் படித்துவந்தார், பாடல்களை எழுதக் கற்றுக்கொண்டிருந்தார்.
முப்பது வயதில் அவருக்குத் திருமணம் நடந்தது. குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக ஒரு கடையைத் தொடங்கி நடத்தினார். ஆனால், அப்போதும், அவருடைய ஆர்வம் இலக்கியத்தின் மீதுதான் இருந்தது.

சைவம், வைணவம் என இருபெரும் இலக்கியங்களையும் ஊன்றிப் படித்தார். திருக்குறள், பெரிய புராணம், ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள், கம்ப ராமாயணம் ஆகியனவும் அவரது உள்ளம் கவர்ந்தன.தான் படித்தவற்றை அவ்வப்போது பிறருக்கு அழகுற எடுத்துச் சொல்லிச் சிறப்பிப்பார் அருணாசலக்கவிராயர். பல சபையினர் அவரைச் சொற்பொழிவாற்ற அழைத்தார்கள். பக்தியின் சிறப்பையும் அதைப் பாடிய புலவர்களின் மேன்மையையும் சொல்லி மகிழ்ந்தார் அவர்.

ஒருமுறை, அருணாசலக்கவிராயர் சீர்காழியில் தனது உறவினரான சிதம்பரம்பிள்ளையைச் சந்தித்தார். அவர் சீர்காழியின் பெருமையைச் சொல்லும் நூல் ஒன்றை எழுதத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார். ‘அருமை, அந்நூலைக் காட்டுங்கள், நான் வாசிக்க விரும்புகிறேன்’ என்றார் அருணாசலக்கவிராயர்.‘நூல் இன்னும் முற்றுப்பெறவில்லை’ என்று தயக்கத்துடன் அதனை எடுத்துத் தந்தார் சிதம்பரம்பிள்ளை. ‘உங்களுடைய கவித்திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்நூலை நீங்களே முழுமை செய்து தரலாமே!’அருணாசலக்கவிராயர் அந்நூலை வாங்கிக்கொண்டார். அன்றிரவே அதை எழுதி முழுமை செய்துவிட்டார்.

ஆனால், சிதம்பரம்பிள்ளையின் இன்னொரு கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. அருணாசலக்கவிராயர் சீர்காழிக்கே வந்து குடும்பத்துடன் தங்கியிருக்க வேண்டும் என்று சிதம்பரம்பிள்ளை விரும்பினார். ஆனால், அது சரிப்படாது என அருணாசலக்கவிராயர் கருதினார். ஆகவே, தான் எழுதிய நூலை இன்னொருவரிடம் தந்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.அந்த நூல் சிதம்பரம் பிள்ளையிடம் சென்றது. அதை வாசித்த அவர் அருணாசலக்கவிராயரின் கவித்திறனை எண்ணி மகிழ்ந்தார். எப்படியாவது அவரைச் சீர்காழிக்கே வரச் செய்துவிடவேண்டும் என்று திட்டமிட்டார்.

உடனே, அவர் அருணாசலக்கவிராயர் குடும்பத்துக்காக ஒரு வீட்டை ஏற்பாடு செய்தார். தில்லையாடியிலிருந்த அவருடைய குடும்பத்தினரைத் தொடர்புகொண்டார், ‘இனிமேல் நீங்கள் சீர்காழியில் தான் தங்கப்போகிறீர்கள், அருணாசலக் கவிராயரும் விரைவில் இங்கே வந்துவிடுவார்’ என்றார்.அருணாசலக்கவிராயரின் குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரியாது. அவர்கள் சிதம்பரம்பிள்ளையை நம்பிச் சீர்காழியில் குடியேறிவிட்டார்கள்.

தன் குடும்பம் சீர்காழிக்கு வந்துவிட்டது அருணாசலக்கவிராயருக்கும் தெரியாது. அவர் வேலை விஷயமாக வேறு ஊருக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து வீடு செல்லும் வழியில் சீர்காழி வந்தார். சிதம்பரம்பிள்ளையைச் சந்தித்தார்.சிதம்பரம்பிள்ளை அருணாசலக்கவிராயரை வரவேற்று தான் பார்த்துவைத்த வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே தன்னுடைய குடும்பத்தினர் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டார் அருணாசலக்கவிராயர்.

நடந்ததை அவருக்கு விளக்கினார் சிதம்பரம்பிள்ளை, ‘இனிமேல் நீங்கள் இங்கேயேதான் தங்கவேண்டும்’ என்று அன்புக் கட்டளையிட்டார். ‘இங்கிருந்தபடி இறைவனைப் பாடுங்கள், உங்கள் திருப்பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்.’இம்முறை அருணாசலக்கவிராயரால் மறுக்க இயலவில்லை. சீர்காழியிலேயே இருந்து பல அருமையான பாடல்களையும் நூல்களையும் எழுதினார். ஆயிரம் கண்கள் வேணும், மயிலாபுரி ஆறுமுகச் சிங்கார வேலவரைக் காண ஆயிரம் கண்கள் வேணும்!

 மருவு தெய்வானையோடு ஒரு குற மின்னாளும், மன்மத வேளும் வழிபடும் அழகு ஒழுகிய பன்னிரு தோளும் கண்டு எந்த நாளும்கரையும் அன்பர் நிறையும் பொன்னூல் அரையும்முகத்தாமரையும், மேனியில் வருணமும் இரணமும் திருவாபரணமும் சரணமும் மூவிரு சிரமும் கரமும் திருச் சுந்தரமும் தரித்த நூலும் திருக் கை வேலும் தரிசிக்க ஆயிரம் கண்கள் வேணும்! மயிலாபுரியில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகப் பெருமானான சிங்காரவேலவனைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்!

தெய்வானையும் குறவள்ளியும் அவனருகே எழுந்தருளியிருக்கிறார்கள், மன்மதனும் வழிபடுகின்ற அழகு நிறைந்த அவனுடைய பன்னிரண்டு தோள்கள் மின்னுகின்றன, அவற்றைக் கண்டு மனம் உருகும் பக்தர்கள் வந்து நிற்கிறார்கள். பொன்னாடை அணிந்த அவனது இடையும், முகமாகிய தாமரையும், மேனி அழகும், ஆபரணங்களும், திருவடிகளும் ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக் கரங்களும், அந்தத் திருவழகும், திருக்கையில் ஏந்திய வேலும்... இவற்றையெல்லாம் தரிசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்!

ராமாயணத்தின் சில முக்கியப் பகுதிகளைப் பாடல்களாக எழுதித் தந்தார் அருணாசலக்கவிராயர். அவரிடம் கற்றுக்கொண்டவர்கள்; மேடைகளில் பாடினார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் பாடல்களைக் கேட்டவர்கள் அருணாசலக்கவிராயரிடம் ‘நீங்கள் ராமாயணம் முழுவதையும் பாடல்களாக எழுதித் தரவேண்டும்’ என்றார்கள். வாழ்க்கைக்கு ஏற்ற அறிவுரைகளைச் சொல்லும் ராமனின் கதையைப் பாடல்களாக , பாமரர்களும் புரிந்துகொண்டு பாடி மகிழும்படி எழுதினார் கவிராயர்.

கோதண்ட தீட்சா குரு ராம நாடகத்தைத் தீது அண்டாவாறு அடியேன் செப்பவே, கோது அண்டா மாருதியே, அஞ்சனையாள் மைந்தனே, நற்கருணை வாருதியே, நீ துணையா வா!
கோதண்டத்தை ஏந்தி நிற்கும் ராமனுடைய கதையை நாடகமாகச் சொல்லத் தொடங்குகிறேன். எந்தத் தீமையும் வராமல் அடியேன் இதனைச் சொல்வதற்கு மாருதி துணை நிற்கவேண்டும்! தீமை நெருங்காத மாருதியே, அஞ்சனையின் மைந்தனே, கருணைக் கடலே, துணையாக வா!

அண்டர்தம் துயரம் தீர அயோத்தி மாநகரில் வந்து, தண்டகாரணியம் சென்று, சமுத்திரம்மீது அணையைக் கட்டி, கொண்டு ராவணனை மாட்டக் கோதண்டம் கையில் ஏந்தும் புண்டரீகக் கண் ஆளி பொன்னடிக் கமலம் போற்றி!தேவர்களின் துயரம் தீர்வதற்காக அயோத்தியில் வந்து பிறந்தவன், தண்டகாரணியத்தில் வசித்தவன், சமுத்திரத்தின்மீது அணையைக் கட்டிச் சென்று ராவணனை வீழ்த்துவதற்காகக் கோதண்டத்தைக் கையில் ஏந்தியவன், தாமரை போன்ற கண்களைக் கொண்ட சிங்கம் ராமன், அவனுடைய பொன்னடிகளாகிய தாமரைகளைப் போற்றுகிறேன்!

அருணாசலக்கவிராயரின் ‘ராம நாடகக் கீர்த்தனை’களுக்கு அடிப்படை, கம்ப ராமாயணம்தான். கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றிய ஸ்ரீரங்கத்திலேயே இந்நூலும் அரங்கேற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், கோயில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

 ‘பெருமாள் ஆணையிட்டால் பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டார்கள்.வருந்திய அருணாசலக்கவிராயர் இறைவனை எண்ணிப் பாடினார், அவரது ராமநாடகக் கீர்த்தனைகளில் வரும் தேவர்கள் திருமாலிடம் கேட்டதைப்போலவே!

கடைக்கண்ணால் இரங்கிப் பார் அய்யா, பார்த்துக்காவாவிட்டால் இனிமேல் ஆர் அய்யா? அடைக்கலம் என ஓடி வந்தோமே, நாங்கள் ஆலைக் கரும்புபோல நைந்தோமே! கடைக் கண்ணால் இரங்கிப் பார் அய்யா! எம்பெருமானே, உன் கடைக்கண்ணால் எங்களை இரக்கத்துடன் பார், நீ காக்காவிட்டால் நாங்கள் என்ன ஆவோம்? உன்னையே அடைக்கலம் என்று ஓடி வந்தோம், ஆலையில் அகப்பட்ட கரும்புபோல் நைந்திருக் கும் எங்களை இரக்கத்துடன் பார்!

மனமிரங்கிய இறைவன் அருணாசலக்கவிராயரின் கனவிலும், கோயில் நிர்வாகிகள் கனவிலும் தோன்றினார். இந்நூலை அரங்கேற்றலாம் என உளம் கனிந்தார். அதன்படி, அருணாசலக்கவிராயரின் கீர்த்தனைகள் ஸ்ரீரங்கத்தில் அரங்கேறின. கேட்ட அறிஞர்களும் பொதுமக்களும் வியந்து போற்றிப் பாராட்டினார்கள். இன்றும் அவரது பாடல்களை மேடைகளில் கேட்டு மகிழ்கிறார்கள்!

பரப்பிரம்ம சொரூபமே, ஸ்ரீராமனாகப் பாரில் வந்தது பாரும்! வரத்தினால் அரக்கரை வானத்தில் ஏற்றவும் வானத்தில் தேவர்கள் மலர்மாரி தூற்றவும் பரப் பிரம்ம சொரூபமே, ஸ்ரீராமனாகப் பாரில் வந்தது பாரும்! பத்தி முனிவர் கலைக்கோட்டு முனி பண்ணிய யாக பலன் தேற, சத்திய தசரதற்கு அறுபதினாயிரம் சம்வச்ர பலன் நிறைவேற சித்திரை மாசம் நவமி, கடகம் செழும் புனர்பூசம் தேன் ஊற ஒத்த கிரகங்கள் நால்வரும் பதினொன்றில் உச்சத்தில் ஐவரும் ஏற, ஆதிப்பரப் பிரம்ம சொரூபமே, ஸ்ரீராமனாகப் பாரில் வந்தது பாரும்!

பரப்பிரம்மமே ராம அவதாரம் எடுத்து பூமியில் வந்தார், அரக்கர்களை வீழ்த்தவும் தேவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளவும் அவர் இங்கே பிறந்தார்! பக்தி நிறைந்த கலைக்கோட்டு முனிவர் செய்த யாகத்தின் பலனாக, சத்திய வாழ்க்கை வாழும் தசரதரின் மகனாக, சித்திரை மாதம் நவமி திதியன்று கடக லக்னத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் கிரகங்கள் எல்லாம் சிறப்பாக அமைந்த நன்னாளில் பரப்பிரம்மமே ராம அவதாரம் எடுத்து பூமியில் வந்தார்!

இலங்கையில் சீதையைக் காணும் அனுமனின் பரவசத்தை கவிராயர் அழகுற விவரிக்கிறார்:
சீதையைக் கண்டானே, அனுமான் செடிமேல் நின்று சேவையைக் கொண்டானே, அனுமான்!
ஆதவன் காணாத இலங்கை மடுவிலே,
அரக்கியர் என்கின்ற புலிக்கூட்டம் நடுவிலே!
தாய் இவள், தாய் இவள், நிலை வரமே, சாமி
தனக்கும் இவள் மெத்த மனோகரமே,
தீயையும் சுடும் இவள் சரித்திரமே, தெய்வ

தெய்வங்களுக்கும் இவள் மீசரமே, சாயும் சந்திர சூரிய வம்மிசமும் பெருக்கும், தனியாம் தருமமும் இனிமேல் அல்லோ செருக்கும்! ஏய அடையாளம் கண்டேன், ‘அஞ்சேன் ஒருவருக்கும்’ என்று செல்லரித்தாலும் இருந்திடத்தே இருக்கும், சீதையைக் கண்டானே, அனுமான்!

சூரியன்கூட வர அஞ்சுகிற இலங்கை மலைமேலே, அரக்கியர்களாகிய புலிக்கூட்டத்தின் நடுவே, செடிமேல் நின்ற அனுமன் சீதையைக் கண்டு சேவித்தான்! ‘இவள் என் தாய், இவளைக் கண்டது நான் செய்த வரம், ராமனுக்கு ஏற்ற துணைவி, தீயையும் சுடும் தூய்மை நிறைந்தவள், தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம், தருமத்துக்கே பெருமை தரக்கூடியவள்’ என்றெல்லாம் நினைத்தான் அனுமன்.

 ‘ராமன் சொன்ன அடையாளங்கள் எல்லாம் பொருந்து கின்றன. யாருக்கும் அஞ்சாமல் உட்கார்ந்த இடத்திலேயே தவம் புரிகிறாள் இந்தத் தாய்’நிறைவாக, ராமன் மகுடம் சூட்டும் திருக்காட்சி: மகுடாபிஷேகம் கொண்டானே, ஸ்ரீராமச்சந்திரன்மகுடாபிஷேகம் கொண்டானே! சகல ராசர்களும், சகல தேசர்களும், சகல வேதியரும், சகல சாதியரும்,

சகல மந்திரிகளும், சகல தந்திரிகளும், சகல முனிவர்களும், சகல மனிதர்களும்,சந்திராதி மூவர்களும், இந்திராதி தேவர்களும்,சந்தோஷமாப் பொருந்து சிங்காதனத்து இருந்துமகுடாபிஷேகம் கொண்டானே!ராமன் மகுடம் சூடினான்! பல தேசங்களின் ராஜாக்கள், வேதியர் முதலான பல குலங்களைச் சேர்ந்தவர்கள், மந்திரிகள், தந்திரிகள், முனிவர்கள், மனிதர்கள், சந்திரன் முதலான மூவர், இந்திரன் முதலான தேவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாகப் பார்க்க, ராமன் சிங்காசனத்தில் இருந்து மகுடம் சூடினான்!

ஸ்ரீரங்கநாதரை ராமனாகப் பாடிய அருணாசலக்கவிராயரின் இந்தப் பாடல் மிகவும் பிரபலமானது: ஏன் பள்ளிகொண்டீர் ஐயா? ஸ்ரீரங்கநாதரே, நீர்ஏன் பள்ளிகொண்டீர் ஐயா? ஆம்பல் பூத்த சயபருவத மடுவிலே, அவதரித்த இரண்டு ஆற்று நடுவிலே, ஏன் பள்ளிகொண்டீர் ஐயா? கோசிகன் சொல் குறித்ததற்கோ? அரக்கிக் குலையில் அம்பு தெறித்ததற்கோ? ஈசன் வில்லை முறித்ததற்கோ? பரசு இராமன் உரம் பறித்ததற்கோ?

மாசு இலாத மிதிலேசன் பெண்ணுடன் வழிநடந்த இளைப்போ?தூசு இலாத குகன் ஓடத்திலே கங்கைத் துறை கடந்த இளைப்போ? மீ சரமாம் சித்ர கூடச் சிகரக் கல் மிசை கடந்த இளைப்போ? காசினிமேல் மாரீசன் ஓடிய கதி தொடர்ந்த இளைப்போ? ஓடிக்களைத்தோ? தேவியைத் தேடி இளைத்தோ? மரங்கள் ஏழும் தொளைத்தோ? கடலைக் கட்டி
வளைத்தோ? இலங்கை என்னும் காவல் மா நகரை இடித்த வருத்தமோ? ராவணாதிகளை அடித்த வருத்தமோ?

ஸ்ரீரங்கநாதரே, நீங்கள் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டது ஏன்? என்ன களைப்பு உங்களுக்கு? விஸ்வாமித்திரர் சொல்லைக் கேட்டுத் தாடகையை வென்றீர்களே, அந்தக் களைப்பா? ஈசன் வில்லை முறித்தீர்களே, அந்தக் களைப்பா? பரசுராமர் வீரத்தைப் பறித்தீர்களே, அந்தக் களைப்பா? சனகன் மகள் சீதையுடன் நடந்த களைப்பா? குகனுடைய ஓடத்தில் கங்கையைக் கடந்த களைப்பா? சித்ரகூடச் சிகரத்தில் உள்ள கல் பாதைகளில் நடந்த களைப்பா? மாரீசனைத் துரத்திக்கொண்டு ஓடிய களைப்பா?

சீதா தேவியைக் காணாமல் தேடிய களைப்பா? மராமரங்கள் ஏழையும் துளைத்த களைப்பா? கடலை அணை கட்டி வளைத்த களைப்பா? இலங்கை என்கிற காவல் நிறைந்த நகரை அழித்த களைப்பா? ராவணன் முதலானோரை அழித்த களைப்பா? ஸ்ரீரங்கநாதரே, நீங்கள் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டது ஏன்?அருணாசலக்கவிராயர் எழுதிய பிற முக்கியமான நூல்கள் சீர்காழித் தலபுராணம், அனுமார் பிள்ளைத்தமிழ், காழி அந்தாதி, காழிப் பள்ளு ஆகியவை. அவரது கீர்த்தனைகள் எளிய மொழியில் பக்தியை எல்லாருக்கும் செல்லும்வண்ணம் வெளிப்படுத்தியவை!

(தொடரும்)
ஓவியங்கள்: வேதகணபதி

என்.சொக்கன்