ஏற்றம் மிகுந்த எருமை பக்தி!



திருமூலர் மந்திர ரகசியம்

வேத-வேதாங்கங்களில் கரை கண்ட பெரியவர் ஒருவர் இருந்தார். யாருக்கு எந்த சந்தேகம் வந்தாலும் அவரிடம் வருவார்கள். அவரும் அதற்குப் பதில் சொல்லி, சந்தேகம் தெளிய வைப்பார்.

ஒரு நாள் சாதாரண மனிதன் ஒருவன், அந்த வேதவிற்பன்னரிடம் வந்தான். அவனுக்கு வேதம், சாஸ்திரம் எதுவும் தெரியாது. ஆனால், அவன், கள்ளம் கபடமில்லாத தூய பக்தன். அவனுக்கு மந்திர உபதேசம் பெற வேண்டும் என ஆசை பிறந்தது. உடனே அவன், வேதவிற்பன்னரைத் தேடிப் போய் விட்டான்.

‘‘ஸ்வாமி! எனக்கு மந்திர உபதேசம் செய்யுங்கள்!’’ என வேண்டினான்.‘இவனுக்குப் போய், என்ன மந்திரத்தை உபதேசம் செய்வது?’ என நினைத்த வேதவிற்பன்னர், ‘‘உனக்கெதற்கு கேன, மந்திரம்?’’ எனக் கேட்டார். கேன என்றால், பைத்தியக்காரன் என்பது பொருள். அதாவது, கல்வியறிவோ, சாஸ்திர அறிவோ இல்லாமல், ஏதோ மூடத்தனமான பக்தி கொண்டவன் அவன். அவனுக்குப் போய், மந்திரம் எதற்கு என்பதே வேதவிற்பன்னரின் எண்ணம்.

அது புரியாத பக்தனோ, ‘‘சாமியப் பாக்கணும்னு ஆசை! அதனால தான் மந்திரம் கேட்டு, அதைச் சொல்லி, சாமி எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்’’ என்றான்.
அந்த நேரம் பார்த்து, அந்தப் பக்கமாக ஓர் எருமை போனது. அதைச் சுட்டிக் காட்டிய வேதவிற்பன்னர், ‘‘அதோ பார்! நீ பார்க்க விரும்பும் ஸ்வாமி, அப்படித்தான் இருப்பார். ‘மகிஷ, மகிஷ’ என்று சொல்! அதுதான் உனக்கு மந்திரம். போ!‘‘ என்றார்.

பக்தனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அப்போது முதல் ‘மகிஷ’ என்பதையே மந்திரமாக உச்சரித்து வந்தான். அவன் தீவிரமாக அவ்வாறு உச்சரித்து வரும் வேளையில் கோயிலில் விழா நடந்தது. வேதவிற்பன்னர் தலைமையில் அனைவரும் கூடியிருந்தார்கள்.உற்சவரை அலங்கரித்து, வாசல் வழியாக வெளியே கொண்டுவர முயன்றார்கள். ஆனால் என்ன முயற்சி செய்தும் விக்கிரகத்தை வெளியே கொண்டு வர முடியவில்லை. ஏதோ-எங்கேயோ இடித்து, தடைப்படுத்துவதைப் போல இருந்தது.

அந்த நேரத்தில், கூட்டத்தின் கடைசியில் இருந்த (மகிஷ - மந்திரம் சொல்லி வந்த) பக்தன், ‘‘அட! என்னங்க இது? சாமிக்கு, கொம்பு அந்தப் பக்கத்துல இடிக்குது பாருங்க! அந்தக் கையைக் கொஞ்சம் உள்ள வாங்கி, இந்தக் கையைக் கொஞ்சம் தூக்குங்க!’’ என்றான்.அந்தப் பக்தன் சொன்னபடியே செய்ய, உற்சவர் வெளியில் வந்தார்.ஆச்சரியப்பட்ட, வேதவிற்பன்னர், அவனிடம் ‘‘அப்பா! நீ எப்படிச் சொன்னாய்?’’ எனக் கேட்டார்.

அதற்குப் பக்தன், ‘‘ஸ்வாமி! நீங்க அன்னிக்கு, மகிஷ-ன்னு மந்திர உபதேசம் செய்து, சாமி எருமை போல இருப்பார்னு ஒரு எருமை மாட்டையும் காமிச்சீங்களே! அப்பத்துலேர்ந்து, அந்த மந்திரத்தையே சொல்லிக்கிட்டு இருந்தேன். சாமி அழகா எருமைத் தலையோட ரெண்டு கொம்புங்களோட காட்சி குடுத்தார். அவரைத்தான் நீங்க வெளியில கொண்டு வரும் போது, கொம்பு இடிச்சு - சாமிய வெளியில கொண்டுக்கிட்டு வர முடியல. அதப் பார்த்துத் தான், இந்தப் பக்கமா வாங்கி, அந்தப் பக்கமா வெளியில வாங்கன்னு சொன்னேன். சாமி உடனே வெளியில வந்துட்டார்’’ என இயல்பாகக் கூறினான்.

வேதவிற்பன்னர் அதிர்ந்தார். ‘‘நாம் ‘மகிஷம்’ என்று சொல்லி, அலட்சியமாக இவனை அனுப்பி விட்டோம். இவனோ, அதை மந்திரமாகவே கருதி, உச்சரித்து, அந்த மகிஷ வடிவிலேயே நேருக்கு நேராக பகவானைத் தரிசித்து இருக்கிறானே! என்ன பக்தி! என்ன பக்தி!’’ என்று வியந்து கூறினார்.அவர் மனதில் இருந்த அகம்பாவம் அவரை அறியாமலேயே வெளியேறியது.
எப்படி அந்த பக்தன் எருமை வடிவில் இறைவனைத் தியானிக்க, அந்த வடிவிலேயே தெய்வம் தரிசனம் தந்ததோ, அது போல, அடியார்களின் எண்ணப்படி - அவர்களின் பக்குவ நிலைக்கேற்ப, இறைவன் காட்சியளிப்பார். இதைத் திருமூலர் சொல்கிறார்:

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்யும் ஆதி அரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும்
செவ் வானில் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்
(திருமந்திரம் - 130)

கருத்து : நிகரில்லாத அருள் வெளியில், அருள் சக்தி துணையாய் நிற்க, ஆடல் செய்பவர் சிவ
பெருமான். நடுவு நிலையாகிய வானத்தில் உள்ள ஞானசூரியனும் மாணிக்க மணியுமான, ஆதிப் பரம்பொருளான அந்தச் சிவபெருமான்.
யார் யார் எவ்வாறு அறிந்து தன்னை வழிபடு

கிறார்களோ, அவரவருக்கு அவரவர் பக்குவ நிலைக்கேற்ப அருள்புரிகிறார் ஈசன்.
அதுசரி, பாடலில் உள்ள சூட்சுமம் என்ன?
இறைவனின் பொதுத்தன்மையும், உயர்வும் இப்பாடலில் சொல்லப்பட்டுள்ளன. அதே சமயம் பொதுவான அந்த இறைவன், எல்லோருக்கும் பொதுவான அருளைப் பொழிவதில்லை. அது ஏன் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளது.
அரன் என்ற சொல்லுக்குப் பாவங்களை

அபகரிப்பவர் (நீக்குபவர்) என்பது பொருள். அப்படி யென்றால், அந்த இறைவன் எல்லோருடைய பாவங்களையும் நீக்கலாமல்லவா? ஆனால், நிலைமை அப்படியில்லையே!ஓர் உதாரணம் மூலம் பாடலின் விளக்கத்தை மேலும் எளிமையாகக் காண உதவும்.பிரபலமான மருத்துவர் ஒருவர், எல்லோருக்கும் ஒரே சிகிச்சையாகச் செய்வதில்லை. அவரவர் நோய்க்குத் தகுந்தாற் போல் சிகிச்சைகள் மாறுபடுகின்றன. தலைவலிக்குப் போடும் மருந்தை வயிற்றுவலிக்குத் தர முடியாதல்லவா?

அது போல! அதே சமயம், ‘வயிற்றுவலி’ என்று பத்து பேர் வந்தால், பத்து பேருக்கும் ஒரே சிகிச்சையை மேற்கொள்ள முடியாது. அவரவருக்கு உண்டான ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஒவ்வாமை என பல சோதனைகளைச் செய்து பார்த்து விட்டுத்தான், மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.அந்த மருத்துவர்களிடம் போய், ‘‘எல்லோருக்குமே வயித்துவலி தானே? ஒரே மாதிரி மருந்தைக் கொடுத்து அனுப்பக்கூடாதா?’’ என்று கேட்போமா?ஒரு சாதாரண மருத்துவரே, இவ்வளவு பார்க்கும்போது, சர்வேஸ்வரனான இறைவன் எவ்வளவு பார்ப்பார்!அதனால் தான், ஞானசூரியனான இறைவன் அவரவர் தகுதிக்கேற்ப - பக்குவத்திற்கேற்ப, அருள்புரிகிறார் எனக் கூறுகிறார் திருமூலர்.

தகுதியும் பக்குவமும் அறிந்து இறைவன் அருள்புரிகிறார் என்று சொன்னாலும்,
தகுதி என்றால் என்ன, பக்குவம் என்றால் என்ன என்பதை அடுத்த பாடலில் சொல்கிறார் திருமூலர்.
பெருமை சிறுமை அறிந்து எம்பிரான் போல்
அருமை எளிமை அறிந்து அறிவார் யார்?
ஒருமையுள் ஆமைபோல் உன் ஐந்து அடக்கி
இருமையும் கெட்டு இருந்தார் புரை அற்றே
(திருமந்திரம்-133)
கருத்து: நம்முடைய பெருமையும் சிறுமையும் அறிந்து, அருள் செய்பவர் இறைவன். அரியவராகவும் - எளியவராகவும், அறிந்து அருள் செய்யும் இறைவனைப் போல அறிவார் வேறு யார் இருக்
கிறார்கள்?அந்த இறைவனுடைய உண்மையை அறிந்த அடியார்கள், ஆமை போல - ஐம்புலன்களையும் அடக்கி, இம்மை இன்பம் - மறுமை இன்பம் எனும் இரண்டையும் நீக்கி, குற்றம் இல்லாமல் இருந்தார்கள்.

இப்பாடலில் நம்முடைய பெருமை - சிறுமை; இறைவனுடைய அருமை - எளிமை; அடியார்களின் தன்மை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.நம்முடைய பெருமையும் சிறுமையும் நமக்குத் தெரியும். லௌகிகமாக - உலக இயலில் சொல்லப்போனால் நம்மிடம் இல்லாத பெருமையைப் பாராட்டிக் கொண்டு திரிவோம்; இருக்கும் சிறுமையை மறைத்துக் கொண்டு திரிவோம். அடுத்தவரின் பெருமையை மறைத்து, அவரிடம் இல்லாத சிறுமையை அவர் மீது ஏற்றித் தூற்றுவோம்!மனிதர்களிடையே மட்டும் அல்ல, தெய்வத்திடம் கூட, இவ்வாறுதான் இருக்கிறோம்.

இந்த வாரம் இந்தக் கோயில், அடுத்த வாரம் அந்தக் கோயில்; இந்த வாரம் இந்தக் கடவுள் அடுத்த வாரம் அந்தக் கடவுள் என அலைவோம். கேட்டால், ‘‘இப்பல்லாம் இந்த சாமிக்குத்தான் பவர் அதிகமா இருக்கு’’ என்று பதில் வருகிறது! ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஒரே தெய்வத்தை வழிபட்டாலும், அந்தத் தெய்வத்திடம் ‘அதைக் கொடு! இதைக் கொடு!’ என்ற வேண்டுகோளை வைப்போமே தவிர, ‘நான் மனிதன் என்ற தன்மையை - எண்ணத்தை எனக்குக் கொடு! மனிதனாகப் பிறந்த பலனை எனக்குக் கொடு!’ என வேண்டுவது இல்லை.

ஸ்வாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘‘கழுகு என்னதான் மிக மிக உயரத்தில் பறந்தாலும், அதன் புத்தியும் பார்வையும், பூமியில் கிடக்கும் செத்த எலியின் மீதுதான் இருக்கும்’’ என்று ஓர் உதாரணம் சொல்வார்.  அதுபோல, நாம் என்னதான் பெருமை பாராட்டிக் கொண்டாலும், மனது சிறுமையில் பதிந்து கிடக்கிறது. இது தெரிந்திருந்தும் வேதங்களும் மகாஞானிகளும் தேடுகின்ற தெய்வம், எளிமையாக வந்து நமக்கு அருள் செய்கிறது.

இதை உணர்ந்த தூய்மையான பக்தர்கள், ஆமை போல - தங்கள் ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி வைத்து வாழ்கிறார்கள். ஆமை, தேவைப் படும் போது தன் தலை மற்றும் நான்கு கால்கள் எனும் ஐந்தையும் வெளியே நீட்டி உலவுகிறது. ஆபத்து நெருங்கும் போது அதை உணர்ந்து, தலையையும் கால்களையும் அப்படியே உள்ளே இழுத்து அடக்கிக் கொள்கிறது. அதுபோல
தூய்மையான பக்தர்கள் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்கிறார்கள். பூவுலக இன்பங்களையும் சொர்க்கலோக இன்பங்களையும் முழுமையாக ஒதுக்கி, பிறவியில் இருந்து விடுதலை பெறுகிறார்கள்.
இப்படிப்பட்ட தகவல்களைக் கேட்கும் போது, இதைப் படிக்கும் போது, நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அகப்பட்டு கொள்கிறோம்! ஏன்

என்பதை, அடுத்த பாடலில் சொல்கிறார் திருமூலர்.
பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகில் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே
(திருமந்திரம் - 132)

கருத்து : தூய்மையான பக்தர்கள், இறைவனுடன் இரண்டறக் கலந்து, மீண்டும் இங்கு வந்து பிறவாத நிலையான முக்தியை அடைகிறார்கள். இறைவனை அடையும் வழிவகைகளான வழிபாடுகளை ஆத்மார்த்தமாகச் செய்கிறார்கள். உலகத்தாரோடு பேசாது நிற்கும் பெருமையையும் பெறுகிறார்கள்.இப்பாடலுக்கு விளக்கம் பார்க்கும் போது, மேலிருந்து கீழாகப் பார்க்கக்கூடாது; கீழிருந்து மேலாகப் பார்க்க வேண்டும்.

உணவு விடுதிகளில் உண்டு விட்டு அதன் பிறகு பணத்தைக் கொடுப்போம். ஆனால், ரயில்வே கேண்டீன்களில், நாமே போய் பெற்றுக் கொள்ளும் (செல்ஃப் சர்வீஸ்) உணவு விடுதிகளில், முதலில் பணத்தைக் கொடுத்து விட்டுப் பிறகு தான் உண்போம். அதாவது, ‘ரிவர்ஸில்’ வருகிறது. அது போல இப்பாடலில், விளக்கத்தை கீழிருந்து மேலாகப் பார்க்க வேண்டும்.
அதன்படி, நாம் முதலில் கடைபிடிக்க வேண்டியது - மௌனம். எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் பேசுகிறோம்; அவற்றில் பல பயன் இல்லாத பேச்சுகள். அவற்றைப் பாராட்டிக் கொண்டு திரிகிறோம்.

இப்படிச் செய்பவர்களை, ‘மனிதப் பதர்‘ எனக் கூறுகிறார் திருவள்ளுவர்.பயன் இல்லாத பேச்சுகள், ஆசையையும் கோபத்தையும் தூண்டி, நம்மைக் கீழே தள்ளி விடுகின்றன. ஆகையால் கட்டுப்படுத்த வேண்டியது - பேச்சை. அது மட்டுமல்ல, கடன் வாங்காமல் இருப்பதோடு சேமிக்கவும் முயல்கிறோமல்லவா? அது போல பேச்சைக் கட்டுப்படுத்துவதோடு, நல்வழியில் நடக்கவும் முயற்சி செய்ய வேண்டும். அம்முயற்சி யில் வெற்றி பெற்றால் எந்த இன்ப துன்பங்களும் பாதிக்காது. அப்புறம் என்ன? இறைவனுடன்

இரண்டறக் கலக்கும் பாக்கியம் தானே கிடைக்கும்!
நம்மால் இப்படியெல்லாம் நடக்க முடிகிறதோ இல்லையோ, திருமூலர்போல இப்படிப்பட்ட ஞானத்தகவல்களை வாரி வழங்கியவர்கள் உலகில் வேறு எங்கும் கிடையாது. இவற்றையெல்லாம் படிக்கக்
கூடிய பாக்கியத்தையாவது நமக்குத் தந்த
இறைவனை வணங்குவோம்.
(மந்திரம் ஒலிக்கும்)

பி.என்.பரசுராமன்