பக்தருக்காக மணக்கோலம் காட்டிய ராமன்!



கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், ஹிரேமகளூரு கிராமத்தில் உள்ளது ஸ்ரீகோதண்ட ராமஸ்வாமி ஆலயம். கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, லட்சுமணர் இருவருமே தங்கள் வலக்கரங்களில் உயர்த்திப் பிடித்துள்ள அம்புகளோடு திகழ்கிறார்கள்.

ஒரு காலத்தில் ஸ்ரீபரசுராமர் இப்பகுதியில் தங்கியிருந்ததால் இது பார்கவபுரி என்று அழைக்கப்படுவதோடு, சித்த புருஷர்கள் இங்குள்ள குளக்கரையில் தவம் செய்ததால் இது சித்த புஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது. ஹொய்சாளர், சோழர் மற்றும் விஜயநகர் ஆகிய மூன்று ஆலயக் கட்டிடப் பாணிகளும் காணப்படும் இந்த அற்புத ஆலயத்தில் ராமபிரானுக்கு வலப்புறம் ஸ்ரீசீதாதேவியும், இடப்புறம் ஸ்ரீலட்சுமணரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராமபிரான் லட்சுமணர், சீதையோடு நின்ற நிலையில் காட்சி தரும் கோலத்தை ஸ்ரீகோதண்டராமர் கோலமாகவும், அமர்ந்த நிலையில் சீதை, லட்சுமணர், பரதன், சத்ருக்னரோடு காட்சி தருவதை பட்டாபிஷேகக் கோலமாகவும் வணங்குவது மரபு. கோதண்டராமராக ஸ்ரீராமபிரான் காட்சி தரும்போது அவருக்கு இடப்புறத்தில் சீதையும், வலப்புறத்தில் லட்சுமணரும் காட்சிதருவர். ஆனால், அவ்வாறில்லாமல் மாறிக் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

இப்பகுதியில் வாழ்ந்த புருஷோத்தமன் என்ற ராமபக்தர் வேண்டிக் கொண்டபடி ஸ்ரீ ராமர் சீதாதேவி தன் வலப்புறத்தில் நிற்க திருமணக் கோலத்தில் காட்சி அளித்ததாக தலபுராணம் தெரிவிக்கிறது. கருவறையில் ராமர், லட்சுமணர், சீதா தேவி மூவருமே திரிபங்க நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகின்றனர். மிக நுண்ணிய வேலைப்பாடு மிக்க இந்த திருமேனிகள் பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகு மிக்கவை.

இங்கு அனுமனுக்கு என்று தனி விக்கிரகம் இல்லை. மாறாக மூவர் நிற்கும் பீடத்தில் அனுமன் சிறிய அளவில் அஞ்சலி ஹஸ்தங்களோடு வடிக்கப்பட்டுள்ளார். ஆலய வளாகத்தில் ஸ்ரீயோக நரசிம்மர், சுக்ரீவர், காளிங்க நர்த்தனர், ஸ்ரீ உடையவர், ஸ்ரீமத்வர், ஸ்ரீவேதாந்த தேசிகர் மற்றும் ஆழ்வார்கள் சந்நதிகள் உள்ளன. மூன்றரை அடி உயரமான ஸ்ரீயோக நரசிம்மர் விக்கிரகத்தின் பிரபாவளியில் தசாவதார புடைப்புச் சிற்பங்கள் காணப்படுவது ஒரு சிறப்பாகும். இந்த ஆலயத்தில் ஸ்ரீராமநவமியை ஒட்டி, ஸ்ரீகோண்டராமர் ஜாத்ரா உற்சவம் மிக
விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்