ஆன்மிக அமுதம் பருகி ஆனந்தம் அடைந்தோம்



குறளின் குரலில் திருப்பூர் கிருஷ்ணன், அண்ணா, லட்சுமண முதலியார் ஆகியோரின் ஆங்கில பேச்சை தமிழில் மொழி பெயர்த்தது கூட சிலேடையாக இருந்தது என குறிப்பிட்டு கூறி, சம்பவத்தை விவரித்திருந்தது அருமை.- எஸ்.ஜெகன், சாந்திநகர்.

தலையங்கம், சிந்திக்கவும், சீர்தூக்கிப் பார்க்கவும் வைத்தது. நடைமுறை தத்துவத்தை எளிமையாக விளக்கியது. ‘இதுவும் கடந்து போகும்’ வைர வரிகளின் மெய்யான ஆற்றல் எல்லோருக்கும் பொதுவாய் அமைந்திருப்பது உணர்ந்து பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட சமூக கருத்துகளையே தலையங்கத்தில் எதிர்பார்க்கிறோம்.
- வா.மீனாவாசன், சென்னாவரம்.

‘தெளிவு பெறு ஓம்’ பகுதியில் என் போன்ற வாசக அன்பர்களின் கேள்விகள் அனைத்திற்கும் தெளிவான பதிலையும், அதன் விவரத்தையும் கூறி வரும் திருக்கோவிலூர் கே.பி. ஹரிபிரசாத் சர்மா அவர்களின் சீரிய பணி செவ்வனே தொடரட்டும். இதற்கு உறுதுணையாக இருந்து வரும் ‘ஆன்மிகம் பலனுக்கு’ கடமைப்பட்டுள்ளோம்.
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

தொடர்ந்து எட்டுபக்க தகவல்கள், விரிவான விளக்கங்கள் படித்திட்ட போது, அடுத்து வருட மாசிமகத்துக்கு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் எழுந்து விட்டது. பீமன் பற்றிய தகவல்களை இத்தனை விரிவாக, எளிமையாக பாலகுமாரனால் மட்டுமே அளிக்க முடியும். இதழ்கள் தோறும் திருமூலர் ம(த)ந்திர ரகசியம் வியப்பூட்டி அருள்கின்றது. வாயை கட்டுப்படுத்தினால் ‘மீன்’ போன்ற இழப்பு வராது என்ற தகவல் அருமை. - சிம்மவாஹினி, வியாசர் நகர்.

‘இளைய மகாமகம்’ என்ற தலைப்பில் வெளியான கும்பகோணம் பற்றி வெளியான வரலாறு மிகவும் பயனுள்ளதாகவும், புராண வரலாற்றை விரிவாகவும் எடுத்தியம்பியதாகவும் இருந்தது. ‘தெளிவு பெறு ஓம்’ கேள்வி-பதில் அறிவுபூர்வமானதாகவும், சிந்திக்கவும் வைத்தது ‘காமாட்சி அம்மன் ஸ்லோகம்’ வெளியிட்டு மகளிருக்கு ‘தீர்க்க சுமங்கலி’ பதவி கிட்ட வழிவகுத்து விட்டீர்கள்.
‘மகாபாரதத் தொடர்’ விறுவிறுப்பாகச் செல்கிறது. ‘காரமடை அரங்கன்’ க்ஷேத்திரம் நேரில் செல்லும் அவாவினை ஏற்படுத்தியது. ஆன்மிக உலகின் இமயம் ‘ஆன்மிகம் பலன்’ என்பதில் சந்தேகமேயில்லை. ஆயுள்வாசகன்
- இரா.கல்யாண சுந்தரம், வேளச்சேரி.

தன்னைத்தானே போட்டு குழப்பிக் கொள்ளாமல் ‘‘எல்லாமே அவன் செயல்’’ என்று காத்திருந்தால் நல்ல விடிவு ஏற்படும் என்பதை பொறுப்பாசிரியர் தன் அனுபவச் சுவடுகள் மூலம் நினைவூட்டியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

கும்பேஸ்வரப் பெருமாளை மனம் உருகி தரிசித்தோம். வாய்ப்பளித்த தங்களுக்கு கோடிப்புண்ணியம், அன்றைய மகாமகக் குளத்தை தரிசித்த பக்தர்களின் புகைப்படக் காட்சி மிகவும் அரியது. கல்லைத் தங்கமாக்கிய ஈசனின் அருள் விளையாட்டு நிகழ்வுற்ற திருப்புகலூர் ஸ்தலப்பெருமை படித்தேன், ஈசன் கருணையால் உள்ளம் நெகிழ்ந்தேன். ஒரே கருவறையில் ‘‘சுயம்பு விநாயகர்கள்’’ அருள்பாலிப்பது போன்ற ஒருவரிச் செய்திகளாகத் தொடுத்த சரம் ஆன்மிக அறிவுக்கு ஓர் வரம்.
- எஸ்.சுந்தர், திருநெல்வேலி.

மகாமகம், கும்பராசி, சூரியன், பௌர்ணமி, மகம், நட்சத்திரம் பரஸ்பரம் நோக்கும் நாள் என்ற தகவலையும், திருக்கலசநல்லூர், திருவிடை மருதூர் தலங்களின் சிறப்புகளையும் அறிய முடிந்தது. கும்பகோணம் பெயர்க் காரணம் நல்ல விளக்கம். கும்பத்தின் வாய் விழுந்த இடம் குடவாயில், தேங்காயின் மறுபெயர் நாரிகேளம், காசியை விட சிறப்புப் பெற்ற தலம், சற்று நேரம் மனிதனை வெளியுலகத்தை மறந்து மெய்யுணர்வு ஏற்பட வைக்கும் ஆலயம், குடந்தையின் மரபு மனம் மகிழ்கிறது. 16 மண்டபம், 20 தீர்த்தம், 9 நதி துயர் நீங்கி அகந்தை அழிந்து பிரம்மத்தோடு கலக்க கும்பகோணம் செல்வோம். படங்கள் கட்டுரையை சிறப்பாக எடுத்துக் காட்டியது. பக்திச் செய்திகள் என்ற அமுதம் பருகியபடி ஆனந்தம் அடைந்தோம்.
- ஏ.டி.சுந்தரம், ஈரோடு.

‘‘சர்வ மங்களங்களும் அருளும் காமாட்சி அம்மன் ஸ்லோகம்!’’ எழிலான ஓவியமாய் அன்னையின் அருள் தோற்றம். எளிமையான சொற்களாய் அன்னையைத் துதிக்க பாமாலை - அருளான - பொன்மாலை - அது ‘ஆன்மிகம்’ தந்த சன்மானம்.

‘மடிக்கேரி’ ‘ஸ்ரீ ஓம் காரேஷ்வரர்’ பாபமெல்லாம் களைந்து, மகேஸ்வரர் தரிசனம் தரும் திருத்தலம் குறித்தத் தகவல்கள் அறிந்தோம்.
‘சக்தி வழிபாட்டில்’ ‘நித்யாதேவி’யின் கருணை சாகரத்தை உணர்ந்தோம். அன்னையை வழிபட பூஜை முறைகளையும் அறியத் தந்தீர்கள். நன்றி!
பாம்பு கடித்துப் பிழைத்தான் பீமன் ‘‘மகாபாரதம்’’ வாசிக்க வாசிக்க பீமனின் சிறப்பு நன்கு புலப்பட்டது.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

ஆங்கிலேய தளபதி ‘ராபர்ட் கிளைவி’ன் வாழ்க்கையில் வரதராஜரும் தன் பங்குக்கு விளையாடியிருக்கிறார் என்ற செய்தி, இறைவனின் கருணையை உணர்த்தியது.‘மரமே ஈசனாக விளங்கும் பரக்கலக் கோட்டை’ ‘மத்யபுரீஸ்வரர்’ கோயிலில் ஐந்து லட்சம் பேர் ஒரே நாளில், ஒரே இடத்தில் கூடி அமைதியாக வழிபட்டுச் செல்வது அந்த இறைவனின் அளவற்ற அருள் அன்றி வேறொன்றுமில்லை. ‘ஜனகரின்’ தனிப்பெரும் சிறப்பை அழகுற உணர்த்தியது ‘அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்’. ‘‘மாமன்னர் போற்றிய மாசிமகம்’’ மகாமகம் நன்னாளின் சிறப்பை மேலும் உணர்த்தியது.
- எஸ். வளர்மதி, கன்னியாகுமரி.