சம்பாதிக்கு சம அந்தஸ்து அளித்த ராமர்



சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீராமபிரானின் வனவாசத்தின்போது அவருக்கு மானிட வர்க்கம் மட்டுமில்லாமல் விலங்கினங்களும், பட்சிகளும், அணில் போன்ற சிறிய ஜந்துக்களும், மலை, சமுத்திரங்களும் கூட ராம கைங்கர்யம் செய்து பெறும்பேறு பெற்றதாகப் புராணங்கள் இயம்பு கின்றன. அவ்வரிசையில் கழுகு அரசர்களான ஜடாயுவும் அவரது அண்ணன் சம்பாதியும் செய்த பேருதவி மறக்க முடியாததாக உள்ளது.

இவர்களில் ராமபிரானுக்காக இன்னுயிர் நீத்த ஜடாயுவின் செயலை பக்தி மார்க்கத்தில் ‘ஆதம் நிவேதனம்’ என்ற வகையைச் சார்ந்தது என்று ஆன்றோர்கள் உரைப்பர். ராவணனுடன் சண்டையிட்டு சீதாப்பிராட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் ஜடாயு தன் இறக்கைகளை இழந்து உயிர் துறக்க நேரிட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி. சரி, சம்பாதி எவ்வாறு உதவிபுரிந்து, நற்கதியடைந்தான்?

ராமபிரான் வனவாசத்தில் கிஷ்கிந்தையில் சுக்ரீவனை நண்பனாக ஏற்று அவன் மூலம் சீதையைத் தேட முயன்றார். அப்போது சுக்ரீவனின் ஆணைப்படி தென்திசை நோக்கி அங்கதன், ஜாம்பவான், ஹனுமான் மற்றும் வானரக் கூட்டங்கள் பல இடங்களில் தேடியும் சீதாப்பிராட்டி கிடைக்காமல் வருந்தினர். மஹேந்திர மலையடிவாரத்தில் தங்கி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது அம்மலையின் குகையில் வயதான கழுகு ஒன்றினைச் சந்தித்தனர்.

அதுதான் சம்பாதி. வானரர்கள் மூலம் ஜடாயுவின் இறப்பைப் பற்றி அறிந்த சம்பாதி மிகவும் வருத்தப்பட்டு தனது அண்ணனுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிறகு அங்கதனிடம் ராமபிரானைப் பற்றிய தகவல்களையும், சீதாப்பிராட்டியைத் தேடி வானர வீரர்கள் வந்ததையும் தெரிந்து கொண்டான். அங்கதனிடம் தானும் தன்னுடைய சகோதரனும் சூரியனை நோக்கி தங்கள் பலத்தை பரீட்சை செய்யச் சென்றபோது கதிரவனின் வெப்பம் தாங்காமல் அண்ணன் ஜடாயுவைக் காப்பாற்றிய நேரத்தில் தன்னுடைய இறக்கைகள் எரிக்கப்பட்டு தான் விந்திய மலையில் விழுந்தது பற்றிக் கூறினான் சம்பாதி.

அங்கதன் அத்தருணத்தில் ‘‘சீதாதேவியை யார் அபகரித்தார்கள் என்பது தெரியுமா?” எனக் கேட்டதற்கு ‘ராமா‘ என்று கத்திக் கொண்டு செல்லும் ஓர் இளம்பெண்ணை ராவணன் எடுத்துச் சென்றதைப் பார்த்ததாகவும், அவள் சீதையாகத் தான் இருக்க வேண்டும் என்று சம்பாதி கூறினான். அவன் மேலும் கூறுகையில் தன்னுடைய கூரிய பார்வையால் 800 மைல் தூரத்தில் இருக்கும் இலங்கையையும், சீதையின் இருப்பிடத்தையும் காண முடிகிறது என்றும், நிச்சயமாக சீதையைக் கண்டு மீண்டும் திரும்பி வருவீர்கள் என்றும் சொல்லி அவர்களை ஆறுதல்படுத்தினான்.

வானரர்களுக்கு உதவியதால் நிசாசரர் என்ற துறவி சொன்ன வாக்கின்படி சம்பாதி தன் இறகுகளைப் பெற்று பொலிவுற்றான். இவ்வாறு சம்பாதி ‘‘கண்டேன் சீதையை” என்ற சொல்லை ஹனுமான் தன் திருவாக்கினால் ராமபிரானுக்குச் சொல்வதற்கு ஏதுவாக தன் தூரப்பார்வையில் சீதாப்பிராட்டியின் இருப்பிடத்தை கண்டு கொண்டு ஹனுமனுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தான். இந்த ராம கைங்கர்யத்திற்காக நற்கதியடைந்தான்.

ராமபிரானுக்கு பாரதம் முழுவதும் கோயில்கள் உள்ளதை அறிவோம். வெகு சில இடங்களில் மட்டுமே ஜடாயு சம்பந்தப்பட்ட திருக்கோயில்களாகச் சொல்லப்படுவது உண்டு. ஆனால், சம்பாதியுடன் ராமபிரான் சந்நதி கொண்டுள்ள பழமையான ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது என்பது வியப்பான தகவல்.

ஆம், காஞ்சி மாவட்டத்தில் செய்யாறு கொடநகர் (செய்யார்-பஜார் அருகில்) பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீசீதா-லட்சுமண-சம்பாதி உடனிருக்கும் விஜய கோதண்டராமரின் திருக்கோயில். இங்கு மூலவர் ராமபிரானை சேவித்தபடி நின்ற கோலத்தில் உள்ள சம்பாதியை தரிசிக்கலாம்.  ராமபிரானுடன் சேர்ந்து கோயில் கொள்ளும் பெரும்பேற்றை அல்லவா சம்பாதி கிடைக்கப் பெற்றிருக்கிறான்!

சம்பாதி வம்சத்தினர் என்று சொல்லப்படும் சம்பாதி கந்தாடை நரஸிம்மாச்சாரியார் சுவாமிகளால் செய்யாறு, சம்பாதி குளக்கரையில் இத்திருக்கோயில் அழகிய ஸாரஸ்ரீகர விமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கு அக்காலத்திலும், இக்காலத்திலும் வைணவ மடாதிபதிகள் முக்கியமாக அகோபிலமட ஜீயர்கள், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் விஜயம் செய்து மங்களாசாசனம் செய்து வந்திருக்கிறார்கள்.

தினசரி ஆராதனைகள், ஸ்ரீராம நவமி வைபவங்கள் குறைவின்றி நடைபெறுகின்றன. குளக்கரையில் மேற்கில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோயில் காஞ்சி திவ்ய தேசமான (பரமேஸ்வர விண்ணகரம்) வைகுண்ட பெருமாள் திருக்கோயிலின் அபிமானத்தலமாகவும் விளங்குகிறது. செய்யாறு அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள கொட நகரில் உள்ளது இந்த சம்பாதி ராமர் ஆலயம்.

- எம்.என்.ஸ்ரீநிவாசன்