பந்தங்களை உறுதிப்படுத்தும் பாகுவா சாஸ்திரம்!



வளம் தரும் வாஸ்து

பாகுவா  எட்டு பாகங்கள் என்பது சீனத்து வாஸ்துவான பெங்சூயியில் நிபுணர்களால் கையாளப்படும் சூட்சுமம் ஆகும். ஏற்கனவே 8 முக்கோணப் பகுதிகள் மையத்திலிருந்து அறையின் எல்லை வரை பரவியிருப்பதை படம் மூலம் அறிந்தோம்.எட்டு பாகுவா பாகங்களில் தொழில் பகுதி பற்றி முன்பே பார்த்தோம். இப்போது ஏனைய பாகுவா பகுதிகள் பற்றி காண்போம்.

பாகுவா 2 -  உதவிக்கான இடம்நீங்கள் எப்போதும் தனிமனித வாழ்க்கை வாழ இயலாது. காடு, மலைகளில், குகைகளில், சிறைச் சாலையிலும் கூட  மற்றவர்கள் உதவியின்றி  வாழ இயலாது.

வீட்டில் மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர்கள், வேலைக்காரர்கள் என்றும் பலரின் உதவியுடனேயே வாழவேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

மருத்துவமனையானால், மருத்துவர், உதவியாளர் என்றும், கல்லூரி எனில் முதல்வர், பேராசிரியர்,  சக மாணவர்கள் என்றும் பிறருடைய நட்பு, உதவியுடன்தான் நாம் வாழ்கிறோம். மலைகளில் தவம் இருக்கும் முனிவர்கள், சாதுக்களும்கூட அங்கு வளர்ந்திருக்கும் மரங்கள் தரும் காய், கனிகளை உணவாக்கிக்கொண்டு அந்த மரங்களின் உதவியுடன்தான் காலம் கழிக்க முடியும்.சில நேரங்களில் சில இடங்களிலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் போய்விடலாம். வங்கியில் கடன் வாங்க முடியவில்லை.

வீடுகட்ட உற்றார், உறவினர் கடன் கொடுத்து  உதவவில்லை. பிள்ளைகள் உதவியின்றி பெற்றோர் முதியோர் இல்லம் செல்வது இப்படியான சூழ்நிலைகள் ஏற்படக் காரணம், பாகுவா பகுதியில் ‘2’ ம் எண்ணிட்ட இடம் வெட்டுப்பட்டு இருப்பதுதான். இதனால் பிறர் உதவியின்றி முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு மனம் பாதிக்கப்பட்டு வேதனைதான் மிச்சமாகும்.

இவ்விடம் பவித்ரமாக, சுத்தமாக, ரசிக்கும்படியாக இருப்பின், நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு உதவுபவர்களாக இருப்பார்கள். சிலருக்கு அவர்களை சுற்றி எப்போதும் உதவுபவர்கள் இருக்கிறார்கள் என்றால் 2ம் பகுதியான உதவி இடம் மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது, அமைக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.எனவே, இப்பகுதியினால் நம் வேலை எளிதாவதுடன், மன அழுத்தம் இன்றி இருக்க வேண்டுமென நினைப்பவர்கள் 2ம் பகுதியை வெட்டு இன்றி, தீர்க்கமாக பவித்ரமாகப் பராமரிக்க வேண்டும்.

இந்த இடம் பயணத்துக்கான இடமும் கூட. சாம்பல் நிறத்தை இங்கு பயன்படுத்த சிறப்பான பயணம் ஏற்பட்டு புகழ் கிடைக்கும். பயணம் செய்ய விரும்பும் இடத்தின் புகைப்படம், கப்பல், விமானம், புதிய மலர்கள், வாழ்க்கைக்கு வழி காட்டும் படங்கள் ஆகியவற்றை இப்பகுதியில் அமைக்கலாம். இது சொர்க்கத்திற்கு ஈடான பகுதியாகும்.

பாகுவா 3 - குழந்தைகள் இடம்குடும்பத்தில் குதூகலம் நிலவவேண்டுமெனில் சந்தான ப்ராப்தி வேண்டும். வாழையடி வாழையாக குலம் தழைக்க, கதவு உள்ள பகுதியிலிருந்து பாகுவா முறைப்படி மூன்றாமிடம் மிகச் சிறப்பாகவும், பங்கம் இன்றியும் இருத்தல் வேண்டும். அப்போதுதான் புத்ர சோகமின்றி நன்கு குடும்பம் சந்தோஷமாகத் துலங்கும்.

இவ்விடத்தை பொருத்துதான் குழந்தைகளின் உண்மை அன்பும் இருக்கும். இவ்விடம் பாதிக்கப்படுமானால், குழந்தைகளால் பெற்றோர்கள் கைவிடப்படக்கூடிய நிலைமை உருவாகும்.

எனவே, குழந்தைகள் இல்லாத வீட்டினை பார்த்தால் இவ்வுண்மை புரியும். இவ்விடத்தினை பொறுத்து குழந்தைகளின் குணநலனும் தெரியவரும். அசுத்தமாக பேணப்பட்டு இருப்பின் 18 வயதை அடையும் முன்னே குற்றம் புரிபவர்களாகவும், சீர்திருத்தப்பள்ளியில் சேருபவர்களாகவும் இருப்பார்கள். பஞ்சலோகம், தாமிரம், செம்பு ஆகிய உலோகம் கொண்டு தயாரிக்கப்பட்ட அலங்காரப் பொருட்களை கொண்டு இவ்விடத்தை அலங்கரிக்கலாம். சிந்தனையை தூண்டும் படங்களை இங்கு பராமரிக்கலாம். கரடி பொம்மைகள், துருவக் கரடிகள் விளையாடுவது போன்றவற்றை இங்கு அழகுபடுத்த சிறப்பு மேலோங்கும். மரகதப்பச்சை போன்ற பச்சை நிற கற்களை இங்கு பதித்து அழகூட்டலாம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இப்பகுதியில் வட்டவடிவ உலோகப் பொருட்களை (வளையல், பூண் போன்றவை) வைத்திருக்க விரைவில் அந்த சந்தோஷம் அடையப் பெறுவார்கள்.

அடர்த்தியான வர்ணம் கொண்ட அறையாக இருப்பின் குழந்தைகளின் வளர்ச்சியில் குறைபாடுகள் நேரலாம். எனவே தங்கநிறம், இளம் நீலநிற வர்ணங்கள் பூசி சரி செய்யலாம்.
எழுத்தாளர்கள், இசை மற்றும் பிற கலைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள், இயற்கையை நேசிக்கும் எண்ணம் கொண்ட பெருமக்கள், புதிய சாதனை படைப்பவர்கள் இப்பகுதியை தேர்ந்தெடுத்து பயன்படுத்த நற்பலன்களை நிச்சயம் எதிர்பார்க்க முடியும்.

எனவே  சுத்தமாகவும், அலங்காரத்துடனும், வண்ண அடர்த்தியின்றியும், பாதிப்பின்றியும் 3ம் பகுதியைப் பராமரித்து வர குழந்தைகள் சிறப்பாக உருவெடுத்து சமுதாயத்தை மேம்படுத்தும் சிறந்த அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் பரிணமித்து மேதைகளாகத் திகழ்வார்கள்.

பாகுவா 4 - உறவுமுறை பகுதிஒருவர் ஜனித்துவிட்டாலே, அவருக்குதான் எத்தனை உறவுகள்! தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள், மாமா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, மனைவி-கணவன், மைத்துனன், மாமனார், மாமியார், பிள்ளைகள் என்று அவர் வளர வளர பல உறவினர்கள் ஏற்படுவார்கள்.

இப்பகுதி நிலத்தைக் குறிக்கும் பகுதியாகும். பூமியாகவும் பாவிக்கப்படும். ஆசிரியர், மாணவன், முதலாளி, தொழிலாளி என எண்ணற்ற குடும்பத்துக்கு அப்பாற்பட்ட தொடர்புகளையும் அளிக்கும் பகுதியாகும்.கதவை திறந்த உடன் வலது கோடியில் உள்ள பகுதி உறவுமுறை பகுதியாகும். இங்கு பிங்க், வெள்ளை நிறங்களை பயன்படுத்த மேற்கூறிய சிறப்பான உறவுகள் பலப்படும்.

உறவின்றி எவரும் இருக்க முடியாது. நல்ல தம்பதிகள் இந்த இடத்தின் நல்ல பராமரிப்பால் உருவாகுவார்கள்.  நம் ஜாதகத்தில் 7ம்மிடம் என்று கூறுவோம். அவரவர் ராசிக்கு எதிர் வீடு 7ம் வீடு, கணவன் - மனைவியை குறிக்கும். அது போலவே ‘பாகுவா’ சூட்சுமத்தில் எதிர்முனை தம்பதியரின் உறவை குறிக்கிறது.

இப்பகுதியின் வலது பக்க மூலை இந்த இடத்திற்கு மட்டுமின்றி வீட்டிற்கே சக்தியான இடம். 180 டிகிரி (நேர்கோடு) அடிமுனை, எதிர்முனையாக இருக்கும் இடமாகும். இவ்விடத்தை உயர் நிலைக்கு கொண்டு செல்ல, இதற்குரிய அடையாளங்களான ஜோடிப்புறா, காதல் தேவதைகள், பூ ஜாடி, இரட்டை கலர் மெழுகுவர்த்தி, நவரத்தினக் கற்கள், இதயம் இதயத்துடன் சேர்ந்திருப்பது போன்ற ஓவியங்கள்- படங்கள் இங்கு இடம் பெற தம்பதியர் என்றென்றும் இணைபிரியாமல் வாழ்வர்.

சீனத்து கயிற்றால் சிவப்பு ரோஜாக்களை இரண்டு இரண்டாக கட்டி தொங்க விட ஆழ்ந்த அன்பு பற்றிக் கொள்ளும். ஆமை ‘கடல்’ பகுதியை குறிக்கும் என்பதால் பொக்கிஷத்தை முதுகில் தாங்கிய ஆமையை இங்கு அமைக்கலாம்.வெளிர் ரோஜாவின் வண்ணம் கொண்ட குவார்ட்ஸ் கல், ஆழ்ந்த காதலை வெளிப்படுத்தும் என்பதால், இதை இங்கு பதிக்க ஒற்றுமை ஓங்கி வளரும்.(அடுத்து புகழ், பொருளாதாரம், குடும்பம், அறிவு சம்பந்தப்பட்ட ஏனைய பாகுவா பகுதிகளை காண்போம்.)

போனஸ் குறிப்பு

தற்போது வியாழன் எனும் குரு மேற்கில் அதிகாலையில் மறைய, வெள்ளி எனும் சுக்கிரன் சூரியன் உதிப்பதற்கு பின் 2 நாழிகை நேரத்தில் கிழக்கில் உதிக்கும். இது வைரம் போல வெள்ளையாக ஜொலிக்கும். பூமிக்கு மிக அருகாமையில் உள்ள கிரகம்.  இதனை தரிசித்து வணங்க கணவன்-மனைவி ஒற்றுமை ஓங்கும். வண்டி வாகனாதிகள் நன்கு கைவரப்பெறும். அழகிய மனை அமைய அஸ்திவாரம் போடும் வாய்ப்பு கூடிவரும். சொகுசு வாழ்க்கை மேற்கொள்ள தினசரி தரிசனம் செய்யவும்.  கால்நடைகள் சிறப்பு பெறவும் சுக்கிரனை வழிபடலாம்.  சுக்கிரன் கிரகத்தை மாலை 6 முதல் 8 மணி வரை மேற்கு வானில் தற்போது தரிசிக்க இயலும்.

வாஸ்து பாஸ்கர்