புத்தர் போற்றிய புனித ஆன்மிக நெறிகள்!



அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

சித்தார்த்த கௌதம புத்தர், ஓர் அரச குமாரனாகத் தோன்றியவர் என்பது உலகறிந்த உண்மை. அதேபோன்று அவர் புராதன இந்து சமயத்தை அனுஷ்டித்த அரச குடும்பத்திலேயே
அவதரித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. சடங்கு, சம்பிரதாயங்கள், ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் என்னும் பாசிபடிந்து கிடந்த பழைய சமயம் என்னும் திருக்குளத்தைத் தூர்வாரிச் சுத்தப்படுத்தும் சீர்திருத்த எண்ணமுடனேயே அவருடைய பெருந்துறவுப் பயணம் தொடங்கியது.

சித்தார்த்தர் போதிஞானம் பெற்றவுடனேயே புத்த சமயம் தோன்றிவிடவில்லை. அவர் தமது ஞான போதனை களை எல்லா தரப்பு மக்களுக்கும் போதிக்க, ‘புத்த சங்கம்’ தான் தோற்றுவித்தார். தமது போதனை வழிமுறைகளை ‘மத்திய மார்க்கம்’ (மஜ்ஜிம நிகாயம்) என்றே புத்தர் உரைத்தார்.

‘புத்த சமயம்’ என்றொரு தனிச்சமயம் தோன்றியது. பின்னர் வந்த அவருடைய சீடர்களால் ஏற்படுத்தப்பட்டதென்றே சொல்லலாம். குறிப்பாக, அசோகச் சக்கரவர்த்தியே புத்த சமயத்தை உலகறியச் செய்து, பிரபலப்படுத்தியவர் என்பது வரலாறு கூறும் உண்மை. சமய வேறுபாடுகள் எத்தனையோ இருந்த போதிலும் கூட, இந்துக்கள் ஒருபோதும் புத்த பெருமானை வேற்று சமயத்தவராக எண்ணுவ தில்லை. தங்களை நல்வழிப்படுத்த வந்த சமய ஆச்சார்யர்களில் ஒருவராகவே எண்ணுகின்றனர்.

 இந்து சமய நம்பிக்கைகளின்படி, அரசர்கள் அனைவரும் விஷ்ணு அம்சம் கொண்டவர்கள். அந்த வகையில் இன்றளவும் இந்துக்கள் புத்த பெருமானை, மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராகவே எண்ணிப் போற்றுகின்றனர். எந்தவொரு இந்துவின் கரங்களில் புத்தர் சிலையோ, படமோ கிடைத்தாலும், அதை மதிப்புடன் ஏந்திச்சென்று, தன் இல்லத்தில் மரியாதைக்குரிய இடத்தில் வைத்தே பெருமைப்படுவான், வணங்கவும் தவறமாட்டான்.

புத்தர், சாதாரண மக்களின் எளிய வழிபாட்டு முறைகளை ஒருபோதும் மறுதவித்தவர் இல்லை. ஒருசமயம் அவரிடம் வஜ்ஜிகள் என்னும் மக்கள் இனம் வாழும் வைசாலி நாட்டின்மீது அஜாதரத்துரு படையெடுக்கத் திட்டமிடும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் படையெடுப்பின் மூலம் வஜ்ஜிகள் என்னும் மக்கள் கூட்டம் பேரழிவைச் சந்திக்க நேருமோ என்று ஐயமுற்ற நிலையில், புத்தர் தமது அணுக்கத் தொண்டரான ஆனந்தரிடம் ஏழு கேள்விகளை எழுப்புகிறார்.

அக்கேள்விகளும், அவற்றுக்கு ஆனந்தர் கூறிய பதில்களும் புத்த சரிதத்தில் மிக முக்கியப் பதிவாக ஒளிர்கின்றன. ஒன்று, ‘வஜ்ஜிகளின் இனக்குழு அவை அடிக்கடி ஒன்று கூடுகிறதா?’ இரண்டு, ‘வஜ்ஜிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகப்பணிகளை ஆற்றுகிறார்களா?’ மூன்று, ‘அவர்கள் சட்டத்தை மீறாதிருக்கிறார்களா, விதிக்காத சட்டத்தை விதித்திருப்பதாக ஆளுக்குத் தக்கவாறு மாற்றிக் கூறாதிருக்கிறார்களா?’

நான்கு, ‘அறிவுமிக்க முதியோர்களுக்கு மதிப்புக் கொடுக்கிறார்களா? அவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடக்கிறார்களா?’ ஐந்து, ‘வஜ்ஜிகள் தங்கள் ராஜ்யத்திலுள்ள கன்னிப்பெண்கள் மீதோ, மணமான பெண்கள் மீதோ பாலியல் வன்கொடுமைகள் புரியாதிருக்கிறார்களா?‘ ஆறு, ‘வஜ்ஜிகள் தங்கள் நகரங்களிலும் அவற்றுக்கு வெளியேயும் உள்ள ஆலயங்களைத் தக்கபடி பாதுகாக்கிறார்களா?’ ஏழு, ‘தங்கள் ராஜ்யத்தினுள் வரும் அறவோர்களை-துறவிகளை நன்கு உபசரிக்கிறார்களா, அவர்களுக்கு இடையூறு நேராவண்ணம் பார்த்துக் கொள்கிறார்களா?

’இவை தாம் புத்தர் எழுப்பிய ஏழு கேள்விகள், ஆனந்தர் அனைத்திற்கும் ‘ஆம்’ என்கிற பதிலைச் சொல்கிறார். உடனே புத்தர் இந்தப் படையெடுப்புச் செய்தியைக் கொண்டு வந்த அந்தணப் பெரியவரிடம், ‘‘வஸ்ஸகாரரே, ஒரு காலத்தில் நான் வைசாலியில் பயணம் செய்தபோது, வஜ்ஜி மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த ஏழு நியமங்களை உபதேசித்தேன்.

இவற்றைக் கடைப்பிடிக்கும் வரை அவர்களை யாராலும் வீழ்த்த முடியாது. வஜ்ஜிகளின் வாழ்வில் தாழ்வில்லை; முன்னேற்றமே உண்டாகும்’’ என்று கூறுகிறார்.புத்தர் கூறியுள்ள விரிவான விளக்கத்தில், ஆறாவது கேள்விக்கான பதில் பகுதியில், ‘கோயில்களைத் தக்கபடி கவனிப்பதனால், தேவர்கள் மகிழ்ந்து, நாட்டைக் காப்பர்’ என்பது புத்தபெருமானின் திருவாக்காக அமைந்துள்ளது.

புத்தர் வானுலகம், தேவர்கள் பற்றியெல்லாம் நிறையவே கூறியுள்ளார். புத்த சமயம் இந்திரன், பிரம்மா, காமவேள், மணிமேகலாதேவி, தாராதேவி, அவலோகிதேஸ்வரர் என்றெல்லாம் சில
தெய்வங்களை மிக உயரிய நிலையில் வைத்துப் போற்றுகிறது.

பார்க்கவ முனிவர், ஆளாரகாலாமர், உருத்திரக ராமபுத்திரர் போன்ற தவசிரேஷ்டர்களிடம் முறைப்படி யோகம், தியானம், பூரகம், ரேசகம், கும்பகம் ஆகிய வற்றை புத்தர் பயின்றிருந்தார். தான் மட்டும் கடைத்தேறுவது என அவர் எண்ணியிருந்தால், அந்த நிலைகளோடு நின்றிருப்பார். மக்களின் துக்கநிவர்த்தி என்னும் மார்க்கத்தைக் கண்டறிந்து உபதேசிப்பதே அவருடைய குறிக்கோளாக இருந்ததால், அத்தவப் பள்ளிகளிலிருந்து விலகி வந்து, நைரஞ்சரை நதிக்கரைக் காடான உருவேலா வனத்தில் (புத்தகயா) தனித்திருந்து தவமியற்றினார்.

ஆறு வாரங்களுக்கு மேல் பட்டினித் தவமியற்றிய அவர், ஒரு நாள் மூர்ச்சித நிலையில் ஆற்றங்கரை அஜபால விருட்சத்தின்கீழ் விழுந்து கிடந்தார். அந்த மரத்தினடியில் யட்சபூஜை செய்ய வந்த ஆயர்குலச்செல்வி சுஜாதை என்பவள், நைவேத்யப் பால் பாயசத்தை புத்தருக்கு அளித்தாள். புத்தர் புத்துயிர் பெற்றார். (இந்த நிகழ்வு பற்றி ‘லலித விஸ்தாரம்’ போன்ற புத்தகாவிய நூல்கள் மிக உயர்வாகவும், விரி வாகவும் பேசுகின்றன. பழங்காலப் புத்தமடாலயங்களின் சுவர்களில் இக்காட்சி அழகிய வண்ண ஓவியங்களாக இடம் பெறுவது வழக்கம்.)

பாயசம் இருந்த பொற்கலசத்தை அப்பெண் புத்தரிடமே அளித்து விட்டுப் போய்விட்டாள். அன்று வைகாச பூர்ணிமை தினம். புத்தர் அப்பொற்கலசத்தை எடுத்துக் கொண்டு நைரஞ்சரை நதிக்குச் சென்று, ‘என் தவம் உண்மையானால், இன்றே நான் போதிஞானம் பெற வேண்டும். அப்படி நிகழும் என்றால், இக்கலசம் நதிப்போக்கின் எதிர்த்திசையில் செல்லட்டும்’ என்று கூறி, மிதக்க விட்டார். அதே போன்று அப்பொற்கலசம் எண்பது பாகதூரம் எதிராக மிதந்து சென்று, நீருள் அமிழ்ந்தது.

(பிறகு அது நாக உலகம் சென்று, நாகமன்னன் காலா என்பவனின் கரங்களில் சேர்ந்ததாம்.)அஜபால விருட்சத்தின் அருகே சிறிது தொலைவில் ஒரு வெள்ளரசு மரம் இருந்தது. (போதி மரம்) அங்கே சென்று பத்மாசனமிட்டு அமர்ந்த புத்தபிரான் அன்றிரவுதான் போதிஞானம் பெற்றார். அதுவும் அத்தனை எளிதாக அல்ல.

கடுந்தவமியற்று வோரின் தவம் கலைக்க இந்துப் புராணங்களில் வரும் இந்திரன் (புத்த சமயம் ‘சக்கன்’ என உரைக்கும்.) மாரனை அனுப்பிச் சோதனைகள் பல செய்கிறான். அழகிய தேவமாதர்கள் வந்து நடனமாடித் தவம் கலைக்க முயன்று தோற்ற இவ்வரலாற்றை ‘மாரயுத்தம்’ என வருணித்து, ஓவியங்களும் தீட்டி வைத்துள்ளன புத்த சமய வரலாற்று நூல்கள்.

இறுதியாக மாரன் புத்தர் முன்தோன்றி, கடும் விவாதங்களும் செய்து பார்க்கிறான். அவனிடம் புத்தர், தாம் முந்தைய ஜென்மங்கள் பலவற்றில் ‘தசபாரமிதை’ எனப்படும் பல்வகைத்
தியாகங்களைச் செய்த பின்பே இப்பிறப்பெடுத்துத் தவமியற்றுவதாகக் கூறி, அதற்கு சாட்சி இந்தப் பூமி மாதா என்று பூமியைத் தொட்டுக் காட்டுகிறார். (புத்தர், பூமியைத் தமக்கு சாட்சியாகத் தொட்டுக் காட்டும் இக்காட்சியிலேயே அவருடைய பெரும்பாலான சிலைகள் காணப்படும்.)

தான பாரமிதை, சீல பாரமிதை, க்ஷமா பாரமிதை, வீரிய பாரமிதை, தியான பாரமிதை, பிரக்ஜஞா பாரமிதை, உபாய பாரமிதை, தயன பாரமிதை, பல பாரமிதை, ஞான பாரமிதை எனப்படும் தச பாரமிதைகளை (மணிமேகலை, நீலகேசி, வீரசோழியம் போன்ற நூல்கள் இவற்றை பிரித்துரைக்கின்றன) நிறைவேற்றியவர் என்பதால், புத்தருக்கு ‘தசபலர்’ என்றும் ஒரு பெயருண்டு. இதை ஒட்டி ஏற்பட்ட கதைகளே புத்தஜாதகக் கதைகள் என்னும் பெயரில் பேரிலக்கியமாக இருக்கிறது.

மாரனின் மாயவலைகளை அறுத்தெறிந்து, அவனோடு வாதிட்டு வென்ற பின்பே புத்தர் போதிஞானம் பெறுகின்ற நிகழ்வு அமைகின்றது. அதன் பிறகும் கூட அவர் ஏழு வாரங்கள் போதி மரத்தின் கீழேயே மவுனம் காத்தபடி இருக்கிறார். ‘நம் போதனைகள் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா, பின்பற்றுவார்களா?’ என்கிற தயக்கம் அவர் மனத்தில் எழுகிறது. அதை மகாபிரம்மாவே தோன்றிப் போக்குகிறார். ‘எழு கௌதமா, மக்களிடம் போய் நீ கண்ட போதிஞானத்தை உரை’ என்று பிரம்மன் கட்டளையிட்ட பிறகே புத்தர், தமது அன்பின் அறவாழியை (தர்மச்சக்கரப்பிரவர்த்தனம்) மக்கள் மனங்களின் உருட்டத் தொடங்கினார் என்பது வரலாறு.

ஒரு குடியானவனிடம், மரணம் தவிர்க்க முடியாதது, வாழ்வு நிலையற்றது என்பதை புத்தர் விவரிக்கும்போது, தான் முன்ஜென்மம் ஒன்றில் ராமராகப் பிறப்பெடுத்ததாகக் கூறுகிறார். ‘அந்தக் காலத்தில் சுத்தோதனர் தசரதராகவும், மாயாதேவி பட்டத்தரசியாகவும், ராகுலன் சீதையாகவும், ஆனந்ததேரர் பரதனாகவும், நான் ராம பண்டிதராகவும் இருந்தோம்.’ என்பது புத்தரின் வாய் மொழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

புத்தர், வேள்விகளில் பிராணிகளைப் பலியிடுவதை மிகக் கடுமையாக எதிர்த்தார். அவரிடம் தத்தர் என்னும் பிராமணர் ஒரு சமயம் வந்து, ‘‘கௌதமரே, வேள்விகளில் பலியிடும் தவறான பழக்கம் பிற்காலத்தில் வந்தது என்றும், முற்காலத்தில் நல்ல வேள்விகளே நடத்தப்பட்டன என்றும் தாங்கள் சில இடங்களில் உரை நிகழ்த்திய தாக அறிந்தேன். அதைப் பற்றி எங்களுக்கும் சிறிது விளக்குங்களேன்’’ எனக் கேட்டார்.

அதற்கு இசைவு தெரிவித்த புத்தர், பழங்காலத்தில் வாழ்ந்த மகாவிஜிதன் என்னும் புகழ்பெற்ற ஓர் அரசனின் வரலாற்றை விவரித்தார். மகாவிஜிதனுக்கு ஒரு பெரிய யாகம் நடத்திப் புண்ணியம் சேர்க்கும் ஆசை எழுந்தது. அவனிடம் ஏராளமான செல்வங்கள் குவிந்து கிடந்தன. அவன் தலைமைப் புரோகிதனை அழைத்து மிகப்பெரிய யாகசாலை ஒன்றை அமைத்து, வேள்வித்தீ வளர்க்கச் சொன்னான். அதைக் கேட்ட அந்த ராஜபுரோகிதன்,

‘‘அரசே! தங்கள் விருப்பம் நியாயமானது. ஆனால், நாட்டில் மழை இல்லை. வறுமை, பஞ்சம் தலை விரித்தாடுகிறது. மக்கள் மனம் கொதித்துப் போய் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கிற கொஞ்ச நஞ்ச வளங்களையும் கள்வர்கள் அபகரிக்கின்றனர். காவலர்களிடம் பிடிபடும் கள்வர்கள் வறுமையைக் காரணம் காட்டுகின்றனர். இந்த நிலையில் அரசர் பெரும் செலவில் ஒரு வேள்வி நடத்தினால், கெட்ட பெயரே வரும். நாளைய வரலாறும் பழிக்கும். எனவே நான் ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன்’’ என்றான்.

‘‘சொல்லுங்கள் புரோகிதரே! எதுவானாலும் நிறைவேற்றுகிறேன்’’ என்றான், மகாவிஜிதன்.‘‘வேறொன்றுமில்லை அரசே! நம் அரசாங்கத் தானியக் களஞ்சியங்களில் ஏராளமான கையிருப்பு இருக்கிறது. கஜானாவில் வரியாக வந்து குவிந்த பொன்னும் மணியும் ஏராளம். தாங்கள் ஏழை விவசாயிகளை அழைத்துப் பசி போக்கவும் கழனிகளில் விதைக்கவும், இலவசமாகத் தானியங்களை அளியுங்கள்.

வணிகத்திறன் உள்ளவர்களை அழைத்து, நிபந்தனையற்ற நிதிக்குவை நல்கி, வாணிபம் வளர்க்கச் சொல்லுங்கள். கள்வர்களைப் பிடித்துச் சிறைக்கூடங்களை நிரப்பாமல், அவர்களுக்கு விடுதலை தந்து, வீரப்பயிற்சி அளித்து காவல் பணி வழங்க உத்தரவிடுங்கள். வேலை கிடைத்த மகிழ்வில் விடலைகள் திருந்துவர்.

விவசாயிகள் உழைப்பர். வாணிபம் பெருகும். பிறகு அவர்களாகவே அரசுக்கு வரிகட்டுவர், கஜானா மீண்டும் நிறைந்து விடும். அதன் பிறகு மக்களின் அனுமதியோடு நாம் யாகம் செய்யலாம். அதை எல்லோரும் வரவேற்பர், வாழ்த்துவர்...’’ என்றான், ராஜபுரோகிதன்.அந்த ஆலோசனையை ஏற்று, மக்களை அழைத்துப் பொன், பொருள் அனைத்தையும் வழங்கினான் மன்னன் மகாவிஜிதன். அவன் தானியக்கிடங்கையும், கஜானாவையும் திறந்ததுமே நாட்டில் மழை பொழிந்தது. உழைக்கும் மக்கள் மன்னனை வாயார வாழ்த்தியபடி வயிற்றுப்பசி போக்கினர்.

வயல்களில் உழுது பயிரிட்டனர். வணிகர்கள் உற்சாகமாக வெளியூர்கள் சென்று வாணிபம் செய்து, பெரும் பொருளீட்டினர். இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைத்ததும் அதிலேயே கண்ணும் கருத்துமாக ஈடுபட்டனர். பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு நல்ல இடங்களில் பெண் பார்த்து விவாகம் செய்து வைத்தனர். நாடு முழுக்க சுபிட்சம் மலர்ந்தது. மிக விரைவில் மீண்டும் அரசின் கஜானா, மக்கள் அளித்த வரிப் பணங்களால் நிரம்பி வழிந்தது.

இப்போது மகாவிஜிதன், மக்களை அழைத்து ஒரு பெரிய வேள்வி இயற்றும் விருப்பத்தைச் சொன்னான். மக்கள் அதை மகிழ்வுடன் வரவேற்றதுடன், அதில் தங்களையும் இணைத்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு பணியைச் செய்தனர். அரசன் அந்த வேள்விக்கூடம் நிறுவ எவர் தோட்டத்து மரத்தையும் வெட்டவில்லை.

ஆடுகள், எருதுகள் எதையும் வலியக் கைப்பற்றி வந்து, அக்னியில் பலியிடவில்லை. நெய், எண்ணெய், அரிசிப் பொரி, வெல்லப்பாகு, நவதானியங்கள் போன்றவையே ஆகுதிப் பொருட்களாக அக்னியில் இடப்பட்டால் போதுமென்று கூறிவிட்டான் ராஜபுரோகிதன். மக்களைக் கசக்கிப் பிழியா மல், எவருடைய பொருளையும் அபகரிக்காமல் நடத்தப்பட்டது அந்த யாகம்.

மன்னன் மகாவிஜிதனை மக்கள் போற்றினர், கொண்டாடினர். அந்த யாகத்தைக் காண ஏராளமான ஊர்களிலிருந்து மக்கள் வந்து குவிந்தனர். மகாவிஜிதனுக்கு அடங்கிய சிற்றரசர்களும் மகிழ்வுடன் வந்து கலந்து கொண்டனர். மகாவிஜிதன் அவர்களுக்கெல்லாம் நிறைய பரிசுப் பொருட்களை நல்கினான்.

அந்த சிற்றரசர்களோ அந்த யாகத்தில் தங்கள் பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பித் தாமாகவே நாலாதிசையிலும் தண்ணீர்ப் பந்தல்களையும், அன்னகூடங்களையும் அமைத்து, அறப்பணிகள் புரிந்தனர்...’’ என்று கூறிய புத்தர்பிரான், ‘‘கூட தந்தரே, மகாவிஜிதன் செய்த வேள்விதான் நியாயமான வேள்வி. அதைப் போன்ற வேள்விகளை எவர் செய்தாலும் நான் ஆட்சேபிப்பதில்லை’’ என்றார். (ஆதாரம் : தர்மானந்த கோஸம்பியின் ‘பகவான் புத்தர்’ நூல்).

அதை ஏற்ற கூடதந்தன் என்கிற அந்தணன், அதன்பிறகு அதுபோன்ற வேள்விகளையே எங்கும் தலைமை ஏற்று நிகழ்த்தினான். (இன்றைய வேள்விகளுக்கு அதுவே முன்மாதிரி எனலாம்.) நாடு அவனைப் போற்றியது; நல்லோர் பலரும் வாழ்த்தினர்.

புத்தரின் திருவுள்ளத்தையும், அவர் போதித்த - போற்றி வளர்த்த ஆன்மிக நெறிமுறைகளையும் நாமும் கடைப்பிடித்து நலங்கள் பல பெறுவோம். புத்தர் வானுலகம், தேவர்கள் பற்றியெல்லாம் நிறையவே கூறியுள்ளார். புத்த சமயம் இந்திரன், பிரம்மா,காமவேள், மணிமேகலாதேவி,தாராதேவி, அவலோகிதேஸ்வரர் என்றெல்லாம் சில தெய்வங்களைமிக உயரிய நிலையில் வைத்துப் போற்றுகிறது.

கௌதம நீலாம்பரன்