ராஜராஜன் தரிசித்த புவனேஸ்வர் கோயில்



கர்நாடகா

நம் தமிழ்நாட்டில் கும்பகோணம், காஞ்சிபுரம் உட்பட பல நகரங்களை கோயில் நகரம் என அழைப்பது உண்டு. இங்கெல்லாம் அந்த அளவுக்கு கோயில்கள் அதிகம்.இதே போல் ஒரிஸாவின் புவனேஸ்வரத்தை கோயில் நகரம் என அழைக்கின்றனர். கொனார்க் சூரியன் கோயில், புரியில் ஜகன்னாதர் கோயில் என்றிருப்பதால் மட்டும் இந்த பெயர் இல்லை; வேறு பல நூறு கோயில்கள் இருப்பதாலும்தான்.

புவனேஸ்வரத்திற்கு 2000 ஆண்டு வரலாறு உண்டு. அது மட்டுமல்ல 6ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பல மறுமலர்ச்சிகளை கண்ட பிரதேசம் அது. கேசரி மன்னர்கள், கடம்பா மன்னர்கள், கலிங்க மன்னர்கள் என பலர் இங்கு கோலோச்சியிருக்கிறார்கள்.புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கராஜா கோயிலுக்கு சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் வந்திருந்து தரிசித்து, தங்க காசுகளை அன்பளிப்பாக வழங்கிச் சென்றிருக்கிறான்.

இந்த மன்னனாலேயே இங்கு சேவலுடன் கூடிய கார்த்திகேயன், மூஞ்சுறுடன் கூடிய கணபதி ஆகியோர் அறிமுகமானதாகக் கூட ஒரு தகவல் உண்டு.இங்கு ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருந்திருந்தாலும். இன்று அவை 100 ஆக சுருங்கி விட்டன. அவற்றில் மிகவும் பிரபலமானது லிங்கராஜா கோயில்.தினமும் 6,000 பேர் வந்து செல்லும் கோயில். அதுமட்டுமல்ல சிவராத்திரியன்று இந்த கோயிலுக்கு இரண்டு லட்சம் பேர் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.லிங்கராஜா கோயிலின் மூலவர் ஹரிஹரர், அம்மன் புவனேஸ்வரி.

பத்தாம் நூற்றாண்டு வரை இது முழுமையாக சிவன் கோயிலாகவே இருந்ததாகவும், புரியில் ஜகன்னாதர் கோயில் கட்டி பிரபலமானதும், அதன் பின் விஷ்ணுவின் சாந்நித்யம் இந்த பகுதியில் உணரப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கங்கா வம்சத்தினர் ஆண்டபோது அவர்கள் வைணவ பக்தர்களாக இருந்தனர். புரி கோயில் கட்ட அவர்களே முக்கிய காரணம். அதே சமயம் புவனேஸ்வர் சிவனை தொந்தரவு செய்யாமல், அதிலேயே விஷ்ணுவையும் இணைத்து ஹரிஹரனாக மாற்றி விட்டனர். ஆனால், இப்போது இருப்பது லிங்கம் மட்டும்தான்.

மூவுலகுக்கும் முதற்கடவுள் அவரே என்பதை உணர்த்த அவருக்கு ‘திருபுவனேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. அதை ஒட்டியே இங்குள்ள அம்மன் புவனேஸ்வரி என்றழைக்கப்படுகிறாள்.
ஆயிரத்து நூறு ஆண்டுகள் தொன்மையான கோயில் இது. 7வது நூற்றாண்டை சார்ந்த சமஸ்கிருத நூல்களில் இந்தக் கோயிலைப் பற்றிய குறிப்புகள் உள்ளன என்பதிலிருந்து இக்கோயிலின் பழமையை அறிய முடியும்.

ஜகாட்டி கேசரி (11ம் நூற்றாண்டு) மன்னன், தன்னுடைய தலைநகரை, ஜெய்ப்பூரிலிருந்து புவனேஸ்வருக்கு மாற்றினான். அப்போது லிங்கராஜா கோயிலை முதலில் புனரமைத்து பெரிதுபடுத்தினான். அடுத்து வந்த கங்கா வம்சத்தினர் நல்ல முறையில் பராமரித்ததோடு மேலும் விரிவாக்கினர்.லிங்கராஜா கோயிலின் மைய கோபுரம், 180 அடி உயரம் கொண்டது. ஒவ்வொரு அங்குலத்திலும் உள்ள நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.

கோயிலுக்குள் கிழக்கு வாசல் வழியாக நுழைய வேண்டும். வாசலில் இருபுறமும் இரு சிங்கங்களின் சிற்பங்கள் துவார பாலகர்களைப் போல் நம்மை வரவேற்கும். வடக்கு, தெற்கு வாசல்கள் வழியாகவும் கோயிலுக்குள் செல்லலாம். கோயில் நான்கு கட்டமைப்புகளைக் கொண்டது. முதலில் நடன மண்டபம். இரண்டாவதாக போக மண்டபம், மூன்றாவதாக ஜகன்மோகன் மண்டபம், நான்காவதாக கர்ப்பகிரகம்.

இவற்றில் மூன்றாவதாக உள்ள ஜகன்மோகன் மண்டபத்தில்தான் நாம் லிங்கத்தை தரிசிக்கிறோம். இந்த மண்டபம் அழகிய சிற்பவேலைப்பாடுகளை கொண்டது. கர்ப்பகிரகம் உள்ளே சதுரவடிவம் கொண்டது.இந்தத் தலத்திற்கு ஒரு காலத்தில் ஏகாம்பரஸ்தலம் எனப் பெயருண்டாம். காரணம் அப்போது லிங்கம் ஒரு மாமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததாம். 13ம் நூற்றாண்டைச் சார்ந்த ‘‘ஏகாம்பர சரித்திரம்” என்ற நூல் இந்த தகவலை தருகிறது.

ஜகன்மோகன் மண்டபம், கர்ப்பகிரகம் மற்றும் கோபுரம் ஆகியவை 11ம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டுள்ளன.மிகப்பழைய கோயில் என்பதால் இன்று இது தொல்பொருள் இலாக்காவின் பொறுப்பில் உள்ளது.கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கம் சுயம்பு என்கிறார்கள். பீடம் உள்ளது. அதன் மீது ஒழுங்கில்லாத ஒரு லிங்க அமைப்புதான் ஹரிஹரன்!இந்த மூலவரை ரொம்பவும் எதிர்பார்த்துக்கொண்டு போனால்  சப்பென ஆகிவிடுவதென்னவோ உண்மைதான்!கோயில் வளாகத்தில் 50க்கும் அதிகமான சிறு சந்நதிகள் உள்ளன.

பலவற்றில் விளக்குகள் கூட இல்லை என்பது வருந்தத்தக்கது.இந்தக் கோயிலில், புரியின் தாக்கம் அதிகம். புரி மாதிரியே இங்கும் தேர்த் திருவிழா மிகவும் பிரபலம். லிங்கேஸ்வரர், ருக்மணியுடன் தேரில் புறப்பட்டு ராமேஸ்வரர் கோயில் சென்று திரும்புகிறார். லிங்கேஸ்வரருக்கு அரக்கனால் ஏற்பட்ட மன அழுத்தத்தைக் குறைத்து அவரைப் பழைய நிலைக்குக் கொண்டுவரத்தான் இந்த விழாவாம். சிவ-வைணவ இணைப்புக்கு இந்த தேர்த் திருவிழா வழி வகுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.மற்றொன்று, புரி கோயில் போன்றே இங்கும் ஏராளமான சேவைகள் உண்டு. சிலமணி நேரங்களுக்கு ஒருமுறை பிரசாத நைவேத்யமும் உண்டு. மாலையில் சிறப்பு ஆரத்தி உண்டு.

இரவு 71/2 மணி அளவில் மேற் கொள்ளப்படும் நைவேத்யம் நடந்த பின் பக்தர்களுக்கு அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.கோயிலுக்கு வெளியே மேடை ஒன்று இருக்கிறது. இது எதற்காக? இந்த கோயிலினுள் மாற்று மதத்தினருக்கு அனுமதியில்லை. அதனால் அவர்கள் கோயிலுக்குள் நடைபெறும் ஆராதனைகளை தரிசிக்க விரும்பினால், இந்த மேடையின் மீது ஏறி நின்றுகொள்ளலாம். கோயிலின் உள்ளே நடப்பனவற்றையும், சந்நதிகளையும், கட்டிட கலையையும் சுலபமாக தரிசிக்க முடியும்.

இங்குள்ள இன்னொரு சிறப்பு, புனித குளம். இந்தக் குளத்தில் நீராடினால் தீராது என வந்த நோய்கள்கூட குணமாகி விடுமாம். வருடத்தில் ஒரு நாள் விஷ்ணு இங்கு அரூபமாக வருகிறார் என்று நம்புகிறார்கள்.

 அது சமயம் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் அதில் நீராடுகிறார்கள். சிவராத்திரியன்று கோயிலுக்குள் ஏராளமானோர் விரதம் அனுஷ்டிக்கின்றனர். கடைசி வழிபாடு அதிகாலையில் முடியும் போது அவர்கள் வெளியே உள்ள புனித குளத்தில் நீராடி விட்டு மறுபடியும் வந்து சிவனை தரிசித்து விரதத்தை முடிக்கின்றனர்.லிங்கராஜா கோயிலின் மதிற்சுவர் பிரமாண்டமானது.

லிங்கராஜா தவிர புவனேஸ்வரத்தில் தரிசிக்க முக்தேஸ்வர் கோயில் உட்பட ஏராளமான கோயில்கள் உள்ளன.லிங்கராஜா கோயில் காலை 6 முதல் 12.30 மணி வரையிலும் மாலை 3 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.முக்தேஸ்வரர் கோயில் சற்றுத் தொலைவில் உள்ளது.

 இது கலிங்க கலைக்கு எடுத்துக்காட்டு. வாயில் பிறைவடிவில் இருக்கும். இந்தக் கோயிலின் கோபுரம் 25 அடி உயரம் மட்டுமே கொண்டது. இதன் வாசலை ஒட்டி ஊஞ்சல் விழா நடப்பது உண்டு. இங்கு கட்டிடக்கலை சிறப்பு அம்சத்தை பார்த்த ஒரு வெளிநாட்டினர், இதனை ‘‘ஒடிகாவின் நகை” என அழைத்தார். 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கோயில் இது. உள்ளே மூலவராக லிங்கம்.

பார்க்க வேண்டிய மற்றொரு கோயில் ராஜாராணி கோயில். 11ம் நூற்றாண்டைச் சார்ந்தது. உள்ளே இன்று தெய்வம் இல்லை. ராஜாராணி என்பது இந்த ஊரில் கிடைக்கும் ஒரு ஸ்பெஷல் கல்லின் பெயராம். அதனை வைத்து இந்தக் கோயில் கட்டப்பட்டதால் இந்த பெயராம்.

சிவப்பு மற்றும் தங்க வண்ணம் இந்த கல்லின் சிறப்பு.புவனேஸ்வரத்தில் 1.பிரம்மேஸ்வரர் கோயில், 2. லட்சுமனேஸ்வரர் கோயில், 3.மார்க்கண்டேஸ்வரர் கோயில், 4. ராமேஸ்வரர் கோயில், 5.கேதாரேஸ்வரர் கோயில், 6.சத்ருகுனேஸ்வரர் கோயில், 7.மகரேஸ்வரர் கோயில், 8.மோகினி கோயில், 9.விமலேஸ்வரர் கோயில், 10. பரதேஸ்வரர் கோயில், 11.பரசுராமேஸ்வரர் கோயில் முதலான ஏராளமான கோயில்கள் உள்ளன.

புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கராஜா கோயிலுக்கு சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் வந்திருந்து தரிசித்து, தங்க காசுகளை அன்பளிப்பாக வழங்கிச் சென்றிருக்கிறான். இந்த மன்னனாலேயே இங்கு சேவலுடன் கூடிய கார்த்திகேயன், மூஞ்சுறுடன் கூடிய கணபதி ஆகியோர் அறிமுகமானதாகக் கூட ஒரு தகவல் உண்டு.

- ராஜிராதா