இடர் அனைத்தும் களையும் இடையாற்றுநாதர்



நடுநாட்டின் பாடல் பெற்ற தலங்கள் 22ல் 13வது தலமாகப் போற்றப்படுவது திரு இடையாறாகும். திருமருதந்துறை, ஆதி மத்யார்ஜுனம் என்று போற்றப்படும் இத்தலம், தென்பெண்ணையாற்றுக்கும் மலட்டாற்றுக்கும் இடையில் உள்ளதால் ‘இடையாறு’ என்றானது.ஒரு சமயம் கயிலாயத்தில் சிவபெருமான் அன்னை உமாதேவிக்கு சிவரகசியத்தை உபதேசிக்கும்பொழுது, அவற்றை கிளி உருக்கொண்டு ஒரு முனிவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட உமாதேவியார் அந்த முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறுக்கு வருந்திய முனிவரிடம் சிவபெருமான், பூவுலகில் வியாசருக்கு மகனாகப் பிறந்து, பெண்ணை நதியின் தென்பால் உள்ள திருமருதந்துறையில் சுயம்புவாக இருக்கும் தம்மைப் பூஜித்து மருத மரத்தின் கீழ் தவம் புரிந்து திருவருள் பெறுமாறு உபாயம் கூறினார்.

கிளி முகத்துடன் கூடிய அம்முனிவரே சுக (சுகம் - கிளி) மகரிஷியாவார். இத்தலத்து மருதமரத்தின் கீழ் தவம்புரிந்து, பிரம்ம ஞானத்தையும், ஜோதிடக் கலையையும் அறிந்துகொண்டார் சுக மகரிஷி. இதனால் அம்மகரிஷி சுகபிரம்ம ரிஷி என்று போற்றப்பெற்றார். அதோடு ஜோதிடக் கலைக்கும் குருவானார். காலங்கள் பல கடந்தும், இன்றும் சுகர் நாடி ஜோதிடம் வழக்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சப்த கன்னிகைகளோடு, உரோம ரிஷி, பிருகு முனிவர், அகத்தியர் ஆகியோரும் இத்தல பெருமானை வழிபட்டு பேறுகள் பல பெற்றுள்ளனர்.

சைவ சமய சந்தானக் குரவர்கள் நால்வருள் மூன்றாமவரான மறைஞானசம்பந்தர் அவதரித்ததும் இங்கேதான். இத்தல பொல்லாப் பிள்ளையாரின் பரிபூரண அருளைப் பெற்றவர் இவர். இவர் இந்த இடையாற்றில் பிறந்தமையாலும், ஸ்ரீமெய்கண்டார் அவதரித்த பெண்ணாகடத்தில் வாழ்ந்தமையாலும் இவரை மருதை மறைஞானசம்பந்தர் என்றும், கடந்தை (பெண்ணாகடத்தின் ஆதிபெயர்) மறை ஞானசம்பந்தரென்றும் போற்றுவர். இதை மெய்ப்பிக்கும் பாடல் வரிகளும் உள்ளன.

சுந்தரர் இத்தலத்தைப் பற்றி 10 பாடல்களை அருளியுள்ளார். அதில் 39 திருத்தலங்களை வைப்புத்தலமாக, கூறி அத்தலங்களுக்கு நிகரான தலம் இடையாறு என் அழகுற மொழிந்துள்ளார். அப்பரும் தனது க்ஷேத்திரக் கோவையில் இத்தலத்தை நினைவு கூர்ந்துள்ளார்.‘‘கடையாற்றின் இனிக்கும் இடையாற்றின் வாழ் நல் இயல்பே...’’ என இத்தலத்தினை தமது அருட்பாவில் போற்றியுள்ளார் ராமலிங்கர்.  சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்திலும், சாளுவ மன்னர்கள் காலத்திலும் இக்கோவில் செப்பனிடப்பட்டும், பூஜைகள் நடத்தப்பட்டும் வந்துள்ளன.

மேற்கு நோக்கிய ஆலயம், மூன்று நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கின்றது. பலிபீடம், நந்தி கடந்து உள்சென்றால், பிரதோஷ நந்தி, நீண்டமுக மண்டபம். பின், இடை மண்டபம், அதில் சமயக் குரவர்கள் நால்வரோடு மறைஞானசம்பந்தரும் உடனுள்ளார்.

அடுத்து அர்த்த மண்டபம், கருவறை. கருவறையில் மருதீஸ்வரர் அற்புதமான வடிவில் அருட்காட்சி நல்குகின்றார். உயர்ந்த ஞானத்தையும், வல்லமையையும் அருள வல்லவர்! ஆதி மத்யார்ஜுனேஸ்வரர், மருதந்துறை உடையார், இடையாற்று நாதர், மத்யநதீஸ்வரர் ஆகிய திருநாமங்களும் இவருக்கு உண்டு. பின் இடைமண்டபம் வந்தால் ஓர் சிறிய வாயில். அதனுள் நுழைந்து திரும்ப, கிழக்கு முகம் கொண்ட அம்பாள் சந்நதி. கருவறையுள் சிற்றிடைநாயகி என்கிற நாமம் கொண்டு சிறிய உருவில் நின்ற வண்ணம் பிரகாசிக்கின்றாள். சூட்சும மத்யாம்பிகை என்றும் போற்றப்படுகிறாள்!

இவ்வாறு சுவாமியும், அம்பாளும் எதிரெதிரே வீற்றிருப்பது கல்யாண கோலத்தில் மாலை மாற்றும் அமைப்பு என்பர். இது போன்ற அமைப்பினை சில தலங்களில் மட்டுமே தரிசிக்க இயலும். இத்தலங்களில் கல்யாண வரம் வேண்டினால் உடனே பலிதமாகும்!வாயு மூலையில் கிழக்கு பார்த்த கந்தன் சந்நதியுள்ளது. இவர் கலியுக ராமப் பிள்ளையார் என்று போற்றப்படுகிறார். கலியுக ராமப் பாண்டியன் எனும் மன்னன் நடுநாட்டை வென்றதன் நினைவாக இத்தல முருகனுக்கு தன் பெயரினைச் சூட்டி மகிழ்ந்துள்ளான்.

ஈசான்ய பாகத்தில் தல விருட்சமான மருதமரம் ஓங்கி, உயர்ந்து, அகண்டு நிற்கிறது. தவ நிலையினைத் தூண்டவும், மருந்துப் பொருளாகவும் பயன்படும் இந்த மரம் கயிலையின் ஐந்து விருட்சங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது. இம்மரத்தின் கீழே சுகப்பிரம்ம ரிஷியின் சுதைச் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. அங்கே மேற்கு முக தனிச் சந்நதியுள் அகத்தியர் வழிபட்ட லிங்கம் உள்ளது. கோஷ்ட தெய்வங்கள் அவரவர் இடத்தில் இடம் பெற்று அருள்கின்றனர்.

தல கணபதியாக பாலாம்ருத கணபதி பொள்ளா (உளியால் செதுக்காத) பிள்ளையாராக, குழந்தை வடிவில், மேலிரு கரங்களில் லட்டு மற்றும் பலாச்சுளையையும், கீழிரு கரங்களில் அபயஹஸ்தம் மற்றும் கரும்புடனும் திகழ்கின்றார். இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே அமர்ந்து அருள்புரிவதால் இப்பெருமான் ‘விக்னேசானுக்ரஹ மூர்த்தி’ எனப் போற்றப்படுகின்றார். இவருக்கு எதிரே ஒரே கல்லால் ஆன சப்த மாதர்கள் வீற்றுள்ளனர்.

அருகே தல தீர்த்தமான சிற்றிடை தீர்த்தம் கிணறாக உள்ளது. விருத்த பினாகினி எனப்படும் தென்பெண்ணையாறும் இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இத்தலத்தின் முக்கிய திருவிழாவாக தை மாதம் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் 15, 16ம் தேதிகளில் மாலையில் சூரியக் கதிர்கள் ஈசன் மீது விழும்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

நெடுநாள் திருமணத்தடை உடையவர்கள் இங்கு அபிஷேகம் நடத்தி, சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்றி அதை எடுத்துச் சென்றால் விரைவில் அவர்களுக்குத் திருமணம் கைகூடுகிறது. ஜோதிடக் கலையில் சிறக்கவும், பிணிகள், வினைகள் களைந்திடவும் ஜாதகம் இல்லாதவர்களும் வழிபட உகந்த தலம் இது.

திருமண வரம் வேண்டியும், பிள்ளைப்பேறு வேண்டியும், இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து செல்கின்றனர். சுக முனிவரின் பக்தர்கள் இங்கு அடிக்கடி வந்து அவரை தரிசித்துச் செல்கின்றனர். திருக்கோவிலூரில் இருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக விழுப்புரம் செல்லும் பேருந்துகளில் தி.எடையார் பிள்ளையார்கோயில் நிறுத்தத்தில் இறங்கி இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.

 எம்.கணேஷ்