காசி கங்கை மகான்கள்



காசி கங்கையை நினைக்க நினைக்க வியப்பு, விசிறிகளாய் விரிந்தும் புதிர்கள் மின்மினியாக மிளிர்ந்தும், ரகசியங்கள் இருளில் அலையும் புகைபோல சுகந்தத்தை பரப்பியபடியும்தான் இருக்கும். பிரம்ம வித்யைபோல காசி வித்யை என்று கொள்ளலாம்.

 எல்லா பூட்டுக்களையும் திறக்கும் ஒரே சாவியைப்போல ஆன்மீகதாகம் கொண்டோர்களை தன்னிடத்தே வசீகரிக்கும் ஆகர்ஷணத்தை காசி கொண்டிருக்கிறது. இந்தக் குறுகலான சந்துகள் நிறைந்த ஊரில் என்னதான் இருக்கிறது எனும் கேள்வி வரத்தான் செய்யும்.

ஏன் இத்தனை முக்கியத்துவம் காசிக்கு என்று
ஆன்மிகவாதிகளையே கொஞ்சம் குழப்பவும்
செய்யும். ஆனாலும், யுகங்களாக காசி பாரதத்தின்
ஆன்மிக அடையாளத்தின் பதாகையாக ஜொலிக்கிறது.
அகண்ட கங்கை ஆரத்தி சுடர்களின்
சுழல்கள் தாவி கங்கையின் மீதேறி வழுக்கிச்
செல்லும் அழகைக் காண உள்ளிருக்கும் உயிர் பொங்கிப் பொழியும். 

நாத்திகரோ ஆத்திகரோ, வேற்று மதத்தவரோ, தவ சீலரோ, வைதீகரோ, ஜடாதாரியோ, சாமானியனோ எல்லோரையும் காசி காரணமற்று வசீகரிக்கிறது. ஏன்... ஏன்... என்று குடையும் கேள்விக்கான பதில்களை ஞானிகள்தான் முன்னெடுத்துச் செல்கிறார்கள். மகான்கள்தான் காசியின் ரகசியத்தை காதோடு காதோடாக, ஊரறிந்த ரகசியமாக சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

என்னென்ன கிடைக்கும் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். காசியும் கங்கையும் ஞானமய மானது. காசி அகங்காரத்தை அழிக்கும் ருத்ர பூமி. உடல் நீயல்ல. நீ அந்த ஆத்மாவே என்று நிச்சயித்துத் தெளிவதற்காகவே இந்த உடற் குப்பைகளை குவியல் குவியலாக எரிக்கும் மகாமயானமாக விளங்குகிறது. உபநிஷதம் கூறும் மகாவாக்கியங்களை வெளியே நடத்திக் காட்டும் ஈசனின் உபதேச க்ஷேத்ரம். எரியும் பிணங்கள் தழலின் மையத்தில் ஞானத்தின் செம்மை தெரியும் ஜீவசுதந்திர பூமி. மண்ணைத் தொடாமல் நிற்கும் சொர்ணபூமி அது.   

காசி யோகிகளுக்கானதும் கூட. யோகாரூடர்
களாக வளர்பவர்களுக்கு இத்தலம் பேருதவி
செய்யும். வருணா, அசி எனும் இருநதிகள்

சங்கமிக்கும் இடமே வாரணாசி. யோகிகள் இந்த வருணா என்பதை இடகலை என்றும், அசி என்பதை பிங்கலை என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த இரண்டு நாடிகளும் மூலாதாரத்திலிருந்து தொடங்கி இரு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஆக்ஞா எனும் குண்டலினி சக்ரத்தில் சந்திக்கிறது.

இவை இரண்டும் சேரும்போது பெரும் பிரகாசம் உண்டாகிறது. அந்த சங்கமத்திற்கே காசி என்று அர்த்தம். ஏனெனில் காசி என்றாலே வெளிச்சம், பிரகாசம் என்று பொருள். உன்னுடைய யோக சரீரத்தில் விளங்கும் இந்த பிரகாசத்தின் பிரதிபிம்பமாக விளங்கும் தலமே காசியாகும்.

 இதைக் கண்டுவிட்ட ஞானிகள் ஆனந்தக் கூத்தாடி காசிக்கு ஓடினார்கள். கடுந்தவமியற்றி ஆக்ஞா சக்ரத்தை விழிப்படைய முயற்சிக்கும் முன்பு காசிக்கு சென்று வாருங்கள். அந்த சக்ரத்தின் ரகசிய சாவியாக புருவங்களுக்கு இடையே நெற்றிக் கண்ணோடு பிரகாசமாக விஸ்வநாதர் இத்தலத்தில் வீற்றிருக்கிறார் என்று விளக்கினார்கள். இந்த நெற்றிக் கண் எனும் அகக்கண் அங்கு சென்று தவமியற்ற திறக்கும். பக்தியினாலோ, யோகத்தினாலோ, காசியில் வாழ்வதாலோ இந்த நிலை சித்திக்கும்.

வேறொரு ரகசியமான விஷயமும் பெருந்தலங் களில் செயல்படும். சமஸ்கிருதத்தில் அந்தரிக்க்ஷம் என்பார்கள். அதாவது அந்த தலத்திற்கென்று உயிர்ச் சக்தி, உயிர்நிலையொன்று இருக்கும். அது அங்கு செல்பவரிடத்தில் செயல்படத் தொடங்கிவிடும். ஒரு துறவி காசியில் அதிகாலை எழுந்து தியானிக்கத் தொடங்கினாராம்.

சற்று நேரத்திற்கெல்லாம் தூக்கம் கவ்வும்போது, பின்னாலிருந்து யாரோ ஒருவர் உலுக்கியது போலிருந்ததாம். சட்டென்று சுற்றிமுற்றும் பார்க்கும்போது யாருமே அங்கு தென்படவில்லை.  இதுபோன்று இரண்டு மூன்று முறை நடந்தது. இதை தன் குருவிடம் சொல்லும் போது இந்த க்ஷேத்ரத்தின் அந்தரிக்க்ஷமே

உன்னை தூக்கத்திலிருந்து விடுவித்து தியானத்தில் செலுத்தியது.
இதுவே இந்த தலத்தின் மகிமையும் ஆகும்.
நீ மேற்கொண்டு செல். அதுவே போதும் என்றாராம்.

அதனால்தான், ஆதியிலிருந்தே ஞானிகளும், யோகிகளும் காசிக்கு வந்த வண்ணம் இருக்
கின்றனர். அங்கேயே க்ஷேத்ரவாசம் செய்தபடி
உள்ளனர். காசியை அறிந்து கொள்ளுதல்
என்பதும், கங்கையின் சூட்சுமத்தை புரிந்து கொள்வது என்பதும்,
 மகான்களின் மகத்துவத்தை தெரிந்து கொள்வது என்கிற இந்த மூன்றும் ஒன்றே ஆகும்.

 இந்த மூன்றையும் பிரிக்க முடியாது. ஜைன பௌத்த இதர சமயத்து ஞானிகளும் காசியை
வியப்போடுதானே பார்க்கிறார்கள். அப்படி காசி கங்கையை
அனுபவித்த மகான்களை நாமும் கொஞ்சம் தரிசிப்போம், வாருங்கள்.
ஆதிசங்கரர்காசியோடு தொடர்புடைய மகான்களை
சொல்லுங்கள் என்றால் நமக்கு முதலில்

நினைவுக்கு வருவது ஆதிசங்கரர்தான். கோவிந்தபகவத்பாதரின் மகாசமாதிக்குப் பிறகு ஆதிசங்கரர் காசியை நோக்கி நடக்கலானார். மாபெரும் பட்டணமான காசியை அடைந்து மணிகர்ணிகா கட்டத்தில் தங்கினார். காசி அரசர் உள்ளம் பொங்க வரவேற்றார். பற்பல வனாந்தரங்களிலெல்லாம் சஞ்சரித்து வந்தவருக்கு காசிப் பட்டணத்தைக் கண்டதும் எப்படி இங்கு இருக்கப் போகிறோம் என்று முதலில் தோன்றியது.

 ஆனால், இந்த நகரத்தின் புறத்திலுள்ள நெருக்கடிகளால் தொடப்படாத ஒரு அமைதியை உணர்ந்தனர். அந்த அமைதியின் பின்னணியில்தான் கங்கையும் நகர்ந்து கொண்டிருந்தாள். இதைக் கண்டு வியப்படைந்த சங்கரர் காசி! காசி! காசி! அஹோ காசி! என்று ஆனந்தமும் ஆச்சரியமும் அடைந்தார். 

காசி பஞ்சகத்தில்,
‘காஸ்யாம் ஹி காஸதே காஸீ காஸீ
ஸர்வப்ரகாஸிகா
ஸா காஸீ விதிதாயேன தேன ப்ராப்தா
ஹி காஸிகா’

காசி என்றாலே எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாதானே! நமக்குள்ளும் இந்த ஆத்ம வஸ்துவே எப்போதும் ‘இருக்கிறேன்’ என்கிற உணர்வோடு ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இங்கிருக்கும்போது இந்த நிஜ போத சொரூபம் இந்த க்ஷேத்ரத்தின் சுய மகிமையாலேயே சட்டென்று நம்மால் அனுபவிக்க முடிகிறது. உள்ளிருக்கும் காசியை வெளியிலிருக்கும் காசியானது இந்த அஞ்ஞான மயமான மனதிற்கு காட்டிக் கொடுக்கிறது. என்ன இந்த காசி இப்படி இருக்கிறதே என்று மனம் ஒன்றும் தெரியாது விழிக்கிறது. பிறகு, அதுவும் மறைகிறது. கடைசியில் இருக்கும் ஒரே விஷயம் காசி என்கிற ஆத்மாவாகிறது. 

இப்படியாக காசியை ஞானத்தின் ஊற்று கொப்பளிக்கும் இடமாகவே ஆதிசங்கரர் உணர்ந்தார். காசி க்ஷேத்ரத்தையே சரீரமாகக் கொண்டால், உபநிஷதம் கூறும் மகாவாக்கியப் பொருளை கூறியபடியே ஓடும் ஞானதாரையே கங்கை என்கிறார். குருவிடம் ஏற்படும் பக்தியும் சிரத்தையுமே கயை ஆகும். அந்த குருவின் சரணத்தை தியானிப்பதே பிரயாகம். அப்பேற்பட்ட ஞானியின் உள்ளுக்குள் ஒளிரும் துரீய வஸ்துவே விஸ்வநாதர் ஆவார் என்று ஆசார்யர் அனுபவிக்கிறார்.

ஒருநாள் சங்கரர் ஸ்நானத்தை முடித்துவிட்டு மணிகர்ணிகையிலிருந்து அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நான்கு நாய்களோடு ஒரு சண்டாளன் எதிரே வந்து கொண்டிருந்தான். நல்ல உயரம். பெரிய உருவம். ஆனால், மலர்ந்த கண்கள். எதையும் ஊடுருவிப் பார்க்கும் தன்மை.

சட்டென்று சங்கரர் இவனைக் கண்டவுடன் ஆச்சரியமானார். அந்தப் பாதையில் நான்கு பேர்கள் சேர்ந்தாற்போல செல்ல முடியாது. ஆனாலும், சண்டாளன் சங்கரருக்கு வழிவிடாது மறித்து நின்றான். ஆசார்யாள் ஊடுருவினார். இந்தச் சமயத்தில் முன்னே நகர்ந்து செல்ல எத்தனித்த ஒரு பிராமணர் சண்டாளனை நோக்கி, அடேய்... நகர்ந்து கொள் என்றார்.

அந்தச் சண்டாளனோ எவ்வித தயக்கமுமின்றி அந்தப் பிராமணனை ஒரு பார்வை பார்த்து, சங்கரரை நோக்கி பேசத் தொடங்கினான். ‘‘நான் சண்டாளன் என்கிற அபிமானம் எனக்கு இல்லை. ஆனால், உனக்கோ நான் பிராமணன் எனும் அகங்காரம் உள்ளது. எதை நகரச் சொல்கிறாய். சரீரத்தையா? அது பஞ்ச பௌதீகமானது. அது வெறும் ஜடமானது. என்னைத்தான் எனில், நான் நித்ய சுத்த புத்த முக்த ஆத்மாவே ஆவேன். நான் ஏகமாக எல்லோரிடத்தினுள்ளும் உள்ளேன்.

 எதை நகரச் சொல்கிறாய். உருவத்தை வைத்து சண்டாளன் என்கிறாயே. எனக்கு இந்த உருவத்தின் மீது அபிமானம் இல்லை. நான் இந்த தேகம் என்கிற தேகாபிமானம் இல்லை. அப்படிப் பார்த்தால் தேகாபிமானத்தோடு இருப்பதுதான் சண்டாளத் தன்மையாகும்’’ என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு அவர்களை கடந்து சென்றான்.

ஆதிசங்கரர் அப்படியே நிச்சலமாக திகைத்து நின்றார். சிறிது நாட்கள் கழித்து வந்தவன் சண்டாளனோ, சிவனோ அவனே தத்துவத்தை உணர்ந்த குரு ஆவான் என்று எழுதினார். மனீஷா பஞ்சகம், கங்காஷ்டம் என்று பக்தியையும் ஞானத்தையும் பிழிந்தெடுத்து ஸ்லோகங்களாக்கினார். தினமும் தனக்கு அன்புடன் அன்ன பிட்சையிட்ட மூதாட்டியை சாட்சாத் அந்த அன்னபூரணியாகவே நினைத்து அன்னபூர்ணாஸ்தவத்தை இயற்றினார்.

ஒருமுறை சநந்தனன் எனும் சிஷ்யனை நோக்கி, ‘‘சநந்தனா... முன்பொரு காலத்தில் காசியில் பஞ்சமும் பட்டினியுமாக எல்லோரும் அவஸ்தைக்குள்ளாயினர். அப்போது பரமேஸ்வரியே தேஜோ மயமான பெண்மணியாகத் தோன்றினாள். பசியால் வாடியவர்களுக்கெல்லாம் அன்னமளித்தாள்.

அப்போது காசியை ஆண்ட அரசன் அவளை நமஸ்கரித்து தாங்கள் எப்போதும் இங்கேயே நித்திய வாசம் புரிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதன்படியே அந்த தயாரூபிணி தன்னுடைய உருவத்தை விடுத்து தன்னுடைய பலமான சாந்நித்தியத்தை நிலைநாட்டினாள். அங்கிருந்து காஞ்சியை அடைந்து ஏகம்ப வனத்தில் தவமியற்றி அருணாசலம் சென்று அசல வடிவமான அருணாசலத்தோடு ஒன்றினாள்’’ என்று ஆச்சரியமாக விளக்கினார்.

குமரகுருபரர் 

காசிக்குச் சென்று தனது ஜெயக்கொடியை பறக்க விட்டு வந்த தமிழகத்து ஞானியரில் முக்கியமானவர் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள். நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முகசிகாமணிக் கவிராயருக்கும், சிவகாமி அம்மைக்கும் மகனாகப் பிறந்தார். திருச்செந்தூர் செந்திலாண்டவன் அருளால் பிறந்த குழந்தை ஐந்து வயது வரையில் பேசாமல் இருந்தது. முருகனின் விபூதி இலை பிரசாதத்தை பெற்று பேசும் திறனை பெற்றார். பிறகு திருமலைநாயக்கர் ஆட்சிக் காலத்தில் அவரின் புகழ் நானிலமும் பரவியது. 

மாசிலாமணி தேசிக சுவாமிகளை குருவாக வரித்தார். அவரின் அருளாணைக்கு உட்பட்டு காசிக்குச் சென்றார். காடு, மலைகளையெல்லாம் அசாதாரணமாக கடந்தார் குமரகுருபரர். திருவேங்கடமலை வாழ் மக்களுக்கு தொல்லை கொடுத்த சிங்கத்தை தன் தவவலிமையால் அடக்கினார். மெதுவாக காசியை அடைந்தார்.

 அப்போது காசியை ஆண்ட பாதுஷா இவரின் ஆற்றலை உணர்ந்தார். காசியில் கருடன் வட்டமிடும் இடங்களை சுவாமிகளின் சமயப் பணிகளுக்கே அளிப்பதாய்ச் சொன்னார். ஏனெனில், காசியில் பூ மணக்காது. பிணம் நாறாது. கருடன் வட்டமிடாது என்பார்கள். ஆனால், பாதுஷாவின் வாக்குறுதியை நிரூபிக்க சுவாமிகளின் மகிமையால் கருடன் ஓர் இடத்தை வட்டமிட்டுக் காண்பித்தது.

அங்கேயே ஸ்ரீகுமாரசாமி மடம் என்கிற பெயரில் திருமடத்தை நிறுவினார். அப்போதுதான் இந்துஸ்தானியில் புலமை வேண்டி சகலகலாவல்லி மாலை பாடி இந்துஸ்தானியில் பேசும் திறனைப் பெற்றார்.

காசி கலம்பகம் என்கிற அற்புதமான நூலை இயற்றினார். கங்கைக் கரையிலுள்ள பழுதடைந்திருந்த கேதாரீஸ்வரர் கோயிலை தென்னிந்திய முறைப்படி செப்பனிட்டு கும்பாபிஷேகம் செய்வித்தார். இன்றும் கேதார் காட் அருகேயே கேதாரீஸ்வரர் கோயில் உள்ளது.

இது திருப்பனந்தாள் காசி மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குருநாதரின் ஆணைக்கேற்ப காசியிலிலேயே கொஞ்சகாலம் இருந்தார். பின்னர் தமது சீடர்களுள் ஒருவரான சொக்கநாதரை தன் வாரிசாக நியமித்தார். முதல் ஐந்து பரம்பரையில் வந்தவர்கள் காசிலேயே இருந்தார்கள். பின்னர்தான் திருப்பனந்தாளில் காசிமடம் ஸ்தாபிக்கப்பட்டது.

புத்தர்

பகவான் புத்தர் ஞானமடைந்தபோது அதாவது மெய்யறிவு பெற்றபோது அதை முதன் முதலாக யாருக்கு உபதேசம் செய்யலாம் என்றும், தன்னுடைய உபதேசத்தை சரியான சுவீகரிப்பவர் யார் என்பதையும் ஆராயலானார். அப்போது உத்ரகர் என்னும் முனிவர்தான் தன்னுடைய தர்மோபதேசத்தை தெரிந்து கொள்ளக் கூடியவர் என்று நினைத்தார். ஆனால், நேற்று இரவே அவர் இறந்த விஷயத்தை ஞானக் கண்ணினால் அறிந்தார். பின்னர் வேறு யாருக்கு உபதேசத்தை கூறலாம் என்று சிந்தித்தபோது ஐந்து தாபசரகர்கள் நினைவுக்கு வந்தது.

அவர்கள் தற்போது காசியில் இருப்பதை அறிந்து ஒரு பௌர்ணமி தினத்தன்று காசியை அடைந்தார். பூரண ஞான சொரூபமும் சாந்தமும் மிக்க புத்தபகவான் கங்கையின் கரையில் நடக்கலானார். காசியிலுள்ள இஸிபதனம் எனுமிடத்தில் அவர்கள் இருப்பதாக தெரிந்தது. கங்கையின் பிரவாகத்தை கண்டார்.

மாலை வேளையில் பகவான் புத்தர் இஸிபதனம் எனும் தோட்டத்திற்குச் சென்றார். முதலில் அந்த சீடர்கள் புத்தர் வரும்போது மரியாதை செலுத்தக் கூடாது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஆனால், அவர் அருகே வந்தபோது தங்களை மீறி அவர்கள் எழுந்து சென்று வரவேற்றனர். ஆசனம் கொடுத்து அமரச் சொன்னார்கள். கை, கால்களை கழுவிக் கொள்ள நீரைக் கொடுத்தார்கள்.

 இப்படியாக அவர்களிடத்தில் மெல்ல புத்தர் பேசத் தொடங்கினார். ‘‘பிக்குகளே, செவி கொடுத்துக் கேளுங்கள். பிறவாதநிலை கைவரப் பெற்றேன். உங்களுக்கு தர்மத்தை உபதேசிப்பேன். உயர்குடிப் பிறந்தவர்கள் எதை அடைவதற்காக இல்லறத்தை விட்டு துறவு பூண்டு தவம் செய்கிறார்களோ அந்த பரிசுத்தமான உயர்ந்த வாழ்க்கையை நீங்கள் அடைவீர்கள். அந்த வழியை போதிக்கிறேன் வாருங்கள்’’ என்று கூறினார்.  

கங்கைக்கு தங்க முலாம் பூசியதுபோல காசி ஜொலித்தது. இஸிபதனம் என்கிற மான்கள் நிறைந்த அந்த வனம் அமைதியாகவும், அழகாகவும் விளங்கிற்று. கொண்டஞ்ஞர், பத்தியர், வப்பர், மகாநாமர், அஸ்ஸஜி என்கிற ஐந்து முனிவர்களும் தமது ஆசிரமத்திற்கு வெளியே வந்து அமர்ந்தார்கள். பகவான் புத்தர் அவர்களுக்கு எதிரே ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தார். தேவர்களும், பிரமர்களும், யட்சர்களும் அவ்விடம் வந்து சூட்சுமமாக அமர்ந்தார்கள்.

பறவைகளும் விலங்குகளும் தத்தம் ஓசையை அடக்கிக் கொண்டு பகவான் புத்தர் உபதேசிக்கும் இனிய குரலைக் கேட்டன. புத்த பகவான் தம்முடைய முதல் தர்மோபதேசத்தை தொடங்கினார். அந்த காசியின் இஸிபதன வனத்தில் தொடங்கிய அந்தத் தொடக்கம் இன்று பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்கிறது. புத்தரின் போதனைகள் இன்றும் கங்கையில் தனிச் சுழிப்போடு சுழன்று கொண்டிருக்கின்றன. புண்ணிய பூமியில் புனித மகானான புத்தரின் சரணங்களை தியானித்திருப்பதே புத்தனை அறிவதின் தொடக்கமாகும். கங்கை அதை சாத்தியமாக்குவாள்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

காசியின் அடிப்படை விஷயமே இத்தலத்தில் இறப்போர்களின் ஜீவன் மோட்சமடைவதுதான். சாட்சாத் விஸ்வநாதரே அந்த ஜீவனின் காதுகளில் தாரக மந்திரத்தை ஓதி ஜீவனை மோட்சத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த விஷயத்தைத்தான் புராணங்களும் கூறுகின்றன.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தானே அதை நேரே கண்டதாகக் கூறுகின்றார். இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாமுமே வேதங்களும், வேதாந்தங்களும் கூறும் உண்மையை அப்படியே ஏற்றுக் கொண்டு நடப்பதேயாகும். ஏனெனில், வேத, வேதாந்தங்களெல்லாம் ஞானிகளின் சுய அனுபூதியும் அவர்களால் தரிசிக்கப்பட்டதுமே ஆகும். அதில் சொல்லப்பட்ட எந்த விஷயமானாலும் அதை நிரூபணம் செய்வதற்கென்று ஒரு மகானின் அவதாரம் நடக்கும்.
 
அது தலபுராணங்களாக இருந்தாலும் அப்படித்தான். பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தீர்த்த யாத்திரையின்போது தமக்கு ஏற்பட்ட விசேஷ நிலைகளையும் உணர்வுகளையும் பக்தர்களுக்கு கூறியிருக்கிறார். தீர்த்த யாத்திரைக்காக ஸ்ரீராமகிருஷ்ணர் மதுர்பாபு எனும் சீடரோடு புறப்பட்டார்.

காசிக்கு வந்ததும் முதலில் பிராமண பண்டிதர்களுக்கு மதுர்பாபு உணவளித்தார். பிறகு ஒருநாள் அவர்களை குடும்பத்துடன் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். அதில் ஒவ்வொருவருக்கும் அன்பளிப்பாக ஒரு துணியும் ஒரு ரூபாயும் கொடுக்கப்பட்டது. குருதேவர் விரும்பியபடியே மதுர்பாபு கல்பதருவைப் போன்று நடந்து கொண்டார்.

அதாவது, பாத்திரங்கள், துணிமணி, போர்வை, செருப்பு என்று யார் எதைக் கேட்டாலும் கொடுத்தார். விருந்தளித்த அன்று பிராமணர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அடிதடிவரை சென்றுவிட்டனர். அதைக் கண்ட குருதேவருக்கு ஒரே வெறுப்பாகிவிட்டது. மற்ற இடங்களைப்போலவே காசியிலும் மக்கள் பெண் மற்றும் பொன்னாசைகளில் உழல்வதைக் கண்ட அவர் அன்னை பராசக்தியிடம், முறையிட்டார்.

காசியில் வசிக்கும் மக்கள்கூட உலகியலில் உழல்வது கண்டு குருதேவர் வேதனை கொண் டாலும், அங்கு பெற்ற அசாதாரணமான தெய்வீகக் காட்சிகளும் அனுபவங்களும் சிவபெருமானின் மகிமையும் காசியின் பெருமையும் அவர் உள்ளத்தில் ஆழப் பதிந்தன. படகில் வந்து இறங்கியதிலிருந்தே சிவபுரியாகிய காசி பொன்னால் ஆக்கப்பட்டுள்ளதைத் தமது அகக் காட்சியில் கண்டார். குருதேவர் அங்கு கல்லோ மண்ணோ எதுவும் இல்லை.

எல்லாமே பொன்மயம். காலங்காலமாக இந்த நகரத்திற்கு வந்து கொண்டிருக்கின்ற கணக்கற்ற பக்தர்களின் பொன்னிகர் தெய்வீகப் பேருணர்வுகள் செறிந்து, திரண்டு, ஒருங்கிணைந்து அப்படியே இறுகி அந்த நகரமாகிவிட்டதுபோல் தோன்றியது.

அந்தப் பொன்னிறப் பேரொளி வடிவமே வாரணாசியின் உண்மையான தோற்றம். புறக் கண்களால் நாம் காண்பது அதன் நிழல் மட்டுமே. இது மனிதனால் உருவாக்கப்பட்டதே அல்ல. எளியோருக்குப் புகலிடமும் வாடுவோர்க்கு வள்ளலும் ஆகிய ஸ்ரீவிஸ்வநாதரின் அளப்பற்ற கருணையினால் மட்டும் உருவாகியது.

அங்குள்ள பூரண சக்தி அல்லவா பூரணி என்ற பெயரில் நிரந்தரமாக அங்கே உறைகிறாள். உணவளிப்பதன் மூலம் அவர்களின் மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய சரீரங்களையும் வளர்த்து அவர்களை விரைவாக முக்திப் பாதையில் கூட்டிச் சென்று ஸ்ரீவிஸ்வநாதருடன் ஒன்றுபடுகின்ற நிலையை வழங்குகிறாள்.

ஸ்ரீராமகிருஷ்ணர் இங்கு வந்தவுடனேயே தெய்வீகமான பொன்மயமான உணர்வுப் பேரலைகள் இந்த சிவபுரி முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பதைக் கண்டார். எங்கும் காணினும் பேரலைகள் திரண்டு இந்த நகரத்தைப் பொன்மயப் பேரொளியில் குழைத்திருப்பதைக் கண்டார். 

இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒளிபொருந்திய அனைத்தும் சத்வ குணத்தினின்று தோன்றியவை. புனிதமானவை. ஒளிதான் பொருட்களைக் காண வைக்கிறது. அதனால்தான் ஒளி, ஜோதி எல்லாம் நமக்குப் புனிதமானது.

தெய்வத்திற்கு முன்பாக தீபம் ஏற்ற வேண்டும். அது அணைந்து விடலாகாது என்றெல்லாம் சாஸ்திரங்கள் கூறுவதிலிருந்து நாம் இதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தக் கருத்தை ஒட்டியே நாம் பொன் போன்று ஒளிர்கின்ற பொருட்களை புனிதமானவையாகக் கருதுகிறோம்.

காசியை பொன்மயமாகக் கண்டதால் அங்கு இயற்கைக் கடன்களை கூட கழிக்கக் கூடாது. புனிதம் கெட்டு விடும் என்கிற எண்ணம் கொண்டிருந்தார். காசியில் தாம் கண்ட மற்றோர் அற்புதமான காட்சியைப் பற்றியும் குருதேவர் கூறுகிறார்.

கங்கைக் கரையில் அமைந்துள்ள மணிகர்ணிகை முதலான ஐந்து புனித இடங்களைப் படகில் சென்று தரிசிப்பது வழக்கம். மதுர்பாபுவும் படகு ஒன்றை அமர்த்திக்கொண்டு குருதேவருடன் சென்றார். மணிகர்ணிகையின் அருகில்தான் காசியின் முக்கிய மயானம் உள்ளது. குருதேவர் சென்ற படகு மணிகர்ணிகைக்கு அருகே சென்றபோது அந்தச் சுடுகாடு சிதைகளிலிருந்து எழுந்த புகையால் மூடப்பட்டது போலிருந்தது. உணர்வுமயமாக இருந்த குருதேவர் அந்தப்பக்கம் பார்த்ததுமே ஆனந்தப் பரவச நிலையை அடைந்தார்.

அவருக்கு மயிர்க் கூச்செறிந்தது. திடீரென எழுந்து படகின் ஓரத்திற்கு ஓடினார். ஓடியவர் அங்கேயே அசைவற்று நின்று சமாதியில் மூழ்கிவிட்டார். எங்கே அவர் கங்கையில் விழுந்து விடுவாரோ என்று அஞ்சிய படகோட்டியும் மதுர்பாபுவின் சேவகனும் அவரைப் பிடித்துக் கொள்வதற்காக ஓடினர்.

ஆனால், யாரும் குருதேவரைப் பிடித்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படவில்லை. குருதேவர் அப்படியே சிறிதும் அசைவின்றி நின்று கொண்டிருந்தார். அவரது திருமுகத்தில் அரும்பிய தெய்வீகப் புன்னகையும் அற்புதப் பேரொளியும் அந்த இடம் முழுவதையும் ஒளிவெள்ளத்தில் ஆழ்த்துவது போலிருந்தது.

மதுர்பாபுவும் மற்றொருவரான ஹிருதயரும் அவர் அருகில் சென்று எச்சரிக்கையாக நின்றனர். படகோட்டிகளும் சிறிது தூரத்தில் நின்றவாறே குருதேவரின் இந்த அற்புத நிலையை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் குருதேவர் சாதாரண நிலைக்கு வந்தார். பின்னர் அனைவரும் மணிகர்ணிகைத் துறையில் இறங்கி குளித்து தாங்கள் செய்ய வந்த சடங்குகளைச் செய்துவிட்டு படகில் ஏறி வேறு இடத்திற்குச் சென்றனர். குருதேவர் தாம் கண்ட அற்புதக் காட்சியைப்பற்றி, மதுர்பாபுவிடமும் பிறரிடம் பின்வருமாறு கூறினார்.

‘‘உயரமான ஒரு வெண்ணிற மனிதர் மஞ்சள் நிற சடைமுடியுடன் கம்பீரமாக நடந்து, அங்கே எரிந்து கொண்டிருந்த சிதைகள் ஒவ்வொன்றின் அருகிலும் சென்றார். அந்த உயிரை எழுப்பினார். அதன் செவியில் தாரக பிரம்ம மந்திரத்தை (ராம... ராம...) ஓதினார். சர்வ வல்லமை பொருந்திய மகாசக்தி, மகாகாளியின் உருவத்தில் சிதையின் மறுபக்கத்தில் அமர்ந்து அந்த உயிர்களைப் பிணைத்திருக்கும் தூல, சூட்சும, காரண சம்ஸ்கார வடிவ பந்தங்களை எல்லாம் நீக்கினாள்.

தன் கைகளினாலேயே முக்தியின் வாசலைத் திறந்து, அந்த உயிர்களை அகண்ட சச்சிதானந்தப் பொருளில் ஒன்றச் செய்தாள். காலங்காலமாக யோகமும் தவமும் செய்து அடையக்கூடிய அத்வைத அனுபவத்தின் பேரானந்தத்தை ஸ்ரீவிஸ்வநாதர் இவ்வாறு அந்த உயிர்களுக்கு அங்கேயே அப்போதே வழங்கியதை நான் கண்டேன்’’மதுர்பாபுவுடன் இருந்த பண்டிதர்கள் குருதேவரின் தெய்வீகக் காட்சியைக் கேள்விப்பட்டு கூறினர்:

இங்கே இறப்பவர்களுக்கு விஸ்வநாதர் முக்தி அளிப்பதாக காசிக் கண்டத்தில் பொதுவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் எவ்வாறு இதனைச் செய்கிறார் என்பது விளக்கமாக கூறப்படவில்லை. உங்கள் காட்சியிலிருந்து அதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

உங்கள் காட்சி சாஸ்திரங்கள் கூறியவற்றையும் மிஞ்சி விட்டது என்றனர். குருதேவரான ஸ்ரீராமகிருஷ்ணர் காசியில் தங்கியிருந்தபோது அங்குள்ள புகழ்பெற்ற சாதுக்கள் பலரை சந்தித்தார். அவர்களுள் ஒருவர் த்ரைலிங்க சுவாமிகள் அவரைக் கண்டதில் குருதேவர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். சுவாமிகளைப்பற்றி அவ்வப்போது பல விஷயங்களை குருதேவர் கூறுவார்.

‘‘சாட்சாத் விஸ்வநாதரே அவரது உடலில் உறைந்து பிரகாசித்துக் கொண்டிருந்தார். சுவாமிகள் இருப்பதால் காசி நகரமே உயிர்த்துடிப்புடன் மிளிர்ந்தது. மிக உயர்ந்த ஞானநிலையில் உள்ளவர் அவர். உடலுணர்வு என்பது சிறிதும் இருக்கவில்லை. கால் வைக்கவே முடியாதபடி வெயிலில் சூடேறிக் கொதிக்கின்ற மணலில் அவர் சுகமாகப் படுத்திருப்பார். ஒருநாள் நான் பாயசம் செய்து கொண்டுபோய் அவருக்குக் கொடுத்தேன். அந்த நாட்களில் அவர் பேசுவதில்லை.

மௌன விரதம் பூண்டிருந்தார். நான் சைகையின் மூலம், ‘‘கடவுள் ஒருவரா அல்லது பலரா?’’ என்று அவரிடம் கேட்டேன். அவரும் சைகை மூலம், ‘‘சமாதி நிலையில் ஒருவராக காண்கிறோம். நான், நீ, உயிர், உலகம் போன்ற பலவாகக் காணும்போது கடவுளும் பலரே’’ என்றார். அவரைக் காட்டி ஹிருதயனிடம் இதுதான் உண்மையான பரமஹம்ஸ நிலை என்றேன்.

சில நாட்கள் காசியில் தங்கியபின் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பிருந்தாவனத்திற்கு சென்றார். பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தரும் காசிக்கு வந்தார். அவரும் காசியின் பிரமாண்ட ஞானமயமான பேருணர்வை கண்டார். அவரும் த்ரைலிங்க சுவாமிகளை தரிசித்துவிட்டுச் சென்றார்.

கபீர்தாசர்

வாரணாசி அளித்த மகத்தான ஞானியருள் கபீர்தாசர் முக்கியமானவர். கங்கையின் காற்றை சுவாசித்தும், ராம கங்கையை பருகியும், உன்மத்த நிலையிலேயே காசியில் திரிந்தவர். ஈசன் எந்த தாரக மந்திரத்தை எல்லோருக்கும் அங்கு உபதேசித்தாரோ அதையேதான் இவரும் அளித்தார். அத்வைத அனுபூதியில் திளைத்தாலும் ராமநாம ருசி இவரை விடவேயில்லை. ராமனும் நாமமும் ஒன்றே என்றார். எல்லோரும் ராமநாம நாமத்தை சொல்லுங்கள்.

யார் ராம நாமத்தைச் சொல்லுகிறார்களோ அவர்கள் செருப்புக்கு என் தோலைத் தருகிறேன் என்றெல்லாமும் பேசியிருக்கிறார். என் ராமன். என் நாயகன். நான் அவனோடு கலந்து விட்டவன் என்றெல்லாமும் பேசியிருக்கிறார். ராமானந்தர் என்கிற குரு மூலம் ராமநாம தீட்சை வாங்கவேண்டுமென அதிகாலையிலேயே கங்கைக் கரைக்கு வந்துவிடுவார்.

மெல்ல அவர் நிற்கும் பாறைக்கு அடியிலேயே அமர்ந்து கொண்டார். அந்த காரிருளில் அவரின் திருவடியானது தன்னுடைய தலைமீது படும்போது அவர் ராம... ராம... என்றார். அதையே உபதேசமாகவும் அவரையே குருவாகவும் வரித்துக் கொண்டார். கபீர்தாசர் காசியில் வாழ்ந்த உலகறிந்த மாபெரும் ஞானி. அவரின் பாடல்கள் உயர்ந்த ஞானநிலையை வெளிப்படுத்தக் கூடியவை. 

மகாகவி பாரதியார்

‘‘இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே’’ - மகாகவி பாரதியார் கங்கையை குறித்து பாடிய வரிகள் இவை. அது 1898ம் வருடம். பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமானார்.

வறுமைக்குள் குடும்பம் தள்ளப்பட்டது. காசியிலிருந்த அத்தை குப்பம்மாளும், அவரது கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைத்தனர். காசி-கங்கை அவரின் உள்ளத்தில் இனந்தெரியாத உவகையையும் தெய்வீகத்தையும் வளர்த்தது. ஹிந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார்.

கங்கையின் பிரவாகத்தை விழிவிரிய பார்த்துக் கொண்டிருப்பார். சாதுக் களையும், விதம்விதமான மக்களையும் கவனித்துக் கொண்டே இருப்பார். பாரதியின் பாண்டியத்தை காசிப் பண்டிதர்கள் அப்போதே வியந்தனர்.

தன்னுடைய 16 வயதிலிருந்து 21 வயதுவரை அவர் காசிவாசியாக இருந்தார். கொஞ்சகாலம் பள்ளியொன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். பண்டிதர்களிடையே பாரதியார் எப்போதுமே தீவிரமாக விவாதிப்பாராம். பாரதியார் தன் உடையிலும், தோற்றத்திலும் ஒரு மாற்றத்தை உருவாக்கிக் கொண்டது காசியால்தான். கங்கையின் கம்பீரமே அவரின் தோற்றத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது.

கங்கைச் சாரலில் அமர்ந்து ஷெல்லி, கீட்ஸ் என்று பல கவிதைகளை வாசித்தபடி இருப்பாராம். அவர் ஆற்ற வேண்டிய மகத்தான காரியங்களுக்கான சில காரியங்களை காசி விஸ்வநாதர் அவருக்குள் விதையாக விதைத்தார். மகத்தான காரியங்கள் ஆற்ற வேண்டுமென்று இருப்போரை காசி தன்னகத்தில் கொஞ்ச காலம் வைத்திருந்து அனுப்புவதை ஆன்றோர்களின் வாழ்க்கையில் காணலாம்.

காசி யாத்திரை என்பதே ஞான யாத்திரைதான். ஸ்ரீராமகிருஷ்ணர் யாருக்காவது அருள வேண்டுமென்று நினைத்தால், ‘‘அந்தப் பக்கம் போகும்போது அவரை இங்க அடிக்கடி வரச்சொல்லேன்’’ என்பார்.

அப்படி அவர் சொல்லும் நபர் ஆன்மிகத்தில் தீவிரமுள்ளவராக இருக்க மாட்டார். ஆனால், இவர் கண்ணில் பட்டவர் பட்டவர்தான். அது புலிவாயில் ஆடு மாட்டிக்கொண்ட கதைதான். காசிக்கு ஒருமுறை சென்றாலே மீண்டும் மீண்டும் தன் பக்கம் இழுக்கும் வலிமை கொண்டது.

காசி புறத்தோற்றத்தில் அழுக்கடைந்து இருக்கலாம். ஆனால், அவற்றுக்குள் பேரழகான அந்தர்முகமான ராஜ்ஜியம் உள்ளது. அது நம்முடைய அக அழுக்குகளை அழித்து சித்த சுத்தியை தருகிறது. கங்கை எங்கோ உற்பத்தியாகிறாள். எப்படியெல்லாமோ பல பிரதேசங்களை தாண்டி வருகிறாள்.

ஆனால், அவள் நின்று நிதானமாக விளையாட விரும்பும் பூமி காசியே ஆகும். பகீரதனின் பணியை காசியில்தான் கங்கை உணருகிறாள். காசி என்பது கங்கையின் அரங்கேற்ற மேடை. கங்கையின் லீலா பூமியே காசி. மகான்களின் மகத்துவ முகத்தை காசியே வெளிப்படுத்துகிறது.

‘‘ஆன்மிகத்தில் எதுவுமே தெரியாது. எந்த தேடலும் இல்லை. கடவுள் தேடல் போன்றவற்றை கேள்வியுற்றது கூட இல்லை’’ என்று சொல்வோரைக் கூட கொதிக்க வைக்கும் தீவிரத் தேடலில் காசி செலுத்தும்.

இதெல்லாம் வெற்று வார்த்தைகள் இல்லை. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலத்திற்கும், புண்ணிய பூமிக்கும் குறிப்பிட்ட குணங்கள் உண்டு. சில விதைகள் மக்கியிருந்தாலும் முளைக்க வைத்துவிடும் மகத்தான மண்ணைக் கொண்டிருக்கும்.

அதுபோன்று காசி ஞானமயமான சத்வ பூமி. ஆன்மிகவாதியோ, லௌகீக மனிதரோ, நாத்திகவாதியோ யார் சென்றாலும் அந்த பூமியின் வாசத்தால் சத்வ குணம் பெருகும். சரியான நேரத்தில் இறையை நோக்கியும், தன்னையறிதல் எனும் ஞான யோகத்தின் பாதையிலும் திரும்புவர்.

இந்த காசி க்ஷேத்ரம் இதெல்லாம் செய்யும் என்பதையே அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் சிறிது காலம் தேவை. ஆனால், சிலருக்கு அந்தக் கால அவகாசத்தை கூட காசியும் கங்கையும் அளிப்பதில்லை. சட்டென்று தீபத்தை ஏற்றி விடுகிறது.

- கிருஷ்ணா