அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்



வெள்ளம் பிளந்து வழி பெற்ற அருளாளர்கள்

மதுரை ஆலவாய் அண்ணல் சொக்கநாதப்பெருமான் ஆலயம், அன்று மகத்தான வரலாற்று நிகழ்வு ஒன்றினைப் பதிவு செய்யும் திருநாளாகப் பரிணமித்துக் கொண்டிருந்தது. பாண்டிய நாட்டு மக்கள், பக்திப் பரவசத்துடன் இந்த வரலாற்றுப் பெருமித உணர்விலும் திளைத்துக் கொண்டிருந்தனர். ஆலயத்திற்கு மன்னர் எப்போது வருகை தந்தாலும், அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளித்தே வேதியர்கள் வரவேற்பு நல்குவது வழக்கம். ஆனால், அன்று அவ்வழக்கத்தை மாற்றியமைத்தார், வரகுண (முதல்) பாண்டியர்.

‘‘இன்று நம் நான்மாடக்கூடல் நகருக்கு அருளாளர் ஆலால சுந்தரமூர்த்திப் பெருமான் வருகை புரிகிறார். அவரோடு சேரமான் பெருமாக்கோதை அவர்களும் இணைந்து வருகிறார். சிவபக்திச் செம்மல்களான இவ்விருவருக்குமே இன்று பூரணகும்ப மரியாதை அளிக்கப்படவேண்டும்,” என்பது வேந்தரின் கட்டளையாக இருந்தது. அந்தணர்களும் அவ்வாறே செய்தனர்.

வெண்கொற்றக் குடையின் கீழ் நம்பிஆரூரரும் சேரமான் பெருமாளும் இணைந்து நடந்து வர, அரச குல மங்கையர்கள் மலர் தூவ, ஒருபுறம் வரகுணபாண்டியரும், இன்னொருபுறம் சோழ இளவரன் ஸ்ரீநீலகண்டனும் பக்திப் பெருக்குடன் சிவநேயச் செல்வர்களை அழைத்து வந்தனர்.

மேளதாள வாத்திய முழக்கங்களுக்கும் குறைவில்லை.
ஆலய வழிபாடு சிறப்புற நடைபெற்றது. சுந்தரருடன்
மூவேந்தரும் சொக்கநாதப் பெருமான்
ஆலயத்திற்கு வந்து வழிபட்ட இவ்வரலாற்று
நிகழ்வினை பெரிய புராணத்தில் சேக்கிழார்
பெருமான் இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

‘‘சேரமான் தோழரும் அச்சேரபிரானும்  பணிப்பூண்
ஆரமாப்பரை மதுரை ஆலவாயினில், வணங்க
வாரமா வந்தனைய வழுதியர் மனக்காதல்
கூரமா நகர் கோடித் தெதிர் கொண்டு
கொடு புக்கார்
தென்னவர்கோன் மகளாரைத்
திருவேட்டு முன்னரே

தொன்மதுரை நகரின் கண்
இனிதிருந்த சோழனார்
அன்னவர்கள் உடன் கூட
அணய அவருங்கூடி
மன்னுதிரு ஆலவாய் மணிக்கோயில் வந்தணைந்தார்’’

(கழறிற்றறிவார் நாயனார் புராணம் 91-92).மூவேந்தரும் உடன் வர, நம்பியாரூரர் திருவாலவாய் அண்ணலைத் தரிசித்தபின், திருப்பரங் குன்றம், திருப்பூவனம், திருவாப்பனூர், திருவேடகம் முதலாய திருத்தலங்களைச் சென்று தரிசித்தனர். மதுரை அரண்மனையில் தங்கியிருந்தவாறே சேரமானும் நம்பியாரூரரும் இத்திருத்தலங்களுக்குச் சென்று வந்ததால், நாள் தோறும் இவர்களுடன் வரகுணபாண்டியரும் ஸ்ரீநீலகண்ட சோழனும் இணைந்தே சிவதரிசனம் காணச் சென்று வந்தனர்.

(இந்த வரலாற்று நிகழ்வு, நின்ற சீர் நெடுமாறனான  அரிகேசரி மாறவர்மன் மற்றும் அவன் மகன் கோச்சடையன் ரணதீரன் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்று சிலர் எழுதியுள்ளனர். அரிகேசரி காலத்தில் திருஞான சம்பந்தர் வாழ்ந்தார் என்பதே உண்மை. அடுத்த நூற்றாண்டின் இறுதியிலேயே நம்பியாரூரர் வரலாறு அமைகிறது என்பது பிற்கால ஆய்வுகளால் தெளிந்த முடிவு. முதலாம் வரகுணபாண்டியன், சோழ இளவரசியை மணந்திருந்தான்.

அந்த உரிமையில் சோழ இளவரசன் ஸ்ரீநீலகண்டன் எனப்படும் ஸ்ரீகண்ட சோழன், மூத்த சகோதரி வீட்டில் வந்து தங்கியிருந்தான். பின்னர் இவன், தனது அக்காள் மகளான பாண்டிய இளவரசியை மணந்து வாழ்ந்தான்.)சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் பாண்டிய நாட்டில் வேறு சில திருத்தலங்களுக்குச் செல்ல விரும்பியதால், மதுரையில் வரகுண பாண்டியரிடமும் அவருடைய மருகரான ஸ்ரீகண்ட சோழனிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டனர்.

அவ்விருவரும் பாண்டிய நாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றிற்கும் சென்று தரிசனம் செய்ய, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான் பாண்டிய மன்னன். ஆங்காங்கே உள்ள மண்டலத் தலைவர்களுக்குத் தகவல் அனுப்பி, அவ்விருவரையும் வரவேற்று உபசரிக்க ஆணை பிறப்பித்தான்.நம்பியாரூரரும் சேரமான் பெருமாக்கோதையும் திருக்குற்றாலம், திருநெல்வேலி, திருஆவினங்குடி ஆகிய பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர்.

(பழனி முருகன் ஆலயத்தைப் புதுப்பித்து, அழகு படுத்தினார் சேரமான் பெருமாள் என்றும் வரலாற்றுக் குறிப்பு உண்டு.) திருச்சுழியல், திருக்கானப்பேர் (காளையார் கோவில்) ஆகிய ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டனர். ஆங்காங்கே பதிகங்களும் பாடினர்.

தென்பாண்டித் திருத்தலங்கள் பலவும் தரிசித்தபோது, திருவிராமேச்சுரம் ஆலயத்திற்கும் சென்று வழிபட்டனர். அங்கிருந்தவாறே சுந்தரமூர்த்தி நாயனார், ஈழநாட்டு மாதோட்டத் திருக்கேதீச்சுரநாதர் மீது அரிய திருப்பதிகம் பாடித் தொழுதார். மேலும் பல தலங்களைத் தரிசித்தவாறே அவ்விருவரும் சோழ நாடு திரும்பினர்.

மீண்டும் திருவாரூரில் சில நாட்கள் தங்கி, பரவை நாச்சியாரின் அன்பு உபசரிப்பில் அகமகிழ்ந்த சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி நாயனாரிடம் ‘‘ஐயனே! உமது தேமதுரத் தேவாரத் தமிழ் கேட்டுச் சிவபெருமானே சொக்கி நிற்கிறார் என்பதை அவரே உணர்த்த, உம்மைத் தரிசிக்கும் பேரவா கொண்டே நான் இங்கு வந்தேன். உம்மால் சோழ தேச, பாண்டிய தேச அரனாலயங்கள் பலவும் தரிசித்து மகிழ்ந்தேன்.

‘‘தம்பிரான் தோழர்’’ என்று உம்மை உலகோர் புகழ்கின்றனர். ஈசனைத் தோழமை பாவனை கொண்டு வழிபட்டு, அவனருள் பெற்று வாழும் உமது திவ்யசரிதம், மக்களால் மெய்சிலிர்ப்புடன் பேசப்படுகிறது.

அத்தகு கீர்த்தி வாய்ந்த சுந்தரரின் தோழன் என்று நாளை என் வரலாறும் பேசப்படவேண்டும் என்பது என் அவா. நீர் அவசியம் எம்முடன் சேர தேசம் வர வேண்டும். திருவஞ்சைக் களத்து எம்பிரானை உமது திருவாயால் பதிகம் பாடி மகிழ்விக்க வேண்டும். மகோதையபுரம் அரண்மனையில் எம்மோடு சில நாட்களேனும் தங்கி, எளியேனுடைய அன்பு உபசரிப்பை ஏற்றருள வேண்டும்...’’ என வேண்டினார்.

‘‘சேர மன்னா! உமது சிவபக்தி மகத்தானது. நீர் எளிமைக்கே ஓர் உதாரண புருஷராகப் பணிவு சிறக்கப் பேசினாலும், உமது அருள் வல்லபம் சாதாரண ஒன்றல்ல என்பதை நான் உணர்கிறேன். நான் ஈசனிடம் ‘‘பொன்னைக் கொடு, பொருளைக் கொடு எனக் கேட்டுத் தொல்லை செய்பவன்.

ஆனால் நீரோ, ‘‘பெருமானே! எனக்கு முன்னால் ஆடிக்காட்டுங்கள்’’ என்கிறீர். அவரும் ‘தாம்... தை... தக...திமி...’ என்று ஆடி, பாத மணிச்சரங்களின் ஓசையை உம் செவிகளில் விழச் செய்கிறார்.

இது எவருக்கு வாய்க்கும்...? உண்மையில் நான்தான் உம்மை என் நண்பர் எனக் கூறுவதில் பெருமைப்பட வேண்டும். ‘சேரமான் தோழன்’ என இந்த நம்பியாரூரன் வரலாறு நாளை எழுதப்பட வேண்டும் என்பதே என் அவா. உமது அழைப்பை ஏற்று, மகிழ்வுடன் வருகிறேன் மகோதயப் பட்டினத்திற்கு...’’ என்றார் சுந்தரர்.

இருவரும் புறப்பட்டு, காவிரியின் தென்கரை வழியாகச் சில சிவாலயங்களைத் தரிசித்தபடி திருக்கண்டியூரை அடைந்தனர். வடகரையில் உள்ள திருவையாறு செல்வது அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஆனால், காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. எப்படி மறுகரையை அடைவது? சாதாரண நாட்களில் ஓடங்கள், பரிசல்கள் மூலம் காவிரியைக் கடப்பதுண்டுதான். ஆனால், கடுமையான வெள்ளப் பெருக்கில் வேகமும் சுழிப்புகளும் அதிகம். அது போன்ற தருணங்களில் சில நாட்கள் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். ஓடங்கள் ஓடாது.

சுந்தரர் காவிரியின் கரையில் வந்து நின்று, மறு கரையில் தென்பட்ட ஐயாறப்பன் ஆலயத்தை நோக்கி, ‘‘இறைவா, சேரமான் பெருமான் மீதும் என் மீதும் இரக்கம் காட்டுங்கள். இந்த வெள்ளத்தை உடனே கடக்க ஒரு வழியும் புலப்படவில்லை...

என்றவாறே ‘எதிர்த்து நீந்த மாட்டேனான் எம்மான் தம்மான் தம்மானே’ என்றொரு பதிகம் பாடினார். சுந்தரரின் சுந்தரத் தமிழ் கேட்டு, காவிரி வெள்ளம் பிளவுற்று வழி புலப்பட்டது. இதைக் கண்ணுற்ற மக்கள், ‘சிவாய நம... சிவாய நம...’ என பஞ்சாட்சரம் ஓதிப் பரவசமுற்றனர்.

கரைநெடுக சோழ தேச மக்கள் இவ்வதிசயம் காணக் கூடிவிட்டனர். சுந்தரர் இரு கரம் கூப்பி ஐயாறப்பனைத் தொழுதவாறே காவிரியில் வெள்ளம் ஒதுங்கி வழிவிட்ட வெற்றிடத்தில் இறங்கி நடக்கலானார்.

அவர் பின்னே சேரமான் பெருமாக்கோதையாரும் கூப்பிய கரத்துடன் இறங்கி நடந்தார். அவ்விருவரும் நடக்க நடக்க நதி ஒதுங்கி வழிவிட்டது. முன்னே நதி விலகி வழிவிடுவதும், அவர்கள் நடந்த மறுகணம் பின்னால் கூடி வழக்கம் போல் விரைந்து ஓடுவதுமான அக்காட்சியைக் கண்ணுற்ற மக்கள் மெய் சிலிர்த்துப் போயினர்.

சேரமானும் சுந்தரரும் ஐயாறப்பனையும் அறம் வளர்த்த நாயகியையும் தரிசித்து மகிழ்ந்தனர். திருநாவுக்கரசருக்கு அரன் கயிலைத் திருக்காட்சியை அங்கேயே நல்கிய விருத்தாந்தத்தை சுந்தரர் விவரிக்க, சேரமான் செவிமடுத்து, நெஞ்சம் நெகிழ்ந்தார். பிறகு மேலும் பல ஆலயங்களைத் தரிசித்த வண்ணம் இருவரும் கொங்குதேசம் வழியே மலைநாடு சென்று சேர்ந்தனர்.

மகோதையப் பட்டினம் திருவிழாக்கோலம் பூண்டு இவ்விரு சிவச்செல்வர்களையும் கோலாகலக் கொண்டாட்டங்களுடன் வரவேற்று மகிழ்ந்தது. திருவஞ்சைக்களத்து
நீலகண்ட மகாதேவர் ஆலயம் சென்று வணங்கிய சுந்தரர், அஞ்சைக் களத்து அப்பனைப் போற்றி, ‘முடிப்பது கங்கை’ என்றொரு பதிகம் பாடிப் பரவினார்.

தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னேசடை மேற்கங்கை
வெள்ளம் தவித்ததென்னே அலைக்கும் புலித்தோல் கொண்டசைத்த தென்னே
அதன்மேற் கதநாகம் கச்சார்ந்ததென்னே
மலைக்கு நிகராய் பனவன் திரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் மொழிலஞ் சைக்களத்தப்பனே...

இப்படித் தொடங்கி நம்பியாரூரர் பாடப்பாட, பெருமாக்கோதையார் தாம் ஒரு மாமன்னர் என்பதையே மறந்து, கண்கள் நீரருவிகளாய் மாறிப் பொழிய, நெக்குருகி, நெஞ்சம் நெகிழ்ந்து நின்றார். சுந்தரர் மீது தாம் கொண்டிருக்கும் பேரன்பை - பெருமதிப்பை எவ்வாறு புலப்படுத்துவது என்று யோசித்த அவர், பட்டத்து யானையைக் கொண்டு வரச் செய்து, அதன்மீது சுந்தரரை ஏற்றித் தாம் கவரி வீசியவாறு நகருலாவாக அரண்மனைக்கு அழைத்து வந்தார். அங்கே பூரணகும்ப மரியாதைகள் அளிக்கப்பெற்றன. ராஜ மாளிகைக்குள் அவரை அழைத்துச் சென்ற சேரவேந்தர், தமது அரியணையில் சுந்தரரை அமரச் செய்து, பாத பூஜை செய்ய ஆயத்தமானார்.

பணிப்பெண்கள் ஒரு பெரிய பொற்தாலத்தை எடுத்து வந்து வைத்தனர். இன்னும் பல பொற் தாலங்களில் வித விதமான மலர்கள் கொண்டு வரப் பெற்றன. பன்னீர்க்கலசங்கள், பொற்கெண்டிகள், சந்தனக் கிண்ணங்கள், மஞ்சள் கலந்த அட்சதைக் கிண்ணங்கள் கொண்டுவரப் பெற்றன. இளம் பெண்கள் குத்துவிளக்குகளை ஏற்றிக் கொண்டு வந்து வரிசை வரிசையாக வைத்தனர். சேரமாதேவி ஒரு பொற்கலசம் ஏந்தி வந்து நின்றாள்.

‘‘சேர வேந்தே! இதெல்லாம் என்ன...? இங்கே ஏதும் சிறப்பு வழிபாடு நடைபெறப்போகிறதா?’’ என்று வினவினார் சுந்தரர்.‘‘ஆம், சிறப்பு வழிபாடுதான். தம்பிரான் தோழரான நம்பியாரூரருக்குப் பாத பூஜை நிகழ்த்தப்போகிறான் இந்த சேர வேந்தன். தாங்கள் பாதங்களை இந்தப் பொற்தாலத்தில் எடுத்து வையுங்கள்...’’ என்றவாறே அருகில் வந்து, மண்டியிட்டுக் கீழே அமர்ந்த பெருமாக்கோதை, சுந்தரரின் பாத கமலங்களைப் பற்றப் போனார்.

அவ்வளவில் துள்ளியெழுந்த நம்பியாரூரர், ‘‘சேரமன்னா! இது மிக அதிகம் மட்டுமல்ல, அநீதமும் கூட. நாடாளும் வேந்தன் ஒரு நாடோடியான என் பாதங்களை நீராட்டி வழிபடுவதா? நான் அவ்வளவு உயர்ந்தவனல்ல. பட்டத்து யானைமீது அமரச் செய்து, நகருலா வரச்செய்தீர், மகிழ்ந்தேன். அதற்கே என் உள்ளம் கூசுகிறது.

 பார்புகழும் வேந்தன், ஒரு சாதாரணனான என் பாதங்களைக் கழுவுவதும் பூஜிப்பதும் உசிதமல்ல. உலகோர் தூற்றுவர். அருள்கூர்ந்து என்னை விட்டு விடும். அதெல்லாம் வேண்டாம். வந்து இப்படி என்னருகே அமரும். நாம் உரையாடி மகிழ்வோம்’’ என்றார்.

‘‘பெருமானே! தமக்கு பாத பூஜை செய்யும் பாக்கியத்தை எமக்கு அருள்வீர்! அதில் பிழையொன்றுமில்லை. அன்பினால் செய்யப்படும் மரியாதைகளை மறுத்தல் கூடாது. உம்மை ‘இரண்டாம் சிவம்’ என ஆன்றோர் உலகு போற்றிக் கொண்டாடுகிறது. சிவபக்தியில் நான் உம்மை என் மானசீக ஆசானாக எண்ணுகிறேன்.

ஆசானுக்கு பாத பூஜை செய்தல் தொன்று தொட்டு வரும் மரபு தான். அமருங்கள். பாத பூஜை முடிந்ததும் அறுசுவை விருந்து காத்திருக்கிறது. எளிய முறையில், நான் விரைந்து முடிப்பேன் இப்பூஜையை...’’ என வற்புறுத்தினார், பெருமாக்கோதை.

சேரமானின் அன்பு ஆணையை மீறமுடியாமல் அரியணையில் மீண்டும் அமர்ந்து, பொற்தாலத்தில் பாதங்களைத் தூக்கி வைத்தார் சுந்தரர். அப்பாதங்களில் சேர ராணி நீர் வார்க்க, சேரவேந்தர் தம் கரங்களால் கழுவினார்.

பிறகு பட்டு வஸ்திரத்தால் துடைத்து, பன்னீர் தெளித்து, சந்தனம் பூசி, மலர் தூவி வழிபட்டார். அந்த மலைநாட்டு வழிபாடுகள், சம்பிரதாயங்கள் எல்லாமே உயர்ந்த பக்தி பூர்வமானதாக இருப்பதைக் கண்டு வியந்தும், உடல் கூசியும், உளம் நெகிழ்ந்தும் மகிழ்ச்சிப் பரவசரானார் சுந்தரர். பிறகு ஈசன் மீது தாம் பாடிய பல பதிகங்களை அங்கு பாடி அவையோரை
மகிழ்வித்தார்.

மகோதைய மாநகரில், சேரமான் அரண்மனையில் பல நாட்கள் தங்கியிருந்த சுந்தரர், அனுதினமும் திருவஞ்சைக்கள நாதரைத் தரிசித்து மகிழ்ந்தார். சேரமானுக்கும் சுந்தரருக்கும்
சிவபெருமானின் அருள் வல்லப லீலைகளைப் பேசி மகிழ்வதிலேயே பொழுது கழிந்தது. பல நாட்கள் சென்ற பின் சுந்தரருக்குத் திருவாரூர் திரும்பும் அவா எழுந்தது.

 ‘‘சேரமன்னா! அங்கே பரவை நங்கை தனிமையில் வாடுவாள். எனக்கும் கமலாலயத் திருக்குளத்தில் நீராடி, செங்கழுநீர் மலர்களைப் பறித்துச் சென்று தியாகேசப் பெருமானை வழிபட்டு மகிழும் ஆவல் அதிகரிக்கிறது. எனக்கு விடை கொடுங்கள். நான் புறப்படுகிறேன்’’ என்றார்.

சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரரைப் பிரிய மனமின்றி, மனம் உருகிக் கண்ணீர் மல்கினார். பிறகு, ‘‘தாங்கள் எனக்கொரு வாக்கு அளித்தால், இன்றே சோழ தேசம் புறப்படலாம். நான் தடுக்க மாட்டேன்’’ என்றார்.

‘‘புறப்படுகிறேன்’’ என்று உரைத்தபோதெல்லாம், ‘‘பொறுங்கள். நாளை இது பற்றிப் பேசுவோம்’’ என்றே சொல்லிச் சொல்லி நாட்கள் பல கடத்திய சேரமான் அன்றேனும் அந்த அளவில், தாம் புறப்பட இசைவு தெரிவித்துப் பேசுகிறாரே என்றெண்ணி மகிழ்ந்த நம்பியாரூரர்.

‘‘சொல்லுங்கள் சேரவேந்தே! நான் தங்களுக்கு என்ன வாக்களிக்க வேண்டும்?’’ என வினவினார்.‘‘வேறு ஒன்றுமில்லை. தாங்கள் திரும்ப ஒரு முறை இதே போன்று இங்கு வந்து, என்னுடன் பல நாட்கள் அவசியம் தங்கியிருக்க வேண்டும்.

இது வெறும் உபசாரப் பேச்சில்லை. அரன் பேரால் ஒரு ஒப்பந்தம் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... சம்மதம்தானே?’’ என்றார் சேரமான்.‘‘சேர மன்னா, இதை மகிழ்வுடன் ஏற்கிறேன். என் மனம் திருவாரூரில் எந்த அளவு பதிந்திருக்கிறதோ, அதே அளவு இந்த திருவஞ்சைக்களத்திலும் பதிந்திருக்கிறது.

இது ஒரு முனை. இதன் மறுமுனை அது. இந்த இரண்டிற்கும் நடுவேதான் இனி என் ஜீவ யாத்திரை. இன்று திருவாரூர் புறப்படுகிறேன். இன்னொருநாள் திருவஞ்சைக்களம் வருவேன். இதற்கு திருவஞ்சைக்கள நாதரே சாட்சி. புறப்பட அனுமதி தாருங்கள்!’’ என்றார் சுந்தரர்.அனுமதி மட்டுமல்ல! ஏராள வெகுமதிகளும் தந்து அனுப்பினார் சேரமான். பணியாட்கள்,

 பல்லக்கு, பொற்குவியல் மூட்டைகளைச் சுமந்த புரவிகள், வழிப்பயணத்தில் ஆகார வசதிகள் செய்து தரப் பரிசாரகர்கள் என ஒரு பெரிய ராஜ யாத்திரை போல ஏற்பாடுகள் செய்து வழியனுப்பினார் சேரமான்.திருவாரூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, கொங்கு மண்டலத் தில், திருமுருகன்பூண்டி அருகே ஒரு சோதனை காத்திருந்தது. சேரமான் அளித்த செல்வங்கள் அனைத்தும் அங்கே வன வேடர்களால் வழிப்பறி செய்யப்பட்டன.

(தொடரும்)