கவலை தீர்ந்த கங்கை!



காசியிலே கங்கை புனிதமான நதி.
தீபாவளித் திருநாளிலே காசியில்
கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரையும்,

அன்னபூரணியையும் தரிசித்தால் அதைப் போன்ற புண்ணியம் வேறு எதுவுமில்லை.ஒரு மகான் காசியில் கங்கையில் நீராடி ஈசனையும், அம்பாளையும் தரிசிக்க கங்கைக் கரைக்கு வந்தார். கங்கை அற்புதமாக கரை புரண்டு ஓடுவதைக் கண்டார். அப்படியே மெய்மறந்து நின்றார். ஆனால், கங்கைக் கரையின் ஒருபுறத்தில் சாக்கடை நீர் வந்து கலப்பதையும் அவர் பார்த்துவிட்டார். அவருக்கு அருவறுப்பாக இருந்தது. ஆகவே, அவர் கங்கையில் நீராடும் எண்ணத்தை கைவிட்டு, வந்த வழியே திரும்பிப்போக ஆரம்பித்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கங்கை ஒரு சாதாரணப் பெண்ணைப் போன்று உருமாறி அவர் முன்னே வந்து நின்றாள். “சுவாமி, தாங்கள் கங்கைக்கரைக்கு வந்துவிட்டு, நீராடாமல் திரும்பிப் போகிறீர்களே? ஏன்?’’ என்று கேட்டாள்.

“பெண்ணே, ஏற்கனவே கங்கை பலருடைய பாவங்களைச் சுமந்துகொண்டு ஓடுகிறாள். போதாக்குறைக்கு இந்த கழிவு நீரையும் கலந்துவிட்டு கங்கையை பாழ்படுத்துகின்றனர். ஆகவே, அருவறுக்கத்தக்க பாவங்களை சுமந்துசெல்லும் இந்த கங்கையில் குளித்தால், பாவம் தீராது. மாறாக மேலும், பாவம்தான் சேரும். எனக்கு நீராட மனம் வரவில்லை. திரும்பிச் செல்கிறேன்’’ என்று கூறிவிட்டு சென்றார்.

இதைக் கேட்ட கங்கைக்கு தூக்கிவாரிப் போட்டது. “நான் ஒவ்வொரு விநாடியும் இமயமலையிலிருந்து புதிய நீரைக்கொண்டு வந்து, பாவங்கள் நிறைந்த பழைய நீரை அடித்துச்சென்று கடலில் கலந்து விடுகிறேனே, அப்படியிருக்க எந்த வகையிலே நான் பாவத்தைச் சுமந்தவளாக இருப்பேன்?’’ என்று மனம் நொந்துபோய் பரமேஸ்வரனிடத்திலே இதற்கு விளக்கம் கேட்டாள்.

பார்த்தார் பரமேஸ்வரன். இதே சந்தேகம் பூமியில் வாழும் அத்தனை பேருக்கும் இருக்கிறது. இதை தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கிலே, கங்கையைப் பார்த்து சமுத்திர ராஜனிடம் இதே கேள்வியைக் கேட்கச் சொன்னார்.

சமுத்திரராஜனிடம் சென்று கங்கை தனது சந்தேகத்தை கேட்டாள். சமுத்திரராஜனோ, “தேவி கங்கையிடமிருந்து என்னுடன் வந்து கலக்கும் நீரோடு வரும் பாவங்கள் என்னிடம் தங்குவதில்லை. அவற்றையெல்லாம் சூரியபகவான் ஆவியாகக்கொண்டு சென்று விடுகிறார். எனவே என்னிடம் நீராடுபவர்களை பாவம் ஒருபோதும் சேராது’’ என்று கூறிவிட்டார்.

தேவி சூரியபகவானை சந்தித்து கேட்டாள். “தாயே! அந்தப் பாவங்களுக்கும் எனக்கும் சம்பந்த மில்லை. நான் ஆவியாகக் கொண்டு வருவதை மேகங்கள் ஆர்வத்தோடு உறிஞ்சிக் குடிக்கின்றன. என்னைப் பொருத்தவரை நான் கொண்டு வந்ததை அப்படியே கொடுத்து விடுகிறேன். கொடுக்கல்,  வாங்கல் என்பதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது’’ என்று கூறிவிட்டார்.

உடனே மேகங்களைப் பார்த்து “ஓ, மேகங்களே இப்படி அவமானத்தைப் பொருட்படுத்தாமல் பாவங்களை சுமந்துகொண்டு திரிகிறீர்களே.

உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’’ என்று கேட்டாள் கங்கை. மேகங்கள் சிரித்துக்கொண்டே கூறின: “தேவி! நாங்கள் பாவத்தை வைத்துக்கொள்வதில்லை. வருணபகவான் குளிர்ந்த காற்றை எங்கள் மீது ஏவிவிட்டால், நாங்கள் மழையாகப் பூமியிலேயே பொழிந்து விடுகிறோம். நாங்கள் சுமந்துவரும் பாவங்களை பூமாதேவியிடமே திருப்பித்தந்து விடுகிறோம். எங்கள் கடமையை மக்களுக்காக நாங்கள் செய்துவிடுகிறோம்.’’

கங்கைக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னுடன் வந்து கலக்கும் பாவங்களை எவ்வாறுதான் போக்குவது என்று புரியாத குழப்பத்தில் அவள் பூமாதேவியை அணுகினாள். பூமாதேவியோ ரத்தினச்சுருக்கமாக பதில் சொன்னாள்:

 “கங்கையே மக்கள் தங்கள்  கர்ம வினைகளுக்கேற்ப பாவங்களை அனுபவிக்கின்றனர். அனுபவித்துவிட்டு அதை என் மீதே போட்டு விடுகின்றனர். ஏற்கனவே பாவச் சுமைகளை தாங்காத நான் அவற்றையெல்லாம் கங்கையாகிய உன்னிடம்தான் கொண்டு சென்று கலக்கச் செய்கிறேன். இது என்னுடைய தர்மம். அதையே செய்கிறேன்’’ என்றாள்.

குழம்பிப் போன கங்கை இதற்கு ஈசன்தான் முடிவு செய்ய வேண்டும். வேறு வழியில்லை என்று கருதி கடைசியாக ஈசனிடம் சென்று சரணாகதி அடைந்தாள்.ஈசன் சிரித்துக்கொண்டே சொன்னார், “கங்கையே! மக்கள் செய்யும் பாவங்கள் எல்லாம் சக்கரம்போல் சுழன்று பூமாதேவியையும், உன்னையுமே வந்தடைகின்றன. உங்களுடைய இந்த துன்பங்களிலிருந்து உங்களுக்கு விமோசனம் தரக்கூடியவர்கள் உண்மையான உத்தமமான மகான்கள்தான்.

 மகான்களுக்கு உள்ள மகிமை அலாதியானது. அவர்கள் எந்த நேரமும் இறையுணர்வுடனேயே இருப்பவர்கள். அவர்களுக்கு இறைவனைத் தவிர வேறு எதுவுமே தேவையில்லை. உண்மையான மகாத்மாக்கள் அவர்கள். சிந்திப்பது, பேசுவது, செயல்படுவது, உண்பது, உறங்குவது என்று எந்தச் செயலை செய்தாலும் அவர்களிடம் திகழும் தெய்வீகம் காரணமாக பூமாதேவியின் மீதும் உன் மீதும் சுமத்தப்பட்ட பாவங்கள் குறைக்கப்படுகின்றன.

அதாவது, உத்தமமான மகான்கள் எப்போது கங்கையில் வந்து நீராடிவிட்டு செல்கிறார் களோ அப்போதே உன்மீதுள்ள பாவங்கள் கழிந்து விடுகின்றன. அவர்களின் பாதம் உன்மீது பட்ட மாத்திரத்திலேயே நெருப்புசுட்ட  சருகுபோல பாவங்கள் பொசுங்கி, சாம்பலாகிக் கரைந்து போகின்றன.

மகான்கள் வந்து நீராடும்போது உன்னிடம் சேர்ந்துள்ள மக்களின் பாவங்களிலிருந்து நீ விடுவிக்கப்படுகிறாய்; புனிதமடைகிறாய்,’’என்று ஈசன் விளக்கமளித்து, கங்கை எப்போதுமே புண்ணிய நதிதான் என்பதை தெளிவுபடுத்தினார்.ஆகவே கங்கையானவள் எப்போதும் தன்னிடம் நீராட மகான்கள் வருவார்களா? என்று எதிர்நோக்கியே இருக்கிறாள்.

முடியாத பட்சத்தில் அவளே மகான்களைத் தேடிப்போய் தன் பாவத்தை அவர்களிடம் இறக்கி, அவைகளை சாம்பலாக்கி விட்டு வருகிறாள்.ஆக கங்கை எப்பொழுதும் புனிதமானதுதான். அது தொடர்ந்து புனிதமாக இருக்க மகான்கள் நீராட வேண்டும். நீங்களும் நானும் நீராடினால் பாவம் சேரும். மகான்கள் நீராடினால் அந்தப் பாவங்கள் கங்கை நீரில் கரைந்தோடிவிடும்.

- ராமசுப்பு