கந்தசஷ்டி பன்னிரண்டு நாட்கள்



பொதுவாக முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்களே நடக்கும். ஆனால், திருச்செந்தூர் பாலசுப்பிரமணியன் கோயிலில் 12 நாட்கள் நடத்துகின்றனர். முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதமும், சூரசம்ஹாரமும், 7ம்நாளில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த ஐந்து நாட்கள் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என்று கொண்டாடுகிறார்கள்.

இத்தல மேற்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள ராஜகோபுரம் கந்தசஷ்டி அன்று முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் மட்டுமே திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் திறக்கப்படுவதில்லை.

கந்தசஷ்டியில் ஐந்து அலங்காரம் காணும் முருகன்திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம்-செங்கோட்டை வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது இலஞ்சி. வரதராஜகுமாரன் எனும் திருப்பெயர் கொண்டு இங்கு அருளாட்சி புரிந்து வரும் முருகப்பெருமான் மூன்று முனிவர்களுக்கு அருள்பாலித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழாவின்போது முருகப்பெருமான் ஐந்து அலங்காரங்களில் எழிலுடன் காணப்பெறுகிறார். முதல்நாள் படைக்கும் தொழில் புரியும் பிரம்மனாக, இரண்டாம் நாள் காக்கும் தொழில் புரியும் விஷ்ணுவாக, மூன்றாம் நாளில் அழித்தல் தொழில் புரியும் சிவனாக, நான்காம் நாள் மறைத்தல் தொழில் புரியும் மகேஸ்வரனாக, ஐந்தாம் நாள் அருள்புரியும் சதாசிவனாக அலங்கரிக்கப்படுகிறார்.

நள்ளிரவில் சூரசம்ஹாரம்நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முருகப்பெருமான் குன்றின்மேல் அமராமல், குன்றுக்குள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுந்தரவல்லி,
அமிர்தவல்லியோடு சுப்ரமணியசுவாமியாக நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருளாட்சி புரிகிறார். அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டியில் சூரசம்ஹாரம்  மாலை வேளையில் நடந்து முடிந்து விடும்.

ஆனால், இங்கு மட்டும் சூரசம்ஹாரம் இரவு பன்னிரண்டு மணிக்கு நடக்கிறது. அப்போது சூரபத்மனின் தம்பி தாரகாசுரனிடம் முதலில் வீரபாகு குதிரையில் சென்று போரிடுவதும், அவரால் முடியாத பட்சத்தில் முருகப்பெருமான் சென்று தாரகாசுரனை வதைப்பதாலும், நள்ளிரவுவரை போகிறது நிகழ்ச்சி!

மூன்று முறை சூரசம்ஹாரம்


மதுரை திருப்பரங்குன்றத்தில் அருள்புரியும் சுப்ரமணியசுவாமி கோயிலில் மட்டும் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. ஐப்பசியில் கந்தசஷ்டி திருவிழாவின்போது ஒருமுறை, தை மாதம் தெப்பத் திருவிழாவின்போது ஒருமுறை, பங்குனி மாத விழாவின் போது ஒரு முறை.

ஐப்பசி பவுர்ணமி அபிஷேகம்காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்போரூர் கந்தசாமி கோயிலில் முருகன் சுயம்பு மூர்த்தியாய் தோன்றினார். முருகனின் 300 பெயர்கள் பொறிக்கப்பட்ட சுப்பிரமணியர் யந்திரம் இங்கு சிதம்பரசுவாமிகள் எனும் மகானால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

 பிரதான பூஜை இந்த யந்திரத்திற்கும் ஆலய அர்ச்சகர்களால் செய்யப்படுகிறது. இத்தலத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப்பெருமான் அருள்கிறார். ஐப்பசிமாத பவுர்ணமி அன்று சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்துவார்கள். அதே போன்று அன்று அன்னாபிஷேகத்தை இத்தல
கந்தசாமிக்கும் நடத்துகிறார்கள்.

அதிசயக் காற்று தமிழகத்தில் பெரிய கோபுரங்களுடன் அமைந்த தலங்களில் ஒன்று தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம். பாண்டிய மன்னன் இங்கு 9 நிலைகளுடன் கூடிய கோபுரத்தை அமைத்தான். பொதுவாக காற்று ஏதேனும் ஒரு திசையை நோக்கியே வீசும். ஆனால், இந்த கோபுரத்திற்கு கீழே, சுமார் 5 அடி தூரத்திற்குள் எதிரெதிராக வீசுகிறது. கோபுரத்திற்குள் நுழையும்போது காற்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும், கோபுரத்தைக் கடந்ததும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் காற்று வீசும் அற்புதம் நிகழ்கிறது.