தெளிவு பெறும் ஓம்



கணவன்-மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்க வேண்டும்?

?ஜனன ஜாதகத்தைக் கொண்டும், நடப்பு கிரஹ நிலையைக் கொண்டும் இதுதான் நடக்கப் போகிறது என்பதைத் தெளிவாகக் கூறும் ஜோதிடர் அதற்குரிய பரிகாரத்தையும் சொல்கிறார். பரிகாரம் செய்வதால் கிரஹ நிலைதான் மாறிவிடுமா? அப்படி பரிகாரம் செய்வதால் கிரஹங்கள் தரும் பலன்களை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும் என்றால் எல்லோருமே தங்களுக்குத் தேவையானவற்றை பரிகாரங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமே! உலகத்தில் சிரமம் என்பதே இருக்காதே, உண்மையில் இது சாத்தியமா?
- மணிகண்டன், பெங்களூர்.

இந்த சந்தேகம் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்திருக்கிறது. பரிகாரம் என்றால் என்ன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆன்மிக ரீதியாகவும், ஜோதிட
ரீதியாகவும் இந்தக் கேள்விக்கான பதிலைக் காண்போம்.  இன்றைய சூழலில் அவரவர் ஜாதகங்கள் ஆராயப்பட்டு நவகிரஹங்களின் சஞ்சார நிலையை வைத்து பெரும்பாலான பரிகாரங்கள் சொல்லப்படுகின்றன. நவகிரஹங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக அந்தந்த கிரஹங்களுக்குரிய திருத்தலங்களை நாடி சென்று கொண்டிருக்கிறோம்.

உண்மையில் அக்காலத்தில் ஆலயங்களை எழுப்பும்போது நவகிரஹங்களுக்கு என உருவ வழிபாடோ சந்நதிகளோ அமைக்கப்படவில்லை என்பதை முதலில் அறியவேண்டும். கடந்த 200 ஆண்டுகளாகத்தான் சிவாலயங்களில் நவகிரஹங்கள்பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்துகொண்டிருக்கிறது. இறைவன் இட்ட பணிகளைச் செய்யும் பணியாட்களே நவகிரஹங்கள், பலன்களை மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

உதாரணத்திற்குச் சொல்லவேண்டும் என்றால் நியாய அநியாயங்களை அறிந்து தீர்ப்பு வழங்கும் நீதிபதி எம்பெருமான்; அதை நிறைவேற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களே நவகிரஹங்கள். ஒருவன் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டும் என்பது தீர்ப்பு ஆயின் செவ்வாய், சனி, ராகு முதலான கிரஹங்கள் அப்பணியைச் செய்பவர்கள்.

 அவனது ஜாதகத்தில் இந்தக் கோள்கள் கெடுபலனைத் தரக்கூடிய இடங்களில் வலிமையாக அமர்ந்திருந்தால் அம்மனிதனை அடித்து, கைகளில் விலங்கிட்டு தெருவில் இழுத்துச் செல்வார்கள். அவமானப்பட வேண்டிய நிலை உண்டாகும். எந்தக் கோளின் தாக்கம் அதிகமாக உள்ளதோ அதற்குரிய பரிகாரத்தைச் செய்வதன் மூலம் அந்நிலை உண்டாகாது, சப்தமில்லாமல் யாருக்கும் தெரியாமல் வாகனத்தில் அழைத்துச்சென்று ‘ஏ’ கிளாஸ் சிறைச்சாலையில் அடைப்பார்கள்.

அவ்வளவுதான், ஆகமொத்தம் சிறைக்குச் செல்வது செல்வதுதான், நீதிபதியின் ஆணையை மாற்ற அவர்களால் இயலாது. அதாவது, விதிப்பயனை மாற்ற இயலாது. ஆனால், தீர்ப்பினை மாற்றும் அதிகாரம் நீதிபதியாகிய எம்பெருமானுக்கு மட்டுமே உண்டு. நமது தவறினை உணர்ந்து மானசீகமாக இறைவனைச் சரணடைபவர்களே நற்பலன்களை அடைய முடியும்,
ஜனன ஜாதகத்தின்படி அவரவருக்குரிய தசாபுக்தி காலங்களில் அதற்கென விதிக்கப்பட்ட பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும்.

பூர்வ புண்யத்தின் அடிப்படையில் விதிப்பலன்கள் எழுதப்படுகின்றன. தீயகிரஹங்களின் தசாபுக்தியும், சரியில்லாத கிரஹ நிலையும் நிலவும்போது கெடுபலன்களை அனுபவித்து ஆக வேண்டும் என்பது விதி. இந்த நிலையில் பிறந்த ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானம் வலுவாக இருந்துவிட்டால் அம்மனிதன் செய்யும் பரிகாரங்கள் நிச்சயம் பலிக்கும்.

கெடுபலன்கள் மறைந்து நிச்சயம் நற்பலன்கள் கிடைக்கும். மாறாக பூர்வ புண்ய ஸ்தானம் வலுவற்று இருந்தால் அவன் அனுபவிக்க வேண்டியதை நிச்சயமாக அனுபவித்தே ஆக வேண்டும். அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறையைத் தேடக்கூடாது. பலனை அனுபவிப்பதே அவன் செய்யும் பரிகாரம். மாறாக தப்பிக்கும் வழிமுறையாக பரிகாரங்களைத் தேடத் தொடங்கினால் நல்ல தசாபுக்தி காலத்திலும் நற்பலன்களை அனுபவிக்க இயலாது போய்விடும். கெட்ட நேரத்தில் அவன் கெடுபலன்களை அனுபவித்துவிட்டானேயாகில் நல்ல தசாபுக்தி நடக்கும் காலத்தில் நற்பலன்களையும் அனுபவிப்பான்.

ஐம்பெருங்காப்பியங்களுள் பிரதானமான சிலப்பதிகாரம் நமக்குச் சொல்வது “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’’ என்பதுதானே! ஊழ்வினைப் பயனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பரிகாரங்கள் செய்வதால் கெடுபலன்கள் உண்டாக்கும் தாக்கத்தை வேண்டுமானால் குறைத்துக்கொள்ள முடியும். ஆயினும் அதன் அடிப்படைப் பலனை நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும்.

 ஊழ்வினைப் பயன் என்ற கூற்று உண்மை என்பதை உணர வேண்டும். அதே நேரத்தில் முந்திய ஜென்மத்தைப் பற்றிக் கவலை கொள்ளாது இறைவன் நமக்கு அளித்த வரப்பிரசாதமான இந்த மானுட ஜென்மத்தில் ஒருவருக்கொருவர் துரோகம் இழைக்காமல், தன்னலம் கருதாது வாழ்வோம்.

 நம்மால் இயன்றவரை ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வோம். ஒரு ஜீவனுக்கு ஒருவேளை வயிறார உணவளித்தாலே அவன் அறியாமல் செய்த பாபம் அகலுகிறது என்கிறது தர்ம சாஸ்திரம். மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிப்போம். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்வோம். பொருளாதார ரீதியாக மட்டுமல்ல. படிப்பறிவு உள்ளவர்கள் பாமரனுக்கு படிக்கக் கற்றுக்கொடுக்கலாம்.

அதுவும் ஒருவகையில் பரிகாரமே. பரிகாரம் என்பது செய்த தவறுக்கான பிராயச்சித்தம் அல்ல. விதிப்பயனை மாற்றி அமைக்கும் வழிமுறையும் அல்ல. பரிகாரம் செய்வதால் விதிப்பயனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கிறது. மனம் பக்குவம் அடைந்தாலே துன்பம் என்பது காணாமல் போகிறது.

? ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?
- சீனுவாசன், மணம்பூண்டி.

கூடாது. ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி வந்தால் அதற்கு ‘மலமாஸம்’ என்று பெயர். அதே போல எந்த மாதத்தில் பௌர்ணமி அல்லது அமாவாசை
இல்லையோ அதனை ‘விஷமாஸம்’ என்றழைப்பர். இந்த மாதங்களிலுமே சுபநிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஆனால், சித்திரை, வைகாசி மாதங்களுக்கு இந்த விதி பொருந்தாது. சித்திரையை மேஷ மாதம் என்றும்,

வைகாசியை ரிஷப மாதம் என்றும் அழைப்பர். பௌர்ணமி, அமாவாசை நிகழ்வதற்குக் மூலகாரணமான சூரியன் மேஷத்திலும், சந்திரன் ரிஷபத்திலும் உச்ச பலம் பெறுவதால் மேஷ, ரிஷப மாதம் என்றழைக்கப்படும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களுக்கு தோஷம் இல்லை. இவற்றில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம்.

? பஞ்சாங்கம் தினமும் பார்க்கத்தான் வேண்டுமா?
- கல்யாணசுந்தரம், மதுரை.
தினமும் பார்ப்பதற்குத்தானே பஞ்சாங்கம்!

பஞ்சமம் + அங்கம் = பஞ்சாங்கம். திதி, வாரம் (கிழமை), நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உள்ளடக்கியதுதான் பஞ்சாங்கம். காலையில் எழுந்தவுடன் காலண்டரில் தேதி கிழித்து இன்றைக்கு அஷ்டமி உள்ளதா, நவமி உள்ளதா, என்ன நட்சத்திரம், எத்தனை மணி வரை இருக்கிறது என்பதைப் பார்க்கிறோமே அதுதான் பஞ்சாங்கம் பார்ப்பது. தினசரி காலண்டரில் சாமானிய மனிதருக்கும் புரிகின்ற வகையில் எத்தனை மணி வரை என்ன திதி, என்ன நட்சத்திரம், எவ்வளவு நேரம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டிருப்பர்.

பஞ்சாங்கத்தில் யோகம், கரணம் ஆகிய இரண்டையும் சேர்த்து ஜோதிடர்களுக்கு புரிகின்ற வகையில் குறிப்பிட்டிருப்பர். தினசரி செய்துகொண்டிருக்கும் பணிகளைத் தொடர்வதற்கு பஞ்சாங்கம் பார்க்கத் தேவையில்லை. அதே நேரத்தில் புதிதாக ஒரு செயலைத் தொடங்கும்போதும், புதிய மனிதர்களுக்கு முதன்முதலில் கடன் கொடுக்கும்போதும், அவசர சிகிச்சைகளைத் தவிர்த்து மற்ற சாதாரண அறுவை சிகிச்சைகளுக்கும், புதிய தொழில் தொடங்குவதற்கும் அவசியம் பஞ்சாங்கம் பார்த்து அவரவருக்கு பொருந்துகின்ற நல்ல நாட்களைத் தேர்ந்தெடுத்தல் உத்தமம்.

? கணவன்-மனைவி ஒற்றுமை வளர  எந்த விரதம் இருக்க வேண்டும்?
- வள்ளி செல்வம், சேத்தியாதோப்பு.

கேதார கௌரீ விரதம். சரியான தருணத்தில் கேட்கப்பட்டுள்ள பொருத்தமான கேள்வி. பிரதி வருடம் தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் இது. ஒரு சில குடும்பங்களில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முன்னிட்டு சதுர்த்தசியிலேயே அதாவது, தீபாவளி அன்றே இந்த விரதத்தை கடைபிடிக்கும் பழக்கமும் உள்ளது.

இந்த விரதத்தினை மேற்கொண்டு பார்வதி தேவி, சிவபெருமானின் உடலில் சரிபாகத்தினைப் பெற்றாள் என்று புராணங்கள் சொல்கின்றன. தம்பதியருக்குள் உண்டாகும் கருத்து வேற்றுமைகள் காணாமல் போய் என்றென்றும் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்பதற்காக அம்பிகை நமக்கு அருளியதுதான் இந்த கேதார கௌரீ விரதம்.

ஐப்பசி மாத (தீபாவளி) அமாவாசைக்கு 21 நாட்கள் முன்னதாக இந்த விரதத்தினைத் துவங்கி சரியாக 21வது நாளான அமாவாசை அன்று முடிக்க வேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு நடைமுறையில் இது சாத்தியமில்லை என்பதால் இறுதி நாளான தீபாவளி அமாவாசை நாளன்று 21 என்ற எண்ணிக்கையில் வெற்றிலை,

 பாக்கு, பழம், மஞ்சள், சந்தனவில்லை, விபூதி உருண்டை, அதிரசம், வடை ஆகியவற்றை நோன்புசட்டியில் வைத்து நோன்பு எடுக்கும் பழக்கம் உருவாயிற்று. ஆண்களும், பெண்களும் ஒன்றாக இணைந்து இந்த நோன்பு எடுக்க ஆலயத்திற்குச் செல்வதைக் காணலாம். கௌரீ சமேத கேதாரீஸ்வரராக விளங்கும் அர்த்தநாரீஸ்வரரை நோக்கி மனமுருகி பிரார்த்தனை செய்வதே இந்த கேதார கௌரீ விரதம்.

? தலைதிவசம் கொடுப்பதற்கு முன் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவது சரிதானா?
- ஜெயராமன், சிதம்பரம்.
சரியில்லை. இறந்தவருடைய ஆத்மா பித்ருலோகத்தினைச் சென்றடைய ஒருவருட காலம் பிடிக்கிறது. தாய் அல்லது தந்தை எவரேனும் இறந்துவிட்டால் ஒரு வருட காலத்திற்கு எந்த
சுபநிகழ்ச்சி களையும் செய்வதில்லை.

தீபாவளி, பொங்கல் உள்பட எந்தப் பண்டிகைகளையும் தலைதிவசம் முடியும் வரை கொண்டாடுவதில்லை. இறந்தவர்களின் நினைவாகவே இந்த ஒரு வருட காலமும் இருக்க வேண்டும் என்பதே இதற்குப் பொருள். ஆனால், இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. இறப்பு நிகழ்வதற்கு முன்னரே நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு இந்த விதி பொருந்தாது. அதே போல திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண் பிள்ளைகளுக்கும் தலைதிவசம் கொடுப்பதற்கு முன்பாக திருமணத்தை நடத்தலாம்.

பிரம்மச்சாரியாக இருக்கும் ஒருவனின் தாயோ அல்லது தந்தையோ இறந்துவிட்டால், அவன் திருமணம் செய்துகொண்டு தம்பதியராக இணைந்து தலைதிவசம் கொடுப்பதும் குடும்பத்திற்கு நல்லது. ஆயுஷ்ய ஹோமம், சஷ்டி அப்த பூர்த்தி முதலான சாந்தி கர்மாக்களையும் செய்யலாம்.

இதனைத் தவிர்த்து கிரஹப்ரவேசம், குலதெய்வ வழிபாடு, காதுகுத்தல் உட்பட மற்ற சுபநிகழ்ச்சிகள் அனைத்தையும் தலைதிவசம் முடியும் வரை தவிர்க்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் இறப்பு நிகழ்ந்த 16 நாட்களுக்குள் அதாவது, கரும காரியங்களைச் செய்து முடிக்கும் வரை எந்த ஒரு சுபநிகழ்ச்சியும் பங்காளிகள் உட்பட எவர் வீட்டிலும் செய்யக்கூடாது.

? அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்கிறார்களே
உண்மையா?
- முத்துராமன், அரியாங்குப்பம்.

இது முற்றிலும் தவறான கருத்து. ஸ்ரீஹனுமான் அவதரித்தது மார்கழி மாத அமாவாசையில்தான். பக்தியில் சிறந்தவனும், தலைசிறந்த வீரனுமான ஆஞ்சநேயரை திருடன் என்று சொல்ல முடியுமா? அமாவாசையில் உதித்த உத்தமர்கள் பலபேர் உலகத்தில் உண்டு. பௌர்ணமியில் பிறப்போருக்கு அரசயோகம் கிட்டும் என்ற விதி ஜோதிடத்தில் உள்ளது. ஆகவே அதற்கு நேர் மாறாக அமாவாசையில் பிறப்போர் திருடர்களாக மாறிவிடுவர் என்று நாமாகவே கற்பனை செய்துகொண்ட கருத்து இது. அமாவாசையில் பிறக்காத பலரும் திருடர்களாக இருப்பதையும் காணமுடியும்.

ஒருவனுடைய ஜாதகத்தில் சனி மற்றும் ராகுவின் அமர்வு நிலையே அவனைத் திருடனாகவோ அல்லது கொள்ளைக்காரனாகவோ  மாற்றுகிறது. மாறாக, அமாவாசையில் பிறப்பதற்கும், திருடனாக மாறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

?காசிக்குச் சென்றால் ஏதாவது
விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்வது ஏன்?
- கோபாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி.

பற்று அற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அக்காலத்தில் குடும்பப் பொறுப்பினை நடத்தி முடித்தவர்கள் காசிக்குச் செல்வது வழக்கம். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக பற்றோ அல்லது விருப்பமோ இருக்கக்கூடாது, எதன் மீதும் எந்த ஒரு ஆசையும் இன்றி இறைவன் ஒருவனையே மனதில் சதா தியானித்து இருக்க வேண்டும் என்பதற்காக உண்டான பழக்கம் இது.

பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரன், பேத்தி களைக் கொஞ்சி மகிழ்ந்து தன் இல்வாழ்க்கைக் கடமையைச் செவ்வனே செய்து முடித்தவர்கள் காசி, ராமேஸ்வரம் என தீர்த்த யாத்திரை மேற்கொள்வர். மோட்சகதியை வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்வோர் இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் புண்ணிய நதியாம் கங்கையில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து ஆராதனை செய்வர்.

கங்கையில் ஸ்நானம் செய்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது நம்பிக்கை. கங்கையில் ஸ்நானம் செய்து புதுமனிதனாக வெளிவரும்போது எதன் மீதும் அதிகப் பற்று இருக்கக்கூடாது என்பதற்காக மிகவும் பிரியமான வஸ்துக் களை இனிமேல் உபயோகிப்பதில்லை என விட்டுவிடுவர்.

எனக்குப் பிரியமான கத்தரிக்காயை காசியில் விட்டுவிட்டேன், இனிமேல் சாப்பிட
மாட்டேன் என்று பெருமை பேசுவதால் மட்டும் எந்தப் பலனும் கிடைத்துவிடாது. அதன் உண்மையான பொருளைப் புரிந்துகொண்டு எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழவேண்டும். அவ்வாறு வாழ்பவனுக்கு ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்துவிடும். ‘ஆசை துறந்தால் அகிலம் உனக்கு’ என்ற வைரமுத்துவின் வரிகளை அனுபவத்தில் உணர முடியும்.

?ஆடம்பர பக்தி, எளிய பக்தி இதில் எதைக் கடவுள் விரும்புகிறார்?
- சீனுவாசன், அத்திப்பள்ளி.

உண்மையான பக்தியில் ஏது வேறுபாடு? அனைத்தையும் கடந்தவனே கடவுள். எதையுமே இறைவன் விரும்புவதில்லை. தன்னை நம்புபவர்களை அவன் என்றும் கைவிடுவதுமில்லை. நம்பிக்கையும், சிரத்தையும் மட்டுமே பக்திக்கு முக்கியம். திருமங்கை மன்னன் திருவரங்கத்தானுக்கு திருப்பணி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தான். அதற்காக தன், நாடு, நகரம் அத்தனையும் இழந்து திருடனாக மாறி கொள்ளையடித்தாவது திருப்பணியை செய்து முடிக்க ஆயத்தமானான்.

திருட்டுத் தொழில் செய்தேனும் இறைவனின் திருப்பணியை செவ்வனே செய்து முடிக்க வேண்டும் என்ற அவனது பக்தியும், சிரத்தையுமே அவனை ஆழ்வார்களில் ஒருவராக இடம்பெறச் செய்தது. திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வார் என பெயர் பெற்றார். இதனை ஆடம்பர பக்தி என இறைவன் ஒதுக்கிவிடவில்லை. தன்னிடம் செல்வம் ஏதும் இல்லாத நிலையில் இறைவனுக்கு கோயில் கட்ட நினைத்த பூசலார் நாயனாரின் பக்தியை எண்ணிப் பாருங்கள்.

தன் மனதிற்குள்ளேயே பூமிபூஜை முதல் ராஜகோபுரம் வரை அனைத்தையும் கட்டி முடித்து அதற்கு கும்பாபிஷேகம் செய்யும் நாளையும் குறித்து மனதிற்குள்ளேயே பூஜை செய்த பூசலார் நாயனாரையும் இறைவன் ஏற்றுக் கொண்டார். இதனை எளிய பக்தி என தவிர்த்துவிட முடியுமா? எவன் ஒருவன் நீயே கதி என்று இறைவனைச் சரண் அடைகிறானோ,

 எவன் ஒருவன் இறைவன் மீது முழு நம்பிக்கையையும் வைத்து பக்தி செலுத்துகிறானோ அதையே இறைவன் ஏற்றுக்கொள்கிறார். அவரவர் வசதிக்குத் தக்கவாறு இறைவனுக்குத் தொண்டு செய்கிறார்கள். அனைத்தையும் கடந்த கடவுளுக்கு ஆடம்பர பக்தி, எளிய பக்தி என்ற வேறுபாடு கிடையாது. உண்மையான பக்தியை மட்டுமே கடவுள் விரும்புகிறார்.

? கோயிலில் சிலர் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வழிபடுவது சரிதானா?
- சோலைநாராயணன்,
ஸ்ரீவில்லிபுத்தூர்.

சரியில்லை. வீட்டினில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வழிபடலாம். தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வழிபடுவதற்கு ஆத்மபிரதக்ஷிணம் என்று பெயர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைசக்தி என்பது உண்டு. ஆத்மாவை ஜீவாத்மா, பரமாத்மா, அந்தராத்மா என மூன்றாகப் பிரிப்பார்கள். நமக்குள் உய்யும் இறைசக்திக்கு பரமாத்மா என்று பெயர். நமக்குள் இருக்கும் பரமாத்மாவை எண்ணி வழிபடுவதுதான் ஆத்மபிரதக்ஷிணம் என்றழைக்கப்படும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வழிபடும் முறை.

ஆலயம் என்று வரும்போது அங்கே அமர்ந்து அருள்பாலிக்கின்ற இறைவனைத்தான் வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் எத்தனை பெரிய மனிதரைக் கண்டாலும் சரி, அவர் சாமியாராக இருந்தாலும், சந்நியாசியாக இருந்தாலும் ஆலய வளாகத்திற்குள் அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கக் கூடாது. ஆலய வளாகத்திற்குள் இறைவன் ஒருவனை மட்டுமே விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். பெரிய மனிதர்களுக்கு கைகூப்பி வேண்டு மானால் நமது பணிவினைத் தெரிவிக்கலாம். ஆக கோயிலுக்குள் தன்னைத்தானே சுற்றி வழிபடுதல் கூடாது.

திருக்கோவிலூர்
ரி.ஙி.ஹரிபிரசாத் சர்மா