கமகமக்கும் சந்தனம்



சந்தனம் இடம் பெறாத ஆலயங்களே கேரளாவில் இல்லை. மாத்வர்கள் உடலெங்கும் சந்தனத்தை இட்டுக் கொள்வது வழக்கம். உடல் சூட்டை தணிக்கவும் நல்ல எண்ணங்கள் வளரவும் சந்தனம் உதவி புரிகிறது.

அதிலிருந்து எழும் தெய்வீக நறுமணம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. சந்தனத்தால் கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சந்தனத்தை நெற்றியில் இடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். சந்தன ஊதுபத்திகள் கடவுளுக்கு ஏற்றப்படுகின்றன. சந்தன நறுமணம் மன அமைதியை கொடுக்கும். எனவேதான் புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் தீர்த்தத்தில் சந்தனத்தை கலக்கின்றனர்.

சந்தனம் சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலத்தை வளர்ப்பதாகவும் செயல்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல், சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும். குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறுமணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன்படுகிறது. முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புகள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்படுகிறது.

சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம், வெப்பக்கட்டிகள் எல்லாம் நீங்கி, வசீகரமும் அழகும் உண்டாகும். பசும்பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும். குழந்தைகளின் தோலை மிருதுவாகப் பராமரித்து அரிப்பு, வேர்க்குரு வராமல் தடுக்கும். உடலுக்கு மட்டுமன்றி மனதையும் மகிழ்விக்கும் சந்தன எண்ணெய் ‘அரோமா’  வைத்தியத்தில் உபயோகப்படுகிறது. தலைமுடி காணிக்கை செலுத்தியவர்களுக்கு பெரியவர்கள், குழந்தைகள் என்று அனை வருக்கும் தலையில் சந்தனம் தடவுவது ஒரு கட்டாய வழக்கம்.

சிறு வெட்டுப் புண்களை ஆற்றும் திறனும் கொண்டது சந்தனம். சந்தன எண்ணெய் வறண்ட, வயதான சருமத்திற்கு நல்லது. மற்ற எண்ணெய்களுடன் சேர்த்து தலைக்கோ, உடலுக்கோகூடத் தடவிக் கொள்ளலாம். சந்தன மரம் அழகிய சிறு பெட்டிகள், சீப்பு, படசட்டங்கள், கடவுள் உருவங்கள் போன்றவை செய்ய ஏற்றது. சந்தன கைவினைப்பொருட்கள் விலை உயர்ந்தவை. அஷ்ட மங்கலப் பொருட்களுள் சந்தனமும் ஒன்று. திருமண மண்டபத்தில் முதலில் நம்மை வரவேற்பதே சந்தனமும் பன்னீரும்தானே!

- ஸ்ரீ