தீரா வினைகள் தீர்க்கும் திருச்செந்தூர்



(அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள புனித தீர்த்தங்களின் மகிமைகள்)

நாழிக்கிணறு தீர்த்தம்

சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகப் பெருமான் தன்   வேலாயுதத்தால் உருவாக்கியதுதான் நாழிக்கிணறு. கங்கை நீர் போல் இதில் ஊற்றுப் பெருகியது. இதில் நீராடினால் தீவினைகள்
தீரும், வறுமை, நோய், பாவங்கள் நீங்கி ஞானம் ஏற்படும். பொதுவாக இந்த தீர்த்தத்தில் நீராடிவிட்டு திருச்செந்தூரான் எதிரே சீற்றம் அடங்கிக் காணப்படும் கடலில் நீராடுவதும், அதற்குப் பிறகு முருகனை தரிசிப்பதும் மரபு.

நாழிக்கிணறு தவிர மேலும் சில தீர்த்தங்கள் திருச்செந்தூர் முருகனின் மகிமையை விளக்குகின்றன. இவை வள்ளி குகை முதல் மூவர் சமாதி வரை வங்கக் கடற்கரையில் அமைந்துள்ளன.

வதனாரம்ப தீர்த்தம்

கலிங்கராஜன் மகள் கனக சுந்தரி, ஒரு சாபம் காரணமாக உக்கிரம பாண்டியன் மகளாக குதிரை முகத்துடன் பிறந்தாள். அவள் திருச்செந்தூர்
முருகனை வழிபட்டு இந்த வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி, குதிரை முகம் மறைய, இயற்கையான, எழில்மிகு பெண்முகம் அடையப் பெற்றாள். இந்த தீர்த்தத்தில் நீராடுவோரின் அழகுக் குறைகள்
மறையும் என்பது நம்பிக்கை.

தெய்வானை தீர்த்தம்

இதில் நீராடினால் கங்கை, யமுனை, கௌரி முதலிய நதிகளில் நீராடிய பயன் கிட்டும்; பரஞானம் பெறுவர்.

சித்தர் தீர்த்தம்

இதில் நீராடினால் வைகை, வேதகி, கண்ணவேணி முதலிய நதிகளில் நீராடிய பயன் கிட்டும். அட்டமாசித்திகைகள் கைகூடும்.

அட்டத்திக்கு பாலகர் தீர்த்தம்

இதில் நீராடினால் பம்பை, சரயு முதலிய நதிகளில் நீராடிய பயன் கிட்டும். எண்திசையோரும் வந்து வணங்குவர்.

காயத்ரி தீர்த்தம்

இதில் நீராடினால் நர்மதை நதியில் நீராடிய பயன் கிட்டும். 21600 காயத்ரி மந்திர ஜபம் செய்த பயன் கிட்டும்.

சாவித்திரி தீர்த்தம்

இதில் நீராடினால் கோதாவரி, பொருணை
முதலிய நதிகளில் நீராடிய பயன் கிட்டும். எமனையும் எதிர்க்கும் சக்தியும், உடல்நலமும் கிட்டும்.

சரஸ்வதி தீர்த்தம்

மந்தாகினி, வேதவதி ஆகிய நதிகளில் நீராடிய பயன் கிட்டும். சகல நன்மைகளையும் தரும் தன்மையுள்ளது இந்த தீர்த்தம்.

ஐராவத தீர்த்தம்

இதிலுள்ள சந்திர பாகை, சிந்து வாகுகை
தீர்த்தங்களில்  நீராடினால் இந்திரலோக பதவி பெறும் அளவுக்கு மேன்மை பெறலாம்.

பைரவ தீர்த்தம்

சரபோஜி சோனை, தாமிரபரணி, கம்பை ஆகிய நதிகளில் நீராடிய பயன் கிட்டும். பூதம், பிசாசு, துர்தேவதைகளால் ஏற்படக்கூடிய துன்பம் நீங்கும்.

வள்ளி நாயகி தீர்த்தம்

விசாலாட்சி அருள்புரியும் காசி, காமாட்சி
கருணைக் கோலம் காட்டும் காஞ்சி, மீனாட்சி கோலோச்சும் மதுரை ஆகிய புண்ணியத் தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடிய  புண்ணியமும், ஞானமும் கிட்டும்.

துர்க்கா தேவி தீர்த்தம்

இங்கு நீராடினால், முன்ஜென்ம பாவங்கள்
நீங்கும். இம்மையில் துன்பம் நீங்கும், பேரின்ப வீடும், ஆனந்த வாழ்வும் கிடைக்கும்.

ஞான தீர்த்தம்

முருகப் பெருமானின் தோத்திர பயனும் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதுடன் சகல ஞானப்பேறு உண்டாகும்.

சத்திய தீர்த்தம்

துன்பங்கள் நீங்கும், வேதசாத்திர ஞானம்
கிட்டும். முருகப்பெருமானின் திருவடி தாமரை என்ற பேரின்ப வீடு கிடைக்கும்.

தர்ம தீர்த்தம்

இதில் நீராடினால் ஆணவம், கன்மம், மாயை நீங்கி தர்ம சிந்தனை ஏற்படும்.

முனி தீர்த்தம்

இருவினை தொடர் நீங்கும், முனிவர்கள்
ஆசியினால் சாபங்கள் தீரும். முருகனின் திருவருள் ஞானப்பேறு கிட்டும்.

தேவர் தீர்த்தம்

காம, குரோத, பகைகள் நீங்கும். சாபங்கள் தீரும். தேவர்கள் வந்து வணங்கும் பேறும்கிட்டும்.

பாவநாச தீர்த்தம்

முனிவர்களாலும் முன்னோர்களாலும் ஏற்பட்ட சாபம் தீரும். புனிதப் பிறவி கிட்டும்.

சேது தீர்த்தம்

ராமேஸ்வரம், சேதுவில் நீராடிய பயன் கிடைக்கும். முருகனின் திருவருள் கிடைக்கும்.

தசகங்கை தீர்த்தம்

புனிதமான பத்து தீர்த்தங்களில் நீராடிய பயன் கிடைக்கும். பிறவி பிணி தீரும். முக்தி பேறு கிட்டும்.

லட்சுமி தீர்த்தம்

குமரி, வேதவதி, துங்கபத்ரா ஆகிய நதிகளில் நீராடிய பயன்களைத் தரும்.

கந்த மாதன தீர்த்தம்

முருகப் பெருமானின் திருவடி தாமரை, இந்திர ஞால வித்தை போன்றவை கிட்டும்.

தென்புலத்தார் தீர்த்தம்

இம்மை மறுமை பேற்றுடன் முன்னோர்கள் ஆசியும் கிட்டும்.

மாத்ரு தீர்த்தம்

இங்கே நம் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் தானம் செய்ய எல்லா நன்மையும் கிட்டும். வள்ளி குகை முதல் சூரசம்ஹார அபிஷேக மண்டபம் வரை உள்ளன மேலே குறிப்பிட்ட தீர்த்தங்கள். வேல் தீர்த்தமாகிய நாழிக்கிணற்றில் நீராடிய பிறகே மகா தீர்த்தமாகிய கடலில் நீராடுதல் வேண்டும் என்று தலபுராணம் கூறுகின்றது. அதன் பலனாக காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்துப் புனித தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும். அனைத்து பாவங்களும் நீங்கும். நன்மை பெருகி, சகல யோகமிக்க பெருவாழ்வு நிறைவாக வீடுபேறுகிட்டும் என தலபுராணம்
கூறுகின்றது.

சரவணப் பொய்கை தீர்த்தம்

இது கோயில் அருகில் அமைந்துள்ளது. இதில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக முருகனின் அவதார காட்சி காண்பதற்குரியது. இதில் நீராடினால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியப்பேறு அடைவீர்.(திருவாடுதுறை ஆதீனம் கந்த சஷ்டி மண்டபம் முன்பு கடலில் நீராடச் செல்லும் வழியில் கீழ்ப்புறம், மேற்கு நோக்கிய கல்வெட்டில் மேற்படி குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன.)

எம்.ராஜபாலசந்தர்