மாவுக்கல் விக்ரகத்தை வீட்டில் பூஜிக்கலாமா?



?அக்ஷ மாலை, சின் முத்திரை
இரண்டையும் பொருள் விளக்கமாகச் சொல்லுங்கள்.
- ஸ்ரீதேவி, நில்லூர்.

அட்சதை என்ற வடமொழி சொல் பின்னப்படாத முழு அரிசியைக் குறிக்கும். குறைவுபடுதலை க்ஷயம் என்கிறோம். அக்ஷய என்றால் நிறைவானது. அதாவது, குறையற்றது. முழு முதற்கடவுளை பரமாத்ம ஸ்வரூபத்தை சேர்க்கக்கூடிய மணிகள்தான் (மாலையாக கோர்க்கப்பட்டுள்ளன) நீங்கள் கேட்கும் அக்ஷமாலை.

அடுத்ததாக சின் முத்திரை. ஸத்-சித்-ஆனந்தம் என்ற மூன்று நிலைகள் பரமாத்மாவிடம் ஜீவனை சேர்ப்பதற்காக வேதாந்தம் கூறுபவை. ஆதிசங்கரர் அருளிய தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தின் முடிவில் தட்சிணாமூர்த்தியை நமஸ்கரிக்கும் ஸ்லோகத்தில், அங்குஷ்ட தர்ஜனீயோக முத்ரா வ்யாஜேந தேஹிநாம் ச்ருத்யர்த்தம் ப்ரும்ம ஜீவ ஐக்யம் தர்சயன்

ந:அவதாத் சிவ- என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஜீவன் பிரம்ம சாட்சாத்காரத்தை அடைவதைதான் கட்டை விரலும், ஆட்காட்டி விரலும் சேர்த்தபடி காட்டிக்கொண்டு தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கிறார்.
?மாவுக் கல்லினால் செய்யப்பட்ட விக்ரகத்தையும் சிவ லிங்கத்தையும் வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கண், காது, கைகளுடன் உள்ள வெண்கலம், பித்தளை, வெள்ளி, பஞ்ச உலோக விக்ரகங்களை வீட்டில் நான்கு அல்லது ஐந்து அங்குலத்துக்கு மேல் உயரமானதை பூஜையறைக்குள் ஆவாஹனம் செய்து பூஜிக்கக் கூடாது. ஆனால், பூஜை அறைக்கு வெளியில் வைத்து அலங்கரிக்கலாம். கற்கட்டி என்கிற மாவுக் கல்லினால் செய்யப்பட்ட விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது. கருங்கல் ஒன்றுதான் மந்திர சக்திகளை நிலைகொள்ளச் செய்யும். வீட்டில் பூஜிக்கப்படும் சிவலிங்கம் நர்மதை யிலிருந்து எடுத்ததாகவும், அளவில் சிறியதாகவும் இருக்க வேண்டும். மிகப் பெரியவை, ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உபயோகமாகும்.

?வேதங்கள், இதிகாச புராணங்கள் இவற்றால் தெளிவான மனமும் அமைதி யான வாழ்க்கையும் கிடைக்கும் என்பது உண்மைதானா?
- வா.ஹரிராம், சென்னாவரம்.இவையனைத்துமே மனிதர்களுக்கு மனச்சோர்வு நீங்கி தெளிவான மனநிலையையும் உற்சாகத்தையும் உண்டாக்கும் என்பதுதான் உண்மை. இது சத்தியம் என வேதம் கற்றவர்களும், தமிழ் புலவர்களும் பல நூல்களில் கூறியுள்ளனர்.

உபநிஷதம் இன்னும் பல படிகள் உயரே சென்று, ‘‘தேவனாகவும் இல்லாமல், அசுரனாகவும் இல்லாமல், மனிதன், விலங்கு, பறவை, புல், பூண்டற்றவனாகவும், ஆண், பெண், அலியாகவும் இல்லாமல், ஸத்வாதி குணங்களாகவோ அதன் செய்கைகளாகவோ அல்லாமல், எல்லாவற்றையும் விலக்கிப் பார்க்க, விலக்க முடியாத அதிஷ்டானமாக மிச்சப்பட்டு நிற்பவராகவும், மாயையால் எல்லாமாகவும் தோற்றமளிப்பவராகவும் உள்ள அந்த இறைவனை நமது உள்ளத்தால் தரிசித்துவிட்டால் துயரக் கடலில் மூழ்க மாட்டோம் என்று உபநிஷதம் கூறுகின்றது.

?வியாழன்று ‘குரு’ வழிபாடு செய்யுங்கள் என கூறுகிறீர்களே, நவகிரஹங்களில் உள்ள குருவையா? மத குருமார்களையா? பூண்டு, வெங்காயத்தை முக்கிய இறை வழிபாட்டிற்குரிய நாட்களில் சாப்பிட வேண்டாம் என்று ஆன்மிகவாதிகள் கூறியுள்ளார்களே, அது எதனால்? மீன் தொட்டி, சிரிக்கும் புத்தர், குபேர விக்ரகம்  இவை வீட்டில் இருந்தால் செல்வம் கொழிக்கும் என்கிறார்களே? நம்பலாமா?- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

வியாழனன்று மத குருமார்களையும், தட்சிணாமூர்த்தியையும் அவரவர் சௌகரியப்படி வழி படலாம். குரு என்பதில் நவகிரக குருவையும், நாம் யாரை குரு என்று நினைக்கிறோமோ அவரையும் தட்சிணாமூர்த்தியையும் சேர்த்தே வழிபடலாம். லால்குடி ஸப்தரிஷீஸ்வரர் கோயிலில் வீணையோடு கூடிய தட்சிணாமூர்த்தியை தரிசிப்பது, மனம் தெளிவடையவும், ஞானம் பெறவும் வழிவகுக்கும். சகல உணர்ச்சிகளுக்கு மூலாதார ஸ்தான மாகிய மூளையினின்று பற்பல நரம்புகள் உடல் முழுவதும் பரவுகின்றன. பூண்டு, வெங்காயம்

போன்றவை நரம்புகளை முறுக்கேற்றி விதவிதமான உணர்ச்சிகளை தூண்டும். எனவே, தெய்வ வழிபாட்டுக்குரிய தினத்தன்று அவற்றை விலக்குவதே நல்லது. அமைதியான மனதோடு தெய்வ
காரியங்களைச் செய்ய வேண்டும். சிரிக்கும் புத்தர், குபேர விக்ரகம் போன்றவற்றை அலுவலகத்திலும், மீன் தொட்டியை வீட்டிற்கு வட கிழக்கு மூலையிலும் வைக்க வேண்டுமென்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.

? தெற்கு முகமாக உள்ள விநாயகரும், மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமும் சிறப்பாக அருள்பாலிப்பவை என்கிறார்களே?
- மீனா சுவர்ணம், உடுமலைப்பேட்டை.

திசைகள் 10 என்பதை நாம் அறிவோம். அதில் அதிகமாக அசுர சக்திகள் நடமாடுவது தென்திசையில்தான். விநாயகர் தன் பார்வையால் அவற்றை அழிக்கிறார். இதே போன்றுதான் மேற்கு நோக்கிய சிவலிங்கமும் ஆன்மிக சக்திகளை அதிகமாக கொடுப்பதாகும். சென்னையில் மயிலை கபாலீஸ்வரர், திருநெல்வேலியில் ஆழ்வார்குறிச்சிக்கு அடுத்த சிவசைலத்தில் சிவசைலநாதர் இருவரும் மேற்கு பார்த்து தரிசனமளிக்கும் லிங்கரூபங்கள். இவர்களையும், இவர்களைப்போல மேற்கு பார்த்த லிங்க மூர்த்தங்களையும் வழிபடுவது சகல
நன்மைகளையும் அளிக்கும்.

?ஆத்மா, பரமாத்மா, முக்தி மூன்றையும் பாமரர்களுக்கு புரியும்படி விளக்கம் தாருங்கள்.
- சுபா, ராமேஸ்வரம்.

ஆத்மா என்பது நம்மைப் பொறுத்தவரை ஜீவன் என்கிற அர்த்தத்திலேயே கூறுகிறோம். அப்படிப் பார்த்தால் இந்த ஜீவன் பக்தியாலும், பிரேமையினாலும் அந்த பரமாத்மாவை துதித்து அதோடேயே இரண்டற கலப்பதே முக்தி எனப்படும். வெள்ளரிப்பழ முக்தி என்றே ஒன்று உண்டு. நன்கு பழுத்த வெள்ளரி தன் முதிர்ந்த கட்டத்தில், சட்டென்று தன் தொடர்பை கொடிக் காம்பிலிருந்து விடுவித்துக் கொள்ளும். அதுபோல நன்கு பக்குவமுற்றவர்கள் உலகை விடுவித்துக் கொண்டு முக்தியை அடையும் பாதையில் நடப்பர். இது ஜீவன் பரமாத்மாவை அடையும் முயற்சியில் முக்தியை அடைவதாகும். மதுரைவாழ் மக்கள் மதுரை மாநகர பெருமையை அழகுத் தமிழில் பாடுமாறு பரஞ்சோதி என்ற முனிவரை வேண்டினார்கள்.

பரம் என்றால் மேலானது. சோதி என்றால் ஒளி, ஆத்மா என்று பொருள்படும். ஆகையால் மேலான ஒளிவடிவு பெற்று விட்டவர் இவர். அதாவது, பரமாத்மாவோடு ஒன்றி விட்டவர். பரஞ்சோதி மகானின் கனவில் அம்மை மீனாட்சி தோன்றி அருளாசி வழங்கினார். அவரும் ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற வடமொழி நூலை தமிழாக்கினார். ஆத்மா இறப்பதாக நினைப்பதும் ஆத்மாவை ஒருவன் கொல்கிறான் என்று நினைப்பதும் அஞ்ஞானியின் இயல்பு. முக்தி என்பது நமக்கு இறப்புக்கு பின்னர் மட்டுமே கிடைக்கும் என்பது தவறு. இருக்கும்போதே ஒவ்வொரு நாளும் நம் மனதின் அழுக்குகளை (செய்த தவறுகளை), பாவ மூட்டைகளை, வஞ்சனை, பொறாமை காரியங்களை விட்டு விட்டால் உயிரோடு இருக்கும்போதே நிஜமான முக்தியை நாம் அடைந்து விடமுடியும்.

வாசகர்களே...
நமது இந்து தர்மம், பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றில் நமக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், சேங்காலிபுரம்
பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
உங்கள் சந்தேகங்களை கீழே உள்ள முகவரிக்கு எழுதுங்கள்.
தெளிவு பெறுஓம்,
தினகரன் ஆன்மிகம் பலன்,
தபால் பை எண்: 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004.