அகத்தியர் தரிசனம், ஆனந்தம் நிச்சயம்!



திருவையாறு

திருவையாறு தியாகராஜ சுவாமி கோயில் நுழைவு வளைவு எதிரே ஒத்தத்தெரு என்கிற இடம் உள்ளது. இங்கு அகத்திய மாமுனிவருக்கும், அவர் மனைவி லோபா முத்ரைக்கும் அழகியதான சிறு தனிக்கோயில் அமைந்துள்ளது. மேற்குப் பார்த்த சந்நதி. மிகுந்த சாந்நித்தியத்தோடு விளங்குகிறது. அகத்தியருக்கு இப்படி தனிக்கோயில் இருப்பது மிகவும் அரியதும் சிறப்பும் ஆகும். அதுவும் மனைவியோடு இருப்பதென்பது கூடுதல் சிறப்பாகும். காவிரியின் வடகரையிலுள்ள தலமாக இது போற்றப்படுகிறது.

ஒரு காலத்தில் திருவையாறு தியாகய்யர் வாழ்ந்த புஷ்ய மண்டபத் தெருவில் இந்த அகத்தியர் மூலவராக அருள்பாலித்துக் கொண்டிருந்தார். அதாவது, அகத்தியரின் திருமேனி மட்டுமே அங்கு இருந்தது. அகத்தியர் மீது பக்தி கொண்ட அன்பர்கள் அதை வழிபட்டு வந்தனர். அந்த இடத்திலிருந்து அகத்தியரை இட மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பக்தர்களில் ஒருவரான முருகானந்தம் என்பவர் அந்த மூலவரை எடுத்து வந்து, தன்னுடைய இல்லத்திற்கு அருகிலேயே ஒரு கொட்டகை அமைத்து, அதில் வைத்து வழிபட்டு வந்தார். அந்தத் தெருவாசிகளும், பக்தர்களும் அகத்தியருக்கு சிறு கோயில் கட்டத் தொடங்கி குடமுழுக்கும் நடத்தினர்.

மூலவர் கருங்கல் சிற்பத்திலும், உற்சவர் பஞ்சலோகத்திலும் உருவாயினர். பௌர்ணமியன்று மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்களும் அர்ச்சனைகளும் நடைபெறுகின்றன. உற்சவ மூர்த்தியின் வீதியுலாவும் நடைபெறும். இந்த ஆலயத்திலுள்ள அகத்திய முனிவரின் கையில் மருத்துவ குடுக்கை உள்ளது. இதனை குடுவை என்றும் சொல்லலாம். அகத்திய முனிவரின் இடதுகையில் மருத்துவ குடுவை இருப்பதால், இவர் நோய் தீர்க்கும் மருத்துவராக இத்தலத்தில் வீற்றிருக்கிறார். குறிப்பாக நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து, அகத்தியரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு மருந்து சாப்பிட்டால் அனைத்து நோய்களும் தீரும்.

இத்தல அகத்திய முனிவரை வழிபட்டால் பூரண உடல்நலம் பெறுவது உறுதி என்பது பல அன்பர்களின் அனுபவம். திருவையாறு செல்பவர்கள் அவசியம் இந்த அகத்தியர் கோயிலையும் தவறாது தரிசிக்க வேண்டும். ஜோதிடம், தமிழ்மொழி, சாஸ்திரம், மருத்துவம் ஆகியவற்றில் வல்லவர். அதனால் அவரை வணங்குபவர்களுக்கு, அகத்திய முனிவரின் அருளால் சகல வித்தைகளும் கைகூடும் என்று அகத்திய வழிபாட்டு முறையினர் கூறுவர்.

-வி.பி.கே.மூர்த்தி