கற்பாறையைத் தொட்டாலும் கட்டித் தங்கமாகிவிடும்



பாபா யாசகம் பெறும் முறையும் வித்தியாசமாக இருந்தது. பகலில் ஒரு வேளைதான் யாசகம் கேட்பார். சிலசமயம், ஒரு நாளைக்கு நாலைந்து வேளையும் யாசகம் வாங்கப் போவார். திடீரென்று ஒருநாள் பன்னிரண்டு வேளை யாசகம் கேட்கப் போய், நிறைய உணவு சேகரித்து வருவார். ஆச்சரியம் என்னவென்றால், அன்றைக்கு அவரைப் பார்க்க நிறைய விருந்தினர்கள் வருவார்கள். எல்லாம் காலியாகிவிடும்! இவ்வளவு பேர் வரப்போவது பாபாவுக்கு முன்கூட்டியே எப்படித் தெரியும் என்று மக்கள் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள்.

அன்றைக்கு யாசகமாய் கொண்டு வந்த எல்லா உணவையும் தட்டில் போட்டு சிறுசிறு உருண்டையாக்கி, காக்கை, குருவிகளுக்குப் போட்டார். தானும் இரண்டு கவளம் எடுத்துக்கொண்டார். எல்லா பட்சிகளும் பறந்து வந்தன. சில பறவைகள் பாபாவின் தலையிலும் கையிலும் உட்கார்ந்து சாப்பிட்டன. எல்லாம் முடிந்ததும் தண்ணீர் அருந்திவிட்டு படுத்தார். இதை மாதவராவ் தேஷ்பாண்டே, மகள்சாபதி, காசிராம் வெளியில் நின்று பார்த்தனர்.

“இந்த பட்சிகள் எல்லாம் எப்படி உங்கள் தலையிலும் கையிலும்  பயப்படாமல் உட்காருகின்றன?’’ என வினவினார் மாதவராவ்.“என் மனம் சுத்தமானது. யாருடைய மனம் நிச்சலனமாக இருக்கிறதோ, அவர்கள் அருகில் பட்சி என்ன, பிராணிகள்கூட வந்து விளையாடும். முதலில் மனதை சுத்தமாக்கு, பிறகு பார்’’ என்றார் பாபா.
“ஒரு கேள்வி கேட்கலாமா?’’ என்றான் காசிராம்.

“தாராளமாக!’’“நீங்களோ மகாயோகி. சாட்சாத் கடவுள். உங்களுடைய மனோ திடம், பலம், திறமை என்ன! நீங்கள் சற்றே புருவம் அசைத்தால் பிச்சைக்காரன்கூட பணக்காரனாவான். பணக்காரன் பிச்சைக்காரன் ஆவான். நீங்கள் ஒரு கற்பாறையைத் தொட்டால்கூட, அது அடுத்த வினாடி தங்கம், வெள்ளியாக மாறிவிடும்! இப்படி இருக்க, நீங்கள் ஏன் நாலு வீட்டிற்குப் போய்த் தட்டை ஏந்தி யாசகம் கேட்கிறீர்கள்?’’

“காசிராம், நீ பெரிய பயில்வான். சொல்கிறேன் கேள். நான் கடவுளின் தொண்டன். கடவுளை ஞாபகப்படுத்தும் ஒரு பைத்தியக்கார பக்கீர். அருமை நண்பர்களே, சும்மா சும்மா என்னைக் கடவுள் ஆக்காதீர்கள். எனக்காகவும் இந்த ஜீவராசிகளுக்காகவும் இரண்டு பருக்கை யாசகம் செய்கிறேன், அவ்வளவுதான்!’’ (குங்குமம் வார இதழில் வெளிவந்த தொடரின் தொகுப்பு)