நிகரில்லாத அதிசயமே நிர் அதிசயம்!



திருமூலர் மந்திர ரகசியம்


உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணம் உண்டு. காரணமில்லாமல், எந்தக் காரியமும் இல்லை.
அதுபோல, திருமூலர் தான் வந்ததற்கான காரணத்தைக் கூறுகிறார்.
மாலாங்கனே! இங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியன் நேரிழையாளொடு
மூலாங்கமாக மொழிந்த திருக் கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
(திருமந்திரம் - 77)

கருத்து: ‘திருக்கயிலையை விட்டு, நான்
இத்தமிழ்நாட்டிற்கு வந்த காரணம், சிவபெருமான் உமையம்பிகைக்குச் சொன்ன, வேதத்தைச் சொல்வதற்காகவே.” பாடலின் கருத்து இவ்வளவுதான். ஆனால், ஒவ்வொரு சொல்லாகப் பார்க்க வேண்டும். ‘மாலாங்கனே நேரிழையாளொடு மூலாங்கமாக’ எனும் சொற்களுக்கான சரியான பொருள் என்ன? மாலாங்கனே  என்பது ‘விளி’, அதாவது, அழைப்பது. மால் என்றால் மயக்கம் என்பது பொருள். மயக்கத்தையே பிரதானமாகக் கொண்டு வாழும் உலகியல் மக்களை அழைத்துக் கூறத் தொடங்குகிறார்.

அடுத்து, ‘நேரிழையாள்’ இது தமிழில் உள்ள அபூர்வமான சொற்பிரயோகங்களில் ஒன்று. ஒருவனை ஈடேற்ற வேண்டுமானால், தெய்வம் தானே நேருக்கு நேராக வரமுடியாது. அதன் காரணமாகவே, மனிதன் எதற்கு ஆட்படுகிறானோ எந்தப் புலன்களுக்கு ஆட்படுகின்றானோ அந்தப் புலன்களை நிறைவு செய்து, அதற்குமேல் உள்ள நலங்களை ஊட்டுகின்ற வடிவமாகப் பெண்மையைப் படைத்து, அந்தப் பெண்மையில் அருள் நலத்தைத் தேக்கி, ஓர் ஆணுக்குத் துணையாக அனுப்பி வைக்கிறான் இறைவன்.

அவ்வாறு தெய்வ நலம் நிறைந்து விளங்குவதாலேயே அந்தப் பெண், ஆண் ஒருவன் திசை மாறிப் போனால் அவனை நேர்ப்படுத்தி நல்வழியில் செலுத்துகிறாள். ஆகவே பெண்களுக்கு ‘நேரிழை’ என்று பெயர். நேரிழை - நேரிமையை இழைப்பவள். இழைப்பது என்றால் கரடு முரடாக இருப்பதைத் தேய்த்து நேர்ப்படுத்துவது, செம்மை படுத்துவது, ஒழுங்குபடுத்துவது என்று பொருள். ஆண்களிடம் இருக்கும் கோணல்களை நிமிர்த்தி, நல்வழியில் செலுத்துபவர்கள் பெண்கள். அதனால்தான், அவர்களுக்கு ‘நேரிழையார்’ எனப் பெயர் வந்தது. ஓர் ஆணை ‘நேரிழையான்’ எனக் குறிப்பிடுவதில்லை.

இப்பாடலில் ‘நேரிழையாள்’ என்பது, அம்பிகையைக் குறிக்கும். அம்பிகை, நன்மை தீமைகளை உணர்த்தி, பக்குவப்படுத்தி நமக்கு அருள் செய்கிறாள். ‘பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை’ என மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இதே தகவலைக் கூறுகிறார். அடுத்து, ‘மூலாங்கமாக’ எனும் சொல்லுக்குப் பொருள் என்ன? அது, நம் உடலில் உள்ள மூலாதாரத்தைக் குறிக்கும். அதிலிருந்துதான், நம் உடலுக்குத் தேவையான வெப்பம் உருவாகிறது. அந்த இடத்தில் சூடு இருக்கிறவரைதான், நம் உடம்பும் செயல்படும். அங்கே சூடு அடங்கி விட்டால் நம்  உடம்பும் குளிர்ந்து விடும்.

இந்த மூலாதாரத்தைப் போலவே, ஆகாய வெளியில் ஒரு மூலாதாரம் உள்ளது. அது அடங்கிப் போய்விட்டால், உலக இயக்கமே அடங்கிப் போய் விடும். இவ்விரண்டையும் ஆதிமூலம் என்றும், அநாதி மூலம் என்றும் சித்தர்கள் குறிப்பார்கள். அம்பிகையோடு சிவபெருமான் ஆடும் திருக்கூத்தின் - அம்பிகைக்கு சிவபெருமான் மொழிந்த - சீலத்தை அங்கமாகக் கொண்டு திகழும் வேதத்தைச் சொல்லவே வந்தேன் எனத் திருமூலர் கூறுகிறார்.

அடுத்த பாடல் இன்னும் அதிசயமாக இருக்கும்.அதைத் திருமூலரே ‘நிர் அதிசய ஆனந்தம்’ என குறிப்பிடுகிறார்.
நேரிழையாவாள் நிர் அதிசய ஆனந்தப்
பேருடையாள் என் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடையாள் சிவன் ஆவடுதண் துறை
சீருடையான் பதம் சேர்ந்திருந்தேனே.
(திருமந்திரம் - 78)

கருத்து: அழகிய அணிமணிகள் சூடியவள். எல்லையில்லாத ஆனந்தத்தை அருளும் திருநாமம் கொண்டவள். என் பிறவியை அறுத்து, வீடு (முக்தி) தந்து என்னை ஆண்டுகொண்டவள். சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்  திருஆவடுதண்துறை எனும் தலத்தைத் தனதாகக் கொண்டவள். அந்த அம்பிகை யின் திருவடி நிழலில் இப்போது இருக்கிறேன். முந்தைய பாடலில், ‘நான் சொல்கிறேன்’ என்ற திருமூலர், இப்பாடலில் தான் எங்கிருந்து சொல்கிறேன் என்பதை விவரிக்கிறார்.

தொலைபேசியில் பேசும்போது, ‘நான் இந்த இடத்தில் இருந்து பேசுகிறேன்’ எனக் குறிப்பிடுகிறோம் அல்லவா? அதுபோல, திருமூலரும் இப்பாடலில், திருவாவடுதுறையில் இருந்து பேசுவதாகக் கூறுகிறார். இப்பாடலில், திருவாவடுதுறையில் அம்பிகையின் திருவடிகளைத் தியானித்திருப்பதாகச் சொன்ன திருமூலர், அம்பிகையை, ‘நிர் அதிசய ஆனந்தப் பேர் உடையாள்’ என்று புதுமையாக அழைக்கின்றார். ஆனந்தம் தெரியும். அது என்ன அதிசய ஆனந்தம்? அதற்கும் மேலே, நிர் அதிசய ஆனந்தம் என்றால் என்ன? சித்த புருஷர்கள், கைநிறைய மண்ணை எடுத்துச் சர்க்கரையாக மாற்றித் தருவார்கள். அது அதிசயம். அதே, கைகளில் எதுவும் இல்லாமல் கையை மூடாமல் சர்க்கரை வந்தால், அதுதான் ‘நிர் அதிசயம்’. ஆதாரம் இல்லாமல், நிர் ஆதார வெளியில் ஓர் அற்புதம் நடந்தால், அது ‘நிர் அதிசயம்’.

இந்த நிர் அதிசயத்துக்கு மகான்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை உதாரணம் சொல்வார்கள். அப்பர் சுவாமிகளைக் கல்லில் கட்டிக் கடலில் தள்ளினார்கள். கல்லே தெப்பம்போல் மிதக்க, அதன்மேல் மிதந்து வந்து கரை ஏறினார் அப்பர் சுவாமிகள்!திருஞானசம்பந்தர், இறந்துபோன பெண்ணின் சாம்பலைக் கொண்டு அந்தப் பெண்ணை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள், முதலை விழுங்கிய சிறுவனை மீளவைத்தார்.

இந்நிகழ்ச்சிகளே நிர் அதிசயம் எனப்படும். அப்பர் சுவாமிகள் நீரில் மிதக்க, கை, கால் இருந்தது. திருஞானசம்பந்தர் பெண்ணை உயிருடன் கொண்டுவர அவளுடைய சாம்பல் இருந்தது. ஆனால், சுந்தரர், இறந்துபோன சிறுவனை உயிருடன் கொணர்வதற்காகப் போய்ப்பார்த்தபோது அங்கே நீர் இல்லை, சிறுவனை விழுங்கிய முதலையும் இல்லை. இருந்தாலும், நீர் வரவேண்டும், அதில் முதலை வரவேண்டும் என நினைத்தார். அப்படியே வந்தன. அதன்பின், ‘என்றோ விழுங்கப்பட்ட சிறுவனை, இன்றைய வயதுக்கு உரியவனாகத் திருப்பிக்கொடு’ என வேண்ட, சிறுவன் அதுபோலவே உயிருடன் வந்தான்.

இதுவே ‘நிர் அதிசயம்’ எனப்படும். இப்படிப்பட்ட சக்தி படைத்தவள்தான் அம்பிகை. அந்த அம்பிகை, எந்த ஆதாரமும் இல்லாமல், என் ஆன்மாவிலே ஓர் ஆனந்தத்தை உண்டாக்கினாள். அந்த ஆன்மாவையும் கடந்து வெட்ட வெளியிலே, ஏதுமில்லாத நிலையில், ஓர் ஆனந்தத்தை உண்டாக்கினாள். அப்படிப்பட்ட அம்பிகையோடு நானிருந்தேன் என்கிறார் திருமூலர்.
இதையே இன்னும் சற்று விரிவாகக் கூறுகிறார் அடுத்த பாடலில்.

சேர்ந்திருந்தேன் சிவமங்கை தன் பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடுதண்துறை
சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நீழலில்
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே.
(திருமந்திரம் - 79)

கருத்து: சாதாரணமாகப் பார்க்கும்போது, இப்பாடல் எளிமையானதாகத் தோன்றும். அதாவது, அம்பிகையைத் தன் திருமேனியிலே கொண்ட (அர்த்தநாரீஸ்வரர்) சிவபெருமானைச் சேர்ந்திருந்தேன்; திருவாவடுதுறையிலே சேர்ந்திருந்தேன். மங்கலங்களை அருளும் போதி மரத்தின் நிழலில் சேர்ந்திருந்தேன்; சிவநாமங்களை ஓதியபடியே சேர்ந்திருந்தேன் என்று பொதுவாகப் பொருள் விளங்கும்.
ஆனால், ‘சிவமங்கை தன் பங்கனை’ ‘போதியின் நீழலில்’ எனும் இரண்டு வார்த்தைகளை மட்டுமாவது, நாம் ஆழ்ந்து பொருள் காண வேண்டும்.
சிவமங்கை தன் பங்கனை - அம்பிகையை தன் திருமேனியிலே பாதியாகக் கொண்டவனை - என ஏன் சொல்ல வேண்டும்?

பிருங்கி ஒரு தீவிரமான சிவபக்தர். சிவனைத் தவிர, வேறு யாரையும் அவர் கும்பிட மாட்டார். அவர் ஒருசமயம் கைலைக்குச் சென்றிருந்தபோது, பார்வதியும் பரமசிவனும் அமர்ந்திருந்தார்கள். சிவபெருமானை மட்டும் தனியே வலம்வர வழியில்லை. பார்த்தார் பிருங்கி. ஒரு வண்டாக உருமாறி, பார்வதிக்கும் பரமசிவனுக்கும் இடையே புகுந்து, சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார்.

அம்பிகைக்குக் கோபம் வந்தது. “சக்தியை இகழ்ந்து ஒதுக்கியபடியால், நீ உன் சக்தியை இழப்பாய்’’ என சாபம் கொடுத்தாள் அவள்.
பிருங்கியின் சக்தி முழுவதுமாகப் போய்விட்டது. பிற்பாடு அவர், மூன்றாவதாக ஒரு காலைப் பெற்று, இயங்கத் தொடங்கினார்; மன்னிப்பு கேட்டு சாப விமோசனம் பெற்றார் என்று கதை போகிறது.
பல கோயில் கோபுரங்களில், மூன்று கால்களுடனான ஒரு முனிவர் சிற்பத்தைப் பார்த்திருக்கலாம். அது இந்த பிருங்கிதான். சக்தியையும் சிவனையும் பிரிக்கக் கூடாது என்று, பாடம் சொல்லும் வடிவம் அது.

பிரியக் கூடாததை, பிரிக்கக் கூடாததைப் பிரிக்க நாம் யார்? பழத்தில் இருந்து சுவையைத் தனியாகப் பிரிக்க முடியுமா? சூரியனிடம் இருந்து வெப்பத்தையோ, சந்திரனிடமிருந்து குளிர்ச்சியையோ தனியாகப் பிரிக்க முடியுமா?“ஏன் முடியாது? என் அறிவின் மூலம், என் விஞ்ஞானத்தின் மூலம், அவற்றைத் தனித்தனியே பிரித்துக் காட்டுகிறேன் பார்!” என்று செயலில் இறங்கும்போது, விபரீதம் விளைகிறது; பிருங்கியைப் போல, சக்தியை இழந்து மனிதகுலம் துயரப்படுகிறது.

இதை நமக்கு உணர்த்துவதற்காகவே,
சிவமங்கை தன் பங்கனை - அதாவது, அர்த்த
நாரீஸ்வரக் கோலத்தைக் கூறுகிறார் திருமூலர்.
அடுத்து, ‘போதி (மர) நிழலில்’ என்று சொல்லக் காரணம்?

 போதனை செய்கின்ற இடத்திற்குப் போதி என்று பெயர். முற்காலங்களில் எல்லாம் மாணவர்களுக்குக் கல்வி போதித்த இடம் மரத்தடிதான். காற்றோட்டமும் வெளிச்சமும் அங்கே நிறைந்திருக்கும். அதனால்தான் அரச மரம், ஆலமரம், அசோக மரம் ஆகியவற்றின் கீழிருந்து போதித்தார்கள்.

இவற்றிற்கு ஞான விருட்சங்கள் என்று பெயர்.மரங்களிலும் ஞான மரம், மோன மரம், ஊன மரம் என உள்ளன. ஆல மரம், அரச மரம் ஆகியவை ஞானத்தைத் தூண்டக்கூடியவை. அதனால்தான் அவற்றை, ஆலயத்தைச் சார்ந்து நட்டார்கள். அறிவைத் தூண்டக்கூடிய அவை, ஞான மரங்கள். தூங்கு மூஞ்சி மரம் - மோன மரம். புளிய மரம், ஊன மரம் எனப்படும். புளியமரத்தின் கீழிருந்து படித்தால், செயல்பட்டால், அறிவு குறையும், சக்தி குன்றும்.

இதை உணர்ந்ததால்தான், வீட்டிற்கு வாசல்படி, பலகை, கட்டில் ஆகியவற்றிற்குக் குறிப்பிட்ட மரங்களைத் தேர்ந்தெடுத்தார்கள் நமது முன்னோர்கள்.சில மரங்களில் செய்த பலகையில் கட்டிலில் படுத்தால், வேண்டாத கனவுகள் எல்லாம் வரும். ஏன்? மரத்தின் தன்மை, காற்றின் வழியாக ஊடுருவிப் பாய்ந்து, பல அலைகளைப் பரவ விடுவதால்தான்! ஒரே மரத்திற்கு இரு தன்மைகள் உண்டு. உதாரணமாக, வேங்கை மரப்பட்டையை இடித்துச் சாறு எடுத்து காய்ச்சி சாந்தாக வைத்துக்கொண்டால், கண்ணேறு  எனும் திருஷ்டி, தோஷங்கள் விலகும்; அதே வேங்கை மரக்கட்டையைத் தலைக்கு அணையாக (தலையணை) வைத்துக் கொண்டு படுத்தால், கெட்ட கனவுகள் எல்லாம் வரும்!

அரச மரம், ஆலமரம் இரண்டும் பொறுமையையும் உறுதியையும் அளிக்கக் கூடியவை. “சிவபோதி - கல்லால மரத்தின் அடியில் இருந்து இறைவன் போதித்தார். அங்கே நான் இருந்தேன். சிவ நாமங்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன்,’’ என திருமூலர் தன் அனுபவத்தையே, பாடமாகச் சொல்லியிருக்கிறார் நமக்கு.

(மந்திரம் ஒலிக்கும்)