வழக்கில் வெற்றி தரும் வாராஹி



லலிதையின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவியாவாள். ‘ஜகத் கல்யாண காரிண்ய’ எனும்படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் ஸப்த மாதர்களில் தலையானவள். அம்பிகைக்கு உரிய நான்கு நவராத்திரிகளில் ஆடி அமாவாசைக்கு அடுத்த 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி எனும் வாராஹி நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

சிலர் ஆனி அமாவாசைக்கு அடுத்த 9 நாட்களிலும் கொண்டாடுவர். இவள் ஆரோகணித்து வரும் ரதம் ‘கிரி சக்ர ரதம்’ என்றும், இவளின் யந்திரம் ‘கிரியந்த்ரம்’ என்றும் போற்றப்படுகின்றன. (கிரி - பன்றி). காட்டுப் பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு அப்பெயர்.

இந்த தேவியின் நிவேதனத்தில் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும், வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜா முறையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பற்ற சக்தியாக உலகத்திற்கு மங்களங்கள் அருளும் வாராஹியை பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, சமயேஸ்வரி, ஸமயஸங்கேதா, வாராஹி, போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாஸேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ போன்ற நாமாக்களைக் கூறி, வழிபட நம் துயர்கள் தூசுபோல் பறக்கும்.  இந்த நவராத்திரி தினங்களில் இவளை மனமுருகி வழிபட்டால் வழக்குகளிலிருந்து விடுபடலாம்.

 மயில் தோகை விசிறியால் விசிறி, பிரார்த்தனை செய்து முறுக்கும், வெள்ளரிக்காயும் நிவேதித்து அன்பர்களுக்கு விநியோகம் செய்தால் நலம் பெறலாம். பஞ்சமி (1.8.2014) தினத்தன்று தேங்காயை இரண்டாக உடைத்து,  வாழையிலையில் அரிசியை பரப்பி அதன் மேல் உடைத்த தேங்காயை வைத்து நெய் விட்டு விளக்கேற்ற கேட்ட வரங்களைத் தப்பாமல் பெறலாம்.வாராஹி நவராத்திரி தினங்களில் ஒப்பற்ற தேவியின் பாத கமலங்களைப் பற்றி நம் பாதக மலங்களை ஒழித்து நிர்மலமான தூயவாழ்வு பெறுவோம்.

வாராஹி நவராத்திரி (27.7.2014 ஆரம்பம்)

நிம்மதி அருளும் நெமிலி ஸ்ரீபாலா

காஞ்சிக்கு காமாட்சி, மதுரைக்கு காசி விசாலாட்சி அதேபோன்று நெமிலிக்கு பாலா. ஆம், வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம் நெமிலியென்ற அழகான ஊரிலே கடந்த 150 ஆண்டுகளாக அருள்மழை பொழிந்து வருகிறாள் அன்னை பாலா.அன்னை பாலா நெமிலிக்கு வந்த வரலாறு சுவாரஸ்யமானது. சிவம் பெருக்கும் நெமிலி டி.கே.சுப்பிரமணிய ஐயர் கனவில் பத்து வயது சிறுமியாக பச்சை பாவாடை உடுத்திக்கொண்டு ‘நான்தான் பாலா. உன் வீட்டிற்கு விக்கிரகமாக வருவேன். உன் இல்லத்துக்கு அருகே உள்ள குஸஸ்தலை ஆற்றில் என்னைத்தேடு’ என்று அருள் வாக்கு தந்தாள்.

உடனே அன்னை பாலா கனவில் சொன்ன ஆற்றில்  இறங்கி மூன்று நாட்களாகத் தேடியபோது விக்கிரகமாக சுண்டு விரல் உயரத்திலேயே அந்த சுந்தரி அவருக்கு கிடைத்தாள். எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த சுப்பிரமணிய ஐயர் அன்னையை எடுத்துக்கொண்டு வந்து தனது இல்லத்தின் பூஜை அறையில் வைத்து நாள்தோறும் நறுமண மலர்களால் பூஜை செய்து வந்தார். இப்போது அந்த இல்லமே அன்னையின் அவதார பீடமாக பக்தர்களுக்கு காட்சி தருகிறது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்ட வரத்தையெல்லாம் வாரி வழங்குகிறாள்.

நெமிலி பாலாவின் உற்சவ விக்கிரகம் கொள்ளை அழகு. கைகளில் மாலையும், புத்தகமும் ஏந்திக்கொண்டு அபய வரத முத்திரைகளை காட்டிக் கொண்டிருக்கும்  ஸ்ரீபாலாவே சகல வித்தையை கட்டும் பிறப்பிடம். திருமணம், திருமகவு, திருமனை, திருக்கல்வி என வந்தவர்க்கெல்லாம் அருளை வாரி வழங்கி வருகிறாள். வேலூர் மாவட்டம், நெமிலியில் சத்திரத் தெருவில் கோயில் கொண்டிருக்கிறாள் அன்னை பாலா.