சாம்பல் துகள்களே சிவலிங்கங்களாக மாறிய அதிசயம்



மத்தியப்பிரதேச மாநிலம், அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள அமர்கண்டக், ‘தீர்த்த யாத்திரைகளின் அரசன்’ என்று வர்ணிக்கப்படும் பெருமை மிக்க தலம். நர்மதை மற்றும் சோன் நதிகள் உற்பத்தியாகும் இந்த இடம், விந்தியா, சாத்பூரா மற்றும் மைகால் (மேகலா) என்ற மூன்று மலைகளால் சூழப்பட்டுள்ளது.

அமர்கண்டக் சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பாண்டவர்கள் வனவாசத்தின்போது இந்த இடத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்ததாக ஐதீகம். இந்தியாவின் மிகப் புனிதமான நதிகளில் ஒன்று நர்மதை. அனைத்து மக்களின் பாவங்களால் மாசுபட்டு ஒரு கருப்புநிற பசுவாக மாறிய கங்கா நதி, நர்மதையில் மூழ்கி தன் பழைய பொலிவை மீண்டும் பெற்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

சூரியபகவானுக்கும் சாயா தேவிக்கும் பிறந்த தபதி, கிருதயுகத்தில் மன்னனாக விளங்கிய ருக்ஷா என்பவரை மணந்ததாகவும், தபதி நர்மதை நதியாக விந்தியமலையிலிருந்து பாய்ந்து பாரத தேசத்தைப் புனிதப்படுத்த வரம் கொடுத்ததாகவும், தபதியே நர்மதையாகப் பாய்ந்து வருவதாகவும் பவிஷ்ய புராணம் குறிப்பிடுகிறது. சரஸ்வதியில் நதி மூன்று நாட்களில் நீராட, கங்கை நதியில் ஒருநாளில் நீராட, நர்மதை நதியைப் பார்த்த மாத்திரத்திலேயே மக்களின் பாவங்கள் அகல்வதாக நம்பிக்கை.

சுமார் 1200 கி.மீ. தொலைவு பாயும் நர்மதை நதி உற்பத்தியாகின்ற அமர்கண்டக் தலத்தைச் சுற்றிலும் எண்ணற்ற தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், சட்டீஸ்கர் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களின் எல்லையைத் தொட்டவாறு இந்த அமர்கண்டக் அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. காளிதாசன் தன்னுடைய மேகதூதம் என்ற நூலில் இந்தத் தலத்தை அமர்கூட் என்று குறிப்பிட்டுள்ளார். மகாபாரதம், மத்ஸ்ய, கூர்ம மற்றும் ஸ்கந்த புராணங்களில் நர்மதை நதி பற்றிய குறிப்புகள் உள்ளன.

நர்மதை நதி மேகலா மலையில் உற்பத்தியாவதால் ‘மேகலாசுதா’, ‘மேகலா கன்யா’ என்றும், தவம் புரிந்துகொண்டிருந்த சிவபெருமானின் வியர்வையில் தோன்றியதால் ‘சங்கரி’ என்றும் ‘ருத்ர கன்யா’ என்றும் அழைக்கப்படுகிறாள். சிவபெருமானின் சுயம்பு மூர்த்தமான பாண லிங்கங்கள் நர்மதை நதியில் அதிக அளவில் கிடைப்பதால் நர்மதை மிகப் புனிதமாகப் போற்றப்படுகிறது.

கங்கை நதியைக் காட்டிலும் மிகப் பழமையானதாகக் கருதப்படும் நர்மதை நதியின் உற்பத்தி ஸ்தானமான அமர்கண்டக்கிலிருந்து கடலோடு கலக்கும் இடம்வரை சுமார் 2500 கி.மீட்டருக்கு ‘நர்மதா பரிக்ரமா’ என்ற புனித யாத்திரையை பல சாதுக்களும், யோகிகளும் மேற்கொள்கின்றனர். இவ்வாறு பரிக்ரமா முடிவதற்கு 3 ஆண்டுகள் பிடிக்கிறது. ஆனால், தற்போது ஒரே வாரத்தில் இந்தப் பரிக்ரமாவை முடிக்கும் வகையில் சுற்றுலா வசதிகள் உள்ளன. இந்நதியின் இரண்டு கரைகளிலும் 400க்கும் மேற்பட்ட புனித தீர்த்தக் கட்டங்கள் உள்ளன.

பித்ரு தேவதைகளின் புத்ரியாக கருதப்படும் நர்மதை நதியின் கரைகளில் செய்யப்படும் பிதுர் காரியங்களுக்கு சிறந்த பலன் உண்டு என்றும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் கடியிலிருந்து காப்பாற்றிக் கொள்ள நர்மதையை வணங்க வேண்டும் என்ற நம்பிக்கைகள் உள்ளன.

அமர்கண்டக்கிலிருந்து 8 கி.மீ. தொலைவில் ஜோகிலா என்று ஆறு உற்பத்தியாகும் ஜ்வலேஷ்வர் மகாதேவ் சிவாலயம் உள்ளது. தன்னுடைய பக்தனான பாணாசுரனின வில் அம்பைப் பயன்படுத்தி சிவபெருமான் திரிபுரங்களை சம்ஹரித்ததாகவும், அவற்றில் ஒன்றின் சாம்பல் கைலாய மலையில் விழுந்ததாகவும், மற்றொன்றின் சாம்பலை சிவபெருமான் பூசிக்கொண்டதாகவும், அமர்கண்டக்கில் விழுந்த மூன்றாவது கோட்டையின் துகள்கள் அனைத்துமே லிங்கங்களாக மாறியதாகவும் புராணங் கள் குறிப்பிடுகிறது.

பாணாசுரனின் பாணங்களால் அழிக்கப்பட்ட ஒரு கோட்டையின் துகள்களே நர்மதை நதியில் கிடைக்கும் ‘பாணலிங்கங்கள்’ என்று அழைக்கப்படும் சுயம்பு லிங்கங்களாகும். நர்மதை நதியில் கிடைக்கும் மிகப்புராதனமான இந்த சுயம்பு லிங்கங்களே சிவாலயங்களில் பாணலிங்கங்களாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றன.

அமர்கண்டக் தலத்தில் ஏராளமான சிவாலயங்கள் உள்ளன. இங்கு நர்மதை நதி உற்பத்தியாகும் நர்மதா குண்ட் மிகப் புனித தீர்த்தத்தலமாகவும் நர்மதா தேவி ஆலயம் இந்தியாவில் உள்ள சக்தித் தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றன. இந்த ஆலயத்தைச் சுற்றிலும் சிவபெருமான், விஷ்ணு, மகாலட்சுமி, சூரியன் என்று பல ஆலயங்கள் உள்ளன. வெள்ளைவெளேர் என்று வட இந்திய பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலய விமானங்கள் சுற்றிலும் உள்ள நீரில் பிரதிபலிக்க, அந்தக் காட்சி பக்தர்களின் மனதை கொள்ளை கொள்கிறது.

இங்குள்ள ஆலயத்தில் உள்ள ஒரு யானையின் சிலை குறிப்பிடத்தக்கது. கலை நயத்தோடு வடிக்கப்பட்ட இந்த யானையின் மீது பாகன் அமர்ந்திருக்கிறான். இந்த கல் யானையின் முன்பின் கால்களுக்கு நடுவே உள்ள குறுகலான இடைவெளியில் பக்தர்கள் நுழைந்து வெளியே வருகிறார்கள். இவ்வாறு நுழையும் பக்தரின் பாவங்கள் அனைத்தும் நர்மதா தேவியின் அருளால் அகன்று விடும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர். அருகில் குதிரை வீரன் சிலையொன்றும் உள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகரான போபாலிலிருந்து சுமார் 530 கி.மீ. தொலைவிலும் ஜபல்பூரிலிருந்து 230 கி.மீ. தொலைவிலும் அமர்கண்டக் அமைந்துள்ளது.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்