டியர் டாக்டர்டியர்

இனிய ஆங்கிலப்புத்தாண்டில் வாழ்க நலமுடன் என வாழ்த்தி மகிழ்வித்தமைக்கு நன்றி.

* இவ்வருடம் பனிக்காலம் மார்ச் மாத இறுதிவரை நீடிக்கும் என்ற ஒரு செய்தியே கவர் ஸ்டோரியை முழுவதுமாக வாசிக்கத் தூண்டியது. பெட்டிச் செய்திகளாக, பனிக்காற்று பற்றிய பாதுகாப்புத் தகவல்கள் ஒவ்வொன்றும் கதகதப்பாக இருந்தன. டயட்டீஷியன் ப்ரீத்தாவின், ‘டயட் டைரி’ மூலம் குளிர்காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. தெரியுமா என்று கேட்டு Buck wheat பற்றி அடுக்கடுக்காய் சொன்னது Wellness Special-ன் ஸ்பெஷல் டாப்பிக்.- சுகந்தி நாராயன், வியாசர் காலனி.


* நோய் தீர்ந்து பூரண குணமடைய மருந்து மாத்திரைகள் மட்டும் போதாது, மனஉறுதியும் தேவை என்ற அடிப்படை உண்மையை மனநல மருத்துவர் சேகர் ராஜகோபால் விளக்கியிருந்தார். அவரது கட்டுரை நோயாளிகளுக்குப் புத்துணர்வு அளிப்பதாக இருந்தது. வருடத்தின் தொடக்கத்தில் ‘வாழ்க நலமுடன்’ என்று வாழ்த்துடன் Wellness Special அமைந்திருந்தது மகிழ்வைத் தந்தது!- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* லேப்ரோஸ்கோப்பி பற்றி சமீபகாலமாக அதிகம் கேள்விப்பட்டு வருகிறோம். அது என்னதான் லேப்ராஸ்கோப்பியோ என்று நினைத்து வந்தேன். கடந்த இதழைப் படித்த பிறகுதான் தெளிவு கிடைத்தது. ஒரு நவீன தொழில்நுட்பம் பற்றி எளிமையான தகவல்களைத் தேடித்தேடி, அழகாகத் தொகுத்து அளித்துவிட்டீர்கள். - சி.கோபாலகிருஷ்ணன், கிழக்கு தாம்பரம்.

* ‘கேன்ஸரை பார்சலில் வாங்காதீர்கள்’ என்ற தலைப்பே விஷயத்தைச் சொல்லிவிட்டது. ஆன்லைனில் ஆர்டர் பண்ணி வாங்கும்போது பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவைத்தான் கொண்டு வந்து தருகிறார்கள். அதையே இன்றைய காலத்தில் நாகரிகம் என்றும் கருதுகிறார்கள். இந்த நவநாகரிக மோகம் கொண்டவர்கள் எல்லோருக்கும் எச்சரிக்கையூட்டும் படி இருந்தது புற்றுநோய் தொடர். பிளாஸ்டிக்கை உணவுப்பொருள் பயன்பாட்டில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டியது அவசியம் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.- நாராயண பாபு, மூவரசன்பேட்டை.

* கண்கள் தொடர்பாக அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் கிடைத்தது. மாறுகண் எதனால் ஏற்படுகிறது என்ற கண் நலம் காக்கும் தொடர் தந்த தகவல்களும் பயனுள்ளவையாக இருந்தன. உடற்பயிற்சி செய்ய விரும்புகிறவர்களுக்கும் செய்கிறவர்களுக்கும் சரியான வழிகாட்டி ‘ஜிம்முக்குச் செல்கிறீர்களா?’ என்று சொல்லலாம். - கோ.உத்திராடம், வண்டலூர்.

* மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வருத்தமளிக்கும் விஷயம். நோயாளி, மருத்துவர் என இருதரப்புக்குமே ஒரு சுமுகமான உறவு இருப்பது அவசியம். பிரச்னை தீர வேண்டும்!- கே.சுப்பிரமணியன், சத்தியமங்கலம்.