மயக்கமா... நடுக்கமா...* கவர் ஸ்டோரி

‘‘நடுக்குவாதம் (Parkinson) பற்றிய விழிப்புணர்வு மேலை நாடுகளில் 18-ம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. பல புத்தகங்கள், கட்டுரைகள் அப்போதே வெளியாகி இருக்கின்றன. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் பலருக்கு நடுக்குவாதம் பற்றி தெரியவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் நடுக்குவாத நோயின் தாக்கம் இப்போது அதிகமாக இருக்கிறது.


நரம்பு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகளோடு 10 நோயாளிகள் ஒரு நாளைக்கு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களில் 2 பேர் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். எனவே, பார்க்கின்ஸன் பற்றிய விழிப்புணர்வு இனியேனும் ஏற்படுவது காலத்தின் கட்டாயம்’’ என்கிறார் மூளை மற்றும் நரம்பியல் நிபுணரான செந்தில்நாதன்.நடுக்குவாத நோய் பற்றியும், அதனை வெல்ல நாம் மேற்கொள்ள வேண்டிய வழிகள் பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.

நடுக்குவாத நோய் என்பது...

நடுக்குவாத நோய் என்பது மூளையில் Dopamine என்கிற ரசாயன குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோயாகும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் இந்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு சமமாகவே இருக்கிறது.எப்படி கண்டுபிடிப்பது?நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் செய்யக்கூடிய வேலையிலேயே அதன் அறிகுறிகளை உணர முடியும்.


பார்க்கின்ஸன் உண்டானவர்களுக்கு அவர்களது இயல்பான வேகத்தில் தொய்வு ஏற்படும். மயக்கம், நடுக்கம் உண்டாகும். நடக்கும்போதும், உட்கார்ந்து எழும்போதும் தள்ளாடுவார்கள். சாதாரணமாக அமர்ந்து இருக்கும்போதேகூட கை, கால்கள், உதடுகள் நடுங்கும்.நடுக்குவாத நோய் வந்தவர்களுக்கு மூளைதான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும். இதன் காரணமாக கூன் விழுந்ததுபோல் மெல்ல அடி எடுத்து வைத்து நடப்பர், உட்கார்ந்து எழும்போது முன்புறம் அல்லது பின்பக்கம் விழுவதுபோல் எழுவர். தினமும் செய்யக்கூடிய வேலைகளை மெதுவாகவே செய்வார்கள்.

கை மற்றும் கால்களை இறுக்கமாக வைத்து நடப்பார்கள். பேசும்போது மெதுவாக முனகுவது போன்றே பேசுவர். எந்த வேலையும் தன்னிச்சையாக செய்ய முடியாத சூழ்நிலையில் தள்ளப்படுவர்.காரணம் இல்லாத நோய்நடுக்குவாத நோய் எதனால் தாக்குகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் காரணம் அறியப்படாத நோய்(Idiopathic disease) என்றுதான் நடுக்குவாதம் கூறப்படுகிறது. ஆனாலும், நடுக்குவாதம் சிலருக்கு ஏற்படக்கூடும் என்பதையும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

100 பேரில் ஒருவருக்கு மரபியல் கோளாறு காரணமாக ஏற்படுகிறது. தலையில் ஏற்படும் காயங்களாலும், வேதிப்பொருட்களின் தாக்கத்தாலும் நடுக்குவாதம் வரலாம். மேலும் தவறி விழுகிறவர்களுக்கும், மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் பார்க்கின்ஸன் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நோயைக் கண்டறியும் பரிசோதனைகள்மூளை சம்பந்தபட்ட நோய் என்பதால் முதலில் மூளை பாதிக்கப்பட்டு உள்ளதா என்று சிகிச்சையில் பார்க்கவேண்டும்.


Trodat scan அல்லது MRI scan எடுத்துப் பார்ப்பதால் நோயின் தாக்கம் தெரிந்து விடும். அதற்கேற்றார்போல் சிகிச்சையைத் தொடங்கலாம்.சிகிச்சைகள் என்ன?நடுக்குவாதம் என்பது நீரிழிவு, ரத்த அழுத்தம் போல வாழ்நாள் முழுவதும் சிகிச்சையும், கவனிப்பும் தேவைப்படும் நோயாகும். எனவே, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். மருந்து உட்கொள்வதைத் தவிர்த்தால் நோயின் தீவிரம் அதிகரிக்கும்.

பிறகு, அதிகரித்த நடுக்குவாதத்தைக் கட்டுப்படுத்த இன்னும் அதிகளவு வீரியம் கொண்ட மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டி வரும். மருந்துகள் வீரியமாகும்போது பின்விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மருந்துகள் உட்கொள்வதைத் தவிர்க்கவே கூடாது.

இத்துடன் பிஸியோதெரபி எடுத்துக்கொள்வது மிக முக்கியமாகும், அப்போதுதான் மூட்டுப்பகுதியின் இயக்கமானது சீராக இருக்கும். நடைப்பயிற்சி எடுத்துக்கொள்ளும்போது பழைய நிலைக்கு மாற வாய்ப்பிருக்கிறது. சிலர் அப்படி கைகளில் நடுக்கம் வரும்போது கை நடுங்குகிறதே என்று கையை பயன்படுத்தாமல் விட்டுவிடுவர். அப்படி செய்யும்போது நோயின் தாக்கம் இன்னும் அதிகமாகும். எக்காரணம் கொண்டும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை நிறுத்தக்கூடாது.


மருந்துகள் பலனளிக்காவிட்டால்...மருந்துகள் பயன்படுத்தியும் நோயாளியிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், இதய நோயாளிகளுக்கு பொறுத்தும் Heart pacemaker போல, Deep brain stimulation(DBS) என்பதைப் பொருத்த வேண்டியிருக்கும். நடுக்குவாத நோய் 60-65 வயதில் வயதான பிறகுதான் வரும் என்பதால் இளம்வயதில் கண்டுபிடிப்பது கடினம். அதேபோல் நரம்பியல் மருத்துவரை தவிர மற்ற மருத்துவர்களால் பார்க்கின்ஸனைக் கண்டுபிடிப்பது சற்று கடினம்.

உணவுமுறை மாற்றம்

Antioxidant நிறைந்த பழங்கள், கீரை, வேக வைத்த காய்கறிகளை சாப்பிடலாம். மாத்திரையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சேர்த்து பிஸியோதெரபி எடுத்துக்கொள்ளும்போது நோய் அதிகரிக்காமல் சீராக இருக்க வாய்ப்புள்ளது.பிஸியோதெரபி உதவி செய்யும்பிஸியோதெரபி ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.  சிலருக்கு காலில் பாதிப்பு அதிகமாகவும், கையில் பாதிப்பு அதிகமாகவும் இருக்கலாம் ஒவ்வொரு இணைப்பையும்(Joint) பார்த்துதான் பிஸியோதெரபி அதற்கு ஏற்றார்போல் கொடுக்கப்படும். பிஸியோதெரபியில் ஆயில் மசாஜ் கொடுக்கப்படுகிறது.

அதுவும்கூட மருந்து உட்கொண்டுதான் சிகிச்சை பெற வேண்டும். அட்டெண்டர்ஸ் அவசியம் நடுக்குவாதம் இருப்பவர்கள் தாங்களாகவே அனைத்து வேலைகளையும் செய்ய இயலாது. அவர்களுக்கு ஒரு துணை தேவைப்படும். எனவே, Attenders/Care givers பணி இதில் முக்கியமானதாகும். சிலருக்கு இந்த நோய் 65 வயதில் ஆரம்பித்து 80 வயதில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவே, அவருடன் ஒருவர் இருப்பது அவசியம். இதுபோல் அட்டெண்டர் ஒருவர் உடன் இருக்கும்போது  சிகிச்சையிலும் நல்ல பலன் தெரியும். நோயின் தாக்கம் அதிகரிக்காமல் குறையவோ அல்லது சீராக இருக்கவோ வாய்ப்பிருக்கிறது என்பது இதில் மகிழ்ச்சியான செய்தி.


தேவை மன வலிமை

நடுக்குவாத நோய் உள்ளவர்களுக்கு தங்களுக்கு இருக்கும் பாதிப்பு பற்றிய உணர்வு(Conscious) நன்றாகவே தெரியும். நோயின் முதல்நிலையில் நோயாளிகள் எதிர்கொள்ள மன வலிமை இருக்கும். ஆனால், காலப்போக்கில் மனம் சோர்ந்துவிட அதிக வாய்ப்பு உண்டு. ‘நம்மால் தனித்து எந்த வேலைகளும் செய்ய முடியவில்லையே... தொடர்ச்சியாக மாத்திரைகள் உட்கொள்கிறோமே’ என்ற கவலை அவர்களை மன அழுத்தத்துக்குள்ளாக்கிவிட நேரிடும்.

எனவே, நடுக்குவாத நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதும் சிகிச்சையின் முக்கிய கட்டமாக இருக்கும். அவர்கள் மன அழுத்தத்திற்கு போகும்போது அதற்கான மாத்திரையையும் சேர்த்து கொடுப்போம். சில நேரங்களில் Stage2,3 மன அழுத்தம் அவர்களுக்கு  அதிகரிக்கும்போது அதற்கான மாத்திரைகளும் சேர்த்துக் கொடுக்க வேண்டி உள்ளது. அப்படி கொடுக்கும்போது நோயின் தாக்கம் கட்டுப்பாட்டில் இருக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பிருக்கிறது.

தூக்க மாத்திரை உட்கொள்ளும்போதும் அதிலும் குறிப்பாக நோயின் தன்மை அதிகரிக்கும்போதும் இரவு நேரத்தில் கை, கால்கள் விறைப்படைந்து தன்னாலே ஆட ஆரம்பித்துவிடும். தூக்கம் கெடும். இதனால் தூக்கத்திற்கான
மாத்திரையும் கொடுக்க வேண்டும். நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கம் கெடாமல் இருக்க அவர்களுக்கு ஏற்றார்போல் குறிப்பாக நமது வேலையை மாற்றிக் கொள்வதும், அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் உணவு பரிமாறுவதும் அவர்கள் மீது நாம் வைத்து இருக்கும் அக்கறையை, நோயாளிகள் புரிந்துகொள்வார்கள்.

உறவுகளின் பங்களிப்புநடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் மேல் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதனால் திருவிழாக்கள், இல்லத்தில் நடைபெறும் விசேஷங்கள் போன்றவற்றில் அவர்களைத் தவிர்க்கக் கூடாது. நடுக்குவாதம் உள்ளவர்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தால், அவர்களைப் பாதுகாப்பாக கூடுதல் கவனம் எடுத்து அழைத்துச் செல்ல வேண்டும்.

நம்மைப்போன்று வேகமாக அவர்களால் செயல்பட முடியாது என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். முன்னரே திட்டமிட்டு பயணத்தைத் துவங்குவது நல்லது. முன்பதிவு செய்வது, வெளியிடங்களில் இருக்கும் பேட்டரி கார்களைப் பயன்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை நோயாளியின் உறவினர்கள் மேற்கொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.

பயணத்தின்போது அவர்களுக்கு தேவையான மருந்துகள் எடுத்துச் செல்வது அவசியம். வெளியிடங்களில் அல்லது பயணத்தின்போது அவர்கள் சாப்பிட சிரமமாக இருக்கும். ஆகவே, முன்கூட்டியே அவர்களுக்கு ஏற்ற இடம் தேர்வு செய்து அவர்களுக்கு ஏற்றார்போல் உணவு எடுத்து செல்வதும் இயற்கை உபாதைகள் கழிக்க உதவி செய்வதும் அவசியம்.
‘நாமும் இந்த குடும்பத்தின் ஓர் அங்கம். நம் குடும்பம் நம்மை ஒதுக்கிவிடவில்லை’ என்கிற உணர்வையும் மன நிறைவையும், நம்பிக்கையும் சுற்றத்தாரும் ஏற்படுத்தித் தர வேண்டியது முக்கிய கடமையாகும். விழிப்புணர்வு தேவை

60 வயதை தாண்டும்போது வழக்கத்திற்கு மாறாக மெதுவாக முதியவர்கள் தங்களுடைய வேலைகளை செய்வார்கள். நடுக்கம், பேச்சில் தடுமாற்றம், உட்கார்ந்து எழும்போது தவறி விழுவது போன்ற மாற்றங்கள் உண்டாகும். இவற்றை ‘வயதாவதால் ஏற்படும் இயல்பான தடுமாற்றம்’ என்று மட்டுமே அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அது பார்க்கின்ஸனின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிலர் நடுக்கம் ஏற்படும்போது நரம்புத்தளர்ச்சி என புரிந்துகொண்டு கண்ட மருந்துகளையும், லேகியங்களையும் வாங்கி உட்கொள்வார்கள். இது தவறு.  இதுபோன்ற அலட்சியம் காரணமாகவோ, அறியாமை காரணமாகவோ காலதாமதமாக நரம்பியல் மருத்துவரை இறுதியாக வந்து சந்தித்து ஆலோசனை பெறுவதையே பல நோயாளிகளிடமும் பார்க்க முடிகிறது. பொதுவாகவே காலதாமதமானது, நோய் குணமடையும் வாய்ப்புகளைக் குறைக்கும். நடுக்குவாத நோய் என்பது மருத்துவரைச் சந்தித்து எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறையாகும். எனவே, ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளை உணர்ந்து நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்! -

அ.வின்சென்ட்
படம் : ஜி.சிவக்குமார்