செல்லப்பிராணிகளின் பெற்றோருக்கு...
* கன்சல்டிங்
செல்லப்பிராணிகளை வாங்கியோ அல்லது தத்தெடுத்தோ நம் வீட்டிற்கு கொண்டு வரும் அந்த நாள், வாழ்க்கையின் அளவிலா சந்தோஷங்களை அள்ளிக் கொண்டுவரும் இனிய நாளாகத்தான் இருக்கும். ஆனால், நம் புதிய விருந்தினரை சந்தோஷமாக வரவேற்கும் நாம், அவற்றை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். இதற்கென கால்நடை வளர்ப்பு நிபுணர்கள் வழங்கும் சில முக்கிய ஆலோசனைகளை எல்லோரும் தெரிந்துகொள்வது நல்லது.
* உங்களால் முடியுமா?
செல்லப்பிராணி வளர்ப்பு என்பது ஒரு நீண்ட கால பொறுப்பு. நாய்கள் மற்றும் பூனைகள் சராசரியாக 10 முதல் 15 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. இவ்வளவு வருடங்கள் உங்களால் அவற்றை பார்த்துக் கொள்ள முடியுமா? நாய், பூனை இரண்டுக்குமே அதிக கவனிப்பு தேவை. உங்கள் செல்லப்பிராணிக்காக உங்கள் நேரத்தை ஒதுக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் நாய், பூனை வளர்ப்பு உங்களுக்கு ஒத்து வராது. அதற்கு பதில் குறுகிய ஆயுட்காலம் கொண்ட மீன்கள், பறவைகள் வளர்ப்பில் உங்கள் கவனத்தை செலுத்தலாம். அவற்றைப் பராமரிக்க குறைந்த நேரம் செலவழித்தாலே போதும் என்பதால் சுலபம்.

* பணம் செலவழிக்கத் தயாரா?
பொருளாதார நிலையை யோசிக்க வேண்டும். ஏனெனில் நாய், பூனை வளர்ப்பு செலவு மிகுந்தது. பிரத்யேக உணவு கொடுக்க வேண்டும். சில உயர்ரக ஊட்டச்சத்து உணவுகள் கொடுக்கும் செலவு, சீராக பராமரிக்கும் செலவு(Grooming), குழந்தைகளைப் போலவே அவ்வப்போது அட்டவணைப்படி தடுப்பூசிகள் போடும் செலவு, ஏதேனும் உடல்நிலை சரியில்லையென்றால் அடிக்கடி கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டிய செலவு என பல விஷயங்கள் உண்டு.
இன்னும் மருத்துவரிடம் கூட்டிச் செல்ல போக்குவரத்து செலவு, மருந்து மாத்திரை செலவு என நிறைய பணம் செலவாகும். இந்த செலவுகளையெல்லாம் சந்திக்கத் தயார் என்றால் மட்டுமே செல்லப்பிராணி வளர்ப்பைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும்.
* உங்கள் வாழ்க்கைக்கு பொருந்துமா?
உங்கள் வேலை கூட செல்லப்பிராணி வளர்ப்புக்கு ஒரு வகையில் தடையாக இருக்கலாம். நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்துவிட்டு, இரவு தாமதமாக வீட்டிற்கு வருபவராகவோ, அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் செய்பவராகவோ அல்லது சமூக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவராகவோ இருந்தால் உங்களால் உங்கள் செல்லப்பிராணியோடு நேரம் செலவழிக்க முடியாமல் போகும்.
நாய்கள், பூனைகளுடன் விளையாடுவது அவற்றை கொஞ்சுவது அவற்றோடு நிறைய நேரம் செலவிடுவது அவசியம். ஏனெனில், உரிமையாளரால் கவனிக்கப்படாமல் தனிமையில் விடப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, மூர்க்கத்தனமான நடத்தை சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என கால்நடை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
அதனால் உங்களின் வாழ்க்கைமுறை செல்லப்பிராணிகள் வளர்ப்பிற்கு ஏற்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.முழுவதுமாக தெரிந்துகொள்ளுங்கள்நாய்களிலும், பூனைகளிலும் ஏராளமான இனங்கள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த இனமாக இருந்தால் மட்டும் போதாது. சில வகை இனங்களின் குணநலன்கள் உங்களுக்கு ஒத்து வரக்கூடியதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, மிகப்பெரியதாகவும், மிகவும் மூர்க்கத்தனமாகவும் இருக்கும் அல்சேஷன் போன்ற நாய்களைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினம். இவற்றை திடகாத்திரமானவர்கள் அல்லது நாய் வளர்ப்பிற்கென்றே பிரத்யேகமாக வேலையாட்கள் வைத்திருக்கும் பணக்காரர்கள் மட்டுமே வளர்க்க முடியும்.
தத்தெடுக்கும் பிராணிகள் என்றால் அதன் வயது, அதன் முந்தைய உடல்நிலை மருத்துவ வரலாறு, தடுப்பூசிகள் போடப்பட்ட விவரம் போன்றவற்றை முந்தைய உரிமையாளரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு சான்றிதழ் ஒன்று கொடுப்பார்கள். அதை கேட்டுப் பெற வேண்டும். ஒரு நல்ல கால்நடை மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்ற பிறகே வாங்க வேண்டும். குறிப்பிட்ட இன நாயோ, பூனையோ அவற்றின் உணவுப் பழக்கம், தேவைப்படும் ஊட்டச்சத்து, பராமரிப்பு முறைகள் ஆகியவற்றைப்பற்றி நன்கு அறிந்துகொள்ளவேண்டும்.

* ஒவ்வாமை
உங்களுக்கோ, உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ நாய், பூனை முடிகளுக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஆஸ்துமா, வீஸிங் பிரச்னை உள்ளவர்களுக்கு நாய், பூனையின் முடிகள் மிக மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடும். சிலருக்கு தோல் ஒவ்வாமை கூட வரலாம்.தடுப்பூசி, குடற்புழு நீக்கம்பூனை, நாயின் வயது, எடைக்குத் தகுந்தவாறு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம். அதற்கு தேவையான மாத்திரைகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையோடு கொடுக்க வேண்டும். அதேபோல குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ரேபிஸ் மற்றும் பூச்சிகள் தடுப்பூசி போட வேண்டும்.
* வீடு ஏற்றதாக இருக்க வேண்டும்
நச்சுத்தன்மையுள்ள சிலவகை மாத்திரை, மருந்துகள், சுயிங்கம், சாக்லேட் போன்றவை செல்லப்பிராணிகளுக்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. செல்லப்பிராணியை வீட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்பு இவற்றைப் பற்றியெல்லாம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். கூரிய ஆயுதங்கள், மின்சார ஒயர்கள் போன்றவற்றை செல்லப்பிராணிகளுக்கு எட்டாத இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும். சிலர் சிறிய வாடகை வீடுகளிலும், அபார்ட்மென்ட்களிலும் குடியிருப்பார்கள். செல்லப்பிராணிகள் ஓடி, ஆடி விளையாடுவதற்கேற்ற இடம் இருக்காது. எப்போதும் ஒரே இடத்தில் கட்டிப்போட்டு இருப்பார்கள். இது அவற்றுக்கு மகிழ்ச்சியைத் தராது.
மாறாக மன அழுத்தத்தையே தரும். சில வகை வெளிநாட்டு இன நாய்களுக்கு நம் நாட்டின் வெப்பம் ஒத்துக் கொள்ளாமல் சரும நோய்கள் வரக்கூடும். குளிர்சாதன வசதியுள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருப்பார்கள். இந்த குளிர்சாதன வசதி எல்லோருக்கும் சாத்தியம் என்று சொல்ல முடியாது. எனவே எல்லோரும் வளர்க்கிறார்கள் நாமும் வளர்ப்போம் என்று கண்மூடித்தனமாக வாங்கி வரக்கூடாது. தோட்டத்தில் இருக்கும் சில நச்சுத் தாவரங்கள் நாய், பூனைகளுக்கு ஒத்துக் கொள்ளாது. அவற்றையும் சரி பார்க்க வேண்டும்.
#பயிற்சிகள் முக்கியம்
முன்பு போல மகிழ்ச்சியும், சுத்தமும் உங்கள் வீட்டில் இருக்க வேண்டுமென்றால் செல்லப்பிராணியை கூட்டி வந்தவுடன், முதலில் அதற்கு சிறுநீர், மலம் கழிப்பதற்கான பயிற்சியைக் கொடுக்க வேண்டும். காலை, மாலை இருவேளைகளிலும் எப்போதும் ஒரே நேரத்தில் வெளியே கூட்டிச் சென்று சிறுநீர், மலம் கழிக்க பழக்க வேண்டும். அப்போதுதான் அந்த நேரத்தில் வெளியே சென்றால் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற பழக்கம் மனதில் பதியும்.
வெளியாட்கள் வந்தால் அவர்கள் மீது பாயாமல் இருக்க, அக்கம் பக்கத்தவருக்கு தொந்தரவுகள் கொடுக்காமல் இருப்பதற்கு என ஒரு நல்ல பயிற்சியாளரை வைத்து நல்ல பழக்கங்களுக்கு பயிற்சிகொடுப்பது மிக அவசியம். இல்லையென்றால், அக்கம், பக்கத்தவரிடம் தினம் தினம் சண்டை போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்.
* இனப்பெருக்க தடுப்பு முறை
பெண் நாய் மற்றும் பூனைகளுக்கு அவற்றின் இனப்பெருக்க வயதுக்கு முன்பே குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துவிடவேண்டும். பொதுவாக ஆறு மாதங்களிலேயே இனப்பெருக்க வயதை அடைந்துவிடும். நான்கு அல்லது ஆறு மாதங்களில் Neutering முறை செய்யப்படுகிறது. இது உங்கள் செல்லப்பிராணியின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம். இதைச் செய்வதால் ஆண் விலங்குகளின் ஆக்ரோஷத்தைக் குறைக்க முடியும்.
பெண் விலங்குகளுக்கு வரக்கூடிய கருப்பை புற்றுநோய், கருப்பை சம்பந்தப்பட்ட இதர நோய்களிலிருந்தும் பாதுகாக்க முடியும். சிலர் வணிக ரீதியாக குட்டிகளை விற்பதற்கென்றே உயர்ந்த ரக பெண் நாய்களை வளர்ப்பார்கள். இது அவற்றின் ஆரோக்கியத்திற்கு கேடு. பலவிதமான பக்க நோய்களிலிருந்து உங்கள் செல்லப்பிராணியை இனப்பெருக்க தடுப்பு முறை பாதுகாக்கும்.இறுதியாக ஃபேஷனுக்காகவோ, வெட்டி பந்தாக்காகவோ நம்நாட்டின் தட்பவெப்பநிலைக்கு ஒத்துக்கொள்ளாத வெளிநாட்டு இன செல்லப்பிராணிகளை வளர்ப்பதைவிட, நம் நாட்டு நாய்களிலேயே நல்ல ரக நாய்களை வாங்கி வளர்க்கலாம். தெருவில் அனாதைகளாகத் திரியும் நாய்களை எடுத்தும் வளர்க்கலாம். அவற்றை பராமரிக்கும் நேரமும் மிகக் குறைவு. செலவும் அதைவிடக் குறைவு!
- உஷா நாராயணன்
|