வெல்லமே...



* உணவே மருந்து

வெல்லம் என்ற பெயரைக் கேட்டதுமே நாவில் உமிழ்நீரைச் சுரக்க செய்யும். பாயாசம், அதிரசம் போன்ற இனிப்பு உணவுப்பண்டங்களில் பிரத்யேகமான சுவையைக் கூட்டுவது வெல்லத்தின் தனித்துவமான சிறப்பம்சம். சுவை, மணம் என்பதைக் கடந்து, இந்த இனிப்பூட்டி தன்னகத்தே எண்ணற்ற மருத்துவகுணங்களையும் கொண்டுள்ளது என்பது பலரும் அறியாத செய்தியாகவே உள்ளது. அத்தகையோருக்கு இதனுடைய மருத்துவகுணங்கள் ரத்தினச்சுருக்கமாக இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது...



பொதுவாக கரும்புச்சாற்றில் இருந்துதான் வெல்லம் தயாரிக்கப்படுகிறது என்பது பலரும் அறிந்த ஒன்று. சில நேரங்களில், பனஞ்சாறு மற்றும் தேங்காய் ஆகியவற்றில் இருந்தும் இந்த இனிப்பு செய்யப்படுகிறது என்பது அறியாத விஷயம்.

நமது உடலில் காணப்படுகிற தூசுகள், தேவையில்லாத துகள்களை வெளியேற்றுவதற்கும், அதன்மூலம் சுவாசப் பாதை, நுரையீரல், உணவுக்குழாய், வயிறு மற்றும் பெருங்குடல், சிறுகுடல் ஆகியவை எவ்வித தடையும் இல்லாமல் செயல்படுவதற்கும் வெல்லம் உதவுகிறது.

சுற்றுச்சூழல் சீர்கேட்டில் இருந்து நம்மை முழுவதுமாகப் பாதுகாத்திடும் தலைசிறந்த ஏஜெண்டாக வெல்லம் திகழ்கிறது. இதை உறுதி செய்வதற்குப் போதுமான ஆராய்ச்சி முடிவுகளும், சான்றுகளும் நிறைய இருக்கின்றன.

அலோபதி மருத்துவத்தில் மூச்சுக்குழாய் அழற்சி(Bronchitis), ஆஸ்துமா போன்ற பாதிப்புகளுக்கு வெல்லம் ஒப்பற்ற மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உள்ளரங்கம் மற்றும் வெளியரங்கத்தால் உண்டாகுகிற சுற்றுச்சூழல் சீர்கேடுகளைச் சரி செய்வதில், வெல்லத்திற்கு இணை எதுவும் இல்லை.


சமையலில் சுவை மற்றும் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் வெல்லத்தில் இரும்புச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள், ஆக்சிஜனேற்றத் தடுப்பான்(Antioxidant), பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிகளவில் காணப்படுகின்றன.  

அலோபதி மருத்துவத்தில் மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பாதிப்புகளுக்கு வெல்லம் ஒப்பற்ற மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நிறைய வீடுகளில் திரிகடுகம்(மிளகு, திப்பிலி, சுக்கு) இருப்பதைப் போன்று வெல்லமும் அத்தியாவசியப் பொருளாக இடம் பெற்றுள்ளது. ஏனென்றால் தொண்டையில் உண்டாகும் தொற்றுக்கள், சாதாரண காய்ச்சல் போன்றவற்றை உடனடியாக தீர்க்கும் சக்திவாய்ந்த மருந்துப்பொருளாக இது உள்ளது.

வெல்லத்துண்டு சிறிதளவு, ஐந்தாறு துளசி இலைகள், இஞ்சி இம்மூன்றையும் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வர கடுமையான இருமல், அதிக களைப்பு ஆகிய பாதிப்புகள் உடனடியாக குணமாகும். இதன் காரணமாக சிமென்ட் தொழிற்சாலை, வெப்ப மின் நிலையங்கள்(Thermal Plant), நிலக்கரி சுரங்கம் போன்ற மாசுபாடுகள் அதிகம் உள்ள இடங்களில் பணியாற்றுபவர்களுக்குத் தினமும் குறிப்பிட்ட அளவு வெல்லம் உண்பதற்காக தரப்படுகிறது.

மருத்துவ குணம் நிறைந்த வெல்லம் என்றும் தனித்து செயல்படுவது கிடையாது. மிளகு, துளசி அல்லது உலர்ந்த இஞ்சியுடன்(சுக்கு) சேர்ந்தே நோய்களைக் குணப்படுத்துகிறது. உடலில் காணப்படுகிற நச்சுத்தன்மையை அகற்றவும், நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கவும், தினமும் 4 கிராம் வெல்லம் சாப்பிட்டு வர வேண்டுமென ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  
        
தொகுப்பு: விஜயகுமார்