புனர்வாழ்வு சிகிச்சையை மேம்படுத்த புதிய திட்டம்!



* செய்திகள் வாசிப்பது டாக்டர்

புனர்வாழ்வு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியவர்கள், மருத்துவர்களின் அறிவுரைகளபின்பற்றுகின்றனரா என்பதைக் கண்காணிக்கும் சிறப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

விபத்துகளால் பாதிக்கப்பட்டு நடமாட இயலாமல் இருப்பவர்களுக்கும், பிறவியிலேயே உடல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புனர்வாழ்வு சிகிச்சை(Rehabilitation Treatment) தேவைப்படுகிறது. இவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் புத்தாக்கப் பயிற்சிகளை அளிப்பதற்காகவும், இயன் முறைசிகிச்சைகள் மூலமாக அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வைப்பதற்காகவும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை கே.கே.நகரில் புனர்வாழ்வு சிகிச்சைக்கென பிரத்யேக மருத்துவமனை கடந்த 1979-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புனர்வாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
அவ்வாறு சிகிச்சை பெற்ற பலர், வீடு திரும்பியவுடன் மருத்துவ அறிவுரைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை என தெரிகிறது. இதன் காரணமாக ஓரளவு குணமடைந்தவர்களும் நாளடைவில் நடமாட இயலாமல் முடங்கிப் போகக்கூடிய நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதற்கு உரிய தீர்வு காணும் நோக்கில்தான் அரசு சார்பில் இப்புதிய திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.


உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சுகாதாரத் துறையினர், புனர் வாழ்வு சிகிச்சைத் துறையினரிடையே ஓர் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் வாயிலாக, நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சைக்குப் பிந்தைய அவர்களது உடல்நிலையைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் சிலரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். இதற்கென மாவட்ட வாரியாக பொது மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்புப் பயிற்சியளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘சோதனை முயற்சியாக இத்திட்டத்தை முதல்கட்டமாக சென்னையில் அமல்படுத்தியுள்ளோம். இதையடுத்து பிற மாவட்டங்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்’ என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இதயா