தும்மினால் ஆயுசு நூறா?!



* Sinus Science

‘‘தும்மினால் ‘ஆயுசு 100’ என்பார்கள். அதுவே இரண்டாவது முறை தும்மினால் ‘ஆயுசு 200’ என்றும் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், இப்போது அப்படி இல்லை. ஏனென்றால் தும்மியவர்கள் எல்லாம் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என்பதற்கு எந்த விதமான அறிவியல் ஆதாரமும் இல்லை. ஏனெனில் அடிக்கடி இருமிக்கொண்டும், தும்மிக்கொண்டும் இருக்கும் நபர்களில் பலருக்கும் சைனஸ் பாதிப்பு இருக்க வாய்ப்பு அதிகம்’’ என்கிறார் பேராசிரியரும் பொதுநல மருத்துவருமான முத்துச்செல்லக்குமார். சைனஸ் பற்றி மேலும் விளக்கமாகக் கேட்டோம்...


சைனஸ் என்றால் என்ன?

நமது மூக்கைச் சுற்றி பக்கத்திற்கு 4 வீதம் மொத்தம் 8 காற்றுப் பைகள் உள்ளன. கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதி, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், மூளை மூக்கு ஆகிய இடங்களில் இந்த காற்றுப் பைகள் மூக்கின் இரண்டு பக்கமும் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப்பைகள் நாம் சுவாசிக்கும் காற்றை குறிப்பிட்ட வெப்பநிலையில் சுவாச மண்டலத்திற்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளைத்தான் சைனஸ் என்று சொல்கிறோம்.

எப்படி ஏற்படுகிறது?இந்த காற்றுப் பைகளின் உட்புறத்திலுள்ள சவ்வுப்படலம் சுரக்கும் திரவம் நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரப்படுத்தி, சுவாசப் பாதைக்கு அனுப்புகிறது. சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், திரவம் வெளியேற முடியாமல் காற்றுப் பையிலேயே தங்கி அடைபட்டு போய்விடும். மேலும் சவ்வுப்பகுதி அழற்சியால் வீக்கமடைந்துவிடும். அதன் உட்சுவர் தடிமனாகும். தேங்கிய சவ்வு நீர் தொற்றுகளினால் சளியாக மாறிவிடும்.


இப்படித்தான் சைனஸ் அழற்சி ஏற்படுகிறது. அழற்சிக்கான காரணங்கள்அலர்ஜி எனப்படும் சுவாச ஒவ்வாமையும், அதனால் ஏற்படும் நாசி அழற்சியும்தான் சைனஸ் பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. நாசி அழற்சிக்கு வீட்டுத் தூசி முக்கிய காரணமாக உள்ளது. வீட்டுத் தூசியில் இருக்கும் நுண்ணிய பூச்சிதான் அலர்ஜி எனப்படும் நாசி ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. மேலும் பிடிக்காத வாடை, மகரந்த தூள், மரத்தின் பொடி, வாயுக்கள் ஆகியவையும் நாசி ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

பல்வேறு பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை கிருமிகளின் தொற்றாலும் சைனஸ் பாதிப்பு ஏற்படலாம் அல்லது அவை ஏற்கெனவே ஏற்பட்ட பாதிப்பை அதிகரிக்கச் செய்யலாம். பல்வேறு பிறவிக் கோளாறுகள், மூக்குத்தண்டு வளைந்திருப்பது, முகம் மற்றும் மூக்குப் பகுதியில் ஏற்படும் காயங்கள் ஆகியவையும் சைனஸ் திரவத்தை அடைத்து தடை செய்வதால் சைனஸ் அழற்சி பாதிப்பு ஏற்படலாம்.

இரண்டு வகை சைனஸ்சைனஸில் இரண்டு வகைகள் உள்ளன. குறுகிய கால சைனஸ் அழற்சி பாதிப்பு 3 வாரங்கள் வரை இருக்கும். சில தொந்தரவுகளுடன் தொடங்கி, பிறகு நோயாளிக்கு குணம் கிடைத்து தொந்தரவுகள் குறைந்துவிடும். இது பெரும்பாலும் வைரஸ் தொற்றால், குறிப்பாக ஜலதோஷத்தினால் ஏற்படும்.


நீண்ட கால சைனஸ் அழற்சி என்பது 3 வாரங்களுக்கு மேலும் தொடரும். இவர்களுக்கு தொந்தரவுகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இது பெரும்பாலும் ஒவ்வாமையினால் ஏற்படும். அறிகுறிகள் என்ன?நோயின் தன்மையைப் பொறுத்தும், வகையைப் பொறுத்தும் சைனஸ் அறிகுறிகள் மாறுபடும்.

குறுகிய கால சைனஸ் அழற்சி இருப்பவர்களுக்கு, மூக்குப் பகுதியில் அதிக ரத்த ஓட்டம் ஏற்பட்டிருக்கும். தொண்டைக் கரகரப்புடன் இருமல் இருக்கலாம். தொண்டைப் பகுதியில் இருந்து கபம் வெளிப்படும். மூக்கிலிருந்து நீர் ஒழுகலாம். லேசான காய்ச்சல் ஏற்படலாம். சைனஸ் உள்ள முகப்பகுதியில் வலி ஏற்படலாம். தலைவலி, பல் வலி ஏற்படலாம். மூக்கடைப்பு காரணமாக இவர்களால் வாசனையை உணர முடியாது. உடல் அசதியும் களைப்பும் ஏற்படலாம்.

நீண்ட கால சைனஸிலும் குறுகிய கால சைனஸ் அழற்சியில் நாம் பார்த்த பல்வேறு தொந்தரவுகள் இதிலும் இருக்கும். ஆனால் இந்தப் பாதிப்பில் அவை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இதில் பாதிப்பு அதிகரித்துச் செல்ல வாய்ப்புகளும் உண்டு. நாசி ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வரும் தும்மலுக்கு அடுக்குத் தும்மல் என்றே அடைமொழி தந்துவிட்டார்கள். தலைவலி, தலை பாரம் அதிகமாக இருக்கும். தலைவலி காலையில் எழும்போது அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் இன்னும் அதிகமாகும். எந்த வாசனையையும் உணர முடியாத நிலை ஏற்படும். மூக்கிலிருந்து துர்நாற்றம் ஏற்படும்.

பரிசோதனைகள் பற்றி...

முகம் மற்றும் சைனஸ் உள்ள பகுதியில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் செய்வதன் மூலம் இதன் பாதிப்பை நன்கு அறிய முடியும். மேலும் எண்டோஸ்கோப்பி எனப்படும் பரிசோதனையும் செய்வார்கள். நாசி துவாரத்தின் வழியாக ஒரு சிறிய, மெல்லிய, நெகிழ்வான மற்றும் ஒளி-கேமரா இணைக்கப்பட்ட குழாயைச் செலுத்தி நேரடியாக பாதிக்கப்பட்ட சைனஸை பார்த்து நோயின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இவர்களுக்கு பொதுவான ரத்தப் பரிசோதனைகள் செய்வதுடன், அலர்ஜிக்கான காரணங்களைக் கண்டுபிடிக்கவும் பல்வேறு சிறப்பு ரத்தப் பரிசோதனைகள் மற்றும் தோல் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.
 
பிற பாதிப்புகள்

முறையாக சிகிச்சை செய்யாத நீண்ட கால சைனஸ் பிரச்னையால் பாலிப்ஸ் எனப்படும் மெல்லிய கட்டிகள் நாசியின் உட்பகுதியில் ஏற்படலாம். எந்த வாசனையையும் உணர முடியாத நிலை ஏற்படும். தொற்று கண்களைச் சுற்றி பரவலாம். கபால எலும்புகளுக்கும் அழற்சி பரவலாம். இந்த அழற்சி மூளைக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதனால் மூளையில் சீழ்க்கட்டிகள் ஏற்படலாம்.


மருத்துவ சிகிச்சைகள்

நம் நாட்டில் சைனஸ் பிரச்னைக்கு பல்வேறு மருத்துவ முறைகளிலும் சிகிச்சை அளிக்கிறார்கள். வீட்டு சிகிச்சை அல்லது பாட்டி வைத்தியத்தில் நாசியை உப்பு நீரினால் சுத்தம் செய்வார்கள். இதனை சைனஸ் லாவேஜ் என்று அழைப்பார்கள். முகத்தில் வலி உள்ள இடங்களில் மெல்லிய துணிகளைக் கொண்டு ஒத்தடம் தருவார்கள்.

ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து இறக்கி, அதில் மென்தால் அல்லது யூகலிப்டஸ் சேர்த்து வெளிப்படும் நீராவியை உள்ளிழுத்து சுவாசிப்பார்கள். நவீன மருத்துவத்தில் முதலில் நோயாளியைப் பரிசோதனை செய்து நோயை உறுதிப்படுத்துவதுடன் அதன் தன்மை, எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து அதற்கேற்ப சிகிச்சை செய்வார்கள். ஒவ்வாமை இருந்தால் அதைத் தடுக்க பல்வேறு ஒவ்வாமைக்கான மருந்துகளையும் பயன்படுத்துவார்கள். இவை உட்கொள்ளும் மற்றும் நாசியின் வழி உள்ளிழுக்கும் மருந்துகளாக கிடைக்கின்றன.

வலி நிவாரணிகள்

தலைவலி, பல்வலி, முகவலி உள்ளவர்களுக்கு தற்காலிக நிவாரணம் தர சில வலி நிவாரணிகளை பயன்படுத்துவார்கள். சைனஸ் அழற்சி மற்றும் வீக்கத்தைக் குறைத்து நோயாளிக்கு நிவாரணம் தர நாசி வழி பயன்படுத்த பல்வேறு ஸ்டீராய்டு மருந்துகளும் உள்ளன.

குறிப்பாக நீண்ட கால சைனஸ் அழற்சி உள்ளவர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும். ஆனால், இதனைத் தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனைப்படியே பயன்படுத்த வேண்டும். தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளும் இவர்களுக்குக் கொடுக்கப்படும். அதனை மருத்துவர்களின் ஆலோசனைப்படி தகுந்த அளவில், குறிப்பிட்ட நாட்கள் வரை முறையாக பயன்படுத்த வேண்டும். பாக்டீரியா கிருமிகளுக்கும், பூஞ்சை கிருமிகளுக்கும் இவ்வகையில் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இப்படி ஒரு பக்கம் தொந்தரவுகளைக் குறைப்பதற்கும், மற்றொரு  பக்கம் நோய்க்குத் தீர்வு காணவும் சிகிச்சை அளிக்கப்படும்.

அறுவை சிகிச்சைகள் எப்போது?

சிலருக்கு அறுவைசிகிச்சை தேவைப்படலாம். மூக்கு குறுத்தெலும்பு வளைந்தவர்களுக்கு அதனை சரி செய்யவும், பாலிப் எனப்படும் கட்டி வளர்ந்தவர்களுக்கு அதனை அகற்றவும், சைனஸ் வழிப் பாதைகளில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யவும் இந்த நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படும்.

வராமல் தடுப்பது எப்படி?

நோயாளி புகைப்பிடிப்பவராக இருந்தால் அதை முதலில் நிறுத்த வேண்டும். சுவாச நோய்த் தொற்றுகள் உள்ளவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். வீட்டுத்தூசிக் கிருமிகள் அதிக வெப்பத்தில் அழிந்துவிடும் என்பதால் மெத்தை உறைகள், தலையணை உறைகள் ஆகியவற்றை கொதிநீரில் அழுத்தித் துவைத்துப் பயன்படுத்த வேண்டும். தூசி படியாத மெத்தை விரிப்புகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

தரை விரிப்புகளை வெற்றிட சுத்திகரிப்பு கருவிகளால் சுத்தம் செய்து தூசிகளைப் போக்க வேண்டும். குளிரூட்டி பெட்டியின் வடிகட்டியைக் கழற்றி அதை குறிப்பிட்ட காலத்தில் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் பூஞ்சைக்காளான் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். தரை, சுவர், விரிப்புகள், அலங்காரத்துணிகள் என எல்லாவற்றையும் சுத்தம் செய்து, வீட்டில் தூசி, ஒட்டடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஜன்னல் கதவின் இடுக்குகளை அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.

வெளியில் செல்லும்போது முகமூடி அணியலாம் அல்லது தூய்மையான துணியையே வடிகட்டியாக மாற்றலாம். இது வெளிப்புற ஒவ்வாமையைத் தடுத்து அதை குறைக்கும். நோயின் அறிகுறிகள் தென்படும் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்று சிகிச்சை செய்வதன் மூலம் இந்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவதோடு மேலும் பிற பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

- க.கதிரவன்