Medical Trends* ரிலாக்ஸ்

குதிரைவாலியில் என்ன இருக்கு?!

குதிரைவாலி(Horse gram) என்கிற தானியத்தில் புரதம், நார்ச்சத்து நிறைவாகவும் கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இது கொழுப்புத் திசுக்களில் இருந்து கொழுப்பை நீக்க உதவுவதோடு, அதன் அளவை உடலில் கட்டுப்படுத்துகிறது.


நீண்ட நேரம் உங்களை சாப்பிட்ட திருப்தியோடு வைக்க உதவும். இதை ஏதாவது ஒரு வடிவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, எடை குறைக்க விரும்புகிறவர்கள் இதை முயற்சிக்கலாம்.

இன்ஹேலர் அவசியமா?

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களில், 37 சதவீதம் பேர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர். 20 சதவீத முதியவர்கள் ஆஸ்துமா நோயுடனே உயிரிழக்க நேரிடுகிறது. ஒட்டுமொத்தமாக, இப்புள்ளி விபரங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது அலட்சியமாக இருந்து விடக்கூடாது. நடைமுறை வாழ்க்கை சூழலில் தேவைப்படும்போது இன்ஹேலரைப் பயன்படுத்துவது நல்லது.

கொஞ்சம் குடித்தாலும் தப்புதான்

‘கொஞ்சமாக பருகும் ஆல்கஹால்கூட புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்’ என்று ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு Cancer இதழில் வெளியாகியுள்ளது. மதுப்பழக்கம் பூஜ்ஜிய நிலையில் இருக்கையில் பெருங்குடல், வயிறு, மார்பகம், புரோஸ்டேட் மற்றும் உணவுக்குழாய் ஆகியவை தொடர்பான புற்றுநோய்களின் ஒப்பீட்டு அளவில் ஒட்டுமொத்தமாக புற்றுநோய் ஆபத்துகள் குறைவாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடற்பயிற்சியை தேர்ந்தெடுங்கள்

உங்கள் மருத்துவர் அல்லது உடற்பயிற்சியாளரின் ஆலோசனைப்படி ஏதாவது ஒரு வகை உடற்பயிற்சியை உங்களுடைய வாழ்வில் ஒரு பகுதியாக இருக்கும்படி வழக்கப்படுத்திக் கொள்ள தீவிரமாக முயற்சி செய்யுங்கள். விறுவிறுப்பான நடைப்பயிற்சி, குறுகிய ஜாக்கிங், ஜிம் சார்ந்த உடற்பயிற்சிகள், நீச்சல், ஜூம்பா அல்லது யோகா பயிற்சிகளில் உங்களுக்கு சிறந்ததாக உணரக்கூடிய ஒரு பயிற்சியைத் தேர்வு செய்து அதை தினசரி செய்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அல்சைமருக்கு கீட்டோ டயட்

குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவை உட்கொள்கிற Ketogenic உணவு முறையானது அல்சைமர் நோய்க்கு எதிராக போராட உதவும் என்றும் அதன்படி எலிகளில் மேற்கொண்ட புதிய ஆய்வில், நியூரான்களை மரணத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் அல்சைமர் நோயில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்வதை Ketogenic உணவு முறை என்கிறோம். புரதம் மற்றும் கொழுப்பிலிருந்து அதிக கலோரிகளையும், கார்போஹைட்ரேட்டில் இருந்து குறைவான கலோரியையும் பெறும் வகையில் இந்த உணவு முறை உள்ளது. இதில் சர்க்கரை, சோடா, Pastries மற்றும் White bread போன்ற எளிதில் ஜீரணிக்கும் கார்போஹைட்ரேட்டுகள் எடுத்துக்கொள்வது குறைக்கப்படுகிறது.

சருமம் சரியாகட்டும்!

உடலில் ஏற்படும் நீரிழப்பும், குளிர்காலத்தின் குளிர்ந்த காற்றும் உங்கள் சருமத்தை உலர வைத்து சீரற்றதாக மாற்றுகிறது. உலர்ந்த சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் அமுதம் போன்றது. உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், புதிது போன்று சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வெளிப்புறமாக இதை பயன்படுத்துங்கள்.

இது உங்கள் சருமம் சீர்குலைவதை தடுப்பது மட்டுமல்லாமல், அடிப்படை இணைப்புத் திசுக்களையும் பலப்படுத்துகிறது. உங்கள் தினசரி உணவில் சுத்தமான நெய்யினை சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் உடலை சூடாக வைத்திருப்பதோடு, குளிர்கால வறட்சியை சரியாக கையாள்வதற்கும் உதவுகிறது.