மிஸ் பண்ணிடாதீங்க!* Reminder

தமிழகம் முழுவதும் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள போலியோ முகாம்கள் மூலம் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக, 1994-இல் இருந்து ஆண்டுதோறும், ஜனவரி, மார்ச் ஆகிய மாதங்களில் 2 தவணையாக ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் போலியோ பாதிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

போலியோ ஒழிக்கப்பட்ட காரணத்தால் கடந்த ஆண்டு முதல் ஒரு தவணையாக மட்டுமே சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நிகழாண்டுக்கான தேசிய அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டில் தமிழகத்தில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

வழக்கமாக 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படும். ஆனால், தற்போது ஒரே தவணையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதால், 50 ஆயிரம் முகாம்கள் அதற்காக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இதயா