வர்லாம்... வர்லாம் வா...தன்னம்பிக்கையாளர்களின் உளவியல்

‘நெருப்புடா’ பி.ஜி.எம்மில் ரஜினி நடந்து வரும்போது நிஜமாகவே அதிர்கிறதுதானே...‘வர்லாம்... வர்லாம் வா... பைரவா’ பாட்டைக் கேட்டாலே பரபரப்பு பற்றிக் கொள்கிறதுதானே...ஆமாம்... தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட ஒரு நாயகனை திரையில் பார்க்கும்போது சிலிர்த்துப் போய்விடுகிறோம்தான். அப்படி யாரையாவது எங்கேனும் கேள்விப்படும்போது ஆசைப்படுகிறோம்தான்.

நிஜ வாழ்க்கையில் குணச்சித்திர நடிகராகவும், காமெடியனாகவுமே இருக்கும் நாமும் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க ஒரு நாயகனாக உருவாவது
உளவியல் ரீதியாக சாத்தியம்தானா? அல்லது மரபியல் ரீதியாகவே இவ்வளவுதான் என்று தீர்மானிக்கப்பட்டுவிடுகிறதா?உளவியல் மருத்துவர் அனுஷாவுக்கு இந்தக் கேள்வி.

‘‘தன்னம்பிக்கை என்கிற மனோபாவம் பெற்றோரிடமிருந்து மரபு வழியாகவே ஒரு குழந்தைக்கு வருகிறது. இதனால்தான் சிலர் இளம்வயதிலேயே அதிக தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். அதேபோல் 10 வயது வரையுள்ள காலத்தில் நேர்மறையான சூழலில் வளர்க்கப்படுகிற குழந்தைகளும் எதிர்காலத்தில் தன்னம்பிக்கை மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள்.

பிற்காலத்தில் சாதனையாளராக மாறிய பலரின் இளமைப் பருவத்தை கவனித்தால் இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆகவே, வளரும் குழந்தையின் சூழ்நிலைகளை சரியானதாக அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை பெற்றோர், ஆசிரியர், குடும்பத்தார் அனைவருக்குமே உண்டு’’ என்பவரிடம், அப்படியென்றால் ஒருவர் தன்னம்பிக்கை மிக்கவராக காலப்போக்கில் மாற்றிக் கொள்வது சாத்தியமில்லையா என்று கேட்டோம்.

‘‘உளவியல் ரீதியாக எண்ணங்கள் என்பவை குளத்தில் எறிந்த கல் போன்றவை. தண்ணீரில் விழுந்த கல்லினால் எழும் வட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டே போவதுபோல மனதில் எழும் எண்ணங்களும் பெரிதாகிக் கொண்டே போகும்.

‘எனக்கு திறமையுண்டு... என்னால் வெற்றி பெற முடியும்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறவர்கள் ஒருநாள் அதேபோல் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துவிடுவார்கள். இதையே விவேகானந்தர் ‘எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய்’ என்று வலியுறுத்தினார்.

மரத்தை வேரோடு பிடுங்கி எறியும் பலமுடையது யானை. ஆனால், அதே யானை தன் வலிமையை உணராமல் சர்க்கஸில் பாகனுக்குக் கட்டுப்பட்டு ஸ்டூல் மேல் ஏறி நிற்பதைப் பார்க்கிறோம். தன் வலிமையை உணராதவர்கள் எல்லோருமே அந்த சர்க்கஸ் யானையைப் போன்றவர்கள்தான்.

சந்தர்ப்பம், சூழ்நிலையால் என்னால் வெற்றி பெற முடியவில்லை என்று சொல்லும் பலரைப் பார்க்கிறோம். வெற்றி பெற்றவர்களும் அதே சவால்களைத்தான் சந்தித்திருப்பார்கள். பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதிலும், எப்படி அதைத் தாண்டி வருகிறார்கள் என்பதிலுமே வெற்றி யாளர்களின் மனோபாவம் அடங்கி இருக்கிறது.  ஆகவே, அணுகு முறையை மாற்றிக் கொண்டால் நம்மாலும் வெற்றியாளர்களாக மாற முடியும்’’ என்கிறார் அனுஷா.

- கௌதம்