மதுரையில் இன்னோர்கண்ணகி



நைட்டிங்கேல்களின் கதை

நீதியை நிலைநாட்ட மதுரையை எரித்த கண்ணகி நமக்கு வரலாறு. அந்தப் பெயர் ராசியோ என்னவோ, அநீதிகளுக்கு எதிராகப் போராடும் குணம் கொண்டவராகவே மதுரை மருத்துவ வட்டாரங்களில் அறியப்படுகிறார் செவிலியர் கண்ணகியும்!‘அநீதிகளை சகித்துக்கொண்டு வாழ வேண்டிய தேவை எந்த செவிலியருக்கும் இல்லை.

உழைப்புக்கான அங்கீகாரம், உரிமைக்கான உத்தரவாதம் அவர்களுக்கு நிச்சயம் தேவை’ என்று தமிழகத்தில் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியரின் உரிமைக்குரலாக உயர்ந்து நிற்கிறார் செவிலியர் கண்காணிப்பாளர் கண்ணகி.

சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏ., அணியில் இருந்தவர் இவரது தந்தை ஆர்.எம்.பிச்சை. அதனால் இந்த துணிச்சல் அப்பாவிடமிருந்தும், உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் குணம் அம்மாவிடமிருந்தும் வந்திருக்கலாம் என்கிறார் கண்ணகி.

‘‘செவிலியர் இல்லாமல் மருத்துவமனை இல்லை. டாக்டர், பார்மசிஸ்ட், லேப் டெக்னீஷியன் என தேவைப்பட்டால் அத்தனை அவதாரங்களையும் எடுத்து உயிர்காக்கும் பணியில் உற்சாகமாக வலம் வருகிறவர்கள் அவர்கள்.

கூடுதல் வேலைச்சுமை, குடும்ப பொறுப்பு இரண்டுக்கும் இடையில் சுழன்றாலும் அவற்றை செவிலியர்கள் காட்டிக் கொள்வதில்லை. பிரச்னைகள் வந்தால் பலியிடப்படும் தலைகளும் இவர்களே. அர்ப்பணிப்பு மிக்க அவர்களின் சேவை முறைப்படி அங்கீகரிக்கப்
படுவதில்லை. தன்னலமற்ற சேவையை பாராட்டி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட செய்திகளும் அபூர்வம்தான்’’ என்கிறார் வருத்தமும் கோபமும் கலந்த குரலில்.

பள்ளிப்படிப்பில் தொடர்ந்து முதலிடம்... நினைவாற்றலில் வியக்க வைக்கும் ரகம்.... ஏ.என்.எம். என்ற இரண்டு ஆண்டு பயிற்சியில் மாநில அளவில் முதலிடம்... அடுத்து கால்பதித்த நர்ஸிங் படிப்பிலும் மாநில அளவில் முதல் இடம், தங்கப்பதக்கம் என்று அவரது கல்வி வாழ்க்கையைக் கேள்விப்பட்டால் ஆச்சரியம் அதிகரிக்கிறது.

அதேபோல் நர்சிங் பயிற்சியை முடித்து பணியில் சேர்ந்துவிட்டோம் என்று படிக்கும் ஆர்வத்தை விடாமல் ஆபரேஷன் தியேட்டர், கார்டியாலஜி, லேபர் ஸ்பெஷல் டிரெயினிங் என அடுத்தடுத்து பயிற்சிகளையும் தொடர்ந்து முடித்திருக்கிறார் என்பது கூடுதல் ஆச்சரியம்.

மருத்துவமனைகளில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு சகித்துக் கொண்டு செல்லும் செவிலியர்களுக்கு மத்தியில் எதிர்கேள்விகள் கேட்கும் குணம் கொண்டவர் என்பதை சக செவிலியர்களும் பெருமையோடு சொல்கிறார்கள். இந்த துணிச்சல் காரணமாகவே தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தின் மாநில இணை செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகளும் தேடி வந்திருக்கிறது.

‘‘நான் செவிலியர் பணியில் சேர்ந்த ஒன்றரை ஆண்டில் இலங்கையில் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. 1985-ம் ஆண்டில் தமிழக அரசு மருத்துவக் குழுவை அனுப்பியது. எல்லோரும் இலங்கை செல்ல பயந்தார்கள். ஆனால், அந்தக் குழுவுடன் நான் செல்ல விரும்பினேன். அதற்கான அனுமதியையும் போராடிப் பெற்றேன். என் வாழ்வில் அது மறக்க முடியாத அனுபவம். 16 பேர் ெகாண்ட குழு அது. அப்போது எனக்கு திருமணம் கூட நடக்கவில்லை.

இலங்கையில் ‘காங்கேசன் துறை’யில் முகாம் துவங்கியது. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கும். தமிழர்கள் உடலில் வெள்ளைத் துணியைக் கட்டிக் ெகாண்டு கையில் குச்சியுடன் மருந்து போட வருவார்கள். தமிழ் பேசும் நம்மைக் கண்டால் அவர்களது கண்களில் ஒரு நிம்மதி படரும். வீட்டில் காயம்பட்டு இருப்பவர்களுக்கும் மருந்து வாங்கிச் செல்வார்கள். ஜாப்னாவில் அடுத்த முகாம் நடந்தது. அங்கு வந்திறங்கிய மருந்துகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. மருந்துகளை பிரித்து பத்திரப்படுத்த ஒரு தற்காலிக பார்மஸி வசதியை எனது முயற்சியில் பெற்றேன்.

மருத்துவ முகாம் முடிந்த நேரத்தில் பார்மஸிக்கு வந்த மருத்துகளை பிரித்து அடுக்கி காலாவதியான மருந்துகள், தேவையற்ற மருந்துகளையும் திருப்பி அனுப்பினேன். இதனால் சிகிச்சை அளிப்பதும், மருந்து கொடுப்பதும் எளிதானது. அங்கிருந்த ஒன்றரை ஆண்டுகளும் பார்மஸி ெதாடர்பான பதிவேடுகளை உருவாக்கியதோடு, தொடர்ந்து கண்காணித்தும் வந்தேன். எனது ஆர்வம் மிக்க பணியைப் பாராட்டி ரெட் கிராஸ் மூலம் ஒரு லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்கள்.

தமிழகம் திரும்பிய பின் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் சேர்ந்து ஓர் ஆண்டு படிப்பை முடித்தபோது அப்பா, அம்மா உடல்நலம் குன்றி படுக்கையில் விழுந்தனர். அவர்களை கவனித்துக் கொள்வதோடு குடும்பம், குழந்தை என பொறுப்பு களும் கூடியது. அதன் பின் 2001-ம் ஆண்டில் மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்சாக பணியில் சேர்ந்து நர்சிங் கண்காணிப்பாளர் பணியில் தொடர்கிறேன்.

நான் பணிபுரியும் இடங்களில் இரண்டு மாதங்களில் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிடுவேன். செவிலியர் சொந்தப் பிரச்னை வரை என்னோடு விவாதிப்பார்கள். பணியில் அமைதியாகவும், நேர்த்தியாகவும் செயல்படுவேன். என்னை சுற்றிலும் அநீதி நடந்தால் அதை தட்டிக் கேட்காமல் விடமாட்டேன். சோதனைகளை எதிர்நின்று சமாளித்து தீர்வு காணும் வரை போராடுவேன்.

இதுபோல் செவிலியருக்கான உரிமைகளைப் பெற்றுத்தர பல்வேறு போராட்டங்கள் நடத்தி சட்ட ரீதியாக தீர்வு கண்டிருக்கிறேன். பெண்கள் எந்தத் துறையில் இருந்தாலும் தங்களது பணியில் உண்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் மேலதிகாரிகள், உடன் பணிபுரியும் நபர்களும் நமது அர்ப்பணிப்பு மிக்க பணிக்கு மதிப்பு அளிப்பார்கள்.

அதேபோல், செய்த பணியை வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தையும் பெற வேண்டும். தனக்கு எதிராக அநீதி நடக்கும் போது தட்டிக்கேட்டு தீர்வு காணவும் தயங்க வேண்டியதில்லை. எனது இத்தனை வருட வாழ்வின் வழியாக பெண்கள் சமூகத்துக்கு நான் தரும் செய்தி இதுவே!’’ என்கிற கண்ணகியின் முக்கியக் கோரிக்கைகள் இவை.

நர்ஸிங் பணியில் உள்ளவர்களுக்கு தனி இயக்குநரகம் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் செவிலியர்களின் குறைகள் மற்றும் பிரச்னைகளுக்கு நியாயமானதீர்வுகளைப் பெற முடியும். செவிலியர் நோயாளிகளுடன் பேச,  அவர்களுக்கு நம்பிக்கை அளித்து மருத்துவப் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது.

எனவே, செவிலியர் பணியை திருப்தியுடன் செய்ய அவர்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் வேலைச் சுமை குறைக்கப்பட வேண்டும். செவிலியரின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.செய்வார்களா?

- யாழ் ஸ்ரீதேவி
படங்கள் : பாலா