மயக்கம் என்ன...தெளிவோம்

‘மயக்கம் என்பது எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயமல்ல. ஏதோ ஓர் உடல்நலக் குறைவின் அறிகுறியாகவே மயக்கம் இருக்கிறது. அதனால், உடனடியாக கவனிக்க வேண்டும்’ என்கிறார் பொதுநல மருத்துவர் ஸ்ரீதேவி அனந்தராமன்.

‘‘ஏதேனும் உடல்நலக் குறைவால் மூளைக்கும், இதயத்துக்கும் செல்கிற ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் தடைபடும்போது மயக்கம் வருகிறது. இதில் சுய நினைவு இழந்த மயக்கம், சுய நினைவு கொண்ட மயக்கம் என இரண்டு வகைகள் உண்டு.

நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், ஊட்டச்சத்து குறைபாடு, உள்காது நரம்பு பாதிப்பு, கண் பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, ரத்த குழாய் அழுத்தப்படுவதால் தடைபடுகிற ரத்த ஓட்டம், புகை பிடித்தல், மது அருந்துதல் மாதாவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக உதிர போக்கால் ரத்தசோகை ஏற்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் மயக்கம் வரும். இவை எல்லாம் சுயநினைவு கொண்ட மயக்கமாகும்.

வலிப்பு, பக்கவாதம், மூளையில் ஏதேனும் தீவிர பாதிப்புகளால் ஏற்படுவது சுய நினைவிழந்த மயக்கம். இந்த மயக்கம் தீவிர சிகிச்சைக்கு கொண்டுசெல்லக் கூடிய அளவு தீவிரமானது’’ என்பவர் மயக்கத்தின் மேலும் சிலவகைகளை விளக்குகிறார்.‘‘தற்போதுள்ள உணவு பழக்கவழக்கம் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு குழந்தைகளுக்கும் மயக்கம் வருகிறது.

இவ்வாறான குழந்தை களுக்கு ஹீமோகுளோபின் அளவை பரிசோதனை செய்ய வேண்டும். பழங்கள், கீரைகள், பால் தண்ணீர் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். இதேபோல கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்த உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வரலாம். இவர்களும் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கிறவர்களுக்கு ரத்தம் கெட்டி அடையும்போது ரத்த ஓட்டம் தடைபட்டு மயக்கம் வருகிறது. அதுபோல மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு சிறுநீரகத்தில் ரத்தக்கட்டு ஏற்படுவதால் மயக்கம் வரும். அவர்களும் உடனே மருத்துவரை பார்த்து தக்க கிசிக்சை பெற வேண்டும். நாற்பது வயதுகளில் மயக்கம் அதிகமாக ஏற்படுகிறது என்பதால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை, காது, கண், நரம்பு போன்றவற்றை முழு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.’’

மருத்துவரைப் பார்க்கும் அளவு மயக்கம்
பெரிய பிரச்னையா?
‘‘மயக்கத்துக்கு பல்வேறு உடல்
நலக் கோளாறுகள் காரணமாக
இருக்கின்றன. சிலருக்கு பிறவி
யிலேயே உள் காது நரம்புகள்
பலவீனமாக இருப்பதால் அடிக்கடி மயக்கம்  வரும்.

மனநலம் சார்ந்த பிரச்னை கொண்டவர்களுக்கு படபடப்பு ஏற்பட்டு இதயத்திற்கு செல்கிற ரத்த
ஓட்டம் தடைபடுவதால் மயக்கம் வர வாய்ப்பிருக்கிறது. பார்க்கின்ஸன், மறதி நோய்கள் போன்ற பிரச்னைகளால் முதியவர்களுக்கு மயக்கம் ஏற்படும். சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறுகிற ஒரு செயல் என்பதால் சிலருக்கு சிறுநீர், மலம் கழிக்கும்போது மயக்கம் வரும்.

இந்த உள்புற காரணங்களை எல்லாம் நாம் மேலோட்டமாக புரிந்துகொள்ள முடியாது. பரிசோதனையின்மூலமே தெரிந்துகொள்ள முடியும். அதனால் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் மயக்கம் வந்தால் மருத்துவரை நாடுவது அவசியம்.’’

- க.இளஞ்சேரன்