4 எம் தெரபி



ட்ரீட்மென்ட் புதுசு

‘‘மூட்டு, கழுத்து, முதுகு, தண்டுவடம் ஆகிய உறுப்புகளில் வலி, தேய்மானம் என அவதிப்பட்டு வருபவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். மருந்துகள் பலனளிக்காத பட்சத்தில் அறுவை சிகிச்சைதான் தீர்வு என்று கூறுவார்கள்.

அதுபோல் முற்றிய நிலையில் உள்ள எலும்பு பிரச்னைகளைக் கூட ‘4 எம்-ஆர்த்தோ தெரபி’ முறையில் ஊசி, ஸ்டீராய்டு, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்’’ என்கிறார் 4 எம் ஆர்த்தோ தெரபி சிறப்பு மருத்துவர் பாலகுமரன்.

4 எம் என்பது எவற்றைக் குறிக்கிறது?
‘‘Mulligan therapy, McConnell therapy, Mckenzie therapy, Maitland Therapy என்ற நான்கு தெரபிக்கள் இணைந்ததுதான் 4 எம் தெரபி. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த சிகிச்சை முறை மிகவும் பிரபலம். சிறுவர், சிறுமியர் முதல் வயதானவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்ற சிகிச்சை இது.’’

4 எம் தெரபி எப்படி செய்யப்படும்?
‘‘நம்முடைய இயல்பற்ற அசைவுகள் அல்லது தவறான அசைவுகளால் எலும்புகள் தன் நிலையில் இருந்து விலகி இயங்குவதே எலும்பு சார்ந்த வலிகள் பலவற்றுக்கு காரணமாக இருக்கிறது. 4 எம் தெரபியில் முறையான பயிற்சியின் மூலமே விலகி உள்ள நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிட முடியும். அப்படி கொண்டுவந்துவிட்டாலே பெரும்பகுதி வலி குணமாகிவிடும்.

இயல்பற்ற முறையில் இயங்கும் எலும்புகள் மற்றும் மூட்டுக்களை சரி செய்யும்போது நரம்பு சார்ந்த பிரச்னைகளும் குணமாகின்றன. இதனை மறுசீரமைப்பு(Alignment Correction) மற்றும் உள்ளுறுப்புக்களின் இறுக்கத்தை இயல்பாக்கி வலியைப் போக்குதல் என்று குறிப்பிடுவோம். மூட்டு வலி, தண்டுவடம் பாதிப்பு போன்றவற்றை சரி செய்வதோடு மட்டுமில்லாமல் சவ்வு கிழிசலை சரி செய்யவும் இந்த சிகிச்சை உதவுகிறது.’’

பாதிப்பை எப்படி கணிப்பீர்கள்?
‘‘நோயாளியின் வலி உணர்வை அளக்க அவர்களை 50 மீட்டர் தூரம் நடக்கச் சொல்லி கண்காணிப்போம். வார்த்தைகளால் மூட்டுவலியைச் சொல்லி துல்லியமாக விளக்க முடியாது என்கிற பட்சத்தில் அதற்காக எண்களைக் குறிப்பிட்டுச் சொல்லச் சொல்வோம்.

வலியின் தீவிரத்தைப் பொறுத்து 0 முதல் 10 வரை உள்ள எண்களில் ஏதாவது ஒன்றை கூற சொல்வோம். வலி எதுவும் இல்லாத நிலையை ஜீரோ என்றும் மிதமான வலியாக இருந்தால் 5 என்றும் தாங்க முடியாத வலி என்றால் 10 என்றும் கூற வேண்டும்.’’
எலும்பு சிகிச்சையில் பொதுவாக செய்கிற தவறுகள் என்ன?

‘‘மூட்டு மற்றும் முதுகு வலி, தண்டுவட பாதிப்புக்கு Knee Cap, LS Belt,Collar, போட்டுக்கொள்வதை வழக்கமாக பலரும் வைத்திருக்கின்றனர். இவை சிகிச்சைக்காக தரப்படுவது இல்லை. ஏற்கனவே பாதிப்பு அடைந்த இந்த உறுப்புகள் மேலும் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காகத்தான் Knee Cap, LS Belt, Collar, பயன்படும். ஆனால், 4-எம் சிகிச்சை முறையில் இது போன்ற மருத்துவ உபகரணங்கள் தேவைப்படாது.’’
4-எம் தெரபிக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

‘‘சென்னையில் ஊட்டசத்து நிபுணராக பணிபுரியும் பெண் ஒருவர் முதுகு தண்டுவடத்தில் ஜவ்வு விலகி அவதிப்பட்டு வந்தார். வலி இருக்கும் இடத்தில் தொட்டாலே திசுக்களின் உள்ளே ரத்தம் கசியும் அளவுக்கு நிலைமை தீவிரமாக இருந்தது.

இதனால் சர்ஜரியும் செய்ய முடியவில்லை. 4- எம் சிகிச்சையில் அவரது முதுகு தண்டுவட வலியை சரிசெய்தோம். ‘தற்கொலை முடிவில் இருந்தேன்; நல்லவேளையாக குணமாகிவிட்டேன்’ என்று அந்த ஊட்டச்சத்து நிபுணர் நெகிழ்வுடன் கூறினார்.

அதேபோல் இன்ஜினியர் ஒருவர் முதுகுதண்டுவட பிரச்னையால் பாதிக்கப்பட்டு, ‘தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை; வாழ்க்கையே போச்சு’ என புலம்பியபடி வந்தார். அவரையும் குணப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தோம். இப்படி எலும்பு சார்ந்த பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் இன்றைய நவீன மருத்துவத்தில் குணப்படுத்த முடியும் என்பதால் வரவேற்பும் நன்றாகவே இருக்கிறது.’’

- விஜயகுமார்
படம்: ஆர்.சந்திரசேகர்