மாற்று மருத்துவர்களா? போலி மருத்துவர்களா?



சர்ச்சை

மாற்று மருத்துவம் செய்பவர்கள் போலிகளாகப் பார்க்கப்படுவதற்கு என்ன காரணம்?
‘‘மாற்று மருத்துவத்தில் பரம்பரை மருத்துவர்கள், பட்டப்படிப்பு முடித்த மருத்துவர்கள் என இரு பிரிவினர் இருக்கின்றனர். பரம்பரை வைத்தியர்கள் என்பவர்கள் முறையாகப் படிக்காமல் தலைமுறை தலைமுறையாக வைத்தியத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டிருக்கும் அனுபவசாலிகள் மட்டுமே. இதுபோன்ற பரம்பரை வைத்தியத்திலேயே அதிகமான போலிகள் இருக்கிறார்கள்.

இதுபோன்ற பதிவு பெறாத மருத்துவர்கள் சரியான முறையில் தயாரிக்கப்படாத மருந்துகளைக் கொடுப்பதால் இந்த சர்ச்சைகள் எழுகிறது. இவற்றை வைத்து எல்லா மாற்று மருத்துவர்களையுமே போலியாக நினைக்க வேண்டியதில்லை. கிராமப்புறங்களில் போதிய ஆங்கில மருத்துவர்கள் இல்லாததாலும், மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததாலும் இதுபோன்ற போலி மருத்துவர்களிடம் மக்கள் சென்று மாட்டிக் கொள்கிறார்கள்.’’

மாற்று மருத்துவத்தின் சிறப்பு என்ன?
‘‘தட்பவெப்பம் சமநிலையில் உள்ள தென்னிந்தியாவில்தான் மனித குலம் தோன்றியிருக்க வேண்டும் என்று இப்போது ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மனித குலம் எங்கு உதித்ததோ அங்குதான் மருத்துவமும் தோன்றியிருக்க வேண்டும். அந்த நியதிப்படி சித்த மருத்துவமே முதல் மருத்துவ முறையாகும். ‘சித்தம்’ என்ற சொல்லுக்கு இயற்கையோடு இயைந்த என்ற பொருள். சித்த மருத்துவத்திலிருந்து பிரிந்ததுதான் ஆயுர்வேதம்.

காலப்போக்கில் தென்னிந்தியாவில் சித்த மருத்துவமும் வட இந்தியாவில் ஆயுர்வேதமும் வேரூன்றி வளர ஆரம்பித்தது. ஆக, சித்த மருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும்தான் இந்திய மருத்துவங்கள். இந்தியர்களுக்கு ஏற்ற மருத்துவங்களும் இந்த இரண்டும்தான். இயற்கையோடு இயைந்த, பக்கவிளைவுகள் இல்லாத, பின்பற்றுவதற்கும் எளிமையான மருத்துவம் என்று தைரியமாகச் சொல்ல முடியும்.’’
மாற்று மருத்துவத்தின் இன்றைய அவசியம்?

‘‘கொசுவினால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு சிறந்த மருந்து ‘நிலவேம்பு குடிநீர்’  என்பது நிரூபணமாகியிருக்கிறது. டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா நோய்களுக்கு தற்போது அரசாங்கமே நிலவேம்பு குடிநீரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைத்து விநியோகித்து வருகிறது. இதுவே மாற்று மருத்துவத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸுக்கு அலோபதியில் மருந்துகள் இல்லை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தாம்பரம் சித்த மருத்துவ கழக மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளின் உடலை தேற்றுவதற்கு நெல்லிக்காய் லேகியம், ரசகந்தி மெழுகு போன்றவை கொடுக்கப்பட்டு
வருவதையும் கவனிக்க வேண்டும்.’’மாற்று மருத்துவத்தைப் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டியவை...

‘‘சித்த மருத்துவத்தின் அடிப்படையே ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதுதான். உங்கள் வீட்டு அடுக்களையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டிக்குள்ளேயே எல்லா மருந்துகளும் இருக்கிறது.
‘செலவழித்து மாத்திரையை விழுங்குவார்
சீரகத்தை, திப்பிலியை, சுக்கை எண்ணார்
மிளகினிலே இருக்கின்ற மாயை எல்லாம்
மறந்தார்

புதுமையிலே மோகம் கண்டு;
மஞ்சள்தனில் குளிக்கும் மங்கை நல்லார்
எத்தனையோ இந்நாளில் எண்ணிப்பாரீர்
குங்குமமும் அகில்சாந்தும் குழைத்தமண்ணில்
குழைக்கின்றார் உடலெங்கும் மாவைப்பூசி
நலமளிக்கும் உடலுக்கு என்பதால்தான்

உணவாக்கப் பாத்திரங்கள் செய்தார்
மண்ணால்
நலங்கெடுக்கும் உலோகங்கள்தனில்
சமைத்து
நல்ல உடல் கெடுதலை யாரும்
எண்ணார்
காலையில் குடித்த நீராகாரம்
காலத்தால் மாறுபட்டு காபியாச்சு
மேல் உடலை நனைத்தவுடன்
சோப்பைப்பூசி
மேல்தோலின் அழுக்கைத்
தேய்த்துவிட்டார்;

மேலைநாட்டு ஆடைகளில் மோகம்
கொண்டு
வேட்டியை மறந்துவிட்டார் தமிழமாந்தர்
மோருடையே கூழ் கரைத்து குடித்த
நாளில்
தோள் பெருத்த மறத்தமிழன்
உருவத்தைப்போல்
யாரேனும் இம்மண்ணில் இருக்கின்றாரோ
வல்லமையாம் வைட்டமின்கள் இந்நாள்
உண்போர்
தேள் பிடித்து விடம்பெற்ற கதைபோல்
விலைவாசி உயர்வினை நாம் உயர்த்திக்
கொண்டோம்...’

1974-ல் நான் எழுதிய இந்தப்பாடலை அப்போது திருச்சி வானொலி நிலையம் ஒளிபரப்பியது. இப்பாடலை இப்போது வாசித்துப் பாருங்கள். இன்றைய நிலைக்கு மட்டுமல்ல எப்போதுமே பொருந்தும்.’’ மாற்று மருத்துவங்கள் அங்கீகாரம் பெறாதது எந்த அளவு வேதனை அளிக்கிறது?‘‘அங்கீகாரம் இல்லையென்று யார் சொன்னார்கள்... தற்போது ஐ.நா.வரை சித்த மருத்துவம் அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளையும், மருத்துவ ஆராய்ச்சிகளையும் அறிவியல் முறையில் கிளினிக்கல் சோதனைக்கு(Clinical trial) உட்படுத்தி சீர்படுத்தும் பணியில் சித்த மருத்துவ ஆய்வுக்கான மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தற்போது பெருகிவரும் நீரிழிவு, சரும நோய்களுக்கான சித்த மருந்து களும் கிளினிக்கல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளன.

அலோபதி மருத்துவர்கள்தான் தங்களது வருமானத்தை பாதிக்கும் என்பதால் பொய்யான பரப்புரைகளை செய்து வருகிறார்கள். அது பொய் பிரசாரம் என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளார்கள். அரசாங்கம் பாரம்பரிய மருத்துவர்களை ஒருங்கிணைத்து முறைப்படுத்துவதோடு, ஆதரவளித்தால் எதிர்காலத்தில் கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும்.’’

மக்கள் என்ன செய்ய வேண்டும்?
‘‘ஒரு மாற்று மருத்துவரிடம் சிகிச்சைக்காக செல்லும் முன், அந்த மருத்துவர் முறையாக அரசு அங்கீகாரம் பெற்றிருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு அவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டும். கைராசிக்காரர், ஊரில் பிரபலமானவர், நான்கு பேர் சொல்கிறார்கள், பரம்பரை வைத்தியர் என்ற அடிப்படையிலெல்லாம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க
வேண்டும்.’’

அரசு என்ன செய்ய வேண்டும்?
‘‘அரசு மருத்துவமனைகளில் அலோபதி மருத்துவர்களோடு யோகா பயிற்சியாளர், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் என துறைக்கு ஒரு வரை நியமித்து வருகிறது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் மக்கள் போலி டாக்டர்களிடம் சென்று உயிரை விடுவதை தடுக்கலாம்.’’மாற்று மருத்துவத்தில் உள்ள போலி ஆட்களை எப்படி அடையாளம் காண்பது?

‘‘சித்தா, ஆயுர்வேதத்தில் ஒருவர் ஐந்தரை ஆண்டுகள் இளநிலை மருத்துவம் படித்து முடித்தவுடன் இந்திய மருத்துவக் கழகத்தில் மருத்துவராக தனது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்பவர்களுக்கு பதிவு எண்ணும், 2 டி பார்கோடுடன் கூடிய பதிவுச் சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கப் படும்.

 2 டி பார்கோடு மீது ரீட் செய்தால் மருத்துவர் குறித்த அனைத்து தகவல்களும் இணையத்தில் காட்டும். இவை இரண்டும்தான் உண்மையான மருத்துவர் என்பதற்கான சான்றுகள். அதேபோல் மாற்று மருத்துவர்கள் ஊசி போடுவது இல்லை என்பதையும் எளிமையாக நினைவில் கொள்ளலாம்.’’

- என்.ஹரிஹரன்
படம் : ஏ.டி.தமிழ்வாணன்