பரிசோதனையில் மாற்றம் தேவை



ரத்த தானம்

ரத்தம் தானம் கொடுப்பதிலும், பெறுவதிலும் விழிப்புணர்வோடு இருப்பதன் அவசியம் குறித்து ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம். இதன் அடுத்தகட்டமாக, பரிசோதனை முறையில் ஏற்பட வேண்டிய முக்கிய மாற்றம் குறித்து பேசுகிறார் ரத்த இயல் சிறப்பு மருத்துவர் ரேமா மேனன்.

‘‘ஆரோக்கியமான உடல்நலத்துக்கு எந்தவிதமான கெடுதலும் இல்லாத ரத்தம் மிகவும் இன்றியமையாதது. அதனால்தான், ரத்தத்தைத் தானமாக பெறுவதற்கு முன் அதை நன்றாகப் பரிசோதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

ஏனெனில், ஒவ்வொரு நாளும் புதிய புதிய வைரஸ்களைக் கண்டுபிடித்து வருகிறோம். அதனால் ரத்தத்தைப் பரிசோதிக்கும் முறையில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவது உலக நாடுகள் முழுவதுக்கும் தற்போது முக்கியமான தேவையாக இருக்கிறது.

Elisa, Nucleic Acid Test ஆகிய முறைகளில் ரத்தத்தின் தரத்தைப் பரிசோதிக்கிறோம். இதில் நியூக்ளிக் ஆசிட் டெஸ்ட் முறையில் ஹெப்படைடிஸ்-சி வைரஸ், ஹெப்படைடிஸ்-பி, ஹெச்.ஐ.வி 1, ஹெச்.ஐ.வி 2, சிபிலிஸ்(Syphilis), மலேரியா எனப் பலவிதமான பரிசோதனைகளைச் செய்ய முடியும்.

இதனால், ரத்தம் தானம் பெறுபவரையும் காப்பாற்ற முடியும். ஏதேனும் தொற்றுகள் இருக்கும்பட்சத்தில் தானம் அளிப்பவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொடர்ந்து தானம் செய்யாமல் தடுக்க முடியும்.

ஆனால், இந்த NAT பரிசோதிக்கும் முறை பற்றி அறிந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி இந்திய அளவிலேயே மிகக் குறைவாக இருக்கிறது. இந்த மாற்றம் அவசியமான, அவசரமான ஒன்று’ என்கிறார்.
அரசு கவனிக்குமா?

- விஜயகுமார்
படம் : ஏ.டி.தமிழ்வாணன்