ஸ்பெஷலிஸ்ட்டை எப்போது பார்க்க வேண்டும்?



அறிவோம்

உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தானாகவே ஒரு பிரச்னையை முடிவு செய்துகொண்டு அதற்குரிய சிறப்பு மருத்துவரை பார்க்கும் வழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. இது சரிதானா? பொது நல மருத்துவர் அரசு மோகனிடம் கேட்டோம்...

‘‘உடல் நலம் சார்ந்து என்ன பிரச்னையாக இருந்தாலும் முதலில் ஒரு பொது நல மருத்துவரைப் பார்ப்பதுதான் சிறந்தது. அவர்தான் உங்களுக்கு என்ன பிரச்னை என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற சிகிச்சையை வழங்குவார். பரிசோதனைகள் தேவை, மேல்சிகிச்சை தேவை  என்கிற பட்சத்தில் அதற்குரிய சிறப்பு மருத்துவரையும் அவரே பரிந்துரை செய்வார். இதுதான் சரியான அணுகுமுறை.

தகவல் தொழில்நுட்ப உதவியால் மருத்துவம் சார்ந்த தகவல்களை படிக்கும் வாய்ப்பு இப்போது இருக்கிறது. அதன் எதிரொலியாக இதுபோல் முதலிலேயே சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது, சாதாரண பிரச்னைக்கு பயப்படுவது, பரிசோதனைகள் மேற்கொள்வது, ‘இது ஒரு பிரச்னை
இல்லை’ என்று அலட்சியமாக இருப்பது என பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள்.

வயிற்று வலி என்றால் எடுத்த உடனே இரைப்பை குடலியல் சிறப்பு மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை இல்லாத பரிசோதனைகளையும் செய்ய வேண்டியதில்லை. ‘ஒண்ணுமே இல்ல.. ஆனா அந்த டாக்டர் காசைப் புடுங்கிட்டார்’ என்று புலம்ப வேண்டியதும் இல்லை. அதனால், பொது மருத்துவரே உங்கள் முதல் மருத்துவர்’’ என்கிறார் அழுத்தமாக!

- க.இளஞ்சேரன்