மருத்துவருக்கு உதவுங்கள்மாத்தி யோசி

‘தங்களுக்கு உண்டாகிற நோய் குணமடைய வேண்டுமென்றுதான் மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்கிறார்கள். அந்த நோய் முழுமையாய் குணமடைய மருத்துவர் அளிக்கும் சிகிச்சைகள் மட்டுமே போதுமானது அல்ல. அதற்கு நோயாளிகளும் பல வகையில் மருத்துவருக்கு உதவ வேண்டும்’ என்கிறார் பொது மருத்துவர் அருணாச்சலம்.

முதல் கோணலைத் தவிருங்கள்பொதுவாக ஒரு நோய் வந்தவுடனே மருத்துவரிடம் செல்ல வேண்டுமென்ற அக்கறை பலருக்கும் இருப்பதில்லை. முதலில் கை வைத்தியம் செய்வது, அதன் பிறகு மருந்துக்கடைகளில் மருந்துகள் வாங்கி சாப்பிடுவது, அதே போன்ற நோயால் பாதிக்கப்பட்ட தனது உறவினர்கள், நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது என தவறான ஆரம்ப சிகிச்சை களைத் தாங்களே செய்துகொள்கிறார்கள். சமாளிக்க முடியாத நிலை என்றால்தான் மருத்துவரிடம் செல்கிறார்கள்.

இப்படி சுய சிகிச்சை செய்வதைத் தவிர்த்து பாதிப்பு அறிகுறிகளை உணர்ந்த உடனேயே மருத்துவரிடம் செல்ல வேண்டும். அதுதான் விரைவாக குணமடைய உதவும். இல்லாவிட்டால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாகிவிடும்.தேவை ஒரு குடும்ப மருத்துவர்முன்பு குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருந்தார்.

 ஒரு குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும், அவர்களது பிரச்னைகளையும் தெளிவாக அறிந்துவைத்திருப்பார் அவர். இதன்மூலம் நோயாளியின் வரலாறும், நோயின் வரலாறும் அவருக்கு அத்துப்படியாக இருந்தது. இது மருத்துவர் - நோயாளி என்ற உறவைத்தாண்டி ஆத்மார்த்தமான உறவாகவும் இருந்தது.

இப்போது குடும்ப மருத்துவர் என்ற கலாசாரமே பல இடங்களில் காணாமல் போய்விட்டது. மருத்துவர் ஒரு பரிசோதனைக்குப் பரிந்துரைத்தாலும், ‘அவர் பணம் பிடுங்கப் பார்க்கிறாரோ’ என்ற சந்தேகம் உருவாகிறது. இதனால் மருத்துவர் மீது நம்பிக்கையில்லாமல் செகண்ட் ஒப்பீனியன், தேர்டு ஒப்பினீயன் என்று பல மருத்துவரைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.  வெளிப்படையாக சொன்னால் மருத்துவர் - நோயாளி உறவு நம்பகத்தன்மை கொண்டதாக மாற குடும்ப மருத்துவர் அவசியம்.

தெளிவான தகவல் மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்பவர்கள் எந்த நோய்க்கு சிகிச்சை பெற வந்துள்ளார்கள் என்பதை முதலில் தெளிவாக சொல்ல வேண்டும். அதன் பிறகு அந்த நோய் எத்தனை நாட்களாக உள்ளது, எப்படி ஆரம்பித்தது போன்ற தகவல்களையும் சொல்ல வேண்டும். மருத்துவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் தகுந்த, உண்மையான தகவல்களை சொல்வதன் மூலம் நோய் ஏற்பட்டதற்கான மூல
காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.

நோயாளி தனக்கு இதற்கு முன்னர் ஏற்பட்ட நோய்கள், அதற்காக மேற்கொண்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற சிகிச்சைகள், சாப்பிட்ட மருந்துகள், அதனால் ஏற்பட்ட ஒவ்வாமைகள் மற்றும் மருத்துவர் அறிவுறுத்தி சொன்ன தகவல்களையும் சரியாக சொல்ல வேண்டியது அவசியம். 

நோயை கண்டறிவதற்காக மருத்துவர்கள் கேட்கும் கேள்வி களுக்கு சரியான, தெளிவான பதில்களை நோயாளிகள் சொன்னால்தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பாதிப்பை விரைவாகக் கண்டுபிடிக்க முடியும்.

நோயாளி தெளிவான தகவல்களைச் சொல்லாத பட்சத்தில் நோயைக் கண்டுபிடிக்கவே காலதாமதமாகும். தெளிவான தகவல்களைச் சொல்லி மருத்துவருக்கு உதவுவதன் மூலம் தேவையில்லாத மருத்துவ பரிசோதனைகள், நோய் குறித்த அதிக பயம், கால தாமதம் போன்றவற்றைத் தவிர்க்கலாம். Prescription மருத்துவர் கொடுக்கும் Prescription-ல் உள்ள நோய் பற்றிய குறிப்புகள், மருந்து களின் பெயர்கள் மற்றும் விகிதாச்சாரங்கள் மிகவும் அவசியம்.

மருத்துவரிடம் செல்லும்போது அதற்கு முன்னர் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் பற்றிய ஆவணங்கள், பழைய மருந்துச் சீட்டுகள் போன்றவற்றை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். மருத்துவர்கள் அந்த மருந்துச் சீட்டில் ஏதாவது ஓர் இடத்தில் நோயின் தன்மைகளை குறியீடு களாக (உதாரணமாக: Hypertension- HP, Rheumatic Arthritis- RA, Drug Allergy- DA) எழுதி வைத்திருப்பார்கள்.

ஆனால் நோயாளியோடு உடன்வருபவர்களில் சிலர், அவர் மீது அதிக அக்கறை செலுத்துவதாக நினைத்துக்கொண்டு மருந்துச் சீட்டுகளை எடுத்து வருவதை தவிர்த்து விடுகின்றனர். அதற்கு பதிலாக மருந்துக் கடை பில்களை பார்த்து அந்த மருந்துகளை மனப்பாடம் செய்தோ, கைக்குறிப்பாக வைத்துக்கொண்டோ ஒப்பிக்கிறார்கள். இப்படி மருத்துவரின் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்த்து, மருத்துவர் கொடுத்த மருந்துச் சீட்டை எடுத்து வருவதே தொடர்ந்து சரியான சிகிச்சை அளிக்க போதுமானது.

ஆவணங்கள்... ஆதாரங்கள்...

நோயாளியின் உடல் மற்றும் நோய்கள் பற்றிய தகவல்கள், எந்த நோய்க்கு என்ன மருந்து, பரிசோதனை பரிந்துரை செய்யப்பட்டது, எந்த மருந்தில்
நிவாரணம் கிடைத்தது, எந்த மருந்து பக்க விளைவுகளை உண்டாக்கியது மற்றும் பிற்காலத்தில் என்னென்ன நோய்கள் உண்டாகலாம் என்ற மருத்துவரின் அறிவுறுத்தல்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய மருத்துவ ஆவணத்தை Medical Transcription என்கிறோம். இதை தயார் செய்வதற்கு நோயாளிகள் உதவி செய்ய வேண்டும்.

ஏனெனில், அலோபதி மருத்துவமுறை முழுக்க முழுக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. இதனால் அலோபதி மருத்துவ ஆவணங்களை பிற்காலத் தேவைகளுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். மருத்துவர்களிடம் நோயாளி கள் சொல்லும் தகவல்கள், பரிசோதனைகள் போன்றவற்றை மின்னணு தகவல்களாக மாற்றுவதற்கும் நோயாளிகள் உதவி செய்ய வேண்டும்.

தற்போது பல மருத்துவமனைகளில் மருத்துவ ஆவணங்களை கணினியில் பதிவு செய்து, இணையம் மூலமாக தேவைப்படும்போது, தேவைப்படும் இடங்களில் பார்த்துக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மருத்துவ ஆவணங்களை தயார் செய்ய சற்று
கூடுதல் நேரமாவதால் அதற்கு நோயாளிகள் பொறுமையோடு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அது எதிர்காலத்துக்கு உதவும்.

பொறுமை அவசியம்மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள், அவரை பார்த்துவிட்டு மருந்து சாப்பிட்ட முதல் நாளே நோயிலிருந்து முழு நிவாரணமடைந்துவிட வேண்டுமென்று ஆதங்கப்படுகிறார்கள்.

நோய் என்பது படிப்படியாகவே உருவாகிறது. அதுபோல், படிப்படியாகவே குணமாகும். அதனால் பொறுமை அவசியம். தொடர்ச்சியான சிகிச்சைஒருவாரத்துக்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளச் சொன்னால் அந்த ஒரு வாரம் முழுவதும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

நோய் குணமாவதன் அறிகுறிகள் தோன்றிய உடனே பலர் மருத்துவரைச் சந்திப்பதையும், மருந்துகள் எடுத்துக் கொள்வதையும் நிறுத்திவிடுகிறார்கள். இது தவறு. இந்தத் தவறால் நோய்க்கிருமிகள் முழுமையாக அழியாமல் உடலினுள் பதுங்கி இருக்கும். மீண்டும் சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால்கூட இன்னும் பல மடங்கு வீரியத்தோடு உடலைத் தாக்கும். அதனால் அவசரப்பட்டு சிகிச்சையைக் கைவிடுவதும் தவறானதே!

- க.கதிரவன்