இனி தலையெழுத்தை மாற்றலாம்! ஹெட்  டிரான்ஸ்ப்ளான்டேஷன் பராக்...கவர் ஸ்டோரி

கயிலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும்போது, மஞ்சளைத் திரட்டி ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார். அப்போது அங்கே வந்த சிவபெருமானைத் தடுத்தான் அந்தச் சிறுவன்.

கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையைத் துண்டித்தார். பின்னர் பார்வதி உருவாக்கிய பிள்ளை என்பதை அறிந்த சிவபெருமான், தன் பூதகணங்களை அழைத்து முதலில் பார்க்கும் ஒரு ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார்.

அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை... சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்து வந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்ட வைத்து மீண்டும் உயிர் கொடுத்தார்.

விநாயகர் பற்றிய இந்த புராணக்கதையை எல்லோரும் கேட்டிருப்போம். ஒருவரின் தலையை இன்னொருவரின் உடலில் பொருத்தும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களையும் பார்த்திருப்போம்.
இந்த தலை மாற்று சிகிச்சை என்பது புராணமும், சினிமாவும் மட்டுமே அல்ல... ஆம்... தலை மாற்று சிகிச்சை நிஜமாகிறது!

இத்தாலி நாட்டு நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் செர்ஜியோ கானவேரோதான் இந்த அரிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். சிறுநீரகம், கல்லீரல், இதயம் என்று உறுப்பு மாற்று சிகிச்சைகளின் உச்சமாக இந்த தலைமாற்று சிகிச்சை(Head transplantation) இருக்கும் என்பதால் நிச்சயமாக இது ‘மெடிக்கல் மிராக்கிள்’தான்!

அதுவும் இந்த 2017-ம் ஆண்டில் தலைமாற்று அறுவை சிகிச்சையை செய்யவிருப்பதாகவும், அதற்காக ஒரு நோயாளி காத்திருப்பது பற்றியும் அவர் அறிக்கை கொடுத்த பிறகு பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியுமாய் உறைந்து போயிருக்கிறார்கள். இதன்மூலம் இனி மருத்துவ உலகில் எதுவுமே சாத்தியம்தான் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உருவாகி இருக்கிறது.

சரி... தலைமாற்று சிகிச்சை எப்படி செய்வார்கள்?

‘‘மூளைச்சாவு அடைந்த ஆரோக்கியமான ஓர் உடலில் இருந்து தலையை வெட்டி எடுத்துவிட வேண்டும். மற்றொரு புறம், உடல் செயலிழந்த நிலையில் இருக்கும் ஒருவரின் ஆரோக்கியமான தலையை எடுத்து இந்த ஆரோக்கியமான உடலில் பொருத்திவிட வேண்டும். மூளைச்சாவு அடைந்த ஒருவருடைய தலையையும், பொருத்தப்படவேண்டிய நோயாளியின் தலையையும் ஒரே நேரத்தில் துண்டிக்க வேண்டும்.

பாலிஎத்திலின் கைல்கோல் (Polyethylene gylcol) என்ற பசைகொண்டு தலை ஒட்ட வைக்க வேண்டும். அதாவது முதுகுத்தண்டின் இருமுனைகளுக்கு இடையே தொடர்பு ஏற்படுமாறு பொருத்த வேண்டும். அறுவை சிகிச்சையின்போது நோயாளியை மயக்கமுறச்செய்து தசைகள் மற்றும் ரத்தநாளங்களை ஒன்றாக வைத்து தைக்க வேண்டும்.

தலை மற்றும் உடல் இடையேயான இணைப்புகளை வலுப்படுத்த முதுகுத்தண்டில் மின் அதிர்வுகள் வழங்க வேண்டும். அதே நேரத்தில் இந்த அறுவை சிகிச்சையை மனதளவில் எதிர்கொள்ளும் வகையில் நோயாளிக்கு தீவிரமான உளவியல் ஆதரவும் அளிக்க வேண்டும். இந்த அறுவை சிகிச்சைக்கு 80 அறுவைசிகிச்சை நிபுணர்கள் தேவைப்படுவார்கள்” என்று இந்த அறுவை சிகிச்சையை விளக்குகிறார் டாக்டர் செர்ஜியோ.

சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்ற தனிப்பட்ட உறுப்பல்ல தலை. கழுத்து மற்றும் முதுகுத்தண்டுவடத்தோடு இணைந்த நீண்ட உறுப்பாகவே தலை அமைந்திருக்கிறது. அப்படியிருக்க, இருவேறு மனிதர்களின் தலை மற்றும் உடலை இணைத்துச் செய்யும் தலைமாற்று அறுவை சிகிச்சை எப்படி சாத்தியமாகும் என்று உலகமெங்கும் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ‘இது முற்றிலும் கற்பனையானது. நம்பக்கூடிய ஒன்றில்லை’ என்றும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லா முயற்சிகளுக்குமே ஆரம்பத்தில் இப்படித்தான் முட்டுக்கட்டை போடுவார்கள் என்று விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் தலையை மாற்றும் ஏற்பாட்டில் பிஸியாக இருக்கிறார் டாக்டர் செர்ஜியோ.இந்த தலைமாற்று அறுவை சிகிச்சையால் உலகிலேயே முதன்முதலில் பயனடையப்போகும் ரஷ்யாவின் வேலரி ஸ்பிரிடிடோனோவும் ஆபரேஷனுக்கு ரெடி!

30 வயதாகும் இவர் ஒரு கம்ப்யூட்டர் புரோக்ராமர். Werdnig-Hoffmann என்று சொல்லப்படும் தண்டுவட தசை செயலிழப்பு நோயால் அவதியுறும் இவர் மற்றவர்களின் உதவியோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ‘என்னுடைய அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே மற்றவரின் உதவியை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இது எனக்கு மிகவும் நரக வேதனையாக உள்ளது. குறைந்தபட்ச தேவைகளுக்காகவாவது மற்றவரின் தயவின்றி தன்னிச்சையாக இயங்குவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். அந்த நாளை நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதற்காகத்தான் இந்த அறுவை சிகிச்சைக்கும் நான் சம்மதித்துள்ளேன். இதைத்தவிர வேறு ஒரு வழி இருப்பதாக தெரியவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகனிடம் தலைமாற்று சிகிச்சை பற்றிப் பேசினோம்...‘‘ஒருவருக்கு விபத்தின்போது தலையில் அடிபடுகிறது என்றால் மூளைதண்டுவடம்(Spinal cord) துண்டிக்கப்பட்டு விடும்.

இதனால் அவர் மூளைச்சாவு அடைந்துவிடுவார். உடல் செயலற்று போய்விட்ட நிலையில் இந்த உடலிலிருந்து தலையை கழுத்திலிருந்து முதுகுத்தண்டுவடத்தோடு எடுக்க வேண்டும். அதே நிமிடங்களில் தானம் பெறுபவரின் தலையையும் அவரது உடலில் இருந்து எடுக்க வேண்டும்.

7 முதல் 14 நிமிடங்களுக்குள் நல்ல உடலோடு தானம் பெறுபவரின் தலையைப் பொருத்திவிட வேண்டும். இப்படித்தான் அதன் சாத்தியத்தைப் பற்றி டாக்டர் செர்ஜியோ கானவேரோ விளக்கியிருக்கிறார். இது எப்படி பலன் தருகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்’’ என்றவரிடம் தலையை மாற்றினால் அவர் வேறு ஒருவராகிவிட மாட்டாரா என்று கேட்டோம்.

‘‘மூளைதான் நம்முடைய சிந்தனைகள், செயல்கள், நடை, பாவனை எல்லாவற்றையும் தீர்மானிக்கும் முக்கிய உறுப்பு. ஆரோக்கியமான தலையை எடுத்து, உணர்வற்ற உடலில் தான் பொருத்துவார்கள். மனிதர் அவர்தான். அவரது உடல் மட்டும் இப்போது வேறு. அதாவது உடையை மாற்றுவது போல் உடலை மாற்றியிருக்கிறார்.

அவ்வளவுதான். அதனால் உணர்வில் எந்தவிதமானமாற்றங்களும் ஏற்பட வாய்ப்பில்லை. மற்றவர்களைப்போல இவரால் இயல்பாக இயங்க முடியும். முதுகு தண்டுவட செயலிழப்பு நோயால் முடங்கிக்கிடக்கும் நோயாளிகளுக்கு இந்த Head Transplantation ஒரு வரப்பிரசாதமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

2017-ம் ஆண்டில்தான் முதன்முறையாக முயற்சி செய்யப் போகிறார்கள். நம் நாட்டுக்கு வர இன்னும் நிறைய வருடங்கள் ஆகலாம். மற்ற உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையைப்போல தலைமாற்று அறுவை சிகிச்சை அவ்வளவு எளிதான காரியமல்ல. தவிர தற்பொழுதுதான் உடல் உறுப்புதானம் பற்றிய மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒருவேளை எதிர்காலத்தில் இந்தியா
விலும் சாத்தியமாகலாம்” என்கிறார்.

தற்போது நாய் மற்றும் குரங்கிடத்தில் சோதனை மேற்கொண்டுவரும் டாக்டர் செர்ஜியோ கானவேரோவின் ஆய்வு முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. தலை மாற்று அறுவைசிகிச்சை எந்த அளவுக்கு வெற்றியடையப் போகிறது என்பதை மருத்துவ உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

தலை மாற்று சிகிச்சை வெற்றியடையும் பட்சத்தில், ‘முதுகுத்தண்டுவட பாதிப்பால் செயலிழந்துள்ள ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போல் உள்ள பல்துறை நிபுணர்களின் தலைகளுக்கேற்ற உடல்கள், வரிசையில் காத்து நிற்கும்’ என்பதில் சந்தேகம் இல்லை.

- உஷா நாராயணன்