நியூஸ் கார்னர்செய்தித் தொகுப்பு

பள்ளி மாணவர்களிடம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு!

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு வெறும் 6 ஆக இருந்த நிலையில், தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் அனைத்து மாநிலங்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி,‘இருமல், தும்மல் போன்றவை ஏற்படும்போது கைக்குட்டையைப் பயன்படுத்தவேண்டும். காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் பள்ளி, பொது இடங்களுக்குச் செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அந்த மாநில அரசுகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி கை கழுவுதல், தும்மல் ஏற்படும் நேரத்தில் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்த வேண்டும். முழுநீளக் கை சட்டையை அணியவேண்டும். தொற்றுக்கள் பரவாவண்ணம் இருப்பதற்கான பயிற்சியைக் கொடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல கொரோனா வைரஸ் பீதியில் தற்போது தமிழகத்திலுள்ள தொடக்கப் பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பயோமெட்ரிக் வருகைப் பதிவை பயன்படுத்தவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகப் பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தரப்பிலிருந்து அதற்கான உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை கடந்த வாரத்திலேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இப்படியான ஒரு அறிவுரை வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகப் பள்ளிக்கல்வித் துறையிலும் பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்த வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரிய பணிக்கான தேர்வு தமிழில் நடத்தப்படும்!

தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 500, மின் கணக்கீட்டாளர் 1300 பணியிடங்களையும் நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வில் 80 மதிப்பெண்களுக்கான கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சியினர் மற்றும் தேர்வர்கள் ‘தமிழக மின் வாரியப் பணிகளுக்கு தமிழில்தான் தேர்வு நடத்த வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஆங்கிலத்துடன் தமிழிலும் தேர்வு நடத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் வாரியப் பணியமைப்புப் பிரிவு தலைமை பொறியாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ‘கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிக்கு கணினிஅடிப்படையிலான தேர்வு ஆங்கிலமொழியில் நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்வழியில் படித்தவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து அவர்களின் நலன் கருதி தமிழ்மொழியிலும் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் மார்ச் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

நாளந்தா பல்கலையில் முதுநிலை, ஆய்வுப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை!

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மிகவும் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வி நிறுவனம் நாளந்தா பல்கலைக்கழகம். இப்பல்கலைக்
கழகம் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்கீழ், பிகார் மாநிலம் நாளந்தாவில் செயல்பட்டுவருகிறது. இங்கு பல்வேறு இளநிலை முதுநிலைப் பட்டப்படிப்புகளும், ஆய்வுப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. தற்போது முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்பு
களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: MBA in Sustainable Development and Management, Masters Ecology and Environment Studies, Masters Historical Studies, Masters Buddhist Studies, Philosophy and Comparative Religions.Ph.D. in Sustainable Development and Management, Ph.D. in Ecology and Environment Studies, Ph.D. in Historical Studies, Ph.D. in Buddhist Studies, Philosophy and Comparative Religions.
கல்வித் தகுதி்: படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். அனைத்துப் படிப்புகளுக்கும் ஆங்கில மொழிப்புலமை அவசியம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2020.
மேலும் விவரங்களுக்கு: https://nalandauniv.edu.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் மாணவர் சேர்க்கை!

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Agricultural Research-ICAR) புதுடெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்த ஆராய்ச்சிக் கழகம் வழங்கும் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வைத் தேசிய தேர்வுகள் முகமை (National Testing Agency-NTA) அறிவித்துள்ளது.

ஐஐடி, என்.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில ஜே.இ.இ. ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு, மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான நெட் தேர்வு உள்ளிட்ட மத்திய நுழைவுத் தேர்வுகளை NTA-தான் நடத்திவருகிறது.

நாடு முழுவதும் உள்ள 101 ஐ.சி.ஏ.ஆர். உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், சென்னையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்திலுள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 71 மாநில பல்கலைக்கழகங்களில் 15 சதவிகித மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் இந்த ஐ.சி.ஏ.ஆர். நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்படும்.

என்.டி.ஏ. சார்பில் நடத்தப்படும் ஐ.சி.ஏ.ஆர். சேர்க்கைக்கு இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கெனத் தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். 2020-ஆம் ஆண்டுக்கான இந்த கணினி அடிப்படையிலான தேர்வு வரும் ஜூன் 1-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.nta.ac.in , www.icar.nta.nic.in ஆகிய இணையதளப் பக்கத்தைக் காணவும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2020.