கண்களைக் கட்டிக்கொண்டு கேரம் விளையாடும் சிறுவர்கள்!சாதனை

உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உலக சாதனைகள் படைக்கப்படுகின்றன. உலக சாதனைகள் படைப்பதென்பது எளிதான விஷயமல்ல. தனித்திறனைக் கண்டுபிடித்து நீண்ட பயிற்சிகளின் பின்பே சாதிக்க முடியும். அதிலும் கண்களைக் கட்டிக்கொண்டு நிகழ்த்தும் சாகசங்கள் பிரமிக்கவைக்கும் ரகம். அப்படி ஒரு சாதனையைச் செய்திருக்கிறார்கள் திருச்சியைச் சேர்ந்த சரவணன்- துர்கா லட்சுமி தம்பதியரின் மகன் பூபேஷ் மற்றும் மகள் சம்யுக்தா.

இதில் பூபேஷ் கண்களைக் கட்டிக்கொண்டு ஒன்றரை நிமிடத்தில் ரூபிக் க்யூப் கலர்களைச் சரிசெய்கிறார். ஐந்து நிமிடத்தில் மூன்று ரூபிக் க்யூப்களை சுழற்றி சரியான வண்ணங்களை ஒருங்கிணைக்கிறார். இதேபோல் சம்யுக்தாவும் கண்களைக் கட்டிக்கொண்டு சகோதரனுடன் செஸ் மற்றும் கேரம் விளையாடி அசத்துகிறார். இவர்களின் சாதனை நிகழ்வானது விரிக்‌ஷா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு (VRIKSHA BOOK OF WORLD RECORD) என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அம்மாணவச் செல்வங்களின் பெற்றோர்களான சரவணன்  துர்காவிடம் பேசினோம்.

‘‘நாங்கள் திருச்சிராப்பள்ளி ஆண்டாள் தெருவில் வசித்துவருகிறோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பூபேஷ் மற்றும் சம்யுக்தா. பூபேஷ் Campian Anglo Indian Higher Secondary school-ல் ஆறாம் வகுப்பு மற்றும் சம்யுக்தா St.Joseph’s Anglo Indian Girls Higher Secondary school-ல் நான்காம் வகுப்பும் படிக்கின்றனர். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ஆகவேண்டும் என்பதுதான் பூபேஷின் லட்சியம். மகள் சம்யுக்தாவின் லட்சியம் மருத்துவர் ஆவதாக உள்ளது.

பொதுவாகக் கோடை விடுமுறையில் எங்கள் குழந்தைகளை ஏதேனும் ஒரு பயிற்சியில் சேர்த்துவிடுவது வழக்கம். அப்படித்தான் மிட் பிரைன் ஆக்ட்டிவேஷன் (MID BRAIN ACTIVATION) என்னும் பயிற்சி வகுப்பைப் பற்றி கேள்விப்பட்டோம். இந்தப் பயிற்சி ப்ளூம் வேவ்ஸ் அகாடெமியில் (BLOOM WAVES ACADEMY) கற்றுத்தருகிறார்கள் என்று நண்பர்களின் மூலம் தெரிந்தது.

பூபேஷை நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் சம்யுக்தாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும்  இப்பயிற்சியைக் கற்றுக்கொள்ள அனுப்பினோம். அவர்கள் அளித்த பயிற்சியில் எங்கள் குழந்தைகள் மிகவும் திறமைசாலியாக வந்தனர். அதனால் ப்ளூம் வேவ்ஸ் அகாடெமியில் பூபேஷை செயல்விளக்கத்துக்கான மாணவராக (Demo Student) பல்வேறு பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்றுவருகின்றனர்’’ என்ற சரவணன் இந்தப் பயிற்சியின் பயனாக உருவாகும் தனித்திறன் பற்றி விவரிக்கலானார்.

‘‘நாம் எந்த ஒரு செயல்பாட்டுக்கும் தர்க்க மூளை (logical brain) ஆகிய இடதுபுற மூளையையே அதிக அளவில் பயன்படுத்துகிறோம். இப்பயிற்சி இடது மற்றும் வலது மூளைகளைத் தூண்டிவிட்டு அதிக நினைவாற்றலைப் பெற உதவுகிறது. மேலும் கண்களை மூடிக்கொண்டு செய்வதால் நினைவாற்றல் அதிகரித்து செயல்படுகிறது. இப்பயிற்சியின் சிறப்பு இடது மூளை மற்றும் வலது மூளையினைச் சரிசமமாகப் பயன்படுத்த முடியும். பொதுவாக இடது மூளையை (logical brain) வலதுபுற மூளையை (creative brain) என்றும் கூறுவர்.

கண்களைக் கட்டிக்கொண்டு பூபேஷ் மற்றும் சம்யுக்தா நிறங்களைக் கண்டுப்பிடித்தல், ரூபாய் நோட்டிலுள்ள வரிசை எண்களைக் கூறுதல், வரைபடங்களைக் கண்டுபிடித்தல், வண்ணம் தீட்டுதல், கேரம் விளையாடுதல், சதுரங்கம் விளையாடுதல், ரூபிக் க்யூப் (rubic cube) விளையாடுதல், புத்தகங்களின் பாடங்களை வாசித்தல், நபரை அடையாளம் காணுதல், கண்களைத் திறந்துகொண்டு செய்யும் அனைத்துச் செயல்களும் இவர்கள் கண்களை மூடிக்கொண்டு செய்து முடிப்பர்.

பல்வேறு மகத்தான சாதனைகளைச் சாதித்துள்ளனர். மேலும் பூபேஷ் ரூபிக் க்யூப் ஒன்றை 1 நிமிடம் 30 விநாடிகளிலும் மற்றும் மூன்று ரூபிக் க்யூபை 5 நிமிடத்திலும் சேர்த்துவிடுவார். இப்படி இருவரும் பல இடங்களில் மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்’’ என்று பிள்ளைகளின் தந்தை சொல்லி முடிக்கும் முன்பாகவே தாய் துர்கா தன் பிள்ளைகள் படைத்த சாதனைகள் மற்றும் பெற்ற விருதுகள் பற்றி மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

‘‘பூபேஷும் சம்யுக்தாவும் இப்படியாகப் பல சாதனைகளைப் படைத்து பல்வேறு சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகளையும் பெற்றுள்ளனர். ‘இளம் சாதனையாளர்’ விருதினை இரண்டு பேரும் பெற்றுள்ளனர். குரூப் வேர்ல்டு ரெக்கார்டு (GROUP WORLD RECORD) என்ற குழுவை (Team) மையமாகக் கொண்டு ஃப்யூச்சர் கலாம்’ஸ் புக் ஆஃப் ரெக்கார்டு (FUTURE KALAM’S BOOK OF RECORD) மற்றும் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்டு (UNIVERSAL ACHIEVERS BOOK OF RECORD)-ல் இவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் நடந்த ‘VRIKSHA BOOK OF WORLD RECORD’ என்ற INDIVIDUAL WORLD RECORD-ல் கலந்துகொண்டு உலக சாதனை படைத்துள்ளனர். ‘T20 social media youtube competition’ என்ற போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசையும் வென்றுள்ளனர். திருச்சி வாசவி வனிதா கிளப் (VASAVI VANITHA CLUB) நடத்தும் நவராத்திரி நிகழ்ச்சியில் மூன்று வருடமாக தனி நிகழ்ச்சியாக இவ்விருவரின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன’’ என்றனர் பெருமிதத்தோடு இருவரும்.

பூபேஷின் தனித்திறமைகள்: நீந்துதல் (swimming), சதுரங்கம் (playing chess), ரூபிக் க்யூப் (Rubic cube), சிலம்பம்.
சம்யுக்தாவின் தனித்திறமைகள்: நீந்துதல் (swimming), சதுரங்கம் (playing chess),ரூபிக் க்யூப் (Rubic cube), சிலம்பம், பாட்டு பாடுதல்.

- தோ.திருத்துவராஜ்