கலை & அறிவியல் பட்டப்படிப்புகள்வழிகாட்டல்

+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்விக்குத்  திட்டமிடுங்கள்!

2020 ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் நாள் தொடங்கி 24-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மேனிலை இறுதிப் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 8.5 லட்சம் பேர் இத்தேர்வினை வழக்கமான பதற்றம், குழப்பம், அச்சத்துடன் இவ்வாண்டும் சந்திக்கின்றனர். அனைவருமே எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவர் என வாழ்த்துவோம். ஓரிரு மதிப்பெண்கள் கூடினாலும் குறைந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்பதை முன்னரே தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் இன்றையக் கல்வி முறைக்கும் அறிவுக்கும் எவ்விதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
 
+2 தேர்விற்குப் பிறகுதான் விரும்பும் எந்த ஒரு படிப்பையும் எவ்விதத் தடையும் சுமையும் இன்றிப் படிப்பதற்கு வாய்ப்பு நல்க வேண்டியது ஓர் அரசின் பொறுப்பாகும். அந்த வகையில், உயர்கல்வி பெற எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? என்ற மாணவர்களின் தேடலுக்குத் தகுந்த விதத்தில் கலை-அறிவியல் படிப்புகள் சார்ந்து முனைவர் முருகையன் பக்கிரிசாமி வழங்கும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 68 பல்கலைக்கழகங்கள் கலை - அறிவியல், மருத்துவம், பொறியியல், சட்டம், விவசாயம் போன்ற பல்வேறு உயர் படிப்புகளை அளித்துவருகின்றன. மத்தியப் பல்கலைக்கழகம் ஒன்றும் திருவாரூரில் இயங்கிவருகிறது. தேசிய தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று திருச்சியிலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரி சென்னையிலும் இயங்குகின்றன. 580-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 50-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள், 50-க்கும் மேற்பட்ட விவசாயக் கல்லூரிகள், பத்துக்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 16 கடல்சார் படிப்பு தொடர்பான கல்லூரிகள், 164-க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், 50க்கும் மேற்பட்ட கவின் கல்லூரிகள், 622-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் என அரசும் தனியாரும் நடத்தக்கூடிய பல்வேறு கல்வி நிறுவனங்கள் பல்வேறு உயர் படிப்புகளை அளித்துவருகின்றன.

என்ன படிக்கலாம் என்பது படிக்க இருக்கும் மாணவர்களின் ஆர்வத்தையும் விருப்பத்தையும் பொறுத்து அமைவதே நல்லது. நாட்டம் இல்லாத ஒரு படிப்பைக் கட்டாயப்படுத்தி பெற்றோர் தங்கள் விருப்பத்தைத் திணித்தும் சுயகவுரவம் கருதியும் ஏனைய உறவினர் மற்றும் நண்பர்கள், பிள்ளை
களைச் சுட்டிக்காட்டியும் சேர்த்துவிடுவது இறுதியில் தோல்வியையே கொடுக்கும். படிப்பை இறுதிவரை படிக்க முடியாத பல மாணவர்கள் கூறும் காரணம் தங்களுக்கு ஆர்வம் இல்லாத ஒரு படிப்பில் கட்டாயப்படுத்திச் சேர்த்ததே ஆகும். தான் படிக்கும் படிப்பில் தொடர்ந்து ஆய்வு நோக்கில் மேன்மேலும் படிக்கவும் அந்தப் படிப்பு வேலை வாய்ப்பினை எளிதில் தரக்கூடியதாகவும் அமைந்த படிப்பையே மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் தற்போது நீட் என்கிற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வினை எழுதி,தேர்ச்சி பெறுவதோடு மட்டுமல்லாமல் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும். நீட் தேர்வு பயிற்சிக்கெனப் புற்றீசல் போலப் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுப் பணம் கறக்கும் வேலை நடந்துகொண்டிருக்கிறது.

எனவே, வசதியுள்ளவர்கள் மட்டுமே மருத்துவ நீட் தேர்வை எழுதமுடியும் என்றாகிவிட்டது.பொறியியல் பட்டம் பெற்ற ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாப் பட்டதாரிகளாக வலம் வரும் அவலநிலையை இன்று எட்டியுள்ளோம். பல பொறியியல் கல்லூரிகள் மூடுவிழாக்களைக் கண்டுகொண்டிருக்கின்றன. ஐஐடி,என்ஐடி நிறுவனங்களில் சேர விரும்புபவர்கள் அதற்கென நடத்தப்
படும் ஜே.இ.இ.,தேர்வில் வெற்றி பெறவேண்டும்.

கைகொடுக்கும் கலை- அறிவியல் படிப்புகள்

எப்படிப்பட்ட மாணவர்களாக இருந்தாலும் எதிர்கால வாழ்விற்கு மருத்துவமும் பொறியியலும் கைகொடுக்காத நிலைமையில் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகளை நல்கும் கலை-அறிவியல் படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் நாட்டில் மட்டும் 622-க்கும் மேற்பட்ட கலை- அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

இவற்றுள் அரசால் நடத்தப்படும் கல்லூரிகள் 61. அரசு உதவி பெறும் கல்லூரிகளே சுமார் 140-க்கும் மேலே உள்ளன. ஏனையவை சுயநிதிக் கல்லூரிகளாகும். சென்னையில் மட்டுமே 77 கல்லூரிகளும் திருவள்ளூரில் 7 கல்லூரிகளும் காஞ்சிபுரத்தில் 14 கல்லூரிகளும் உள்ளன. வேலூரில் 24, திருவண்ணாமலையில் 14 கல்லூரிகளும் உள்ளன.

இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஏழு கல்லூரிகளாவது செயல்படுகின்றன. பொதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி
களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் அரசே சம்பளம் வழங்குவதால் படிப்புக் கட்டணம் குறைவாக இருக்கும். அனைத்துக் கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதோடு ஸ்காலர்ஷிப்பும் கிடைக்கும்.

எனவே, கல்லூரிகளின் உட்கட்டமைப்பு, ஆய்வக வசதி, போதுமான பேராசிரியர்கள் தகுதியானவர்களாக உள்ளார்களா என விசாரித்து அறிந்து விரும்பும் படிப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.+2 பிரிவு 1-ல் கணிதம், இயற்பியல், வேதியியல், நுண் உயிரியல், உயிரி வேதியியல், செவிலியர் பயிற்சி, கணினியியல் ஆங்கிலத் தொடர்பியல் ஆகியவற்றில் ஒன்றை விருப்பப் பாடமாகக் கொண்டோர் மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்படிப்புகளுக்குச் செல்வோரைத் தவிர ஏனையோர் கலை-அறிவியல் படிப்புகளை மேற்கொள்ளலாம்.
பிரிவு 2-ல் அறிவியல் பாடங்களை மட்டுமே பயின்றோர் கலைக்கல்லூரிகளில் பயிலலாம்.  பிரிவு 2(ஏ)-ல் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் படித்தோரும் கலைக்கல்லூரிகளில் சேரலாம்.

பிரிவு-3-ல் கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளியல், வணிகக் கணிதம், புள்ளியியல் பயின்றோர் பி.காம் தொடர்பான படிப்புகளைக் கலைக்கல்லூரிகளில் தொடரலாம்.பிரிவு-4-ல் வரலாறு, புவியியல், பொருளியல், அரசியல், கணினியியல், புள்ளியியல் படித்தோரும் பி.ஏ.,
பி.எஸ்.சி.போன்ற படிப்புகளில் சேரலாம்.பி.ஏ. தமிழ்,வரலாறு, ஆங்கிலம், பொருளாதாரம் ஆகிய படிப்புகளைப் படித்தவர்கள் மேலே சட்டம் படிக்கலாம். ஆசிரியர்ப் பட்டம் பெற்று ஆசிரியராகலாம்.

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வங்கிப் பணியிலோ, அரசுப் பணியாளர்த் தேர்வாணையம் மூலம் மாநில மத்திய அரசுப் பணிகளிலோ சேரலாம். ஆட்சிப் பணி உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு முற்சிக்கலாம்.பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ், மீடியா ஜேர்னலிசம் போன்ற படிப்புகளை முடித்து ஊடகத்துறையில் பணியில் சேரலாம். பன்னிரண்டாம் வகுப்பில் வணிகவியலைப் படித்தவர்கள் பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ. போன்றவற்றில் சேரலாம். தொடர்ந்து சி.ஏ., ஐ.சி.எஸ்., சி.எம்.ஆர்., ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., போன்ற படிப்புகளில் சேர்வதன் மூலம் நிறைய சம்பாதிப்பதுடன் மருத்துவருக்கு இணையாக மதிப்பும் பெறலாம். பட்டப்படிப்பு படிக்கும்போதே போட்டித் தேர்வுக்கும் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

பி.பி.ஏ. எனப்படும் மேலாண்மைப் படித்து பெரிய பெரிய கார்ப்போரேட் நிறுவனங்களில் விற்பனை மேலாளராகவும் விளம்பரப் பிரிவிலும் வேலை பெறுவதோடு பன்னாட்டுக் கம்பெனிகளிலும் வேலையில் சேரமுடியும்.கணினித் துறை: பி.எஸ்சி., பி.சி.ஏ. போன்ற கணினி சார்ந்த படிப்புக்கும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. ஐ.டி. துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆங்கிலப் பேச்சுத் திறமையும் இருப்பின் கால்சென்டர்களில் வேலை கிடைக்கும். சுமார் 256 வகையான இளநிலைப் பட்டப்படிப்புகளில் 62-க்கும் மேற்பட்ட படிப்புகளைக் கலை-அறிவியல் கல்லூரிகளில் படிக்கலாம். வேலை வாய்ப்புக்கு ஏதுவாகப் புதிய புதிய படிப்புகள் கலைக்கல்லூரிகளில் வந்தவண்ணம் உள்ளன. தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள கல்லூரிகள், அதில் என்னென்ன வகையான படிப்புகள் உள்ளன, தாம் சேரத் தகுதியான பிரிவுகள் என்னென்ன என்பதை இணையதளம் மூலம் விரிவாக அறியலாம்.

சிறந்த கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து ஆர்வமுள்ள - வேலை வாய்ப்புக்கு தகுதியான படிப்பைத் தேர்ந்தெடுத்து வெற்றி காண்பதில்தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றியடையமுடியும். வெற்றி பெற வாழ்த்துகள்.

  - தோ.திருத்துவராஜ்