நிகழ்காலத்தைக் கொண்டாடுங்கள்!



இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர்-30
 
புதிதாய்ப் பிறப்போம்!சரித்திரம் படைப்போம்!!

நாகரிகம் வளர்ந்துவிட்ட இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தானுண்டு, தன் குடும்பமுண்டு என்று வாழ்ந்தால் போதும். தன்னுடைய சௌகரியத்திற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை மட்டும் செய்துகொண்டால் போதும் அடுத்தவர் எப்படிப்போனால் எனக்கென்ன? என்ற மனப்போக்கோடுதான் வாழ்கின்றனர். அன்றைக்குக் கிராமங்களில் வசித்த மக்கள், ஒரு வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் எல்லாரும் கூடி பகிர்ந்துகொண்ட காலம் மாறி, இப்போதெல்லாம் பக்கத்து வீட்டில் என்ன நடந்தாலும் எனக்கென்ன என்ற மனப்பான்மைதான் மேலோங்கி நிற்கிறது.

புத்தகத்தில் படித்த ஒரு நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். நமது நாட்டைச் சார்ந்த ஒருவர் ஜப்பான் நாட்டிற்குச் சென்றிருந்தபோது, ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். எதிரில் ஆள் இல்லாததால், தன்னுடைய கால்களை எடுத்து பெஞ்சின்மேல் வைத்தார். எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு ஜப்பானியர், இவருடைய கால்களை எடுத்து தன் மடிமீது வைத்துக்கொண்டார். பதறிப்போன நம்மவர், கால்களை எடுத்துவிட்டு ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று ஜப்பானியரைப் பார்த்து கேட்டார்.

அதற்கு அந்த ஜப்பானியர் சொன்னார், “என்னுடைய துணிகள் அழுக்கானாலும் பரவாயில்லை. என் நாட்டுப் பொருள் தவறாகப் பயன்படுத்துவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’’ என்று. இதுவல்லவா சமூக நோக்கம், சமூகப் பார்வை. ஆகவே, இன்றைய சமுதாயத்திற்கு மற்றவர்களைப் பற்றிய கரிசனை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பிறரையும் நம்மைப் போல நேசிப்பது, பிறர் சொத்து, பொருட்களை சேதப்படுத்தாமல் இருப்பது போன்ற ஒழுக்கநெறிகளை கற்றுத்தருவது அவசியமானதாகிவிட்டது.

பிறரைப் பற்றி நாம் கரிசனை கொள்வதினால் நமக்கு என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம். பிறரைப் பற்றி நாம் அக்கறை எடுத்துக்கொள்வதால் நமக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது. மன இறுக்கமே, பிறரை நாம் தவறாக புரிந்துகொள்வதால் வருவதுதான். மற்றவர்கள் மேல் கோபம், பொறாமை, எரிச்சல், மற்றவர்களைப் பற்றிய தவறான எண்ணம் இவற்றை நாம் மனதிற்குள் அழுத்தி அழுத்தி வைப்பதினால்தான் மனஇறுக்கம் அதிகமாகிறது. அதற்கு எதிர்மாறாக மற்றவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்தல், தவறான எண்ணங்களை நம் மனதிலிருந்து அகற்றிவிடல், மற்றவர்கள்
நமக்குத் தீங்கு செய்திருந்தாலும் அதை மனதில் வைத்து புழுங்கிக்கொண்டிராமல், அவர்களை மன்னித்தல், மற்றவர்கள் மேல் பொறாமைப்படாமல் அவர்களிடமுள்ள நல்ல குணங்களைப் பார்த்தல் போன்றவையே மன இறுக்கத்தைக் குறைக்கும் வழிகள்.

பிறரைக் குறித்து சிந்திப்பதோ, செயல்படுவதோ ஏதோ பிறருக்கு நாம் பெரிய நன்மை செய்துவிடுகிறோம் என்ற கருத்து மட்டுமல்ல அதில் தன்னலமும் அடங்கியிருக்கிறது. அப்படிப் பிறரைக் குறித்து நாம் சிந்திக்கும்போது அவர்களுக்காகச் செயல்படும்போது நம் மனதிற்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கடந்தகால கவலைகளைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையும் மனதில் சுமந்துகொண்டு இருப்பவர்
களையும்தான் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நிகழ்காலம் வைரம் போன்றது. அதைப் பட்டைதீட்டி ஜெயிக்க செய்வது நம்முடைய கையில்தான் இருக்கிறது. அதை ஒரு கதையின் மூலமாக நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு வியாபாரி எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்து கழுத்தறுத்தார்கள் என்று எண்ணி வேதனையில் மூழ்கினான்.

தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம், குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒரு புறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையுடனே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறுசிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசிய வண்ணமிருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுவதும் அங்கேயே அமர்ந்திருந்தான். பொழுது விடிய ஆரம்பித்தது… வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்துபோய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்து பிரமித்துவிட்டான். காரணம், அது சாதாரண கூழாங்கல் இல்லை.

விலை உயர்ந்த வைரக்கல். யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான். ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். நிகழ்காலத்தைக் கொண்டாட மறக்கிறோம்.

அதேசமயம், தன்னுடைய நிகழ்காலத்தை இந்த சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் அமைத்துக்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜ். சாதாரண குடும்பத்தில் பிறந்தபோதும் சிறுவயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். ஆரம்பத்தில் தனியார் கம்பெனியில் சூப்ரவைசராக வேலை பார்த்துவந்த இளைஞர் ஜெயராஜ் மரம் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதற்காகத் தனது சொற்ப வருமானத்திலும் செலவழிக்க ஆரம்பித்தார். தனது மாதச் சம்பளத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி பசுமைத் திட்டம் ஒன்றை உருவாக்கினார்.

ஜெய்ராஜ் தினமும் காலையில் சைக்கிளில் சென்று மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றிவருகிறார். சைக்கிளில் இரண்டு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு செல்கிறார். மாலை வேளையிலும் புதிதாக நட்ட மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு வருகிறார். சுற்று வட்டாரத்தில் திருமணம் நடக்கும் சமயங்களில் அங்கு சென்று மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி வருகிறார்.

ஆரம்பத்தில் அவர் சைக்கிளில் சென்று மரக்கன்றுகளை நட்டபோது எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். போகப் போக அவரது நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவரோடு இணைந்து உதவ முன்வந்தார்கள். மேலும் ஒரு போன் செய்தால் போதும் வீடு தேடி மரக்கன்றுகள் வரும் என்பதையும் அறிமுகப்படுத்தி, மரக்கன்றுகளைக் கொடுத்துவிட்டும் வருகிறார். பூமி வெப்பமடைதலை தடுக்கும் முயற்சியாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி பாதுகாப்பாக வளர்ப்பதையும் சொல்லித் தருகிறார்.

‘‘தூக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை தூங்கவிடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு’’ என்று கூறிய மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பேச்சும், எழுத்தும் ஜெயராஜுக்கு மிகுந்த உற்சாகமும், ஊக்கமும் அளித்தது. அவர் மறைந்தபோது அந்த சோகத்திலிருந்து விடுபட வெகுநாளானது ஜெயராஜுக்கு. இந்த சமூகத்தின் மீது கலாம் அவர்கள் கொண்டிருந்த தீராத பற்றும் அவரது கனவையும் நிலைநிறுத்த தம்மால் ஆன முயற்சிகளைச் செய்ய முடிவு செய்தார். அவரது பெயரில் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதைத் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்துள்ளார். பள்ளி மாணவர்களிடம் மரக்கன்றுகளை கொடுத்து பள்ளியிலும் வீடுகளிலும் நடச்செய்து சுற்றுசூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களின் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்திய ஜெயராஜுடன் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரு குடையாக இணைந்தார் கள். அதன் மூலமாகப் பசுமை, கல்வி, சுற்றுச்சூழல், பெண்கள் முன்னேற்றம், பிளாஸ்டிக் ஒழிப்பு என அடுத்தடுத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் ஜெந்தா தமிழ் சங்கம் மற்றும் சிங்கப்பூர் தமிழ்ச்சங்கங்கள் ஜெயராஜின் பணிகளைக் கண்டு வியந்து அவருடைய அறக்கட்டளையுடன் இணைந்து தமிழகத்தில் இயற்கைச் சீற்றத்தால் பாதித்த குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வீடுகளைக் கட்டிக்கொடுத்து உதவியுள்ளனர். இதுவரை தனி நபராகவே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை உருவாக்கியுள்ளார். நூற்றுக்கணக்கான மாணவ/மாணவிகளின் கல்வி தடைப்படாது இருக்க கல்வி உதவிகளையும் தனது அமைப்பின் மூலமாக செய்துவருகிறார்.

இளம் வயதிலே தனது அறக்கட்டளையை சிறப்பாக நடத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களை இணைத்துக்கொண்டு சமூக பணியாற்றிவரும் ஜெயராஜ் பல விருதுகள் பெற்றாலும் இன்னும் எளிமையின் அடையாளமாக விளங்கி அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றும் ஒரு தொண்டராக இருந்துவருகிறார்.

பிறரைக் குறித்த அக்கறை நம்மிடையே இல்லாதிருந்தால் அதை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய மனிதர்களால் மட்டுமே எப்போதும் உற்சாகமாக, ஊக்கமாக இருக்கமுடியும். அவர்களுடைய மனது மதிப்புமிக்கது. அப்படி மதிப்புமிக்க மனமுடையவர்களைத் தான் இந்த சமூகம் வெற்றியாளராக அடையாளப்படுத்துகிறது. நற்செயல்களே நல்ல விளைவுகளைத் தருகின்றன. ஆகவே ஒருவருடைய நல்ல செயல்தான் அவருடைய எதிர்காலத்தை மட்டுமல்ல அவருடைய வெற்றியையும் தீர்மானிக்கிறது.

(புதுவாழ்வு மலரும்)