அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்!புது முயற்சி

தமிழக அரசுப் பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் வெகுசிலரே ஆசிரியப் பணியை அர்ப்பணிப்போடு செய்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவையாகவே செய்துவரும் ஆசிரியர்களின் செயல்கள் தானாகவே பொதுமக்களால் பாராட்டப்படும் நிலை உண்டாகிறது. அப்படி அர்ப்பணிப்போடு பணியாற்றி இன்று ஊடகங்களாலும் ஊர்மக்களாலும் பாராட்டப்படுகிறார் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மங்கலம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஜெயச்சந்திரன்.

தன்னிடம் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவியர் களைத் தனது சொந்தச் செலவில் சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் சென்று திரும்புகையில் விமானத்தில் பறக்க வைத்து அம்மாணவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்து ஆசிரியரிடம் பேசுகையில் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 64 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நான் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றது. முதன் முதலில் சிவகங்கை மாவட்டதில் பணியில் சேர்ந்தேன். சிவகாசி பகுதிக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்கள் பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அடுத்து ஆறாம் வகுப்பு உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும்போது மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணமென்றால் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கு வராமல் ஊருக்குச் செல்வது, திருமணம் மற்றும் வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என படிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

மாணவர்களின் வருகைப்பதிவு மிகவும் குறைந்துகொண்டேபோனது. சதவிகிகித அடிப்படையில் பார்த்தோமானால் இருநூற்று இருபது நாட்களுக்கு குறைந்தது நூற்றைம்பது நாட்களுக்கு உள்ளேதான் வருகிறார்கள். மாணவர்களைக் கண்டித்துப் பார்த்தோம். ஒன்றும் வழிக்கு வரவில்லை. அதிகமாகக் கண்டிக்க ஆரம்பித்தால் பள்ளிக்கூடத்துக்கு வராமலே போய்விடுகிறார்கள்.

இதற்கு என்ன செய்யலாம் என யோசித்ததுதான், இனிமேல் பள்ளிக்கூடத்துக்கு யார் விடுப்பு எடுக்காமல் வருகிறீர்களோ, வீட்டுப் பாடங்களை ஒழுங்காக எழுதிக்கொண்டு வருகிறீர்களோ அவர்களுக்கு ஒரு சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்வோம், ரயிலில் சென்னைக்கு சென்று அங்கு பார்க்கவேண்டிய இடங்களையெல்லாம் பார்த்துவிட்டு மெட்ரோ ரயிலிலெல்லாம் பயணித்துவிட்டு திரும்பி வரும்போது விமானத்தில் வந்துவிடுவோம்’’ என ஒரு திட்டத்தைச் சொன்னேன்.

இதைச் சொன்னதிலிருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் இருபது மாணவ - மாணவியர் விடுப்பு எடுக்காமல் வந்தனர். சில பெற்றோர்கள் அவர்களை எங்காவது கூட்டிட்டுப் போக நினைத்தால்கூட மாணவர்கள் அழுது அடம்பிடித்து நான் வரமாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டனர். இந்த வருகைப் பதிவு அதிகரித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் நன்றாகப் படிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதனால், மாணவர்கள் நாம் சொன்னதைக் கடைப்பிடித்துவிட்டார்கள், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி நாமும் அழைத்துச் சென்றுவர வேண்டும் என முடிவு செய்து சென்னைக்குச் சுற்றுலா சென்றுவந்தோம். இதற்கு முன்பு எங்கள் பகுதிக்கு அருகிலுள்ள இடங்களுக்கு பஸ்ஸில் சுற்றுலா அழைத்துச் சென்றுவருவேன். கேரளா, பெரியாறு அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளேன்.’’ என்றவர் மாணவர்களோடு ரயிலில் சென்னைக்குச் சென்றுவிட்டு விமானத்தில் திரும்பி வந்த அனுபவத்தை விவரித்தார்.

‘‘விமானத்தில் அழைத்துச் சென்றுவருவதாக ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே சொல்லியிருந்தேன். அதன்படி அந்த இருபது மாணவர்களைச் சென்னைக்கு அழைத்துச் சென்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யவைத்தோம். பின்னர் வண்டலூர் உயிரியல் பூங்கா, மகாபலிபுரம் போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் அழைத்துவந்தேன். இந்த நிகழ்வுக்குச் சக ஆசிரியர்கள் நாங்களும் உதவுகிறோம் எனக் கூறினர். இருந்தாலும், நாம் சொன்னதை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக முழுச் செலவையும் நானே ஏற்றுக்
கொண்டுவிட்டேன்.

விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் ஒரு வேனை வாடகைக்கு அமர்த்தி சென்னையைச் சுற்றிக் காண்பித்தேன். சென்னையிலிருந்து விமானம். அடுத்து அங்கிருந்து ஒரு பேருந்தை அமர்த்தி அழைத்து வந்தேன். இத்தனை ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்து வருகிறேன், இந்தச் சுற்றுலாவில் மாணவர்கள் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்தபோது ஒரு தொகையை இதற்காகச் செலவு செய்வதில் தவறில்லை என என் மனது திருப்தியடைந்தது. அவர்களைக் கொண்டுதானே எங்கள் வாழ்க்கை அமைந்துள்ளது. அதனால், அவர்கள் வாழ்க்கை நன்றாக அமையப் பல்வேறு வகையிலும் கற்பித்தல் பணியைச் செய்யவேண்டும்.’’ என்றவர் இந்தப் பயணத்தினால் மாணவர்களின் மனநிலையும் அவரின் மனநிலையும் எப்படி இருந்தது என்பதைத் தெரிவித்தார்.

‘‘கிராமப்புற மாணவர்கள் பலர் ரயிலில்கூட சென்றதில்லை. ரயிலில் சென்றபோதும், விமானத்தில் வந்தபோதும் மாணவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கும் மனநிறைவாக இருந்தது. சென்னை சென்று வர சுமார் ரூ.1.20 லட்சம் வரை செலவானது. ஆனாலும் அதில் ஒரு திருப்தி கிடைத்தது. மாணவர்களுக்கு இப்பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத முதல் விமானப் பயணமாக அமைந்தது.

இதேபோன்று, மற்ற வகுப்பு மாணவர்களும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் அவர்களையும் ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் சென்று வரவும் திட்டமிட்டுள்ளோம். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வத்தைத் தூண்ட, முதலில் அவர்களை விடுப்பின்றிப் பள்ளிக்கு வரவைப்பதே முதல் வெற்றி.
எங்கள் பகுதியைச் சுற்றி ஒன்றிரண்டு தனியார் பள்ளிகள் உள்ளன. ஒரு பள்ளிக்கு நான்கைந்து குழந்தைகள் என இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்கின்றனர். அடுத்து, அந்த மாணவர்களையும் எங்கள் அரசுப் பள்ளியில் படிக்கும் வழிவகை செய்து அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்’’ என்றார் ஆசிரியர் ஜெயச்சந்திரன்.

- தோ.திருத்துவராஜ்