ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரி கோம்!



ஸ்போர்ட்ஸ்

இந்தியாவின் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக உலகமே பாராட்டும் மணிப்புரியைச் சேர்ந்த மேரிகோம் இளம்வயதில் படிப்பில் சிறந்து விளங்கவில்லையென்றாலும் அவர் பங்கேற்ற விளையாட்டுகளிலெல்லாம் திறமையை வெளிப்படுத்தி வெற்றிகள் பெற்றார். அதே காலகட்டத்தில் மணிப்பூர் தலைநகர் இம்பாலைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் நகன்கோம் டிங்கோ சிங் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அவருடைய வெற்றி மேரி கோமை ஈர்த்தது. அதன் காரணமாக குத்துச்சண்டையில் அவருக்கு ஆர்வம் மிகுந்தது.

மேரி கோம் 15வது வயதில் குத்துச்சண்டையில் ஈடுபடத் தொடங்கினார். அவர் உருவத்தில் சிறியவராகவும், மெலிந்தவராகவும் இருந்ததால், மற்ற போட்டியாளர்கள் அவரை எளிதில் வீழ்த்திவிட முடிந்தது. அடிக்கடி முகத்தில் அடிபட்டு, சிதைந்து போனதுண்டு. ஆனால், மேரி மனம் தளர்ந்துவிடவில்லை.

மேரி கோம் 2000வது ஆண்டில் மாநிலக் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, பின்னடைவு என்பதே கிடையாது. சர்வதேச சவால்களைச் சந்திக்க அவர் தயாராகிவிட்டார். 2001ம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் பயணத்தைத்  தொடங்கியவர் ஆரம்ப காலத்தில் உடல் வலிமையை மட்டுமே நம்பியிருந்தார். ஆனால் அதன் பிறகு நுட்பங்களை அதிகமாகக் கையாண்டே வெற்றிகளைக் குவித்தார்.

சர்வதேசக் குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA) உலக மகளிர் லைட் பிளைவெயிட் (Light Flyweigh) பிரிவில் முதல்நிலை வீராங்கனையாகவும் திகழ்கிறார். முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையாக, 2014ல் தென்கொரியாவில் உள்ள இன்சியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். ஐந்து முறை ஆசிய அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்த ஒரே குத்துச்சண்டை வீரர் இவர்தான்.

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கவிருக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதிச் சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்துவருகிறது. பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் 5-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மேக்னோவை எளிதில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மேக்னோ என்பவரை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளார். பூஜாராணி (75 கிலோ), விகாஸ் கிருஷன் (69 கிலோ), அமித் பங்கல் (52 கிலோ), சதீஷ் குமார் (91கிலோ), லோவினா போர்கோஹெய்ன் (69 கிலோ) ஆகிய மற்ற இந்தியக் குத்துச் சண்டை வீரர்களும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

-முத்து